கடையெழு வள்ளல்களுள் ஒரு வள்ளல் கூட இன்று இல்லையெனினும், வளளலுக்கு, வள்ளலாக விளங்குவது வாழை மரம். தன்னை பயிர் செய்யவும் எவருக்கும் கிழங்கு முதல் பழம் வரை உள்ள அனைத்து பாகங்களையும் வழங்கி வள்ளலின் இடத்தை பிடிக்கின்றது. வாழைக்கனி பண்டைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளுள் ஒன்று. வாழை மரம் இல்லாத வாழை மரம் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். எல்லா நிகழ்ச்சிக்கும் அலங்கார தோரணமாக விளங்குகிறது. தென்னை, பனை போன்று மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாக இருப்பதால் இஃது பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

வாழைப்பழ ஏற்றுமதியில் தென் இந்தியா முதலிடம் வகிக்கிறது. குமரி மாவட்டத்தில் நெல் பயிராகி வந்த இடங்கள் கூட இன்று வாழை தோட்டங்களாக மாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இம்மரம் விவசாயிகளின் 'கற்பகத் தருவாக' விளங்குகிறது. வண்டல் மண் நிறைந்த இடத்தில் செழிப்பாக வளரும் இம்மரம் மற்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இதன் வகைகளுக்கேற்றவாறு இதன் உயரமும், ஆயுட்காலமும் அமைந்திருக்கும்.

வாழை மரத்தின் தாவரவியல் பெயர் - Musa Paradisiaca. இது Musaceae என்னும் குடும்பத்தை சார்ந்தது. இதன் ஆங்கில பெயர் - Plantain tree இதனை மலையாளத்தில் வாழா என்றும் சமஸ்கிருதத்தில் கதலி என்றும் அழைக்கின்றனர்.

வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் மருத்துவ குணங்களும் பிற பயன்களும் உள்ளன. இம்மரத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் குறிப்பாக செவ்வாழை, இரசதாளி, வாழை, நேந்திர வாழை, பேயன் வாழை போன்றன பயிரிடப்படுகின்றன.

பிற மாவட்டங்களில் அடுக்குவாழை, கருவாழை, கொட்டை வாழை, நவரை வாழை, மலை வாழை, மொந்தன் வாழை, வெள் வாழை போன்றனவும் இன்னும் சிலவும் பயிராகின்றது. இவற்றின் கனிகளின் தன்மை மட்டும் மாறுபட்டு காணப்படும். அவற்றின் மருத்துவ குணங்களும் மாறும்.

வாழை கிழங்கு - வாழை மரத்தின் கருவாக இருப்பது. ஒரு கிழங்கை நாம் பயிர் செய்தால் அது வாழையடி வாழையாய் நமக்கு பயன் தந்து கொண்டே இருக்கும். இதற்குள்ள மருத்துவ பயனை பற்றி பார்த்தால் நமக்கு சற்று வியப்பாக தான் இருக்கும்.

இக்கிழங்கை இடித்து பிழிந்த சாற்றினை குடித்து வர சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கலந்து வரல், பாண்டு நோய், எலும்புருக்கி நோய் முதலியவற்றிலிருந்து நாம் நம்மை விடுவித்து கொள்ளலாம்.

வாழை பட்டை - இது உலர்ந்தபின் இதிலிருந்து எடுக்கப்படும் நார் பைகள் செய்யவும், துணிகள் நெய்யவும், பூக்கள் தொடுக்கவும் பயன்படுகிறது. மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவித உப்பு சிறுநீர் பெருக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். மேலும் தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மேல் படுக்க வைக்கலாம். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.

பூ-வாழை மரம் ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது. இதன் தண்டின் நடுப்பகுதியிலிருக்கும் பூக்கள் மட்டுமே காய் ஆகும். மற்றவை ஆகாது, இப்பூவினை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனை வியட்னாமில் பச்சையாகவே உண்ணுகின்றார்கள். இவ்வாறு இதனை உண்பதால் சீதக்கழிச்சல், எருவாய்க்கடுப்பு, குருதிமுனை, உடல் கொதிப்பு முதலியன தீரும். இப்பூச்சாற்றினை பனங்கற்கண்டோடு சேர்த்து உட்கொள்ள வயிற்றுப்புண் முதலிய நோய்கள் நீங்கும். மேலும் இது பத்திய உணவாகவும் கொள்ளப்படுகிறது.

வாழைக்காயினை சமைத்து உண்டுவர உடல் வெப்பம், வயிற்றுளைச்சல், வாய் நீரூறல், உமிழ்நீர்ச்சுரப்பு, இருமல் ஆகியன நீங்கும். இது குருதியினை பெருகச்செய்யும். உடலுக்கு வன்மையை யும் அதிக அளவில் உணவில் விருப்பத்தையும் கொள்ளசெய்யும். இதனை நெருப்பிலிட்டு சுட்டு சாப்பிடுவதும் உண்டு. இதனை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் பல உள்ளன.

நாவிற்கும், மனதிற்கும் இன்பத்தை அள்ளிக் கொடுக்கும் வாழைப்பழத்தின் உபயோகங்கள் பல உள்ளன. ஒரு வாழை பழத்தில் இருக்கும் சத்துக்களை நாம் தெளிவாக தெரிந்து கொண்டால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு வாழைப்பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா என வியக்கத்தான் தோன்றும். ஒரு வாழைப்பழத்தை பற்றி பார்ப்போம். இதில்,

மாவுப்பொருள் - 57கிராம்
நார்ப்பொருள் - 4கிராம்
புரதச்சத்து - 2கிராம்
சர்க்கரை - 10கிராம்
இரும்புச்சத்து - 6கிராம்
சோடியம் - 5மில்லிகிராம்
பொட்டாசியம் - 800மில்லிகிராம்

இத்தகைய சத்துக்கள் ஒவ்வொரு வகைக்கும் சற்று வேறுபடும். இதன் மருத்துவ குணங்களும் சற்று வேறுபட்டே காணப்படும். நாள்தோறும் ஒரு வாழைப்பழம் உண்டுவருவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. நாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலுககு 220 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. வாழைப்பழத்திற்கு மலமிளக்கி செய்கை உண்டு. மேலும் இது உடலுரமாக்கி ஆகவும் செயல்படும்.

இப்பழத்தினை உண்பதால் வெப்ப பிணிகள், இரத்தசோகை, மலக்கட்டு, கர்ப்பிணிகளுக்கு வரும் வாந்தி, குன்மம், மன அழுத்தம், நெஞ்செரிவு, மலக்கட்டு முதலியன நீங்கும். உடலின் தோல் பளபளப்பாகும்.

இப்பழத்தின் தோலை கொசு கடித்த இடத்தில் வைத்து தேய்க்க, எரிச்சல் தடிப்பு ஆகியன நீங்கும்.

இவ்வாறு தனது உடல் முழுவதையும் பயனுள்ளதாக்கி நமக்கு வழங்கும் இவ்வள்ளலை வளரச்செய்து பயனடைவோம். 

(நன்றி : புதிய தென்றல் செப்டம்பர் 2007)