நிமிர்வோம் ஆசிரியர் குழு
பிரிவு: நிமிர்வோம் - அக்டோபர் 2018

‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

பள்ளிக்குச் செல்லும் வழியில் கல்லூரி மாணவன் ஒருவன் தன்னைச் சில நாட்களாகப் பின்தொடர்ந்து வருவதை ரேவதி கவனித்தாள். அவனைத் திரும்பிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால், அவன் அதைக் கவனித்துவிடுவானோ என்று பதற்றமாகவும் இருந்தது.

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அவன் ஒரு வாழ்த்து அட்டையை அவளிடம் கொடுத்தான். கைகள் தீண்டியபொழுது கிடைத்த ஸ்பரிசம் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. கூடவே யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது.

பிறந்த நாளன்று புது டிரெஸ் அணிந்து அத்தை வீட்டுக்கு இனிப்பு கொடுக்கப் போனாள் ஸ்வேதா. அத்தை, மாமாவிடம் கொடுத்துவிட்டு சந்துருவைத் தேடினாள். அவன் அறைக்குள் இருப்பதாக அத்தை சொன்னார். கதவுக்குப் பின்னால் மறைந்து இருந்தவன் அவள் உள்ளே நுழைந்தவுடன் ‘பே’ என்று பயமுறுத்தினான். அவள் பயந்துவிட்டாள் என்று தெரிந்தவுடன், ‘சும்மா’ என்று சொல்லி விட்டு, இனிப்பை எடுத்துச் சாப்பிட்டான். இன்னொரு இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடப் போனான். அவள் பின்னால் போவதைப் பார்த்து சட்டென்று அருகே வந்து கன்னத்தில் முத்தமிட்டு, “அம்மா டிபன் ரெடியா?” என்று கேட்டபடியே போனான். ஸ்வேதாவுக்கு அதிர்ச்சியோடு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நம் கலாச்சார மதிப்பீடு, பெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைப் பேசுவதுபோல், அவர்களுக்குள் எழக்கூடிய பாலியல் இச்சைகளைப் பற்றிப் பேசுவதில்லை.

வளரிளம் பருவத்தில் ஹார்மோன்கள் உடல்ரீதியான வளர்ச்சியை மட்டும் தூண்டுவ தில்லை. மனரீதியாகவும் பலவிதமான உணர்வுகளைத் தூண்டுகின்றன. அதிலும் குறிப்பாகப் பாலியல்ரீதியான உணர்வுகள். டி.வி.யில் ஒளிபரப்பாகும் படங்களும் பாலியல் உணர்வைத் தூண்டுகின்றன. நண்பர்களும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்ப்பது பற்றி, காதல் வயப்படுவது பற்றி எல்லாம் கதை கதையாகப் பேசி ஆவலைத் தூண்டிவிடு கின்றனர். இந்த மும்முனைத் தாக்குதல்களில் இளையவர்கள் சிக்கித் தவிக்கும்போது பெரியவர்களோ, “பார்க்காதே, பேசாதே, பழகாதே” எனத் தடை போடுகிறார்கள்.

நம் வளரிளம் பருவத்தினர் மிகவும் பாவம். பாலியல் ஆசைகள் ஒரு பக்கம் இருக்க, பயமும் பதற்றமும் குற்ற உணர்வும் அவர்களை எப்போதும் குழப்பமான மனநிலையிலேயே வைத்திருக்கிறது.

பெரியவர்கள் சுலபமாக இதை ‘வயசுக் கோளாறு’ என்று சொல்லிவிடுகிறார்கள். கோளாறு என்ற கண்ணோட்டத்தில் பார்த்து விடுவதால் பெரியவர்கள் இதைக் குழந்தை களிடம் இருக்கும் குறையாகப் பார்க்கிறார்கள். திட்டித் திட்டி அவர்களைக் குற்ற உணர்விலும் ஆழ்த்துகிறார்கள்.

ஒருபுறம் இளமையின் வேகம், மறுபுறம் பாலியல் குறித்த சமூக மதிப்பீடுகளால் ஏற்படும் குற்றவுணர்வு. எழக்கூடிய சந்தேகங்களைப் பெரியவர்களிடம் கேட்க தயக்கம், பயம். அப்படியே மீறி கேட்டாலும் பெரியவர்களின் பதில்கள் திருப்தியாகவும் ஆதரவாகவும் இருப்ப தில்லை. பெரியவர்கள் எரிச்சல்படுகிறார்கள், கோபப்படுகிறார்கள். “உனக்குச் சின்ன வயசு. இதையெல்லாம் யோசிப்பதும் பேசுவதும் தவறு” என்கிறார்கள். வளரிளம் பருவத்தினரின் மொத்த நடத்தையையே சந்தேகப்படுகிறார்கள்.

பெரியவர்களும் இதையெல்லாம் கடந்துவந்தவர்கள்தானே. நமக்கும் நம் ‘டீன் ஏஜ்’ பருவத்தில் இத்தகைய உணர்வுகள் வந்ததில்லையா?

