எபோலா என்னும் உயிர்க்கொல்லி நோய் திரும்பவும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. எபோலா வைரஸ் நோயும், நோய் பயமும் மேற்கு ஆப்பிரிக்காவை மட்டுமன்றி உலகம் முழுவதையும் நடுங்க வைத்துக் கொண்டுள்ளது.

முதன் முதலில் இந்நோய் 1976ஆம் ஆண்டு சூடானிலும் காங்கோவிலும் காணப்பட்டது. காங்கோவில் எபோலா என்னும் நதிக்கரையில், வனத்தின் நடுவில் அமைந்துள்ள கிராமத்தில்தான் இந்நோய் முதன் முதலாக வெளிப்பட்டது. அதனால், இதற்கு எபோலா என்னும் பெயர் சூட்டப்பட்டது.

ebolaஇம்முறை, கடந்த மார்ச் மாதம் முதல் காணப்படும் இந்த வைரஸ் கினியா, லைபீரியா, சியாரே லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றது. மேலும் இப்பொழுது அமெரிக்கா, ஐரோப்பா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் சிலரிடம் இந்நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன. சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் இந்நோயினால் உயிரிழந்துள்ளார். பத்திரிகைச் செய்தியின்படி இந்தியாவில் 420 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். 387 பேர் இந்த நோய்த்தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்ற கண்காணிப்பு வளையத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பைலோ விரிடெ குடும்பத்தைச் சேர்ந்த ஜீனஸ் ஆகும். மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மூன்று வகைகள் உட்பட ஐந்து வகையான எபோலா வைரஸ்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வெளவால்கள் மூலம் சிம்பன்சி, கொரில்லா, குரங்குகள், முள்ளம் பன்றி ஆகிய மிருகங்களிடம் இந்நோய் விரைவில் பரவும் சாத்தியம் அதிகம். இவ்வைரசால் பாதிக்கப்பட்ட மிருகங்களினுடைய இரத்தம், உமிழ்நீர், உடல் திரவங்கள் மூலம் மிருகங்களிடமிருந்து மனிதனுக்குப் பரவுகின்றது. பிறகு மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகின்றது எனபது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், பணிவிடை செய்யும் செவிலியர், நோயாளியுடன் இருப்போர், இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் பணியாளர் போன்றவர்களுக்கும் இந்நோய் எளிதில் பரவும் சாத்தியம் உள்ளது. இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் சுக்கிலத்தின் மூலமாகவும் குணமடைந்த 7 நாட்கள் வரை நோய் பரவும் சாத்தியம் உள்ளது.

இதுவரை இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் 80பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுளளது. மேற்கு ஆப்பிரிக்காவில் பல இடங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பணிகளில் உள்ளவர்களைத் தவிர அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள, அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களை அமெரிக்க அரசு திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சென்டர் பார் டிசீஸ் கண்ட்ரோல் அண்டு பிரிவென்சன், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எபோலா நோய்த்தடுப்பிற்கு எதிரான போராட்டம் காட்டுத் தீயிற்கு எதிரான போராட்டம் போன்றதாகும். எரிந்து கொண்டுள்ள ஒரு மரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அது பெரும் காட்டுத் தீயை உருவாக்கிவிடுவதைப் போல, ஒரு நோயாளியால் கூட திரும்பவும் எபோலா தீவிரம் அடையக் கூடும் என்று அமெரிக்காவின் சென்டர் பார் டிசீஸ் கண்ட்ரோல் தலைவர் டாம் பிரீடென் எச்சரித்துள்ளார்.

எபோலா, உடல் நலத்திற்கு எதிரான, மிகத் தீவிரமான மிரட்டல் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை செயலாளர் பிலிப் ஹர்மோண்டு கூறியுள்ளார. கடந்த மாதம் லண்டனில் "நேஷனல் ஹெல்த் சர்வீசில்" பணியாற்றிக் கொண்டுள்ள பவானியைச் சேர்ந்த மருத்துவர் ப.பா.சாந்தியிடம் இந்நோய் பற்றியும் மாற்று முறை மருத்துவம் பற்றியும் பேசிக் கொண்டிருந்த பொழுது, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், "உலக நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நோயை முழுவதுமாய்க் கட்டுப்படுத்த குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்று கருதப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், திடீரெனக் காய்ச்சல் தோன்றும். தசைவலி, தசைச் சோர்வு, தொண்டை வலி, தலைவலி ஆகியன தென்பபடத் தொடங்கும். பிறகு வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். அதைத் தொடர்ந்து இரத்தம் உறைவது தடைபட்டு உள் மற்றும் வெளி உறுப்புகளில் இரத்தப் போக்கு ஏற்படும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கேடுறத் தொடங்கும். இரத்த அழுத்தம் குறையத் தொடங்கும். நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் நேரிடும்.

