பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை - தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் - ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு - கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். 

premnath book on gitaபெரியார் இயக்கத்துக்கான வரலாற்று ஆவணம் என்று கூறுமளவுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்:

*  700 சமஸ்கிருத கவிதைகளைக் கொண்டது பகவத் கீதை.

*  கீதை - இந்துமதத்தின் புனித நூலாகவும் - வழிகாட்டியாகவும் லட்சிய நூலாகவும் போற்றப்படுகிறது. அது மிகச் சிறந்த லட்சிய நூலாக இருந்திருக்குமானால், அந்த நூல் வெளிவந்த காலத்தில் நிலவிய மனித குலத்தின் சிக்கலான பிரச்சினைகளையும், கடும் துயரங்களையும் முன்னிலைப்படுத்தி விவாதித்திருக்க வேண்டும். கீதை அதைச் செய்யவில்லை.

*  கீதைக்கு ஏராளமான விளக்க உரைகள் வந்துள்ளன. அவை அனைத்தும், கீதையைப் புகழ்ந்து புகழேணியின் உச்சியில் ஏற்றுவதற்கே போட்டி போட்டன. கீதையின் முரண்பாடுகளைப் பூசி மெழுகி, சப்பைக் கட்டு கட்டுவதற்கான முயற்சிகளிலே அவைகள் இறங்கின.

*  கீதை உலகத்துக்கே வழிகாட்டக் கூடியது என்றும் சமூகத்தின் தலைசிறந்த ஒழுக்க நெறிகளைக் கூறுகிறது என்றும் கூறுகிறார்கள். அது உண்மையானால் பகவத் கீதையின் கோட்பாடுகளை முழு நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்ட இந்தியர்கள் - அறிவாற்றலிலும், தார்மீக நெறியிலும் ஏன் தாழ்நிலையை அடைந்தார்கள்? ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மனித முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத் தீமைகளை வளர்ப்பதற்குமே கீதையின் போதனைகள் பயன்பட்டன.

*  கருத்து முதல்வாதத்தை முன் வைக்கும் - ஆன்மீகச் சிந்தனைதான் வேத காலத்திலிருந்து இந்தியாவில் இருந்து வரும் ஒரே சிந்தனை மரபு என்று கூறுவது வரலாற்று உண்மைகளை இருட்டடிப்பதாகும். கி.மு. 500 லிருந்து கி.பி. 500 வரை இந்தியா முழுதும் பகுத்தறிவு அடிப்படையிலான பொருள் முதல்வாத சிந்தனை மரபே நிலவியது. கீதை வலியுறுத்தும் கோட்பாடுகளையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஆய்வு செய்ய வேண்டுமானால், திட்டமிட்டே மறைக்கப்பட்ட இந்த வரலாறுகளை முதலில் நாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

*  பவுத்தத்தை ஒழிப்பதற்கு - 9ம் நூற்றாண்டில் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டது, இந்தப் பகவத் கீதை தான்.

*  பார்ப்பனர்கள் - வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார்களோ அதையே கடந்த கால இந்திய வரலாறாக்கி விட்டனர். பொது மனிதர்களின் பார்வையில் வரலாறை எழுத முயற்சிக்கவே இல்லை. வரலாறுகளை பார்ப்பனர்கள் எழுதிக் கொண்டார்கள்.

*  கைபர் போலன் கனவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பார்ப்பனர்களின் குறிக்கோள் - நல்ல இன்பமான வாழ்க்கை - நல்ல உடல்நலம் நோக்கியதாக மட்டுமே இருந்தன. ரிக் வேதப் பாடல்கள் இதைத்தான் வலியுறுத்தின.

*  ஆரியர்கள் - தங்களின் சிந்தனைத் தரத்துக்கு ஏற்றவாறு கடவுள்களை உருவாக்கிக் கொண்டனர். அறிவாலும், பண்பாலும், சமூகம் வளர்ச்சி பெறும் போது, இத்தகைய கடவுள்கள் தூக்கி எறியப்பட்டு விடுகின்றன. ஆனால் இந்தியர்கள் தங்களது மூட நம்பிக்கை காரணமாக, இந்தக் கடவுள்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

*  வேதகாலக் கடவுள்கள் எப்படி கற்பிக்கப்பட்டன? கடவுள்களும் மானுடர்களில் ஒருவராகவே கருதப்பட்டு, நண்பர்களாகவும், உண்டு, குடித்து, உடன் வாழும் நண்பர்களாகவும் கருதி, வேதப் பாடல்களை பாடினார்கள். 

