BackSlash Linuxமேசைக்கணினியோ, மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும், வாங்கும் போதே தவிர்க்கவியலாதவாறு நமக்கு அறிமுகமாவது விண்டோஸ் இயங்குதளம் (Operating System). வீடு, அலுவலகம், கல்லூரி எங்கனும் பயன்படுத்தப்படுகின்ற கணினிகளில் ஏறக்குறைய அனைத்திலும் பயன்படுத்தப் படுவதும் அதுதான். அதேபோல் அதனுடன் இணைந்த மைக்ரோஸாப்டின் (Microsoft) அலுவலகப் பயன்பாட்டிற்கான வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் போன்ற பல மென்பொருட்கள் எந்தவிதப் போட்டியுமின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு சிலரைத் தவிர பலருக்கும் விண்டோஸிற்கு ஒரு மாற்று இருக்கலாம் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விஷயம்.

ஒரு புதிய கணினி வாங்குபவருக்கு ஏறக்குறைய பத்து வகையான தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதன் இயங்குதளத்தினைத் தேர்ந்தெடுக்க பெரும்பாலும் வாய்ப்புகள் கொடுக்கப் படுவதில்லை. விண்டோஸ் அந்த அளவிற்கு முற்றுரிமை (Monopoly) பெற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு கணினி விற்கப்படும்போதும் அதன் விலையில் ஒரு பகுதி மைக்ரோஸாப்ட் நிறுவனத்திற்கு சென்று விடுகிறது.

விண்டோஸிற்கு மாற்றே இல்லையா? சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.

இவைகளைப் போல தனியுரிமையின்றி, முற்றிலும் விலையில்லாமல் ஒரு இயங்குதளம் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கலாம். எனினும் உண்மை. அந்த இயங்குதளம்தான் லினக்ஸ்.

இயங்குதளம் ஒரு கணினியில் என்னதான் செய்கிறது? 

ஒரு இயங்குதளத்தின் வேலைதான் என்ன? கணினியின் உள்ளும் புறமும் அதனொடு தொடர்புடைய வன்பொருட்கள் (Hardware) அனைத்தின் தேவையினையும், மற்ற மென்பொருட்களுக்கு பகிர்ந்தளிப்பதே அதன் வேலை. கணினியின் மைய செயல்பாட்டுப் பகுதி (CPU - Central Processing Unit), நினைவகம் (Memory), கோப்புகளை சேமித்தல் (File Storage), உள்/புற சாதனங்கள் (Input / Output Devices), வலைப்பின்னல் தொடர்புகள் (Network) போன்றவையே அத்தகைய வன்பொருள்கள் அல்லது வன்பொருள் சார்ந்த விஷயங்கள். அதனால் கணினி இயங்கத் தொடங்கியதிலிருந்து துவங்கி, அது அணைக்கப்படும் வரை செயல்பட வேண்டியதிருப்பதுதான் இயங்குதளத்தின் பணி.

இயங்குதளத்தின் வரலாறு

கணக்கிடும் இயந்திரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கணினியின் காலம் 1800களில் தொடங்குகிறது. 1950கள் வரை ஆராய்ச்சிக் கூடத்திலிருந்தது. 1960 ஆம் ஆண்டுகளில் தொழிலகங்களிலும், இராணுவத் தேவைகளிலும் பயன்படுத்தப்பட்ட மெயின்பிரேம் (Mainframe) கணினியினால் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கணினி வெளியில் வந்தது. அப்போது கண்டுபிடிக்கப்பட்ட மின்னணு சாதனங்களின் நுழைவு, 1980களில் கணினியை மேசைக்கணினியாக சாதாரண மனிதன் முன் நிறுத்தியது.

1960களில் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட இயங்குதள மென்பொருட்கள் எவ்வித காப்புரிமையும் பெற்றிருக்கவில்லை. அப்போது அவை பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் ஐபிஎம் (IBM) போன்ற பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் காப்புரிமை பெற்றிருந்தன. ஆனால் கிரகாம் பெல் ஆரம்பித்த நிறுவனமான பெல் லாபரடரிஸ் (Bell Laborotaries), யுனிக்ஸ் (UNIX) என்னும் இயங்குதளத்தினை உருவாக்கி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.

