அச்சம் அத்தனை முகங்களிலும் அப்பிக் கிடக்கிறது. ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன. கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சர்வதேச விமான சேவைகள் இரத்தாக்கப் படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து மட்டுறுத்தப்படுகின்றது. நூலகங்கள், கேளிக்கை விடுதிகள், சினிமா அரங்குகள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு அரங்குகள் என்று மனிதர்கள் கூடும் இடங்கள் யாவும் மனிதர்கள் நடமாட்டமற்ற  மயான பூமியாக்கப்பட்டு விட்டன. நீண்ட தொடர் வரிசைகளில் மக்கள் பால், நீர் என்கின்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக காத்துக் கிடக்கின்றார்கள்.

ஒருவரை ஒருவர் முண்டியடிக்கின்ற அந்த அப்பாவி மக்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும் ஒவ்வொரு செய்தி ஊடகம் உட்கார்ந்து இறந்தோரையும், இறப்பின் விளிம்பில் இருப்போரையும் ஒரு தேர்தல் முடிவுகளை அறிவிக்கின்ற தேர்தல் வானொலிகள் போல கணக்கெடுத்தபடி பயப்பிராந்தியை மேலும் மேலும் உசுப்பேத்தியபடி இருக்கின்றன. போதாக்குறைக்கு அவனும் தன் கையில் இருக்கின்ற சமூக வலைத்தளங்களில் ஆக்கவும் அழிக்கவும் வல்ல செய்திகளை ஆராயாமல்  பதிவிடுகின்றான் . கடந்த சில நாட்களில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை முதலீட்டாளார்கள் திரும்பப  பெற்றதால் உலகப் பங்குச் சந்தை வரலாறு காணாத சரிவு கண்டு வருகிறது.

corona virusஇவை எல்லாவற்றிற்கும் மூலகாரணமான கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஹூபே மாகணத்தில், வுவான் நகரில் பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை உலகில் 156,533 பேரைப் பாதிப்பிற்குள்ளாக்கியும் 5,835 பேரைக் கொன்றும் சூறையாடிற்று. கொரோனா வைரஸ் சீனர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது வுஹான்-400 எனப்படுகின்ற இவ்வகை வைரஸை விதந்துரைக்கின்ற  1981 இல் வெளியான "The Eyes of Darkness" நாவல்.  மேலும் அச்சுறுத்தக்கூடிய நோய்கள் அகிலத்தை அழித்துப் போடும் என்பதற்கு இது சாட்சி என்கின்றார்கள் தாங்களே இதை உருவாக்கியதைப் போல மதவாதிகள். தேவனின் நியாயத் தீர்ப்பு இது என்கின்றார் மதத்திற்காக பேசவல்ல மற்றுமொரு அதிகாரி. வன விலங்குகளால், வெளவால்கள் வந்த வினை என்கின்றனர் சில செய்தியாளார்கள். அமெரிக்காவின், ஆட்களை மட்டுப்படுத்துகின்ற ஆராட்சியின் விளைவு என்கின்றார்கள் டுவிட்டர்கள்.

இந்நிலையில் சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா,  பிரான்ஸ், ஸ்பெயின் என 110 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று வெகு வேகமாகப் பரவி அனைத்துலகையும் கிலி கொள்ள வைத்துள்ள நேரம் இது. அதனால் தற்போது சர்வதேச உலக சுகாதார நிறுவனம் கொரோனா ஒரு உலகளாவிய தொற்று, அதாவது பண்டமிக் (Pandemic) என்று பிரகடனப்படுத்தியுள்ளது. 

"பண்டமிக்" என்பது உலகம் முழுமையும் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்று என்று பொருள்.  உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்ற இந்த வைரஸ் தொற்றிற்கு இதுவரை தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான பலரையும் வஞ்சித்து ஏமாற்றுகின்ற பல திடீர் மருத்துவர்களும், ஆலோசகர்களும், கருத்து கந்தசாமிகளும்,  புதிய வகை போலி மருந்துகளும், மூலிகை மருந்துகளும்  குறித்து பல்வேறு அச்சந்தரும் வதந்திகள் பரவி வருகின்றன.

அடிக்கடி நீர் அருந்துவது, உள்ளி, இஞ்சி, வைட்டமின் சி, எலுமிச்சை மற்றும் வெந்நீர் அருந்துதல் என்று பல வீட்டு வைத்தியங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் பல புரளிகள், உண்மைக்குப் புறம்பாக பரப்பப்படுகின்றன. யோகா செய்யலாமாம், கஞ்சா பயன்படுத்தலாமாம், பசுவின் சிறுநீர், சாணம் உட்கொள்ளலாமாம் என்றெல்லாம் போலியான அறிக்கைகள் குவிந்து வருகின்றன. ஆடாதொடை, சிக்கரத்தை, அதிமதுரம், மிளகு, திப்பிலி ஆகியவற்றிலிருந்து கசாயம் செய்து குடித்தால் தமிழகத்தின் பக்கமே கொரோனா வைரஸின் பாதிப்பு இருக்காது என்கின்றார் ஆனந்த விகடனில் மற்றுமொரு சித்தர். அதுமட்டுமன்றி வக்கிரபுத்தியோடு அலைகிற வியாபாரிகள் இதுதான் தருணம் என பொருட்களைப் பதுக்கி, துன்புறும் மக்களை மேலும் தவிக்க விடுகின்றார்கள்.

