கல்லீரல் அழற்சி (Hepatitis)

தீவிர ஈரல் அழற்சி எனப்படும் நோயினால் அறிகுறிகள் உடல் முழுவதும் தோன்றினாலும்  குறிப்பாக ஈரலை மட்டுமே தாக்குகிறது.  (இந்நோயின் மூல காரணத்தைக் கொண்டு தனித்தனியாக ஏ,பி (A,B) என்று இரண்டு வகையாகக் குறிக்கப்படுகிறது. ஆனாலும், எல்லா வகை நோய்களும் ஒரே விதமான அறிகுறிகளையே உடலில் உண் டாக்குகிறது.

ஈரல் அழற்சி ஏ எனப்படுவது தொற்று ஈரல் அழற்சி என்றும், குறைவு கால முதிர் நிலை அழற்சி என்றும், எம்.எஸ்- I ஈரல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதே போல ஈரல் அழற்சி பி எனப்படுவது சீரம் ஈரல் அழற்சி, நெடுநாள் முதிர்நிலை ஈரல் அழற்சி, எம் எஸ் - II ஈரல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. 

பரவும் வகை:

நுண்ணுயிரி தொற்று அழற்சி ஏ-யின் முதிர்நிலை 15-45 நாள்கள் ஆகும். இந்நோய் ஒரு தீவிர தொற்று நோய் ஆகும். இத்தொற்று குறிப்பாக தொற்றுள்ள மலம் தண்ணீர் மற்றும் உணவு மூலம் கலந்து பரவுகிறது. ஆனால், ஈரல் அழற்சி பி-யின் முதிர் நிலை 30-150 நாள்கள் ஆகும். இதன் தொற்றும் நிலை, ஈரல் அழற்சி ஏ-யைப் போல் இல்லாமல் குறைவாகவே காணப்படுகிறது. உடலுக்குள் பரவுவது உணவுப்பாதையைத் தவிர்த்து மற்ற இடங்கள் மூலமாகவும் பரவுகிறது. உண்மையில் கூறப் போனால், ஈரல் அழற்சியைத் தனித்தனியாக அறிகுறிகள் அல்லது பரவி இருக்கும் இடத் தைக் குறித்து மட்டும் வேறுபடுத்தி அறிவது கடினம் என்றே தற்பொழுது நம்பப்படுகிறது. மிகவும் துல்லியமாகக் கூற வேண்டுமென்றால், இரத்தப் பரிசோதனையின் மூலமே கூற முடியும். 

ஈரல் அழற்சி ஏ-யாவது மக்கள் கூட்ட மாக வாழும் இடங்களில் மற்றும் சுகாதார மின்றி வாழும் மக்களிடமே அதிகமாய்க் காணப்படுகிறது. திடீரென்று இந்நோய் உணவு, தண்ணீர், பால், நண்டு, நத்தை போன்றவைகள் மூலம் நூற்றுக்கணக்கான மககளைத் தாக்க வல்லது. குடும்பத்திலும். விடுதிகளிலும் இந்நோய்  பரவலாகத் திடீ ரென்று பரவுகிறது. ஈரல் அழற்சி அதிகமாகக் காணப்படும் காலம் குளிர்காலமே. வெப்ப நாடுகளில் 10-20 வருடங்களுக்கு ஒரு முறை இந்நோயின் தாக்குதல் திடீரென்று பல நாடுகளில் ஒரு கொள்ளை நோய் போல் காணப்படுவதாக, அறிவியல் கணக்கீடுகள் குறிப்பிடுகின்றன.

ஈரல் அழற்சி பி-நோயானது உணவு மண்டலத்தைத் தவிர மற்றவை மூலமாகவும், (எ.கா.:இரத்தம்) பரவுகிறது என்றாலும், பல நோயாளிகளுக்கு எப்படி தன்னுள் நோய் ஏற்பட்டது என்பதைச் சொல்ல இயலாத நிலையில் இருப்பார்கள். இந்நோய், உலகம் முழுவதிலும் சுமார் 150 மில்லியன் மக்கள், மற்றவர்களுக்கு இந்நோயைப் பரப்பக்கூடிய நிலையில் உள்ளார்கள். ஈரல் அழற்சி பி-30 விழுக்காடு நோய்க் குறியியல், ஒத்திசைவு, லெப்ரமேட்டஸ் வகை தொழுநோய், இரத்தப் புற்றுநோய், ஹாச்சின் நோய், நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுக்காகச் செய்யப்படும் இரத்தச் சுத்திகரிப்புக்காக உட்படும் நோயாளி மற்றும் போதை ஊசிகளுக்கு அடிமையானவர் களிடமும் காணப்படுகிறது.

ஈரல் அழற்சி பி-இரத்தத்தானம் செய்ப வர்களிடம் உள்ளதா என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் அறியமுடியும். ஆனால், முழு அளவு இரத்த அணுக்கள், இரத்தத் துகள்கள், பிளாஸ்மா போன்றவைகள் மூலமும் இந்நோய் தொற்ற வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்நோய் இரத்த பிறிது ஏற்றம் மூலம்தான் அதிகம் பரவுகிறது  என்றாலும், தொழில் முறை மூலமாகவும் (மருத்துவர், செவிலியர், உடல் உறவு, சிரை வழி போதை மருந்து, சிறுநீரக இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மூலமாகவும் பரவக்கூடும்.

