autism

ஆட்டிசம் என்பது ஒரு வளர்ச்சிக் குறைபாடு. உடல் வளர்ச்சியில் பல குறைபாடுகள் ஏற்படுவது போல, மன வளர்ச்சியிலும் பல குறைபாடுகள் உண்டாகலாம். குழந்தைகளில் காணப்படும் முக்கிய மனவளர்ச்சிக் குறைபாடுகளாக மூன்றைக் கூறலாம்:

மன வளர்ச்சிக் குறைபாடு ( intellectual disability, mental retardation; அறிவாற்றல் குறைபாடு)
கற்றல் குறைபாடு (learning disability)
ஆட்டிசம் (autism).

ஆட்டிசத்துக்குரிய தனிப் பண்புகள் யாவை?

ஆட்டிசத்தில் மட்டுமே காணப்படும் குறைபாடுகளை மூன்று தலைப்புகளின் கீழ் விவரிக்கலாம். இவை 'ஆட்டிசத்தின் மூவகை குணாம்சங்கள்' (autistic triad) என்று அழைக்கப்படுகின்றன1:

பேச்சு, மொழி மற்றும் மற்றவர்களுடன் தொடர்பாடல்கொள்ளும் திறன் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் (impairment of speech, language and communication).

மற்றவர்களுடன் ஊடாடுவதிலும், ஒட்டிஉறவாடுவதில் உள்ள இடர்பாடுகள் (impairment of in social interaction and social communication). இடைவினையாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை இது சுட்டுகிறது.

இறுக்கமான, நெகிழ்வற்ற செயல்கள், சிந்தனைப்பாங்கு, திருப்பத்திரும்ப அதே செயலைச் செய்யும் பழக்கங்க வழக்கங்கள் (rigid, repetitive patterns of behaviour, interests, or activities). தொடர் செய்கைகள், மாற்றத்தை விரும்பாத போக்கு.

இம் மூன்று அறிகுறித் தொகுப்புகளுமே ஆட்டிசத்தின் இன்றியமையாத பண்புகள். இவை மூன்றும் ஒருவரில் காணப்படால் அருவருக்கு ஆட்டிசம் உள்ளது என்று உறுதியாகக் கூறலாம். இம்மூன்று குணாம்சங்களும் ஒற்றைத் தன்மையானவை அல்ல, ஒவ்வென்றிலும் பல்வேறு அறிகுறிகளின் தொகுப்புகளைக் கொண்டவை என்பதைக் கவனிக்கவும். இவை ஒருவருக்கு வெவ்வேறு அளவில் காணப்படலாம்.

ஆட்டிசம் ஒரு மனநோயா? மனக்கோளாறா?

முன்னர் கூறியது போல ஆட்டிசம் ஒரு வளர்ச்சிக் குறைபாடு மட்டுமே. அது மனச்சோர்வு, மனச்சிதைவு போன்ற ஒரு மனநோய் அல்ல. மன அதிர்ச்சி, தவறான வளர்ப்பு முறை ஆகியவற்றால் ஏற்படும் மனக்கோளாறும் அல்ல.

ஆட்டிசத்துக்கும் மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

குழந்தைகளின் மன வளர்சி என்று கூறும்போது அதல் பல கூறுகள் உள்ளன. உட்காருதல், நடத்தல் போன்ற உடல் இயக்கங்களின் வளர்ச்சி, மலம் மற்றம் சிறுநீர் கழித்தலின் கட்டுப்பாடு, பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி, சமூகத்திறன்களின் வளர்ச்சி, உணர்ச்சிகள் சார்ந்த வளர்ச்சி, கற்கும் திறன்களின் வளர்ச்சி என பல்வேறு பரப்புகளில் குழந்தைகளின் வளர்ச்சி விவரிக்கப் படுகிறது. மனவளர்ச்சிக் குறைபாட்டில் இவை யாவும் பின்தங்கி இருக்கும். (கற்றல் குறைபாட்டில் கற்கும் திறன்களான வாசிப்பு, கணிதம், எழுத்து ஆகிய ஆற்றல்களில் மட்டும் குறைபாடுகள் காணப்படும்). ஆட்டிசத்தில் மேலே கூறப்பட்ட மூன்று வகையான குணாம்சங்களும் ஒருமித்துக் காணப்படும். எனவே, ஆட்டிசம் வேறு, மனவளர்சிக் குறைபாடு வேறு. ஆனால் ஆட்டிசம் உள்ள குழந்தைகளில் அரைவாசிப் பேருக்கு நுண்ணறிவு சராசரியை விட மிகக்குறைவாகவே [நுண்ணறிவு ஈவு (IQ) 70 -க்குக் குறைவாக] இருக்கும். அதாவது, ஆட்டிசமும் மனவளர்ச்சி (அறிவாற்றல்) குறைபாடும் ஒருங்கே காணப்படும். இந்த நுட்பமான வேறுபாடுகளை விளங்கிகொள்வது அவசியம்.