ஆதாரமின்றி தமிழிலக்கியம் திரிக்கப்பட்டு, சிலப்பதிகாரத்தில், சித்தர் பாடல்களில் கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே இருப்பதாக சொல்கிற போலியான  பாடல்கள்  இணையத்தில் உலா வருகின்றன. பல்லாயிரம் ஆண்டு தமிழ்ப் பழமை பேசும் கனவான்கள் சிலர் ஆராயாமல்  அவற்றைக் கண்மூடி ஏற்கின்ற, மீள் பதிவு செய்கின்ற துரதிஷ்டம் கூட நடக்கிறது. 

 இத்தனை இடர்பாடுகளுள்ளும் மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வும் புரிந்துணர்வும் தேவை என்பதை உணர்ந்த பல சமூக நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு அறிவியலைப் புகட்டி வருவது போற்றத்தக்கது

நோயை கட்டுப்படுத்துகின்றதெனக் கருதும் கைச்சுத்திகரிப்பான்களுக்கு (sanitizer) பெருந் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, வடஅமெரிக்க நாடுகளில் கூட கைசுத்திகரிப்பான்களை, கையுறைகளை, முகக்கவச உறைகளை (மாஸ்க்)  வாங்குவதில் பெரும் சிரமம் உள்ளது. ஆனாலும் விசேட கைச் சுத்திகரிப்பான்களை விடவும் சாதாரண சவர்காரங்களில் கை கழுவிக் கொண்டாலே கொரோனா கிருமிகள் அழிந்து போகின்றன என்கின்றது புதிய மருத்துவக் குறிப்பு.

உலகத்தின் பொது சுகாதார வசதியின் தரம் உச்ச நிலையில் இல்லை என்பதை பல நாடுகளும் உறுதி செய்து வருகின்றன. இத்தாலியில் பல முதியவர்கள் மருந்தின்றி வேண்டுமென்றே கைவிடப்பட்டார்கள் என்பது துயர் தரும் செய்தி.  மருத்துவமனைகளில், திடீரென நோயாளிகள் வருகை அதிகரிப்பு, அதிகரிக்கும் கூட்டத்திற்கு ஏற்ப போதிய அளவுக்கு முகக்கவச உறைகள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு குறித்த பேரச்சம் இன்று ஒவ்வொரு உலக நாடுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

கனடாவின் பிரதமர், பிரதமரின் மனைவி, ரூமேனியத் தலைவர் உட்பட பல உலகத் தலைவர்கள் இந்த நோய்தொற்றிலிருந்து விடுபட பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.  இரண்டு பேரின் உயிரை இந்தியாவில் பறித்துள்ள இந்தத் தொற்று வைரசை உரிய காலத்தில் கண்டறிந்து, வகைப்படுத்துவதை உறுதி செய்து விட்டால், லேசான தொற்றுப் பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறச் செய்வதற்கான வழிவகைகளைச் செய்யலாம் என்றும், தீவிர நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து அவர்களையும் குணப்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள் அறிவியல் நிபுணர்கள். 

மாநில மற்றும் மத்திய அரசுகள்  அவசர கால செயல்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும் என்பதிலும், சுகாதார வசதிகளில் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இன்னமும் கவனத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை . 

கோவிட்19  எனப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தான் உலகத்தினை ஆட்டிப் படைக்கின்ற  கொடுமையான வைரஸ் என்றில்லை. ஏற்கனவே 1918 உலகம் முழுமையையும் 5 கோடி பேரைக் கொன்றொழித்தது ஸ்பானிஸ் காய்ச்சல். அதிலும் குறிப்பாக அதிகம் இறந்தவர்கள் 15 வயது முதல் 35 வயதான இளவயதினர்தான். 1957ல் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட, ஆசியாவை உலுப்பிய கொடிய வைரஸான ஆசியன் ப்ளு 11 இலட்சம் பேரின் உயிரைக் காவு கொண்டது. 2009 அளவில் மெக்சிக்கோவில் உருவெடுத்த பன்றிக் காய்ச்சல் 2 லட்சம் பேர் வரை கொன்று தீர்த்தது. 1981ல் 3 கோடியே 20 இலட்சம் பேரைக் கொன்று தீர்த்தது எய்ட்ஸ் என்கின்ற பயங்கர நோய். போலியோ, சார்ஸ், மெர்ஸ் என பல வகை வைரஸ்கள் நாம் வாழும் பூவுலகை ஏற்கனவே புரட்டிப் போயிருக்கின்றன.

இந்நிலையில் தான் கொரோனா மறுபடியும் நம் பூமிக்குள் இன்று தன் இரும்புப் பிடியை இறுக்கியுள்ளது.

- மா.சித்திவிநாயகம்