நோய் அறிகுறிகள்:

இத்தொற்று கல்லீரல் அழற்சியின் பொழுது மஞ்சள் காமாலை தோன்றுவதற்கு முன்பு குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, தலைவலி, கண்கூச்சம், தொண்டை வலி, இருமல், நீர்க்கோர்வை முதலியவைகள் ஓர் இரு வாரங்களுக்கு முன்னரே தோன்றிவிடும். பசியின்மை வாந்தியுடன் மூக்கில் வாசனை, மற்றும் நாக்கில் ருசிமாற்றத்துடன் இந் நோயாளிகள் காணப்படுவார்கள். காய்ச்சல் 100 டிகிரி F -லிருந்து, 102 டிகிரி F - வரை கல்லீரல் அழற்சி ஏ-யில், பி-அழற்சியைக் காட்டிலும் தோன்றும்.

ஆனால், அரிதாகத் தொற்று கல்லீரல் அழற்சி பி-யில் 103 டிகிரியிலிருந்து 104 டிகிரி வரை காய்ச்சல் மற்ற அறிகுறி களுடன் தோன்றும். மஞ்சள் காமாலை தோன்றுவதற்கு 5 நாள்கள் முன்னரே சிறுநீர் மிக மஞ்சளாகவும், மலம் வெளிர் நிறமாகவும் காணப்படும். மஞ்சள் காமாலை கண்ணால் பார்த்தறியும் பொழுது உடலில் மற்ற அறி குறிகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடைக் குறைவு சுமார் 2-லிருந்து 5 கிலோ குறைந்து காணப்படும். வலதுபுற மேல் வயிற்று வலியுடன் கல்லீரல் பெருத்து, தொட்டால் வலியுடன் காணப்படும். மண்ணீரல் வீக்கத்துடன் கழுத்துக் கழலை வீக்கமும் சுமார் 10-லிருந்து 20 விழுக்காடு தோன்றும். மஞ்சள் காமாலை குறைந்தாலும் ஈரல் வீக்கமும், சோதனை மாறுபாடுகளும் தொடர்ச்சியாக சுமார் 2-லிருந்து 12 வாரங்கள் வரை காணப்படும். கல்லீரல் அழற்சியானது பி-யில் ஏ-வகையைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே ஏற்படுகிறது.

பரிசோதனை:

சீரத்தில் டிரான்ஸ் அமினோ அளவு கல்லீரல் அழற்சியின் பொழுது சீரம் பிலிரூபின் உயர்வதற்கு முன்பாகவே கூடுதலாகக் காணப்படும்.  டிரான்ஸ் அமினேஸ் அளவு  ஈரல் திசு அழிவைக் குறிப்பதற்கான அளவு அல்ல. என்றாலும், 400-லிருந்து 4000 அலகுகள் மஞ்சள் காமாலை உள்ள பொழுது உயர்ந்து காணப்படும். நோய் குணமாக ஆரம்பிக்கும் பொழுது இதன் அளவு குறையத் தொடங்கும். மஞ்சள் காமாலை விழி வெண் படலத்தில் வெளிப்படையாகத்  தெரிவதற்கு இரத்தத்தில் பிலிரூவின் 2.5 மிகி தேவைப்படும்.

கல்லீரல் அழற்சியின் பொழுது பிலிரூ வின் அளவு 20 மிகி க்கு மேல் தொடர்ந்து இருப்பின் நோய் மிகவும் தீவிரமாக உள்ளது என்பது பொருள். வெள்ளை அணுக்களாலான நீட்ரோபில் மற்றும் லிப்போசைட்டும் குறைந்து காணப்படும். புரோத்ரோம்பின் அளவு கூடுத லாக இருப்பின் ஈரல் செல்கள் அழிவு அதிக மாக இருப்பதுதான் பொருள். இந்நிலையில் இவர்களின் உடல் தேறுவது மிகவும் கடினம்.

தொற்று கல்லீரல் அழற்சி -ஏ முதல் முறையாகத் தாக்கப்பட்டு இருப்பின் முழுமையாக அதன் பிறகு சுகம் பெறுவார்கள். இதே போல் கல்லீரல் அழற்சி பி நோயிலும் குணம் பெறுவார்கள். வயதானவர்கள் இருதய பழுது, இரத்தச் சோகை, நீரிழிவு, புற்று ஆகிய நோய்கள் இவ்வழற்சியுடன் காணப்படும் பொழுது, இதுவே தீவிரமான கல்லீரல் அழற்சியாக மாறக்கூடும். வயிற்றில் நீர், கை காலில் வீக்கம், மூளை அழற்சி இந்நோயுடன் இருப்பின் உடல் குணமடைவது கடினம்.

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)