வைதீகப் புராண இதிகாச நாடகங்களுக்கு எதிராக அறிவைப் பரப்பும் சமூக சீர்திருத்த நாடங்களுக்குத் தமிழ் மண்ணில் மேடை அமைத்துக் கொடுப்பதற்குத் திராவிட இயக்கம் எழுப்பிய கலகக் குரல்களின் வரைகோடுகள்தான் திராவிட இயக்க நாடக வரலாறு ஆகும்.

dravidian dramaபண்பாட்டுப் பெருவெளியில் தன் செயல் திட்டத்தை முன்மொழிந்திருந்த திராவிட இயக்கம், மக்கள் இயக்கமாகப் பேச்சை, எழுத்தை, இசையை, நாடகத்தை நகர்த்தும் வேலைத் திட்டத்தைத் தன் இயக்க அமைப்புப் பணிகளில் ஒன்றாகவே வடிவமைத்திருந்தது என்பது முக்கியமானது. பேச்சையும் எழுத்தையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஓவியக்கலை, சிற்பக் கலைகளைப் பொருத்தவரை, “கோவில்களைக் குற்றம் சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால், ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு ‘அவைகள் அவசியம் இருக்க வேண்டும்’ என்றும், ‘அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்’ என்றும் ‘சாமி பக்திக்காக தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை’ என்றும் ‘ஓவியக் கலை அறிவுக்காக கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்றும் சொல்லு கின்றார்கள்” என்பதாக 26.4.1931 ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதியிருக்கிறார். (பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி-12, பெரியார் திராவிடர் கழகம், 2008; ப:257). கலை இலக்கியம், பண்பாட்டு வெளியில் புழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்தையும் ‘பார்ப்பனியம்’, ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாமை’ எனும் கருத்து நிழலில் நின்றே பெரியார் உறுதியுடன் எதிர் கொள்கிறார். பகுத்தறிவுதான் - அறிவுதான், அதன் குணரீதியான பயன்தான், கலையுணர்வூட்டும் அழகியலின் நற்குணமாயும் அவருக்கு இன்பமூட்டுகிறது.

இசையைப் பொருத்தவரையில் பெரியார், 19.02.1928இல் ‘குடிஅரசு’ இதழில் ‘சங்கீதமும் பார்ப்பனியமும்’ எனும் தலைப்பில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். அதில், “பார்ப்பனரல்லாத வித்துவான்களும் தங்கள் சுயமரியாதைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவு படுத்தினாலும் இலட்சியம் செய்யாமல் ‘சுவாமிகளே’ என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களேயொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும் ‘பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம்’ ஏற்பட வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்து கோவையிலும் முதன்முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களிலும் இதைக் கவனித்து நடக்குமா?’ என்று! பார்ப்பனரல்லாத சங்கீத வித்துவான் களின் அமைப்பை உருவாக்க, தொடர்ந்து பெரியார் குரல் கொடுத்து வந்திருப்பது தெரிகிறது. (பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதி 6 - 19.02.1928, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, மார்ச் 30, 2010, பக்.77)

இதன் தொடர்ச்சியாக, 1930 ஏப்ரல் 20 நாளிட்ட தன் ‘குடிஅரசு’ இதழில், வாய்ப்பாட்டு -36, புல்லாங்குழல்-10, பிடில்-19, மிருதங்கம்-36, கஞ்சிரா-10, ஜலதரங்கம்-4, ஜதை-15, கடம்-1, டோலக்-1, நாகசுரம்-16, கொன்னக்கால்-1, வீணை-3 என்று, ‘பிராமணரல்லாத சங்கீத வித்வான்களின் பெயர் விலாசங்களைப் பட்டியலிட்டிருப்பது ஆச்சரியந்தருகிறது (பக்.9, 12). அதற்குப் பெரியார் கூறும் காரணம்தான் முக்கியமானது. அதாவது, ‘சங்கீத மகாநாடு கூட்டும் விஷயத்தில் நமக்குள்ள ஆர்வமானது, சங்கீதம் என்னும் ஒரு கலையானது மிக்க மேன்மையானதென்றோ அல்லது இன்றைய நிலையில் மனித சமூகத்துக்கு அது மிக்க இன்றியமையாததென்றோ கருதியல்ல. உலகத்தில் மக்களுக்குள்ள அனேக விதமான உணர்ச்சித் தோற்றங்களில் இதுவும் ஒன்றே தவிர, இதற்கு எவ்விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் கிடையாதென்பதே நமதபிப்ராயம். ...... நம்மைப் பொருத்தவரை நாம் இம்மகாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றென்னவெனில் சங்கீதத் துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவேதான் சுயமரியாதை மகாநாட்டை அனுசரித்து இதை நடத்த வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும். .........பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை’ என்கிறார்.

