அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !

முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !

உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !

பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !

இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !

விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !

அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !

உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?


- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It