ஆட்டிசம் பற்றிய தற்போதைய புரிதல் என்ன?

ஆட்டிசத்தால் ஏற்படும் பாதிப்பு அதன் கடுமையைப் பொறுத்து ஆளுக்கு ஆள் வேறுபடும். அத்தோடு, ஆட்டிசம் வேறு சில வளர்ச்சிக் குறைபாடுளிலும் ஓரங்கமாக அமையலாம். குறிப்பாக, சில மரபியல் நோய்களில் ஆட்டிசமும் இணைந்து காணப்படுகிறது. காட்டாக, Fragile X syndrome என்கிற மரபியல் நோயில் ஆட்டிசத்தின் சகல பண்புகளும் காணப்படலாம்.

எனவே ஆட்டிசத்தை அதன் கடுமையை முன்வைத்து விளக்குவதே இன்றைய அணுகுமுறையாக உள்ளது. இதன்படி, ஆட்டிசமானது கடுமையான ஆட்டிசம் - மிதமான அட்டிசம் - சுமாரான ஆட்டிசம் என மூன்று நிலைகளில் வைத்துப் பார்க்கப்படுகிறது. இது வானவில்லில் உள்ள நிறமாலை போல இருப்பதால் ஆட்டிசம் நிறமாலை (Autism Spectrum Disorder; ASD) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக, ஆட்டிசத்தினால் ஏற்படும் பாதிப்பை முதன்மைப்படுத்தி பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தேவையான சிகிச்சை, கல்வி, ஆதரவு ஆகியவற்றை வளங்க ஏற்பாடு செய்யவும் துணைபுரிகிறது2. சுருக்கம் கருதி, இந்த பதிவில் ஆட்டிசம் என்ற சொல் இந்த ஆட்டிச நிறமாலையைக் (ASD) குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஆட்டிசத்தை இலகுவாகப் புரிந்துகொள்ள அதை பின்வருமாறு விவரிக்கலாம்:

கடும் ஆட்டிசம் (கென்னர் ஆட்டிசம்; Kanner's syndrome) = ஆட்டிசம் + மனவளர்ச்ச்க் குறைபாடு.
வகைமாதிரியான ஆட்டிசம் (Typical autism) = மிதமான அட்டிசம்
சுமாரான ஆட்டிசம் (அஸ்பர்ஜர் கூட்டு அறிகுறி; Aspergers syndrome )

ஆட்டிசம் பற்றி இப்போது அதிகமாகப் பேசப்படுவது ஏன்?

உலக அளவில் அண்மைக் காலமாக ஆட்டிச பாதிப்பு உள்ள குழந்தைகள் கூடுதலாக அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். முன்பெல்லாம் ஆட்டிசம் அரிதான ஒரு குறைபாடாகவே கருதப்பட்டது. அதாவது, 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை என்ற அளவிலேயே கண்டறியப் பட்டது. தற்சமயம் இது ஏறத்தாழ 68 குழந்தைகளில் ஒரு குழந்தை (68:1) என்ற அளவில் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன3. இந்தியாவில் செய்யப்பட்டஒர் ஆராய்ச்சி 100:1 என்ற அளவில் உள்ளதாக எடுத்துக் காட்டியுள்ளது4. இப்போது ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்ச்சி உள்ளதால் மருத்துவர்கள் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை அதிகமாக அடையாளம் காணுகிறார்கள் என்பது ஒரு காரணம். ஆட்டிசத்தை வரையரை செய்யும் வரம்புகள் இப்போது விரிவாக்கப்பட்டுள்ளமை இன்னொரு காரணமாக இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

ஆட்டிசத்தின் அடையாளங்கள்

ஆட்டிசத்தில் நூற்றுக் கணக்கான அறிகுறிகள் உள்ளன. இவற்றில் எவை ஆட்டிசத்தில் மட்டுமே காணப்படுபவை என்பதை மேலே கூறிய முப்பெரும் குறைபாடுகளுடன் பொருத்திப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் சில:

autism childபேச்சுத் திறன் இல்லாமை அல்லது புரியும்படி பேச இயலாமை, அல்லது பின்தங்கிய மொழி வளர்ச்சி.

விளக்கமாக மொழியைப் பேசுவதிலும், அதைப் புரிந்துகொள்வதிலும் சிரமங்கள்

ஓர் உரையாடலைத் தொடங்குவதிலும், அதைத் தொடர்வதிலும் சிரமங்கள்.

ஒரு முறை கூறிய சொற்களை கிளிப்பிள்ளை போல திரும்பக் கூறுதல்.