1980களில் ஐபிஎம்மின் வன்பொருளுடன், உருவான மேசைக்கணினிகளோடு அறிமுகமானதுதான் மைக்ரோசாப்ட்டின் மென்பொருளான எம்எஸ் டாஸ் (MS DOS). இந்த இரண்டின் ஒருங்கிணைப்பு கணினி உலகில் ஒரு புரட்சியாக அமைந்தது. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்குதள வளர்ச்சியைப் பொருத்தவரை தனது முன்னோக்கிய பாய்ச்சலை நிறுத்தவேயில்லை.

உலகின் எந்தவொரு மூலையில் ஒரு கணினி விற்கப்பட்டாலும், மைக்ரோஸாப்ட் நிறுவனத்திற்கு ஒரு தொகை வந்து சேர்ந்து விடும் என்ற நிலை, அதன் நிறுவனர் பில் கேட்ஸை உலகின் இரண்டாவது பணக்காரராக ஆக்கி விட்டிருக்கிறது. இதே நேரத்தில் துவக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், வன்பொருளையும், மென்பொருளையும் தனக்கே உரித்தான பண்புகளை வளர்த்துக் கொண்டு, ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு தனியுரிமை இயங்குதளத்தையே முன்னிறுத்துகிறது. 

கட்டற்ற, திறந்த மூல மென்பொருள் (Free and Open Source Software - FOSS)

கணினி மென்பொருள் தளத்தில், முற்றுரிமையும், தனியுரிமையுமாக விண்டோஸும், மேசிண்டோஷும் உருவான காலத்திலேயே, மென்பொருள் உருவாக்கப் போக்கில் வேறொரு கருத்தாக்கம் உருப்பெற்று வளர்ந்து வந்தது. அது கட்டற்ற மென் பொருள்.

கணினி நிரலியற்றியாக (computer programmer) பணியாற்றிய ரிச்சர்ட் ஸ்டால்மன் (Richard Stallman) என்னும் அமெரிக்கர், கட்டற்ற மென்பொருளுக்கான ஒரு அமைப்பினை 1985ல் உருவாக்குகிறார். இலாபநோக்கின்றி செயல்படும் இதன் முக்கிய நோக்கம் மென்பொருள்களை இலவசமாக உருவாக்குவது, வெளியிடுவது, பகிர்வது ஆகியவையே. மேலதிகமாக GNU (GNU Not Linux என்பதன் சுருக்கமே இது) உரிமம் என்ற கருத்தாக்கத்தையும் உருவாக்குகிறார். செயல்படுத்துகிறார்.

லினக்ஸின் உருவாக்கம்

ரிச்சர்ட் ஸ்டால்மன் அதுவரை பெரிய ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு பயன்பட்டு வந்த யுனிக்ஸ் இயங்குதளத்தைப் போலவே, மேசைக்கணிகளுக்குப் பொருத்தமான ஒரு இயங்கு தளத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் அவர் உருவாக்கிய இயங்குதளத்தின் கெர்னல் (Kernel) பகுதி வலுவானதாக இருக்கவில்லை. கெர்னல் என்பது ஒரு இயங்குதளத்தின் பல அடுக்குகளில் மையமான அடுக்குப்பகுதி. அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட அதே முனைப்புடன் செயல்பட்ட லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்னும் பின்லாந்து நாட்டைச் சார்ந்த மாணவர், யுனிக்ஸைத் தழுவிய ஒரு புதிய வலுவான கெர்னல் பகுதியை உருவாக்கியிருந்தார். 

ரிச்சர்ட் ஸ்டால்மானும், லினஸ் டோர்வால்டும் இணைந்து ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்கி, பின்னவர் பெயரின் முன்பகுதியையும், யுனிக்ஸின் பின்பகுதியையும் இணைத்து, அந்த இயங்கு தளத்திற்கு லினக்ஸ் எனப் பெயரிட்டனர். 

காப்புரிமைக்கு எதிராக காப்பு சுதந்திரம்

லினக்ஸ் இயங்குதளம் GNU உரிமத்தின் கீழ் பதியப் பெற்றது. இந்த உரிமத்தின் விதி இதுதான். இந்த இயங்குதள மென்பொருளை - அதன் மூலக்குறியீடுகளை (source code) - எவர் வேண்டுமானாலும், பிரதியெடுக்கலாம், பகிரலாம், மாற்றலாம், ஏன் விலைக்கு கூட விற்கலாம். ஆனால் அப்படி பகிரப்பட்ட மென்பொருளும் இந்த GNU உரிம விதிகளையே அனுசரிக்க வேண்டும். 

