இன்று தொலைத்தொடர்புத் துறையில் அதிகம் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையான ஒரு விசயம் இலவச இனையத்தளத் திட்டங்கள். அண்மையில் பிரி பேசிக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அது இதற்குமுன் அறிமுகப்படுத்திய இண்டர்நெட் ஆர்க் போன்ற அம்சத்தையுடையது, அதாவது சில அடிப்படையான இணையத் தளங்கள் மட்டும் இலவசமாக (அதாவது டேட்டா கட்டணமின்றி) அணுகக்கூடியவகையில் மக்களுக்கு வழங்குவதாகும். பலர் விரும்பினர், பலர் விரும்பவில்லை. இதற்கிடையில் இது இணையச் சமநிலைக்கு எதிரானது அதாவது இத்திட்டம் இணையச் சமநிலையைப்(net neutrality) பாதிக்கும் என்று ஒரு பிரிவினர் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இது ஒருவகையில் தொழிற்நுட்பம் சார்ந்துள்ளதால் தொழிற்நுட்ப வல்லூனர்கள் எதைச் சொன்னாலும் ஏற்கும் போக்குவுள்ளது. கம்பசூத்திரமாக இருப்பதால் சாதாரண மக்களும் இவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டிய நிலையில் உள்ளனர். உண்மையில் இது தொழிற்நுட்ப பின்புலம் என்றாலும் இது சமூகப் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. ஒவ்வொருவரும் யோசித்து சரியான முடிவை எடுக்கவேண்டும்.

mark zuckerberg free basicsபேஸ்புக் மீதுள்ள ஆதரவு எதிர்ப்பு நிலையைத் தாண்டி அடிப்படையான விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இலவசத் தளச் சேவையை அனுமதிக்கும். அதைக் கொண்டு பல நிறுவனங்கள் சேவை அளிக்க முன்வரலாம். குறுகிய தளங்கள் மட்டும் தருவதால் புதியவர்களுக்கு வெளி இணைய உலகம் தெரியாது என்பதை ஏற்கமுடியாது. நியாயவிலை கடையில் அத்தியாவசிய அரிசியும் கோதுமையும் மட்டும் போடுவதால் முந்திரியும் பிஸ்தாவும் அறியமாட்டார்கள் என்பது போல உள்ளது. முதலில் இணையத்திற்கே வர செலவு செய்ய இயலாதவர்கள் குறைந்தபட்சம் பேஸ்புக் போன்ற சமூகத் தளத்திற்கு வந்தால்தானே சமூக மாற்றத்தைக் கற்றுக் கொடுக்க முடியும். பிற நாடுகளைவிட குறிப்பாகத் தமிழகத்தில் சமூகத் தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறோம். அரசியல் மாற்றங்கள் இங்கிருந்து உதயமாகிறது. இதையெல்லாம் யோசிக்காமல் இலவசங்களைத் தடுப்பதால் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை. கீழ்த்தட்டு மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை வறட்டு சமநிலை பேசி கெடுக்கிறோம்.

இணையச் சமநிலை என்பது எதிர்ப்போரைப் பொறுத்த மட்டில் என்னவென்றால் அனைத்து இணையத்தளங்களும் சமமான வேகத்திலும், சமமான கட்டணத்திலும் கிடைக்கவேண்டும் என்பதாகும். இணையத்தில் இடவொதிக்கீடு வேண்டாம் என்ற ஒற்றைவரி புரிதலாகவும் கொள்ளலாம். ஆனால் ஆழமாகவும் பார்க்கவேண்டும். ஒரு வணிக நிறுவனம் இலவசமாகச் சில தளங்களைத் தருகிறார்கள் என்றால் அதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்குமானால் அதை எதிர்க்கலாம் ஆனால் அத்திட்டமே சமநிலை பறிப்பு என்பது எப்படிச் சரியாகும்?  நாட்டில் எத்தனையோ மக்கள் அடிப்படை இணைய வசதியின்றி இருப்பது கணினிக்கு முன் அமர்ந்து கருத்துச் சொல்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு மாறாக ஒருசில தளங்கள் வழியாக இணையத்தை அனுபவிக்க முடியும். சில தளங்களை மட்டும் இலவசமாகத் தருவதால் மற்ற தளங்கள் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கிறோம் என்ற வாதமுண்டு. இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் அது பத்திரிக்கை சமநிலை பறிப்பு அதை எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை.