*  சக மனிதர்களில் ஒருவனாகக் கருதப்பட்ட கடவுள். பிறகு “விண்ணுலக மாந்தராக” ஏற்றம் தரப்பட்டது. அப்போது, சடங்குகளையும், படையல்களையும், மேல் உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நம்பியதால், அதைச் செய்வதற்கு “புரோகிதர்” என்ற பிரிவு உருவானது. இந்தப் புரோகிதர்களுக்கு மட்டுமே கடவுளின் ‘சக்தி’ ‘ரகசியம்’ எல்லாம் தெரியும் என்றும், யாகப் பொருள்களையும் மந்திரங்களையும் அவர்களிடம் மேலே கொண்டு செல்லக் கூடிய ஆற்றல் புரோகிதர்களுக்கு மட்டுமே உண்டு என்ற கருத்து பரவியது.

*  இந்தக் கருத்தை நம்பிக்கையாக மாற்றுவதற்கு புரோகிதர்கள் மாயாஜாலக் கதைகளை உருவாக்கினார்கள்.

*  இயற்கையின் விதிகளையும் - அதற்கான விஞ்ஞான ரீதியான காரணங்களையும் அறிந்திடாத மனிதன், கடவுளை மகிழ்வித்து, அதன் மூலம் - இயற்கை விதிகளைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்பினான். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்களாக மாறிய புரோகிதப் பார்ப்பனர்கள் - சகல அதிகாரம் படைத்தவர்களாக மாறினர். சக மனிதனாகக் கருதப்பட்டு, முதலில் ரிக் வேதத்தின் மூலம் கூறப்பட்ட பல கடவுள்கள், இப்போது புரோகிதர்களுக்கும் பயன்படாததால், அந்தக் கடவுள்களை புரோகிதர்கள் கைகழுவினார்கள். தியோசன், மித்திரன், சாவித்திரி, பூசன், ஆதித்தியன், மாருத்தியன், அதிதி, திதி, ஊர்வசி போன்ற கடவுள்களை பார்ப்பனர்களே ஒதுக்கி விட்டார்கள். (இது வேத காலப் பார்ப்பனர்களின் கடவுள் மறுப்பு). மகாதேவன் என்ற நிலைக்கு, ‘ருத்திரன்’ என்ற கடவுள் உயர்த்தப்பட்டு ‘சிவன்’ என்று பெயர் பெற்றான். இந்த ‘சிவன்’ யாக சாலையில் கறுப்பு உடையில் தோன்றி, யாகத்தில் படைக்கப்படும் பொருள்கள் எல்லாம் தனக்கே சொந்தம் என்று கேட்டதாக, புரோகிதர்கள் கதைகளைப் பரப்பினர். ருத்தரனுக்கு அடுத்த முக்கிய கடவுளாக விஷ்ணுவை உருவாக்கினார்கள். அனைத்து முக்கிய யாகங்களிலும், சிவனே நேரடியாக வந்து கலந்து கொள்கிறான் என்று புரோகிதர்கள் கதை கட்டினார்கள்.

*  மக்கள் யாகங்களை நம்பி, உற்பத்திப் பொருள்களில் தங்கள் உயிர் வாழ்வதற்குப் போக, எஞ்சிய பெரும் பகுதியை யாகத்துக்கே அளித்தார்கள். பார்ப்பனர்கள் - பெரும் கொள்ளை அடித்து, பண்பாட்டுக் காவலர்களாக தங்களை மாற்றிக் கொண்டனர்.

*  வேத காலத்தில் - பார்ப்பனர்கள் மதிக்கப்படுகிறவர்களாக மாறினர். பிறகு இந்த மதிப்பைப் பயன்படுத்தி, மக்களை அச்சுறுத்தி, புரோகிதர்களாக மாறினார்கள், அடுத்த கட்டமாக ஆதிக்கவாதிகளாக மாறினார்கள். பிறகு - இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து காலம் காலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டங்களைத் தீட்டத் துவங்கினர். இதற்காகவே தங்கள் முழு நேரத்தையும் பார்ப்பனர்கள் செலவிட்டனர்.