ஈரோட்டில் 1930 மே 12இல் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில், பிற்பகல் இரண்டு மணிக்கு ‘முதலாவது தமிழ் மாகாண சங்கீத மகாநாடு’ ஆண்களும் பெண்களுமாய்க் கூடியிருந்த 4000 மக்கள் முன், பல்வேறு முக்கிய வித்வான்கள் - காஞ்சிபுரம் திரு. நயினா பிள்ளை, சிதம்பரம் திரு.கே. பொன்னையா பிள்ளை, கீவளூர் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சிதம்பரம் திரு. செல்வரெத்தினம் பிள்ளை, திருவீழிமிழலை திரு. சுவாமிநாதபிள்ளை, சேலம் திரு. ரங்கதாஸ், கும்பகோணம் திரு. வடிவேல்பிள்ளை, சேலம் திரு. பழனிச்சாமி செட்டியார், சென்னை திரு. சுப்பிரமணிய பிள்ளை, திருச்சி திரு. நடேச பிள்ளை, சேலம் திரு. காளியப்பபிள்ளை, சென்னை திரு. நாதமுனி பண்டிதர், திருத்துறைப் பூண்டி திரு. கிருஷ்ணமூர்த்தி, திருவல்லிக்கேணி திரு. வேலுநாயக்கர், பழனி திரு சுப்பிரமணிய பிள்ளை, திருக்கோகர்ணம் ஸ்ரீமதி ரெங்கநாயகி சுப்புலட்சுமி... பங்கேற்க, சிதம்பரம் ஏ.கே. பொன்னையா பிள்ளை தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அதைத் தொடங்கி வைத்துப் பேசிய ஈ.வெ.ரா., “சங்கீதக் கலையிலும் நம்மவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்று அந்தக் கலைகளையுடைய நம்மவர்கள் எந்தக் காரணத்தினாலும் தங்களுடைய சுயமரியாதையை இழக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று உரை நிகழ்த்தி இருக்கிறார். (குடிஅரசு, 25.05.1930, பக்.8) இங்கு அவர் குறிப்பிடும் ‘நம்மவர்கள்’ என்பது பார்ப்பனரல்லாதாரை! இதன் தொடர்ச்சியாக, 10.08.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.17இல், ‘ஈரோடு சங்கீத மகாநாட்டில் நடந்த நாதசுர கச்சேரி - நாதசுரம் வி. முத்துக் குமாரசுவாமி பிரதர்ஸ், திருக்குவளை போஸ்ட்டு, தஞ்சை ஜில்லா’ என்று விளம்பரம் செய்திருப்பது முக்கியமானது. இதைத் தொடர்ந்து, விருதுநகரில் நடைபெறவுள்ள மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள 1931 மே 10ஆம் நாள் குடிஅரசு இதழில், ‘தென்னாட்டுச் சங்கீதமும் பார்ப்பனரல்லாத வித்வான்களும்’ என்ற கட்டுரை ஒன்று குடந்தை டி.ஆர்.வரதன் என்பவரால் பக்.17இல் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிட வேண்டியது. சங்கீதத்தைத் திராவிட இயக்கம் தன் இனத்துக்கான அடையாளமாய் ஆக்கப் பார்த்த முயற்சி இது! ஆனால், அப்பொழுது நாடகத்திற்கு இதைப்போல் எந்த முயற்சியும் கைகூடி வந்ததாகத் தெரியவில்லை.

