கண்ணில் ஏற்படும் அழுத்த நோய் தான் குளுக்கோமா. கண்ணில் திரவ அழுத்தம் அதிகமாகி அது கண்களின் நரம்புகளை பாதிக்கிறது. இந்த அழுத்தம் காரணமாக கண்களில் அக்குவேஸ் என்ற திரவம் உற்பத்தியாகிறது. இது சிறிய துவாரம் வழியாக வெளியேறும். சில நேரங்களில் இது வெளியேறும் வழி அடைபட்டு கண்ணிலேயே தேங்குகிறது. இதனால் முக்கியமான பார்வை நரம்பான ஆப்டிக் பாதிக்கப்படுகிறது. இதனால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. 

உலகில் இரண்டு சதவீதம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோயை ஆரம்பத்திலேயே அறிகுறிகள் மூலம் உணர முடியாது. பார்வை சிறிது சிறிதாக குறைந்து முழுவதும் பாதிக்கப்படும்போது தான் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு இந்த நோய் இருப்பதையே அறிந்து கொள்கின்றனர். 40 வயது கடந்தவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தொடர் பரிசோதனைகள் மூலம் கண்களை குளுக்கோமாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.