*  தனது தேவைக்கு ஏற்ப இயற்கையைக் கட்டுப்படுத்த விரும்பி, அதற்காகக் கடவுளைத் திருப்தி செய்த மனிதன், சிந்தனை வளர்ந்து, இயற்கையின் மாற்றத்துக்கான காரண காரியங்களைப் புரிந்து கொண்ட பிறகு உலகின் ஏனைய பகுதிகளில், இத்தகைய சடங்குகள் அறிவியலுக்கு ஏற்ப மாற்றம் பெற்று விட்டது. ஆனால், இந்தியாவில் மட்டும், இந்த மாற்றம் ஏற்படவே இல்லை. காரணம், இந்த மந்திரங்களையும், சடங்குகளையும், தங்களிடமே தக்க வைத்துக் கொண்டுவிட்ட பார்ப்பனர்கள் - இவைகளை தங்களுக்கான மந்திரங்களாகக் காப்பாற்றி, மக்கள் முன்னேற்றத்தைத் தடை செய்து, சமூகத்தில் தேக்க நிலையை ஏற்படுத்தி விட்டனர்.

*  இதற்காக - யாகங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான நூல்களை எழுதி, அதைத் தங்களுக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டனர். இதற்குப் பெயர் “பிராமணங்கள்” யாகங்களைப் புரியாத புதிராக்கி - யாருடைய நலனுக்காக, எந்த நோக்கத்துக்காக யாகங்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கு எந்த விளக்கமும் தராமல், “பிராமணங்களை” உருவாக்கிக் கொண்டனர். இதன் மூலம் பிராமணங்களைப் படித்தவர்கள் கூட - யாகங்களை செய்ய முடியாது; பார்ப்பனப் புரோகிதர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஆதிக்கவாதிகளாக மாறிய பார்ப்பனர்கள், இதன் மூலம் - மூன்றாவது கட்டமாக - தங்களைக் கடவுளுக்குச் சமமாக அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்திக் கொண்டுவிட்டனர்.

*  இதன் மூலம் - பார்ப்பனப் புரோகிதர்கள் கடவுளின் ஒரு பிரிவு; மற்ற கடவுளர்கள் ஒரு பிரிவு என்ற நிலை வந்தது. யாகங்கள் - இந்த இரண்டு பிரிவினருக்கும் பங்கிடப்பட்டன. சுலோகங்களும், சடங்குகளும் கடவுளுக்கும் யாகப் பொருள்கள் மற்றொரு கடவுளான பார்ப்பனர்களுக்கும் என்று பங்கீடுகளை உருவாக்கினார்கள்.

*  படிப்படியாக - பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொண்டே போனதற்கு, சமூகத்தில் எதிர்ப்புகளும் வரத் துவங்கின. இந்த எதிர்ப்புகளை சமாளிக்க - பார்ப்பனர்கள், அடுத்த கட்டத்துக்கு தங்களை உயர்த்திக் கொண்டார்கள். கடவுளுக்கும் மேலாக, படைப்பில் முதன்மையானவர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டனர். இதற்காக ‘பிராமணங்களில்’ சில இடைச் செருகல்களைச் செய்து கொண்டனர். அப்படி இடைச் செருகலாக வந்தவைகளில் ஒன்று தான் ‘சதபதபிராமணம்’. “ரிஷிகளின் மரபுகளில் வந்த புரோகிதப் பார்ப்பான் - கடவுளுக்கு எல்லாம் கடவுள்; அனைத்துக் கடவுள்களும் அவனுக்குள் அடக்கம்” என்று ‘சதபத பிரமாணம்’ கூறுகிறது.

*  பார்ப்பனப் புரோகிதக் கும்பலின் இந்த மூர்க்கமான கொடுங்கோல் ஆதிக்கம், மத்திய காலத்துக்கு முந்தைய இந்திய வரலாறு முழுதும் நிலவியது. மன்னர்களே பார்ப்பனர்களைக் கட்டுப்படுத்த முடியாது. மன்னர்கள் பதவி ஏற்கும் போது புரோகிதன் கூறுவான்: “மக்களே, நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த மனிதன் உங்களுக்குத் தான் அரசன். ஆனால் சோமன் தான் பார்ப்பனர்களுக்கு அரசன்”.

