என்பெலாம் வன்கண் தோல்போர்த்தி
இரக்கமெலாம் வடிகட்டி எறிந்து வீசி
வன்பாறை உள்ளமே முழுதுமாக
ஈழம்வாழ் தமிழரெல்லாம்
பகையென்றே பார்த்துப் பார்த்து
குழுக்குழுவாய்க் கொன்றிட்ட கொடுங்கோலாய் !
அரக்க ரெல்லாம் நாணும் அரக்கன் நீ!

வேள்விக்கே என்றிடினும்
ஒன்றன் உயிர் செகுத்தல்
ஒவ்வா நெறியென்றும்
அன்பொன்றே அனைத்திற்கும்
வேர்ப்பண் பென்றும்
அருள் சொரிந்து
போதித்த புத்தரின்
கொள்கையெலாம்
ஈழத்தமிழ்ப் பிணங்களுடன்
மண்ணுக்குள் புதைத்திட்ட
மா பாவி, நீ ! நீயேதான் !

காடுதனில் அச்சுறுத்தும்
கொடுவிலங்கும் உனை நாடும்
பலரையும் கொன்றிடும் பாடம் கேட்க!

கண்ணுக் கின்னா உன்னைக்
காண்டலுந் தீதே.
செவிக் கின்னா உன்குரல்
கேட்டலுந் தீதே !.

தீயனுள்ளுங் கொடுந் தீயன் நீயேதான்!
பேயெல்லாம் உனைவைத்தே நம்புகின்றேன்.

இரக்க மெலாம் உகுத்து
என்னினத்தை அழித்தவனே!
இறுமாப்பு கணப் பொழுதே
இருப்பில் நிற்கும்!

பரப்பிவந்த பொய்மை யெல்லாம்
புகையாக பறந்துபோக
பாரெல்லாம் உண்மைநிலை
உணருங் காலை

கோட்டுமுனையில்
வெற்றி வெறியில்
செருக்கு முகங் காட்டி
ஆட்டுவிக்கும் நீ
ஆழ்மடுவில்
கீழ்வீழ்வாய்
இஃதுறுதி !

அந்நிலை ....

காலெனவே கடுகிவந்து
உலகி லெங்கும்
இன மழிக்கும்
இழி வினை
ஆற்றுநர்க்குக்
கற்பிக்கும் பாடம்
தெளிவாக !

- முனைவர் அ.குமார ராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It