இரண்டாவது மாகாண சுயமரியாதை மகாநாடு பற்றிய முதல் அறிவிப்பை வெளியிட் டிருக்கிற 1930 பிப்ரவரி 16ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் (பக்.9-10), ‘செங்கல்பட்டில் சிலர் ஏற்றுக் கொண்டபடி, மகாநாடு இவ்வருஷம் மார்ச்சு அல்லது ஏப்ரலில் நடத்த வேண்டியது அவசியமானது... சென்ற மகாநாடு ரூ.10,000/- வரை செலவு செய்து இரண்டு நாளில் முடிந்துவிட்ட தானது, பலருக்கு ஏமாற்றமாயும் பொசுக் கென்றும் போயிருக்கும். அதனால் ஈரோட்டில் ஒரு வாரமாவது மகாநாடு நடத்த வேண்டும் என்று கருதுகிறோம். ஏனெனில் ஒவ்வொரு தினமும் இயக்க சம்பந்தமான வேறு மாநாடு களும், தனித்தனி உபன்னியாசங்களும், கண்காட்சிகளும், நாடகங்களும் நடத்திக் காட்ட வேண்டுமென்று சில நண்பர்கள் ஆசைப்படுகின்றனர்...’ என்று அறிவித்திருந்தும் நாடகம் தொடர்பான பதிவுகள் எதுவும் மகாநாட்டு நிகழ்வுகளில் இடம் பெற்றிருக்கவில்லை. இயக்க சம்பந்தமான வேறு மாநாடுகளாக, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, சங்கீத மாநாடு, வாலிபர் மாநாடு ஆகியவை இரண்டாம் மாகாண சுயமரியாதை மகாநாட்டில் நடந்தபோதும் (குடிஅரசு, 03.5.1931, பக்.21), நாடகத்திற்கு அங்கு இயக்க அமைப்பு சார்ந்து, இடமேதும் இல்லாமலேதான் இருந் திருக்கிறது. சங்கீத மகாநாட்டிற்குப் பெரியார் கொடுக்கும் முக்கியத்துவம், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஏற்றத் தாழ்வைப் பேணிக் காப்பதைக் கருவாய்க் கொண்டு இயங்குவதை எதிர்க்கும் கோயில் கருவறை நுழைவுப் போராட் டத்திற்கு இணையானது; பார்ப்பனியத்திற்கு எதிரானது.

ஆனால் நாடகத்தின் கதை வேறானதா யிருக்கிறது. நாடகக் கம்பெனிகள், பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதார் கையிலிருந்தபோதும், அவர்கள், பல சமூகத்தவர்களைக் கூட்டி, அவர்களைக் கொண்டு, பார்ப்பனர் உருவாக்கிய புராண இதிகாசக் கதைகளையே நாடகமாக்க முயன்று கொண்டிருப்பதிலிருந்தே அவர்களை யும் மீட்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருந்தது. அதற்காக அவர் முன்மொழிந்தது புராண இதிகாசத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நாடகமாகும். வைதீகப் புராண இதிகாச நாடகங்களுக்கு எதிராக அறிவைப் பரப்பும் சமூக சீர்திருத்த நாடங்களுக்குத் தமிழ் மண்ணில் மேடை அமைத்துக் கொடுப்பதற்குத் திராவிட இயக்கம் எழுப்பிய கலகக் குரல்களின் வரைகோடுகள்தான் திராவிட இயக்க நாடக வரலாறு ஆகும்.

