CO2 from factories1800க்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 30 சதவீதம் அதிகரித்துவிட்டது. இயற்கை படிமங்களாகிய எண்ணெய், நிலக்கரி, இயற்கை வாயு இவற்றை எரிக்கும்போதும், காடுகளை அழிக்கும்போதும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும்போதும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிப்பட்டு காற்று மண்டலத்தில் கலந்து விடுகிறது. உயிரினங்கள் சுவாசிப்பதாலும், எரிமலை புகை கக்குவதாலும் கூட காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலக்கிறது. இவையெல்லாம் இயற்கை நிகழ்வுகள் ஆகும்.

காற்று மண்டலத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கைப்பற்றி சேமித்து வைக்க இயலும். ஆனால் இதற்காக 40 சதவீதம் கூடுதலாக எரிபொருள் செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும் தொழிற்சாலைகளை இயக்க ஆகும் மொத்த செலவு 60 சதவீதம் அதிகரிக்கும். காற்று மண்டல கார்பனை மூன்று வழிகளில் கைப்பற்றி சேமிக்க இயலும்.

முதலாவது முறையில் படிம எரிபொருள்களாகிய எண்ணெய், நிலக்கரி இவற்றை எரிக்கும்போது வெளிப்படும் கார்பனை கைப்பற்றி சேமிக்கிறார்கள். சிறிய தொழிற்சாலைகள் சிலவற்றில் இந்த முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது. இரண்டாவது முறையில் எரிபொருள் முதலில் வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயுவில் இருந்து கார்பனும், நீரும் பிரித்தெடுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மூன்றாவது முறைக்கு Chemical Looping Combustion என்று பெயர். எரிபொருளுடன் உலோகங்களை வினைபுரியச் செய்கிறார்கள். கார்பன் டை ஆக்சைடும், நீராவியும் பொதிந்திருக்கும் உலோகக் கட்டிகளாக அவை மாற்றப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற சங்கதிகள். மனிதகுலம் வெளிக்காற்றில் கலக்கச் செய்யும் கார்பனின் அளவை சுயக்கட்டுப்பாட்டு முறையில் குறைக்க வேண்டும். இயலக்கூடிய இடங்களில் புகைக்கும் எந்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.

- மு.குருமூர்த்தி