குழந்தையின் பெயரைச் சொல்லி அழைக்கும்போது அதை புரிந்துகொள்ளாது அசட்டை செய்வது (எனவே, காது கேட்கவில்லையோ என்ற சந்தேகம் தோன்றலாம்)

பேசும்போது கண்களை அல்லது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்தல்.

தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஒரு பொருளை விரலால் சுட்டிக்காட்டாமை.

பாவனை விளையாட்டுகளில் ஈடுபடாமை.

தனிமையை விரும்பும் மனப்பாங்கு; மற்ற குழந்தைகளுடன் கூடி விளையாடாத தன்மை

விளையாடுப் பொருள்களை திருப்பத் திரும்ப சுற்றுவதில் ஆர்வம்; பதற்றமுறும்போது கைகளை பறவை போல அசைத்து சுற்றிச் சுற்றி ஓடுவது போன்ற பழக்கங்கள்.

மாற்ற முடியாத பழக்க வழக்கங்கள்; அதே செயலை திரும்பத்திரும்ப செய்யும் குணம் (தொடர் செயல்கள்) மாறுதல்களை விரும்பாத போக்கு.

மற்றவர்களின் உணர்வுகளை, மனநிலையை (உ-ம். அவசரத்தை, கவலையை, துன்பத்தை) புரிந்துகொள்வதில் இடர்பாடு.

ஆட்டிசம் ஏற்படக் காரணம் என்ன?

ஆட்டிசம் ஊள்ள குழந்தைகளில் ஏறத்தாழ 10 % விகிதத்தினருக்கு ஏதாவது ஒரு மரபியல் நோயோ பிற மூளைசார்ந்த பாதிப்போ இருக்கலாம். ஆனால் மற்ற 90% விகிதத்தினருக்கு மூளை சாந்த பெரும் பாதிப்பு ஏதும் இருப்பது இல்லை. அதாவது இவர்களில் ஆட்டிசத்துக்கான காரணம் என்னவென்று கூறமுடியாதாதாக இருக்கும். ஆனால் இவர்களில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆட்டிசம் அல்லது ஆட்டிசம் சார்ந்த பண்புகள்இருக்கலாம். இதனால் ஆட்டிசத்துக்கும் குறிப்பிட்ட சில மரபணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது5.

என் குழந்தைக்கு ஆட்டிசத்தின் அறிகுறிகள் இருப்பதாகத் தெரிகிறது. நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

முதலில் உங்கள் குழந்தைக்கு உள்ளது ஆட்டிசம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்டிசத்துக்கு ஸ்கேன், குருதிப் பரிசோனை போன்ற புறவயமான பரிசோதனைகள் இல்லை. ஆட்டிம் அதன் அறிகுறிகளை வைத்தே இனம் காணப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதா என்பதைக் கண்டறிய பல வல்லுனர்கள் உள்ளார்கள். உங்கள் குழந்தையை முதன்முதலாக ஆட்டிசத்தில் அனுபவமுள்ள ஒரு குழந்தைநல மருத்துவரிடம் காட்டுவது நல்லது. சில சமயங்களில், குறிப்பாக சுமாரான அட்டிசம் உள்ளவர்களை அடையாளம் காண ஒரு குழந்தை மனநல மருத்துவர் தேவப்படுவார் கூடவே, கீழே கூறியுள்ளது போல , வேறு சில துறைசார் வல்லுனர்களின் பங்களிப்பும் தேவை.

அடுத்து, உங்கள் குழந்தைக்கு உள்ள ஆட்டிசம் (மேலே கூறியபடி) எவ்வளவு கடுமையானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக, உங்கள் குழந்தைகளின் தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள்அ வேண்டும்.

ஆட்டிசத்துக்கு என்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

ஆட்டிசத்துக்கு மருந்துகள் இல்லை. அதை முற்றாகக் குணப்படுத்தவும் இயலாது. ஆனால் ஆட்டிசத்தின் தாக்கத்தையும் அதன் பாதிப்பையும் மட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. இவர்களுக்கு உள்ள ஒவ்வொரு குறைபாட்டுக்கும் சிகிச்சை தேவை. காட்டாக, பேச்சு மற்றும் மொழி சார்ந்த குறைபாடுகளுக்கு பேச்சுவழிச் சிகிச்சை (speech and language therapy) தேவை. மேலும், இவர்களுக்கு சமூகத் திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும், நடத்தைப் பிரச்சினைகள் (உ-ம். பிடிவாத ஆர்ப்பாட்டங்கள்) இருந்தால் நடத்தைச் சீராக்கம் (behaviour modification) தேவைப்படும். மிக முக்கியமாக, இவர்களுக்க்கு கல்வி அவசியம். கல்விக்கூடங்கள் பாடங்களை மட்டும் கற்றுத் தருவது இல்லை, பல வாழ்வியல் திறன்களையும் கற்றுக் கொடுக்கின்றன. மற்றவர்களுடன் கலந்து பழகவும் சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பள்ளிக்கூடங்கள் வழி வகுக்கின்றன. எனவே, ஆட்டிசக் குறைபாடுகளைச் சீராக்குவதிலும் பள்ளித்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன. ஆட்டிசம் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சிறப்புப் பள்ளிக்கூடங்கள் தேவை இல்லை. சுமாரன ஆட்டிசம் உள்ளவர்களுக்கு சாதாரண பள்ளிக்கூடங்களே சிறந்தது என்பது வல்லுனர்களின் முடிவு6 ஆனால், இவர்களுக்கு பள்ளிகளில் சில வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். கடுமையான ஆட்டிசம் உள்ளவர்களுக்கு சிறப்பு பள்ளிக்கூடங்கள் தேவைப்படும்.

