சில வாரங்களுக்கு முன்பு அனைவருடைய விவாதப் பொருளாகிப் போனது. பெரும்பாலானவர்களுடைய சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் கருந்துளையின் சமீபத்திய முதல் படம். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அதீத அறிவியலாளர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு கருப்பொருளை, இப்பொழுது வரை நாம் வெறும் சூத்திரங்களாகவும், தேற்றங்களாகவும் காகிதத்தில் எழுதி வைக்கப்பட்ட ஒன்றை உண்மை என நிரூபித்துள்ளோம். கருந்துளையினைப் பார்த்த முதல் தலைமுறை நாமாகத் தான் இருப்போம்.

இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் (ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கும் தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள். அதாவது அது ஓர் ஆண்டுக்கு 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர் பயணம் செய்யும். அது ஓர் ஒளி ஆண்டு என கொள்ளப் படுகிறது) தொலைவில் உள்ளது. மேலும் அந்தக் கருந்துளையானது நம் சூரியனின் எடையைப் போல் 60 லட்சம் மடங்கு பெரியது. இப்பொழுது யூகித்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு பெரியது என்று! இந்தக் கருந்துளை ஒரு அண்டத்தின் நடுவே அமையப் பெற்றுள்ளது. அதன் பெயர் Messier 87 என சூட்டப்பட்டுள்ளது.
black holeEHT எனப்படும் Event Horizon Telescope மூலம் இது படம் பிடிக்கப் பட்டுள்ளது. வானவியலாளர்களின் நூற்றாண்டு காலக் கனவு இந்த கருந்துளை புகைப்படம். அடிப்படையில் இது ஒரு புகைப்படமே அல்ல. இது போன்ற ஒரு கருந்துளையைப் படம் பிடிக்க வேண்டுமானால் பூமியை விட பெரிய ஒரு தொலைநோக்கி / அல்லது interferometer எனப்படும் அலைவரிசையை இடைமறித்து அதில் உள்ள தகவல்களை தரவிறக்கம் செய்யும் கருவி வேண்டும். அவ்வளவு பெரிய ஒன்றை கட்டமைக்க இயலாது என்பதனால் உலகமெங்கும் எட்டு கருவிகளை நிறுவி அவற்றின் மூலம் கண்காணித்து வந்தனர். இந்தக் கருவிகளின் மூலம் நீண்ட தொலைவில் உள்ள அதீத ஈர்ப்பு விசைப் பகுதியினை ஆராய முடியும். மேலும் கருந்துளையின் முகப்புப் பகுதியில் ஒளி எப்பொழுதும் அதன் முழு வேகத்தில் இயங்கும். இப்படிப்பட்ட ஈர்ப்பு விசை வேறுபாடு கருந்துளையின் மையம் மற்றும் அதன் விளிம்பினை வரையறுக்க உதவும்.


measurements of black holeImage credit: Katie Bouman

இந்த EHT எனப்படும் கருவியின் மூலம் நிகழ்வு பரப்பெல்லையை (EVENT Horizon) தீர்மானிக்க இயலும். மேலும் இவ்வாறு சில interferometer கருவிகளை இணைப்பதன் மூலம் புவி அளவுடைய ஒன்றிற்கான மாற்றை உருவாக்க இயலும். இதன் உதவியினால் நம் பால்வழி அண்டத்தின் நடுவில் உள்ள SgrA* கருந்துளை மற்றும் விர்கோ A அண்டத்தின் நடுவில் உள்ள M87 எனும் கருத்துளையும் ஆராயப்பட்டது. இந்தக் கருவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் சேமிக்கப்பட்டு அவை அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டன.

measurements of black hole 1Image credit: Katie Bouman

measurements of black hole 2
Image credit: Katie Bouman

இப்பொழுது உங்களிடம் ஏராளமான புள்ளிகளுக்கான தரவுகள் உள்ளது எனக் கொள்வோம். சிறுவயதில் விளையாடிய ‘புள்ளிகளை இணைக்கவும்’ விளையாட்டினை நினைவில் கொள்க. அதே போன்று தான் இப்பொழுது பெறப்பட்ட தரவுகளை இணைத்தால் பல வடிவிலான முடிவுகள் கிடைக்கும். அதில் நமக்கு காண்பிக்கப்பட்டது அதிக அளவில் தத்ரூபமானது.

அடுத்து வரும் கட்டுரைகளில் இன்னும் அறிவியல்பூர்வமான விளக்கங்களைப் பார்க்கலாம்.

- வெ.சீனிவாசன்