தனியுரிமைக்குப் பாதுகாப்பளிக்கும் காப்பிரைட் உரிமைகளுக்கு மாற்றாக GNU போன்ற காபிலெப்ட் (copy left) உரிமைகளின் அடிப்படையில் பல உரிமங்கள் வந்து விட்டன. உதாரணமாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் விக்கிபீடியா அப்படிப்பட்ட உரிமங்களுள் ஒன்றான கிரியேடிவ் காமன்ஸ் (creative commons) என்ற உரிமத்தைக் கொண்டிருக்கிறது.

லினக்ஸ் இயங்குதளம் பின்னர் சில வணிக ரீதியான நிறுவனங்களாலும், பல மென்பொருள் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட வணிக ரீதியில்லாத சமுதாயக் குழுக்களாலும் (Community) வளர்த்தெடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. 

ரெட் ஹேட் நிறுவனம் வெளியிடும் ரெட் ஹேட் (Red Hat) மற்றும் பெடோரா (Fedora), சுசே நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓப்பன் சுசே (Open SUSE), கானோனிகல் (Canonical) நிறுவனத்தால் வெளியிடப்படும் உபுண்டு (Ubuntu), சமுதாயக் குழுக்களால் வெளியிடப்படும் டெபியன் (Debian), லினக்ஸ் மிண்ட் (Linux Mint) போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்த பல்வேறு வகையான வெளியீடுகள் லினக்ஸ் டிஸ்ட்ரோக்கள் (Distros) என்று அழைக்கப்படுகின்றன.

லினக்ஸை கணினியில் எப்படி நிறுவ வேண்டும்?

முதலில் உங்களுக்குப் பிடித்தமான ஒரு லினக்ஸ் டிஸ்ட்ரோவின் ISO கோப்பினை தரவிறக்கம் (download) செய்து கொள்ள வேண்டும். ஒரு பென் டிரைவிலோ, சிடியிலோ அதை ஒரு bootable disk ஆக பதிந்து கொள்ள வேண்டும். இப்படி bootable disk ஆக உருவாக்க பல முறைகளும், மென் பொருட்களும் உள்ளன. பின் நீங்கள் தயாரித்த bootable disk ஐ கணினியில் இட்டு மறு துவக்கம் (Re-start) செய்தால் உங்களுக்கு தெரிவு செய்வதற்கான ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் பதிவிறக்கிய லினக்ஸ் டிஸ்ட்ரோவை பரீட்சித்துப் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது நிறுவ விரும்புகிறீர்களா என்ற தெரிவினை கேட்கும். நிறுவ விரும்பும் தெரிவினைத் தேர்ந்தெடுத்தால் வரிசையாக சில கேள்விகளுடன் நிறுவ ஆரம்பிக்கும். 

அதில் முக்கியமான கேள்வி, ஏற்கெனவே இந்த கணினியில் விண்டோஸ் இயங்கு தளம் இருக்கிறது, அதை அழித்துவிட்டு நிறுவ வேண்டுமா அல்லது அதற்கு பக்கம் பக்கமாக நிறுவ வேண்டுமா என்பதுதான். லினக்ஸை பரீட்சித்துப் பார்க்காமல் விண்டோஸை விட முடியாது என்பதால், நீங்கள் இரண்டாவது தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரத்திற்குள் உங்கள் கணினியில் லினக்ஸ் நிறுவப்பட்டு விடும். கணினியை மறு தொடக்கம் செய்யும் போது பூட் லோடர் (Boot loader ) என்ற திரை தோன்றும். நீங்கள் விண்டோஸ் இயங்குதளம் செல்ல வேண்டுமா, லினக்ஸ் இயங்குதளம் செல்ல வேண்டுமா என்று கேட்கும். லினக்ஸை தேர்ந்தெடுத்து கட்டற்ற மென்பொருள் தரும் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள். 

லினக்ஸின் சிறப்பியல்புகள்

விலை: லினக்ஸ் முற்றிலும் விலையில்லாதது. ஆனாலும் அதை உருவாக்கியவர்கள் அது விலையற்றது என்பதை விட அதன் கட்டற்ற தன்மைக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதாவது அதைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கும் எவரும் அதன் நிரல்களைப் பகிரும் வகையில் வெளிப்பாட்டுத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே அதன் சிறப்பு.