முப்பதுகளின் பிற்பகுதியிலிருந்து, திராவிட நாடு பேசிய முதல் வரிசைத் தலைவர்களில் பலரும், நாடகத்தைத் தங்கள் கருத்துகளுக்கான கைவாளாய்க் கொண்டு, கருத்தாயுதமாய் அதை உயர்த்திச் சுழட்டிக் கொண்டிருந்தனர்; அதற்குள் திளைத்திருந்தனர். ‘திராவிட நடிகர் கழகம்’, ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபை’, ‘காஞ்சி திராவிட ஆநந்த நாடக சபை’, ‘சீர்திருத்த நாடகச் சங்கம்’, ‘சுயமரியாதை நாடக சபா’, ‘முத்தமிழ் நாடகச் சங்கம்’, ‘தமிழ் நாடக நிலையம்’ என்பதாய்ப் பல நாடக அமைப்புகள் இயக்கத்தின் கிளைகளாய் உருவாகியிருந்தன. இதுபோக, ‘திராவிட ஆராய்ச்சிக் கழகம்’, ‘திராவிட உடற்பயிற்சிக் கழகம்’, ‘திராவிட சொற்பயிற்சிக் கழகம்’ என்று பண்பாட்டுத் தளத்தின் அனைத்துத் துறைகளிலும் தங்களை முன்னிறுத்தியிருந்தனர். திராவிடர் இயக்கக் கட்சி மாநாடு களில், நாடகங்கள் தவிர்க்க முடியாத மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கலைஞர்கள் என்பதாய் வாழும் காலத்திலேயே நாடகியர்கள் மதிக்கப் பட்டனர். மக்கள் இயக்கமாக அவர்களின் படைப்புகளை ஊர் ஊராய்த் தூக்கிக் கொண்டு சென்று மேடை அமைத்துக் கொடுத்து, இயக்கக் கருத்துகளை மக்கள் மனங்களில் பீடம் அமைத்துக் கொள்ள வழி சொல்லிக் கொடுத்தது திராவிட இயக்கம்!

.......................

‘பேச்சில் வசியம், கூத்தாடிப் பொழைப்பு’ என்பதாய் மற்றவர்களால் திராவிடர் இயக்கத்தவர் வசைக்கு ஆளான போதும், பேச்சு, எழுத்து, பத்திரிகை, சுவரெழுத்து, சுவரொட்டி, இசை, நாடகம், திரைப்படம் என்று தகவல் தொடர்பியலின் அனைத்து அசுர சக்திகளையும் பண்பாட்டுத் தளத்தில் தாங்கள் பெற்ற அனுபவ ஒளியில் மிகச் சரியாகவே திராவிட இயக்கம் அளவிட்டிருந்தது; திராவிட இயக்கத்தவர் அதைச் சரியாகவே உணர்ந்திருந்தனர் என்பதும், எல்லா நிலைகளிலும் அவற்றின் கைபிடித்தே மக்கள் மனங்களில் தன்னை - தங்களை - கொலு வமைத்திருந்தது என்பதும் பண்பாட்டியல் வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும்.

