நாய்களைப்பற்றி நாமெல்லோரும்
ஒரேமாதிரி நினைப்பதில்லை
நாய்களனைத்தும் ஒரேமாதிரியாய்
இல்லாததைப்போலவே

குரல்வளையைக் கவ்வும் நாய்
குண்டிச்சதையை குதறும் நாய்
அபாய அறிவிப்பிலிருக்கும் எலும்பு படத்துக்கே
ஜொள்ளொழுக்கும் நாய்
சீமாட்டிகள் மடியில் தவழும் சிருங்காரநாய்
மாட்டெலும்பு கடித்ததை மறைக்கும் சுத்த சைவநாய்
ஒரிஜனல் முனியாண்டிவிலாஸ் நாய்
பேட்டைநாய் கோட்டைநாய் வேட்டைநாயென்று
வகையெத்தனையானாலும்
நன்றியில் ஆட்டுவதாய் நம்பப்படும் வால்
பின்பகுதியிலிருக்க
கோபத்தில் கடித்துக் குதறும் வாயோ
எடுத்தயெடுப்பில் முன்பகுதியிலேயே இருக்கிறது என்பதிலும்
வாலாட்ட வேண்டுமானால்
குறைந்தபட்சம் தங்கபிஸ்கட்டாவது கொடுத்தாகவேண்டும்
கடிப்பதற்கோ காரணங்கள் தேவையற்றதாகிறது
அவை நாய்களாக இருப்பதாலேயே என்பதிலும்
எல்லா நாய்களுக்கும் இயல்பிலேயே ஒற்றுமையிருக்கிறது

அதேநேரத்தில்
அரசாங்கம் தண்டிக்கும்போது
நீதிமன்றம் காப்பாற்றும் என்று நம்புவதைப்போன்றே
ஒருநாய்
வெறியில் கடிக்கும்போது
அதன் வால்மட்டும் சுயேச்சையாய் ஆடுமென்று நினைப்பதும்
முட்டாள்தனமாகும்
ஏனென்றால்
வேறுவேறு இடத்திலிருந்தாலும்
வாலும் வாயும் ஒரே நாயின் ஒருங்கிணைந்த உறுப்புகள்.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It