மென்பொருட்கள்: லினக்ஸை நிறுவும்போதே நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான மென்பொருட்களும் அதனுடன் இணைந்து நிறுவப்பட்டு விடும். நீங்கள் விண்டோஸில் பயன்படுத்தும் அனைத்து விதமான மென்பொருட்களுக்கும், மாற்று லினக்ஸிலும் உண்டு. உதாரணத்திற்கு எம் எஸ் ஆபீஸ் ற்குப் பதிலாக லிபர் ஆபீஸ் (Libre Office). சில மென்பொருள்கள் உருவாக்கும் நிறுவனங்கள் இரண்டு இயங்கு தளத்திற்காகவும் தனித்தனியே மென்பொருளை உருவாக்குகின்றன. இது போன்ற மென்பொருள்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. 

உறுதித்தன்மை: பெரும்பாலான லினக்ஸ் டிஸ்ட்ரோக்கள் சமுதாயக் குழுக்களால் வளர்க்கப்படுவதால் தொடர்ந்த வளர்மாற்றங்களை பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக லினக்ஸ் ஒரு உறுதியான மென்பொருளாக உள்ளது. அதாவது இயங்கு தளத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளான தொங்கு நிலை (hanging), சரிவுகள் (crashes) போன்றவை லினக்ஸில் ஏற்படுவது அரிதிலும் அரிது. எனவேதான் உலகம் முழுவதிலும் பலவிதமான பயன்பாடுகளில் உள்ள செர்வர்கள் (server) லினக்ஸ் இயங்கு தளத்திலேயே செயல்படுகின்றன.

வன்பொருள் அனுசரிப்பு: லினக்ஸின் இன்னொரு சாதக அம்சம் அது பழைய பாகங்களைக் கொண்ட கணினிகளில் கூட செயல்படும். மற்ற இயங்கு தளங்கள் போலன்றி மிகக் குறைந்த நினைவகத்தையே பயன்படுத்திக் கொள்ளும். 11 எம்பி நினைவகத்தைக் கொண்ட லினக்ஸ் இயங்குதளம் கூட இருக்கிறது. 

பன்முகத் தெரிவுகள் (multiple choices): நீங்கள் கணினியைப் பயன்படுத்தும் நோக்கத்திற்குத் தகுந்தபடி இயங்குதளம் கிடைக்கும். உதாரணத்திற்கு கல்விக்கான பயன்பாடு அதிகமென்றால் அதற்குப் பொருத்தமான இயங்கு தளம் இருக்கின்றது. இது போல லினக்ஸ் இயங்கு தளத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கிறதென்றால், நமது டெஸ்க் டாப் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு Gnome, xfce, mate, cinnamon, kde என பல விதமான தெரிவுகள் உள்ளன. இந்த இரண்டும் பல கலவைகளில் இணைந்து உங்கள் தெரிவுகளை வண்ணமயமாக்கி விடும்.

பாதுகாப்பு: மற்ற இயங்குதளங்கள் போல உபயோகிப்பவர்களைப் பற்றிய தரவுகளை பயன்படுத்திக் கொள்வது என்பது லினக்ஸில் கிடையாது. அதேபோல் லினக்ஸ் இயங்குதளத்தின் நிரல்களின் உறுதித் தன்மையும், வெளிப்படைத் தன்மையும், தொடர்ச்சியான வளர் மாற்றமும் அதனை கணினி வைரஸ்களால் எளிதில் தாக்க முடியாததாக்கி விடுகிறது. எனவே வைரஸுக்கு எதிரான மென்பொருட்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு தேவைப்படுவதில்லை.

தொழில்நுட்பம்: அனைத்து விதமான நிரல் எழுதுபவர்களுக்கும் பொருத்தமான ஒரு இயங்கு தளம் லினக்ஸ். Python, C/C++, Java, Perl, Ruby போன்ற அனைத்து விதமான நிரல் மொழிகளையும் அது ஆதரிக்கின்றது.

விண்டோஸிற்கு ஒர் மாற்று

இப்போது நம் முன் ஒரு தெரிவு இருக்கிறது. ஒன்று முற்றுரிமையான இயங்குதளத்தை மட்டுமே இன்னும் சார்ந்து இருந்து, அதன் கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே செயல்பட்டு, நமது தரவுகளை நமக்குத் தெரியாமலே இழந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் நமது கணினி இயக்கத்தை வைத்திருப்பது, மற்றொன்று விலையில்லா இயங்குதளத்தினை ஆதரித்து, கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பங்களித்து, சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளில் கணினியின் இயக்கத்தினை வைத்திருப்பது. முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். 

- இரா.ஆறுமுகம்,
உதவிப் பொது மேலாளர்,
தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
மணப்பாறை.

(நன்றி: லினக்ஸை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பரும், கணித ஆசிரியருமான ஆத்தூர் திரு.முருகன் அவர்கள்)