இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் தங்களுடைய உடலை பேணுவதில் முறையற்று காணப்படுகின்றனர். சாப்பாடு விஷயமாக இருந்தாலும் சரி, உடற்பயிற்சி விஷயமாக இருந்தாலும் சரி, ஓய்வெடுப்பதில் இருந்தாலும் சரி, உடலுக்கு தேவையானதை செலுத்துவதில் நாம் அலட்சியமாக இருக்கின்றோம்.

அதனுடைய விளைவு சிறு வயதிலேயே உடல் ஆரோக்கியமற்று, சோர்வடைந்து சுறு சுறுப்பில்லாமல் காணப்படுகின்றோம். இதனால், எந்த ஒரு விஷயத்திலும் நாம் முழு மனதுடன் செயல்பட முடியாமல் போகின்றது. அது, தொழிலாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும், ஒரு முழுமையான ஈடுபாட்டுடன் செய்வதில்லை.

மனிதர்கள் இன்று இரண்டு இடங்களில் அதிகமாக தங்களுடைய நேரங்களை செலவழிக்கக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளது. ஒன்று மருத்துவமனை. மற்றொன்று ஆலோசனை மையம். இந்த இரண்டு இடங்களுககு மக்கள் அதிகமாக செல்வதற்குண்டான காரணங்கள் ஆரோக்கியமின்மையே ஆகும். இருக்கும் இடத்தில் எல்லாம் கிடைப்பதால், நாம் எதையும் கஷ்டப்படாமலேயே பெற விரும்புகின்றோம். வெளியில் செல்ல வாகனம், படிக்கட்டுகளுக்கு பதிலாக லிப்ட் என்று உடல் உழைப்பின்றியே எல்லாம் இருக்கின்றது.

இதனால், நாளடைவில் நமக்கு கொலஸ்ட்ரால், சுகர், ரெத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் தாக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பருவத்திலேயே உடற் ஆரோக்கியமில்லா நிலையில் காணப்படுகின்றோம்.

உடற்பயிற்சி

உடல் வலிமை என்பதுப்பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. பலமானவருக்கும், பலஹீனமானவருக்கும் சமூகத்தில் கிடைக்கக்கூடிய மதிப்பில் வித்தியாசம் உள்ளது. சீனாவில் கராத்தே பயிற்சி இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். எல்லா பள்ளிக்கூடங்கள் மற்றும் வீடுகளில் கராத்தே செய்வதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால், நாம் உடற்பயிற்சி செய்வதில்லை. நோய் வந்த பிறகு வருத்தப்படுகிறோம். தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இதில், வாக்கிங் செல்லுதல், ரன்னிங் செல்லுதல், கயிற் துள்ளி போன்றவைகளையெல்லாம் செய்யுங்கள்.

முப்பது நிமிடங்களும் முழுமையான ஈடுபாட்டோடு உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால், உங்களிடம் தைரியம், மனநிம்மதி, உயர்வான சிந்தனை, சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை, துணிவு போன்றவைகள் ஏற்படுகின்றன.

உடலின் வடிவமைப்பும் அழகாகின்றது. உடலின் எடை கூடாமல் இருப்பது, உடல் மிகவும் மெலிந்து காணப்படாமல் இருத்தல் போன்றவைகள் நாம் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உருவாகின்றது.

வேலையில் சுறுசுறுப்பு, பொழிவான முகம், நேர்மறையான சிந்தனைகள் உடற்பயிற்சியால் ஏற்படுகின்றன. நமக்கு சரி என்று படக்கூடிய விஷயங்களை, துணிவுடன் செய்யக்கூடிய ஆற்றல் ஏற்படுகின்றது. நேரம் எப்பொழுதெல்லாம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தியுங்கள். வலிமையானவராய் திகழுங்கள்.

உடற்பயிற்சியின் பலன்கள்:

* இதய நோய்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கின்றது.

* 50 சதவீதம் நீரிழிவு, புற்றுநோய், அதிர்ச்சி, மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடிகிறது.

* 30 சதவீதம் இள வயது மரணத்தை குறைக்க முடியும்.

* 35 சதவீதம் மன அழுத்தம் குறையும்.

* 50 சதவீதம் குடல் புற்றுநோய் ஏற்படுவது குறையும்.

* 20 சதவீதம் மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்புக் குறையும்.

* 68 சதவீதம் பின் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புக்கள் குறையும்.

* 30 சதவீதம் இளமையைப் பாதுகாக்க முடியும்.

(அல்ஹஸனாத் மாத இதழ், மே,2015)

உடற்பயிற்சி செய்வதற்கான சில ஆலோசனைகள்:

* அதிகாலையில் எழுந்திருத்தல்

* வீட்டில் காணப்படும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல்

* அதிக நேரம் இடத்தில் இருப்பதை தவிர்த்தல்

* நின்ற நிலையில் வேலைகளைச் செய்தல்

* நமது தோட்ட வேலைகளை நாமே செய்தல்

* பிள்ளைகளுடன் விளையாடுதல்

* ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காது 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது எழுந்து நடத்தல்

* உணவருந்திய உடன் உறங்குதல், உட்கார்ந்திருப்பதைத் தவிர்த்தல்

* அதிகமாக நடத்தல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது நடக்க வேண்டும்.

(அல்ஹஸனாத் மாத இதழ், மே,2015)