தேசிய இயக்க நாடகம் என்பதே, பொதுவில், நாடகத்தின் இடையில் பாடப்படும் தேசியப் பாடல்களைக் கொண்ட, புராண, இதிகாச நாடக மரபாகவே இருந்து வந்திருக்கிறது. நாடகப் படைப்புகள் தவிர்த்து, தேசிய இயக்கம் தமிழ்மண்ணில் வீறு கொண்டிருந்த முப்பதுகளில், நாடகம் தொடர்பாய் வெளி வந்த மிக முக்கியமான நூல், 1933 ஏப்ரலில் மன்னார்குடியிலிருந்து வெளி வந்த ‘தமிழ் நாடக மேடைச் சீர்திருத்தம்’ ஆகும். அதை எழுதியவர் ஸ்ரீமான் எஸ்.கே. பார்த்தசாரதி அய்யங்கார். இந்த நூல் ‘தமிழ் நாடக மேடைச் சீர்திருத்த சங்கம்’ மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. சீர்திருத்த வேண்டிய நிலையில்தான், தமிழ் நாடகத்தின் நிலை இருந்திருக்க வேண்டும் அன்று, என்று தோன்றுகிறது. நாடகச் சீர்திருத்தம் தொடர்பாய் அதில் அய்ம்பது யோசனைகளைக் கூறுகிறார் அவர்! ஆயின் அந்தச் சீர்திருத்தங்கள் எல்லாம் நாடகம் நிகழ்த்துதல் தொடர்பாய் மட்டுமே இருக்கின்றன. ஆயின் எந்தவொரு யோசனையும், நாடகத்தில் அக்காலக்கட்டப் பிரச்சினையான தேசிய இயக்கக் கருத்துப் பொதிவுக்குத் துணை செய்ய உதவுவதாய் அமையவில்லை. இவரும், பம்மல் சம்பந்தனாரைப் போல ‘மாஜிஸ்திரேட்’ பணிபுரிந்தவர் என்பதால், அவ்விதம் நிகழாமல் போயிருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. 1929லேயே இவரெழுதிய ஸ்ரீ சங்கராச்சாரியார் சரித்திர நாடகம் அச்சாகியுள்ளது. அதுவும் தேசியப் பிரச்சினை பற்றிய நாடகமில்லை. பக்தி மார்க்கத்தை வலியுறுத்துவது அது! இந்தப் பின்னணியில், இவற்றுக்கு எதிர்நிலையில், ‘திராவிட இயக்க நாடகங்கள்’ அல்லது ‘சமூக சீர்திருத்த நாடகங்கள்’ என்பதாய் நாடக வரலாற்றைப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இதற்கான பெரும் பதிவாயிருப்பது 1924இல் ஸ்தாபிக்கப்பட்டு, 02.05.1925இலிருந்து வெளி வந்த ‘குடிஅரசு’ இதழ்களாகும்! அதன் வாசிப்பே திராவிட இயக்க நாடக வரலாற்றை மீட்டெடுக்கும் இம் முயற்சியாகும்!

‘சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’ என்கிற நாடக நிகழ்த்தல் பதிவுதான், ‘குடிஅரசு’ இதழின் மூலம், திராவிட இயக்க நாடகத்தின் முதல் பதிவாய் அமைந்திருக்கிறது. ‘திராவிடன், குடிஅரசு துணையாசிரியர் திரிசிரபுரம் ஆ. நடராஜன் அவர்கள் இயற்றிய இச்சமூக சீர்திருத்த நாடகத்தைத் திருச்சி முருகானந்த சபையார் மதுரையில் மேலமாசி வீதி ‘நர்த்தனகான சாலா’ கொட்டகையில், 28.12.1929 சனிக்கிழமை அன்றிரவு 9.30 மணிக்கு அதிவிமரிசையாய் நடத்துவார்கள். இந்நாடகம் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் உயர்திருவாளர் சௌந்திர பாண்டியன், எம்.எல்.சி., அவர்கள் ஆதரவில் நடைபெறும் என்று ஒரு விளம்பரம் 22.12.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.7இல், முருகானந்த சபையின் கௌரவக் காரியதரிசியின் டி.பி. மாணிக்கவாசகம், ஆர். நடராஜன் ஆகியோர் பெயரில் வெளி வந்துள்ளது. இதன் நாடக அரங்கேற்றம் எப்பொழுது, எங்கே யார் முன்னிலையில் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவில்லை. நிச்சயம் 1928-29களில் அல்லது அதற்கு முன் இந்நாடகம் அரங்கேறி இருக்கக்கூடும். ஆயின் முன் நிகழ்வுகள் பற்றிய பதிவுகளைக் கொண்ட ‘குடிஅரசு’ இதழ்கள் என் பார்வையிலிருந்து தப்பி இருக்கவும் கூடும். ‘சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’ என்ற நாடகம் 28.12.1929இல் நடைபெற்றதாய்ப் பதிவு இருந்த போதும்,

