நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் முகநூல் மெசெஞ்சரில் நண்பர் ஒருவருடன் ‘சாட்’ பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். சட்டென்று ‘யூடியூப்’ வீடியோ ஒன்றை அவருக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. என்ன செய்வீர்கள்? யூடியூப் செயலியைத் திறந்து, நீங்கள் விரும்பும் யூடியூப் வீடியோவைத் திறந்து, அதன் முகவரியை நகல் எடுத்து – மீண்டும் உங்கள் மெசெஞ்சருக்கு வந்து, நகல் எடுத்த முகவரியை பேஸ்ட் செய்து… அடேயப்பா! ஒரு யூடியூப் வீடியோ லிங்கை அனுப்ப இவ்வளவு வேலை(!) செய்ய வேண்டுமா? என்று நினைக்கிறீர்களா? ஈசியாக அனுப்ப முடியாதா என்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏற்ற துணைவன் தான் ‘சாட்பாட்’ (‘ChatBot’)!

ChatBotஅதென்ன சாட்பாட்?

‘சாட்’ என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். முகநூல் மெசெஞ்சர், கூகுள் ஹேங்கவுட், வாட்சப், டெலிகிராம்’ போன்ற செயலிகள் மூலம் நண்பர்களுடன் உரையாடுவதைத் தான் ‘சாட்’ என்கிறார்கள். இப்போது ‘பாட்’ டிற்கு வருவோம். ரோபோ(ட்) (“RoBot”) என்பதில் இருந்து ‘பாட்’ (“Bot”) என்பதை எடுத்து இங்கே ஒட்டியிருக்கிறார்கள். இப்போது ‘பாட்’ என்றால் என்ன என்று ஓரளவு புரிந்திருக்குமே! ரோபோ(ட்) எப்படி எந்திர மனிதனாக இருந்து நமக்கு உதவுமோ, அதே போல, இந்த ‘சாட்பாட்’ தொழில்நுட்பத் துணைவனாக நம்முடைய ‘சாட்’களில் பயன்படும்.

எப்படிப் பயன்படுத்துவது?

இணையம் முழுக்க ஏராளமான ‘சாட்பாட்’டுகள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களுக்குத் தேவையான ‘சாட்பாட்’ டைத் தேர்வு செய்து கொள்ள வேண்டியது தான். ‘கூகுள் குரு’ என்று ஒரு சாட்பாட் இருக்கிறது. இந்தச் சாட்பாட்டை உங்கள் ஜிமெயிலில் (கூகுள் டாக்கில்) நண்பராகச் சேர்த்துக் கொண்டால் போதும். ‘கூகுள் குரு’வின் மெயில் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. இப்படிச் சேர்த்த பிறகு, நீங்கள் கூகுள் குருவிடம் ‘ஆண்டிராய்டு என்றால் என்ன’, ‘சென்னையின் வெப்பநிலை என்ன’, ‘ என்பன போன்று எந்தக் கேள்வியைக் கேட்டாலும் பதிலை இணையத்தில் தேடி நொடிப்பொழுதில் கொண்டுவந்து தந்து விடுவார் இந்த கூகுள் குரு.

இன்னொரு பயனுள்ள சாட்பாட்- எக்ஸ்பென்சர். பெயருக்கு ஏற்றால் போல, உங்கள் கணக்கு வழக்குகளை நிர்வகிக்க உதவும் கணக்குப் பிள்ளை தான் – இந்த எக்ஸ்பென்சர். இந்த சாட்பாட்டைப் பயன்படுத்துவதற்கு முன்னர், அவர்களுடைய xpenser.com தளத்திற்குப் போய் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிந்து கொள்ள வேண்டும். பதிந்த பிறகு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் முகவரியைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிமேல் ஒவ்வொரு முறையும் xpenser.com தளத்தைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. எக்ஸ்பென்சருடன் சாட் செய்து ‘காலையில் 4 இட்லி, 1 வடைக்கு 35 ரூபாய்’ என்று சொன்னால் போதும். நம்முடைய கணக்கில் இது சேர்க்கப்பட்டு விடும். பின்னர் நேரம் கிடைக்கும் போது நிதானமாக நீங்கள் அந்த இணையத்தளத்திற்குப் போய் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளலாம்.

வாட்சப்பிற்கு சாட்பாட் இல்லையா?

அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை வாட்சப் கொண்டிருந்தாலும் தொழில்நுட்ப அளவில் வாட்சப் முதலிடம் என்று சொல்லிவிட முடியாது. வாட்சப் வழியாக பிடிஎப் கோப்புகளை அனுப்பும் வசதியைக் கூட டெலிகிராம் முதலிய கட்டற்ற (ஓப்பன் சோர்ஸ்), இலவசச் செயலிகள் கொண்டு வந்து பல நாட்கள் கழித்தே வாட்சப் கொண்டுவந்தது. பிற மெசெஞ்சர்கள் எப்போதோ கொண்டு வந்து விட்ட என்கிரிப்ஷன் முறையைக் கொஞ்ச நாளைக்கு முந்தி தான் வாட்சப் கொண்டுவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது சாட்பாட்டிலும் வாட்சாப்பை முந்தி கில்லி அடித்திருக்கிறது டெலிகிராம் மெசெஞ்சர். நீங்கள் டெலிகிராம் செயலியை உங்கள் அலைபேசியில் வைத்திருக்கிறீர்கள் என்றால் போதும்! இனிமேல் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றைத் தேட யூடியூப் செயலியோ, கூகுள் குரோம் போன்ற பிரெளசர் செயலியோ உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் டெலிகிராம் கணக்கில் இருந்து ஒரே ஒரு முறை யூடியூப் கணக்கில் (அதாவது, உங்கள் ஜிமெயில் கணக்கை) லாக் இன் செய்தால் போதும்! அதன் பிறகு ஒவ்வொரு முறை யூடியூப் லிங்கைத் தேடவும் ‘@youtube’ என்று தட்டி நீங்கள் தேடும் வீடியோ பெயரைக் கொடுத்தால் போதும். (எ.கா. நீங்கள் சென்னையைப் பற்றிய வீடியோ ஒன்றைத் தேட வேண்டும் என்றால் ‘@youtube ­chennai’ என்று உங்கள் டெலிகிராம் மெசெஞ்சரில் கொடுத்தால் போதும். சென்னையைப் பற்றிய வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருந்து வரிசையாகக் காட்டப்படும்.)

ChatBot 1

இதே போல், @sticker (ஸ்டிக்கர்கள் மூலம் சாட் செய்ய), @music(இசையை இணையத்தில் தேட), @ImageBot (இணையத்தில் படங்கள் தேட), @PollBot (மெசெஞ்சர் குழுவில் கருத்துக்கணிப்புகளை நடத்த) எனப் பல்வேறு ‘சாட்பாட்’டுகளைக் கொடுத்து தொழில்நுட்பத்தின் அடுத்த கதவைத் திறக்கும் வழியைப் பார்த்திருக்கிறது டெலிகிராம்.

இதை எல்லாம் பார்த்த பேஸ்புக் நிறுவனம், ‘சாட்பாட்’களை நாங்களும் சீக்கிரம் கொண்டுவந்து விடுவோம் என்று அறிவிப்பைச் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறது. மைக்ரோசாப்டும் தன் பங்கிற்கு ‘டேய்’ என்றொரு சாட்பாட்டைக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.

செயலி எனப்படும் செல்போன் ‘ஆப்’கள் எப்படி சில வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு கட்டமாகப் பார்க்கப்பட்டன. அதன் அடுத்தகட்டமாக ‘சாட்பாட்’கள் இப்போது வந்திருக்கின்றன. ஒவ்வொரு வேலையைச் செய்வதற்கும் ஒரு செயலியை செல்பேசியில் நிறுவ வேண்டும் என்னும் நிலையை சாட்பாட்கள் மாற்றுகின்றன.  நீங்கள் நிறுவி வைத்திருக்கும் மெசெஞ்சர் செயலியே பல்வேறு செயலிகளின் வேலையை ஒரே நிமிடத்தில் செய்து கொடுத்து விடும் நிலையை இவை உருவாக்கியிருக்கின்றன. அதிலும் இந்த ‘சாட்பாட்’கள் பெரும்பாலும் இலவசம் என்பதும் கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இவற்றை உருவாக்க முடியும் என்பதும் இதில் இருக்கும் இன்னொரு நன்மை.

(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் மே 1-15, 2016இல் வெளியானது)

- முத்துக்குட்டி