எதிர்ப் பாலினர் மீதும் சில நேரம் தன் பாலினர் மேலும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனம்விட்டுப் பேசுவோம்

டீன் ஏஜ் குழந்தைகளின் இத்தகைய பாலியல் உணர்வுகள் இயற்கையானவை என்பதைப் புரிந்துகொண்டால், இந்தச் சிக்கலான தருணத்தில் பாதையைக் கடக்க அவர்களுக்கு உதவ முடியும். அவர்கள் கைப்பிடித்து நடப்போம்.

டீன் ஏஜ் வயதில் இரண்டுவிதமான பாலியல் அனுபவங்கள் கிடைக்கலாம். முதலா வது நமக்குள் தோன்றும் பாலியல் ரீதியான இச்சை. இரண்டாவது நம் ஆசை காரணமாக பிறர் மேல் நாம் செலுத்தும் வன்முறை.

வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, பரிதாபத் துக்குரியவராக ஆகும்பொழுது சமூகம் நம் மேல் இரக்கப்படும். கருணை காட்டும். ஆனால், இச்சையை வெளிப்படுத்தினால் தூற்றும். சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் என்று ஏசும்.

பார்க்கத் தோன்றும் ஆனால், பார்க்கக் கூடாது. பேசத் தோன்றும் ஆனால், பேசக் கூடாது. நினைக்கத் தோன்றும் ஆனால், நினைக்கக் கூடாது. இவை எப்படிச் சாத்தியம்?

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. இது எதிர்பாராது வரும் விபத்தல்ல. நமக்குத் தெரிந்தே வரும் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

யார் என்ன செய்யலாம்?

பெரியவர்களுக்கு:

உங்கள் குழந்தைகளுக்கு உடற்கூறு குறித்து சொல்லிக் கொடுங்கள். உடலைச் சுத்தமாக வைக்கக் கற்றுத் தருவதோடு உடல் வளர்ச்சியில் வரக்கூடிய மன உணர்வுகளைப் பற்றியும் பேசுங்கள்.

‘பாலியல்ரீதியான ஈர்ப்பு இயற்கை. ஆனால், அதற்கான வயது இதுவல்ல. அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பருவமிது. காதல், பாலியல் நாட்டம் இவையெல்லாம் பரவசத்தைக் கொடுத் தாலும் இந்தப் பரவசம் தற்காலிகமானது. இதற்கு ஆட்பட்டுவிட்டால், படிக்கத் தோன்றாது. திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தோன்றாது. பாலியல் இச்சை என்பது முதன்மையாகும்போது நாம் நம் இச்சையை யார் மீதாவது, பாலியல்ரீதியான துன்புறுத்தலாகச் செலுத்தவும்கூடும். பாலியல் ரீதியாக மற்றவரைத் துன்புறுத்த நேரும் பொழுது, குற்ற உணர்வு வரலாம். கையும் களவுமாகப் பிடிபட்டு, தண்டனைக்குள்ளாக்கப் படலாம். இளமையே தொலைந்துபோகக் கூடும்’ என்று அவர்களிடம் பொறுமையாகச் சொல்லுங்கள்.

இளையவருக்கு:

பார்க்கத் தோன்றுகிறதா, பார்த்துவிட்டு அழித்துவிடு. மண்டைக்குள் சுமக்காதே. பேசத் தோன்றுகிறதா? கனிவாக, கம்பீரமாக உரையாடு. அதை போதை ஆக்கிக் கொள்ளாதே. வாழ்வில் இதற்கான நேரம் வரும்.

பாலியல் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்கான வயதல்ல இது. இன்னும் பக்குவப்பட வேண்டும். உன்னை அறிந்து, உனக்குப் பிடித்தது பிடிக்காதது பற்றி எல்லாம் தெளிவு வந்த பிறகு, துணையைத் தேர்தெடுக்கலாம். அதுவரை சின்னதாக ஆசைப்பட்டு, அந்த உணர்வை உணர்ந்து, கடந்து போகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியல் இச்சையும் அதற்கு வயப்படுதலும் மட்டுமல்ல வாழ்க்கை. முன்னேற்றத் துக்கான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதை அடைவதற்கான வழிமுறைகளைத் தீர்மானிக்க வேண்டும். தடைக் கற்களாக உள்ள நம் சிந்தனைப் பள்ளங்களில் போய் சிக்காமல், இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும்.

சொல்வது எளிது, செய்து பார்த்தால் தானே தெரியும் எனத் தோன்றும். ஆனால், இன்றைக்கு இளம் வயதிலேயே அயராது பாடு பட்டு, தமக்கென ஓரிடத்தைப் பிடித்திருக்கும் பலரும் சவால்களை எதிர்கொண்டுதான் சாதித்திருப்பார்கள்.

வறுமை, ஏழ்மை, வாய்ப்பின்மை இவற்றை எல்லாம்விடப் பெரிய சவால் நம் உணர்வுகளை நம் கட்டுக்குள் வைத்திருப்பது. வண்ணமயமான வாழ்க்கை அமைய நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் கையாளத் தெரிய வேண்டும். இலக்கு ஒன்றே தீர்வு!

பத்மா - ‘தமிழ் இந்து’வில் எழுதியது