1930-31களில் நிகழ்ந்த இயக்க மாநாட்டு நிகழ்வுகளில்கூட, இந்நாடகம் இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. ஆயின் நம் கையில் கிடைத்திருக்கிற ‘குடிஅரசு’ நூல்களிலிருந்து அறிந்தால், திராவிட இயக்கச் சிந்தனையைக் கொண்ட முதல் நாடக நிகழ்த்தல் பதிவு இதுவாய்த்தான் இருக்கிறது. இதற்கு முன் இந்நாடகத்தைப் பற்றியோ, வேறு நாடகங்கள் பற்றியோ நாடக விளம்பரங்கள், அறிவிப்புகள் எதுவும் ‘குடிஅரசு’ இதழில் வந்ததாகத் தெரியவில்லை. தேசிய இயக்கத்தின் ‘கதரின் வெற்றி’ போல், இது ‘சுயமரியாதையின் வெற்றி’! திராவிட இயக்க நாடகக் கலகத்திற்கான முதல் வித்து இங்குதான் விழுந்திருக்கிறது.

21.09.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழ் பக்.13இல் கிடைக்குமிடம்: குடிஅரசு புஸ்தகாலயம், ஈரோடு என்று முகவரியிட்டு, ‘பங்கஜம் அல்லது பார்ப்பனக் கொடுமை’ எனும் நாடக நூல் ஒன்று வெளி வந்திருப்பது தெரிகிறது. அதை எழுதியிருப்பவர், அய்யங்கார் குளம் திரு. இலக்ஷ்மணனார், இதற்கு முகவுரை எழுதியிருப்பவர், ‘திராவிடன்’ பத்திராபதிபர் திரு. ஜே.எஸ். கண்ணப்பர். ‘இதில் பார்ப்பனர்கள் புரோகிதத்தின் பேராலும், சடங்கின் பேராலும், தானத்தின் பேராலும், உத்தியோகத்தின் பேராலும், உபாத்தியார் தொழிலின் பேராலும், அதிகாரத்தின் பேராலும் பார்ப்பனர் அல்லாதார்களை ஏய்ப்பதைப் பற்றியும், பார்ப்பனரல்லாதார்க்கு இழைக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் பற்றியும், பார்ப்பனரல்லாதவர்களை வாழ்க்கையில் நடத்தும் இழிவுகளைப் பற்றியும் விவரமாய் 12 களங்களாக நாடகப் பாத்திரங்களுடன், பாத்திரங்களுக்கு ஏற்ற பாஷை நடையில் அனுபவ நடப்பை அப்படியே எடுத்துக்காட்டுவதுபோல் மிக்க நகைச்சுவையுடனும், சாஸ்திர புராண மத விஷயங்களில் எவ்வளவு பித்தம் பிடித்த அழுக்கு மூட்டையாயிருந்தாலும் அவர்களுக்கு இடித்து, புத்தி கற்பிப்பதுபோல், மனதில் நன்றாய்ப் பதியும்படியும் எழுதப்பட்ட நாடக ரூபமான ஒரு புஸ்தகமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது நிகழ்த்தப்பட்ட விவரம் எதுவும் எங்கும் இல்லை.