இது மூச்சுக் காற்றினால் பரவக் கூடிய நோய் அல்ல என்பதால், புளூ, சார்ஸ் போன்ற நோய்கள் பரவுவது போல் இந் நோய் பரவாது. நோயாளியைத் தொடுவது, இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சுக்கிலம் போன்ற உடல் திரவங்கள் மூலமே பரவும்.

எபோலா வைரசுக்கு எதிரான மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்துவதற்கான மருந்துகளையும் கண்டு பிடிப்பதற்காக உலக வங்கி 1200 கோடி ரூபாயும், ஐ.நா.சபை பல கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளன. உலக நாடுகளின் அமைப்புகளும் அதிகாரிகளும் மாற்று முறை மருத்துவங்களை கவனத்தில் கொள்ளாததன் காரணமாகவே, ஒரு வைரசுக்கான போராட்டத்தில் பல கோடி ரூபாய்களையும், பல உயிர்களையும் இழக்க வேண்டியுள்ளது.

கென்யாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்தர் ரெட்டி கென்யாவில் மரணமடைந்துவிட்டதைத் தொடர்ந்து அவருடைய மனைவியும் குழந்தையும் ஆந்திர மாநிலத்திலுள்ள பூதலப்படடு கிராமத்திற்கு திரும்ப வந்துள்ளனர்.

இதையறிந்த மருத்துவ மற்றும் நலத்துறை அலுவலக உயர் அதிகாரி உடனடியாக ஒரு மருத்துவக் குழுவை அனுப்பி அந்த அம்மாவிற்கும், குழந்தைக்கும் எபோலா நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்துள்ளார்.

கஜேந்தர் ரெட்டி மரணமடைவ்தற்குக் காரணமாயிருந்தது "பெனமோனியா" ஆகும். தாயும் குழந்தையும் எவ்விதப் பாதிப்புமின்றி நன்றாக உள்ளனர். "எபோலா", "பெனுமோனியா" என நோயின் பெயர் எதுவாக இருந்தாலும் கவலைப்படாமல், உடலில் தோன்றும் நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தும் ஓமியோபதி மருத்துவத்தால் "எபோலா" நோயைக் குணப்படுத்தும் சாத்தியமுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் பணியாற்றிக் கொண்டுள்ள என் மகனுக்கும், அவருடன் பணியாற்றுபவர்களுக்கும், இந்நோய்த் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, தடுப்பு மருந்தாகச் செயல்படக் கூடிய ஓமியோபதி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளேன்.

மனித உடல் ஆகாயம், வாயு, தீ, மண், காற்று எனும் ஐந்து முலக்கூறுகளால் ஆனது. இவை ஐந்தும், வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றாக நம் உடலில் செயல்படுகின்றன. வாதம், பித்தம், கபம் எனும் மூன்றும் முறையே 1, 1/2, 1/4 என்னும் அளவில் இருக்கும். இந்த அளவுகள் கூடவோ, குறையவோ செய்வதால் தான் நம் உடலில் நோய்கள் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றின் அளவிலும் மாறுபாடுகளின் மூலம் 4448 நோய்கள் உண்டாகும்.

இன்றைய "எபோலா" மட்டுமல்ல, இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடும் ஏதாவது ஒரு நோய்க்கு புதியதாக எந்தப் பெயர் சூட்டப்பட்டாலும் அதற்கான மருந்து நம் சித்த மருத்துவத்தில் இருக்கும். அந்த நோயையும் நம் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். எபோலா நோயிலும் காய்ச்சல் (பித்தம அதிகரித்து) உடல்வலி (வாதம் அதிகரித்து), இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவதும் காணப்படுகின்றது.

இவற்றை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. நோய் பரவாமல் காத்துக் கொள்ளவும் சித்த மருந்துகள் உதவும்.

கல்லீரலையும், சிறுநீரகங்களையும காக்கும் கரிசலாங்கண்ணி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டு, மஞ்சள் போன்றவற்றை உணவில் நாள்தோறும் சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிதில் நோய்த் தொற்றைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

- மருத்துவர் மு.ந.புகழேந்தி, கோயம்முத்தூர்-25., அலைபேசி: 9842224158 மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.