music_medicinஇசையின் உதவியால் நோயின் தீவிரத்தைக் குறைப்பது என்பது பன்னெடுங்காலமாக அறியப்பட்டுள்ளது. கர்நாடக சங்கீதத்தில் சில ராகங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக சொல்லப்பட்டாலும் விஞ்ஞானபூர்வமான நிரூபணம் இல்லை. ஆனால் இசை மருத்துவத்துறையில் இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல இசை மனதையும், எண்ணங்களையும் அமைதிப்படுத்துகிறது. எனவே, இரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசைமருத்துவத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஆல்சீமர் நோய் எனப்படும் அறிவுத்திறன் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொசார்ட்டின் பியானோ இசை ஒலி நாடாக்களை தினசரி ஒரு மணிநேரம் கேட்க வைத்தனர். பின்னர் நோயாளிகளின் அறிவுத்திறன், நினைவாற்றல் ஆகியவற்றை பரிசோதித்தபோது 25 முதல் 50 சதவீதம் வரை அதிக மதிப்பெண் பெறுவது கண்டறியப்பட்டது. மத்தளம், டிரம்ஸ் போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி தசைநார்களை தளரச் செய்கிறது. போர்க்களங்களிலும், தீமிதி சடங்குகளிலும், அலகு குத்திக் கொள்ளும் போதும் கொட்டுவாத்தியங்கள், தாரை, தம்பட்டை போன்ற தோல் கருவிகளைப் பயன்படுத்துவதால் மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புதிய வேகம் உண்டாகிறது.
music_medicine
மெலடோனின் என்பது மூளையில் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். நல்ல இசையைக் கேட்கும்போது மெலடோனின் அதிக அளவில் சுரப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், கோபம், எளிதில் உணர்ச்சி வயப்படுதல் போன்ற பல நிலைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்த மெலடோனுக்கு உண்டு.

ஆனால் எல்லா இசையும் நோயைக் குறைப்பதில்லை. மனதுக்கு மகிழ்வான, மென்மையான இசைக்கு மட்டுமே நோய்களைக் குணப்படுத்தி மனதை அமைத்திப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ராக், மெட்டல் ராக் போன்ற துரித இசைகள் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதோடு, இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றன. மன இறுக்கம், இரத்தக்கொதிப்பு, இருதய நோய்கள், தூக்கமின்மை போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய கொடுமையான இசையைக் கேட்காமல் இருப்பது நல்லது.

நன்றி: கலைக்கதிர்

- தகவல்: மு.குருமூர்த்தி