இதைப்போலவே 21.09.1930 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில், பக்.17இல், ‘தீண்டாமை விலக்கு’ என்னும் கருத்துக் கொண்டு ஒரு பார்ப்பனப் பெண் ஆதி திராவிட வாலிபரைக் காதலித்து, எவ்வளவோ இடையூறுக்கும் ஆபத்துக்கும் ஆளாகித் தப்பித்துக் கடைசியில் மணம் முடித்துக் கொண்டதாகப் புனையப்பட்ட கதையான இந்நாடகத்தை வாசிப்பதற்கு ரசமாயிருக்கின்றது என்று மதிப்புரை செய்யப்பட் டிருக்கிறதும், உயர்திருவாளர்கள் வேள். என். துரைக்கண்ணன், இரா. சுந்தரமூர்த்தி, வை.மு. பரமானந்தம் ஆகியோர் ஆக்கியுள்ளதுமான ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார்?’ நாடகத்திற்கும் நிகழ்த்தப்பட்ட விவரங்கள் முப்பதுகளின் முற்பகுதியில் எதுவுமில்லை. ஆயின், 31.10.1937 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.13இல் ‘தீண்டாதார் யார்? - தேதியை எதிர்பாருங்கள்’ - என்றொரு விளம்பரம் வந்துள்ளது. ஆயின் 21.11.1937 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.17இல் தோழர் ஈ.வெ.ரா. தலைமையில் ‘தீண்டாதார் யார்?’ என்னும் நாடகம் ஆம்பூர் இரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஸ்டார் தியேட்டரில் கோலார் தங்கவயல் சமூக சீர்திருத்த நாடக சபையோரால் 28.11.1937இல் நடத்தப்பட வுள்ளதாக அதன் காரியதரிசிகள் ஜே.எம்.சாமி, எல்.எம். இராஜன் ஆகியோரால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார்?’ நாடக நூலானது மேடையேறும்போது, ‘வசீகர மனோகரி’யை இழந்து ‘தீண்டாதார் யார்?’ என்பதாய்ப் பெயர் சூட்டப்பட்டு இருக்கக் கூடும்.

இதை உறுதிசெய்யும்படி, 12.12.1937 ‘குடிஅரசு’ இதழில் ‘தீண்டாதார் யார்? - ஒரு விமரிசனம்’ என்றொரு செய்தி வெளியாகி உள்ளது. அது, ‘22.11.1937 அன்று ஆம்பூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாட்டை ஒட்டி, அன்றிரவு கோலார் தங்கவயல் சமூக சீர்திருத்த சங்கத்தாரால் தோழர் ஈ.வெ.ராமசாமி தலைமையில் ‘தீண்டாதார் யார்?’ என்ற நாடகம் நடைபெற்றது. சுயமரியாதை இயக்கத்திலே ஈடுபட்ட ஆண், பெண் நடிகர்கள், இந்த சீர்திருத்த நாடகத்தை மிகத் திறமையாக நடித்துக் காட்டினார்கள். புரோகித மனப்பான்மையின் கொடுமை, போலி சீர்திருத்த தேசியவாதியின் போக்கு, உண்மை சுயமரியாதை உணர்ச்சியின் மாண்பு முதலிய சீரிய கருத்துகள் இந்நாடகத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. காதலர்கள் முதலிலே ஜாதிக் கொடுமை காரணமாக, பலவிதக் கஷ்டங்களை அடைகின்றனர். ஆனால் சீர்திருத்தத்தில் நம்பிக்கைக் கொண்டு வாழுகின்றனர். முடிவில் அவர்களே வெற்றி பெறுகின்றனர். இடையில் ஏற்படும் கஷ்டங்களால் அவர்கள் உறுதியை விட்டுவிடவில்லை. கடைசியில் அவர்களுக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. காதலன் ஆதிதிராவிட வகுப்பினர். கதாநாயகி பிராமண வகுப்பு! நமது இயக்கத்தின் முக்கிய இலட்சியத்தையே உள்ளடக்கிய நாடகமாதலால் இடையிடையே பாடப்படும் பாடல்கள், இயக்கக் கொள்கைகளை விளக்குவனவாக இருக்கின்றன. நடிகர்கள் இயற்கையாகவும், இரம்மியமான முறையிலும் நடித்தனர். கதாநாயகியாக நடித்த தோழர் சிவமணிக்கு சோபிதமான நடிப்பும் இனிய குரலும் இருக்கின்றது. நாடகக் கலையிலே நடிகர்களுக்கு ஆர்வம் இருப்பதைப் பார்க்கும் பொழுது இச்சபையினர் முன்னேற்றமடைந்து கலைக்கும், சீர்திருத்த உலகிற்கும் தொண்டாற்றுவார்கள் என்று தெரிகிறது. சபையினருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று உள்ளது. பெரியார் பேசிய கருத்துகளின் அடிப்படையில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். 21.11.1937 ‘குடிஅரசு’ இதழ் விமரிசனத்தைக் கொண்டு பார்க்கையில், 28ஆம் தேதி அன்றும் ஆம்பூரிலுள்ள ஸ்டார் தியேட்டரில் இந்நாடகம் நடைபெற்றிருக்கிறதுகூடவும், ‘வசீகர மனோகரி அல்லது தீண்டாதார் யார்?’ நாடகப் பிரதிதான் ‘தீண்டாதார் யார்?’ நாடகமாகியிருக்கிறது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