சிறப்புப் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வே̀ண்டும். பல தனியார் கல்வி நிறுவனங்கள் வருவாய் நோக்கத்தோடு செயல்படுகின்றன. சில தன்னார்வ நிறுவனங்களும் சிறப்புப் பள்ளிகள் நடத்தி வருகிறன. இவர்களிடம் சில வினாக்களைக் கேட்பது பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் சில:

பள்ளி ஆசிரியர்களின் துறைசார் தகைமைகள் என்ன?
அவர்கள் ஆட்டிசத்தில் பயிற்சி பெற்றவர்களா?
ஒரு வகுப்பில் எத்தனை மாணவ மாணவிகள் இருக்கிறார்கள்?
அவசர நிலைமகள் ஏற்படும்போது ஒரு மாணவனை ஆற்றுப்படுத்த வேறொரு வகுப்பு (resource room) உண்டா?
பேச்சுவழிச் சிகிச்சை வல்லுனர், தொழில்வழி சிகிச்சை வல்லுனர் ஆகியோரின் ஆலோனைகளை நடைமுறைப் படுத்த வசதிகள் உண்டா?

அந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி மற்ற பெற்றோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவும். சுமாரான ஆட்டிசம் உள்ள குழந்தைகள் சாதாரண கல்விக்கூடங்களில் பயில சில வசதிகள தேவை என்று முன்னர் கூறப்பட்டது. இதை இன்னொரு பதிவில் ஆராயலாம்.

ஆட்டிசம் பற்றி நம்பகரமான தகவல்களை எங்கே பெறலாம்?

ஆட்டிசம் பற்றிய தகவல்கள்இணையத்தளங்களில் பரவலாக உள்ளன. ஆனால் சில தகவல்கள் தவறாக உள்ளன. தனியார் பள்ளிகளின் இணயத் தளங்கள் தம் கல்விக்கூடத்தையே முதன்மைப்படுத்தி எழுதுகின்றன. எனவே, கூடுமானவரை அறிவியல் சான்றுகளோடு எழுதப்படும் வாசகங்கள் உள்ள இணையத்தளங்ககளைப் பார்ப்பது நல்லது. இவற்றில் சில:

National autistic society UK.
(https://www.autism.org.uk/)

Centres for disease control and prevention, U.S.
https://www.cdc.gov/ncbddd/autism

Autism Reasearch Centre, University of Cambridge.
https:/ (https://www.autismresearchcentre.com/)

Autism spectrum disorder in under 19s: recognition, referral and diagnosis. Clinical guideline [CG128] Published date: September 2011
(https://www.nice.org.uk/guidance/cg128)

Thambirajah. M.S. & Ramanujam . L.L. (2016). Essentials of Learning Disabilities and Other Developmental Disorders (Chapter 8), New Delhi: Sage Publications.

சான்றாதாரங்கள்

1 Wing. L. (2001). The Autistic Spectrum, A parents guide to understanding and helping your child, Berkeley, CA: Ulysses Press.

2 American Psychiatric Association (2013). Diagnostic and statistical manual of mental disorders. 5th ed. Arlington, VA: American Psychiatric Association.

3 Centres for Disease Controland prevention, Autism Spectrum Disorder: Data and statistics.
https://www.cdc.gov/ncbddd/autism/data.html [பார்த்த நாள் 02.01.2017]

4 Silberberg.D, Arora N, Bhutani V et al (2013). Neuro-Developmental Disorders in India – An INCLEN Study, Neurology, 80, 7 Supplement P04.229.

5 Folstein S, Rutter M. (1977 ) Infantile autism: a genetic study of 21 twin pairs. Journal of child psychology and psychiatry, and allied disciplines, 18(4):297–321.

6 National Institute of Clinical Excellence (2011) Autism spectrum disorder in under 19s: recognition, referral and diagnosis. Clinical guideline [CG128]; NICE: London.

- டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் சிறப்பு மனநல மருத்துவர்