பிரிபேசிக்ஸ் திட்டமாகட்டும், ஏர்டெல் ஜீரோ திட்டமாகட்டும் அதில் திரைமறைவு தனிக்கையோ, கட்டுப்பாடோ இருந்தால் அந்நிறுவனத்தை எதிர்க்கலாம். அனைத்துத் தளங்களும் இலவசமாக வேண்டுமென்று அரசைக் கேட்கலாம். அதற்குமாறாக ஒரு சாதாரணப் பயனர் பலனைடையும் வகையில் வழங்கப்படும் இலவசத்தை எதிர்ப்பது ஆரோக்கியாமா என யோசிக்கவேண்டும். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற தன்னார்வலர்களைக் கொடுக்கவிடாமல் தடுத்து, "நீங்கள் கொடுத்தால் அரசியல்வாதியான எங்களை மக்கள் மதிக்கமாட்டார்கள்" என்றார்களாம் அதுபோலுள்ளது. பிரச்சனைகளைச் சீர்செய்ய வேண்டுமே தவிர காரணமானவர்களை விரட்டக் கூடாது.

இலவசத் தளங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்குக் குரல் கொடுப்பதே இணையச் சமநிலையாகும். காரணம் அதிகம் பொருளீட்டும் நிறுவனம் தங்களைத் தளத்தை விலையில்லாமல் அதாவது பயனரின் டேட்டா செலவைத் தாங்களே ஏற்றுக் கொண்டு இலவசமாகக் கொடுப்பது அவர்களின் விருப்பம். அதைப் பயன்படுத்துவதோ, தவிர்ப்பதோ மக்களின் உரிமை, இதற்கிடையில் இது இணையச் சமநிலை இல்லை என்று கொந்தளிப்பது தேவையற்றது. அனைவருக்கும் சம அளவிலா வருமானவரி கோரப்படுகிறது? அனைத்து உணவகங்களும் சமமான தரத்திலா உணவை வழங்குகின்றன? அனைத்து ஊர்களிலும் சமமான அளவிலா ரியல் எஸ்டேட் மதிப்புள்ளது? வெள்ள நிவாரணமாக அனைவருக்குமா வீடு கட்டிக் கொடுக்கிறோம்? வசதிக்கு ஏற்பவும், ஏழ்மைக்கு உதவவும், விருப்பத்திற்கு இணங்கவும், தேவைக்கு வழங்கவும் செய்யப்படுகின்றன. அதுதான் ஒரு சமூகத்திற்கு வளர்ச்ச்சியை அளிக்கும். லட்சம் சம்பாரிப்பவருகும், ஆயிரம் சம்பாரிப்பவருக்கும் சமமாக வரிவிதிக்கலாமா? எனவே பல்வேறு பொருளாதாரக் காரணங்களையும், சமூகக் காரணங்களையும் கணக்கில் கொண்டே சமநிலை தீர்மானிக்கப்படும் அதுபோல இணையச் சமநிலையும் அவ்வாறே இருக்கவேண்டும். அரசு தொலைக்காட்சி எப்படி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதுபோல அரசின் இணையத்தளங்கள் எல்லாம் இலவசமாக அரசே வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படும் போது இந்த இணையச் சமநிலை என்ற வாதம் வலுயிழக்க நேரும். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இணையச் சமநிலை பயன்படவேண்டுமே தவிர இலவசங்களைத் தடுப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.

- நீச்சல்காரன்