இதேபோல், ‘11.03.1938ஆம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 9.30 மணிக்கு பசுமாத்தூர் ஆதி திராவிட சங்கத்தாரால் மேற்படி சங்க பிரசிடெண்ட் தோழர் பி.ஏ. லிங்கமுத்து அவர்கள் தலைமையின் கீழ் இராவ்பகதூர் பி. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்., அவர்களால் இயற்றமிழ் நடையில் எழுதப் பெற்ற ‘பிராமணனும் சூத்திரனும்’ என்ற நாடகத்தை, மேற்படி சங்கக் காரியதரிசி பி.வி. பொன்னுசாமி அவர்களால் (இசைத் தமிழ்) நாடகத் தமிழாக இயற்றிக் கற்பித்து அதிவிமரிசையாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. நாடகத்திற்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் விஜயம் செய்திருந்தனர்’ என்றொரு குறிப்பு 03.04.1938 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.13இல் ‘பிராமணனும் சூத்திரனும் அல்லது கலப்பு மணம் நாடகம்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. பம்மல் சம்பந்தனார் இயற்றமிழில் எழுதியுள்ள ஒரு சம்பவம், நாடகத் தமிழாக இன்னொருவரால் மாற்றம் செய்யப் பெற்ற முயற்சியின் பதிவு இது! தொடர் நிகழ்த்துதல்கள் பற்றி வேறெந்தப் பதிவும் காணப்படவில்லை...

22.12.1929இல் மதுரையில் நிகழ்த்தப்பட்ட தாய்ப் பதிவாகியிருக்கிற (அரங்கேற்றம் எப்பொழுது ஆனதென்று தெரியவில்லை) திரிசிரபுரம் ஆ.நடராஜன் அவர்களின் ‘சந்திர-கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’க்குப் பிறகு, 09.09.1934 அன்று ‘சீர்திருத்த நாடக சங்க’த்தாரால், சென்னையிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் மாலை 5.30 மணிக்குப் பெரியார் தலைமையில் நிகழ்ந்த, புதுவை பாரதிதாசன் (பாவேந்தர்) இயற்றிய ‘இரணியன்’ (பிற்பாடு தான் அது, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்றாகி இருக்கிறது) நாடகம்தான், ஆரிய-திராவிடர் இனப் பிரச்சினையை முன் வைத்து, பழைய புராணத்தைப் புரட்டிப் போட்டு, திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து நிகழ்ந்த மிகப் பெரும் நாடகமாகத் தெரிகிறது. திராவிடர் இனவுணர்வைத் தமிழ் மண்ணில் ஊட்டி, திராவிட இயக்கச் சிந்தனையைப் பரப்பு வதற்காக நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்திற்கான நுழைவுக் கட்டணம், 1934இல் ஆண்களுக்கு ரூ.10, 2, 1 அணா 8, 4 என்பதாயும், பெண்களுக்கு ரூ.1 அணா 8, 4 என்பதாயும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்ட திராவிட இயக்கம், நாடகத்தில் தலைமையுரை நிகழ்த்திய தோழர் ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவைத் தன் இயக்க இகழ்களிbல்லாம் பதிவாக்கி இருக்கிறது.

(தொடரும்)

(திராவிட இயக்கமும் கலைத் துறையும் நூலிலிருந்து...)