*  வேதங்கள் - மனிதர்களால்தான் பாடப்பட்டன. இதற்கு வேதங்களிலேயே சான்றுகள் உண்டு. ஆனால் பார்ப்பனர்கள் வேதங்கள் கடவுள்களால் பாடப்பட்டவை என்று பச்சையாகப் பொய் கூறினார்கள். எனவே கடவுளே பார்ப்பனர்கள்தான் என்று சாதித்தார்கள். 

*  எதிர்ப்புகள் நசுக்கப்பட்டன; அதற்காகவே ‘மனுதர்மம்’ வந்தது. வேதத்தைக் கேட்க சூத்திரர்களுக்கு தடை போட்டார்கள். “வேதங்கள் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது” என்று மனுதர்மம் கூறியது. எனவே வேதங்களை இயற்றியது கடவுள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். வேதத்துக்குப் பணிய மறுத்தால், சமூகத்தை விட்டு விரட்டப்பட்டு விடுவார்கள் என்று ‘மனு’வின் சட்டம் மிரட்டியது.

*  கி.பி.7 அல்லது 8 ஆம் நூற்றாண்டுகளிலேயே மரப்பட்டைகளிலும், ஓலைகளிலும் எழுதி வைக்கும் எழுத்து வடிவங்கள் வந்துவிட்டன. ஆனால் பார்ப்பனர்கள் - எழுத்து வடிவம் வந்த பிறகும், வேதங்களை எழுத்து வடிவில் பதிவு செய்யவே இல்லை. காரணம் இவைகள் மற்றவர்களிடம் பரவினால், தங்கள் ஆதிக்கம் தகர்ந்துவிடும் என்பதால் தான். இதன் காரணமாகத் தான் மரப்பட்டை, ஓலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய எழுத்து வடிவங்கள் எதிலும், வேதங்கள் கிடைக்கவே இல்லை. இந்தியாவில் இப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் அனைத்துமே பவுத்த மதத்தைச் சார்ந்தவைகளாக மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பவுத்தத் துறவிகள் இயற்றிய “வசிஷ்ட தர்ம சாஸ்திரம்” தான் முதன் முதலில் எழுத்து வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டதாகும்.

ஊடுறுவல் எனும் சதி

*  பார்ப்பனர்களின் சடங்கு - யாகங்களில் வெறுப்பும், சலிப்புமடைந்த ஒரு கூட்டம் - காடுகளை நோக்கி, ‘தபசு’ செய்யப் புறப்பட்டது. பார்ப்பனர்களிலே சிலரும் - பெருமளவு சத்தியர்களுமே, இப்படிக் காட்டை நோக்கிக் கிளம்பியவர்கள். தங்களை வருத்திக் கொண்டு, வாழ்க்கையின் துயரங்களுக்கு விடை தேடும் முயற்சிகளில் இவர்கள் இறங்கினார்கள். இவர்கள் யாகங்களை எதிர்த்தனர். அதைவிட ‘தியானமே’ சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார்கள். இவர்கள் அப்போது எழுதிய நூல் தொகுதிகளுக்குப் பெயர் “ஆரண்யகங்கள்”. யாக மந்திரங்களின் மோசடிகளையும், புரோகிதர்களின் நயவஞ்சகத்தையும், இந்த ‘ஆரண்யகங்கள்’ தோலுரித்தன. இயற்கையின் புதிர்களுக்கான விடைகளை பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கினர்.

*  முதலில் வந்த ‘ஆரண்யகங்கள்’ பிராமணங்களின் ‘கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டன. பிறகு பிராமணங்களை முற்றாக ஒதுக்கிவிட்டு ஆரண்யகங்களை விரிவுபடுத்தி எழுதினார்கள். அதுதான் ‘உபநிஷத்துக்கள்’. புத்த மதம் தொடங்கப்படும் காலம் வரை, இந்த உபரிஷதங்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருந்தன. உபரிஷதங்களின் காலம் - புத்த மதம் தொடங்கிய கி.மு. நான்காம் நூற்றாண்டோடு முடிவடைந்து விட்டது. உபநிடதங்களின் காலம் முடிவுக்கு வந்தாலும் கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரை உபநிடதங்கள் எழுதப்பட்டுக் கொண்டே இருந்தன. உபநிடதங்களில் வேதத்துக்கு எதிரான கருத்துகளும் உண்டு. ஆனால் பார்ப்பனர்கள், வேதங்களின் இறுதி வடிவமே உபநிடதங்கள் என்று கூறுகிறார்கள். இதில் அடங்கியுள்ள கருத்துகளுக்கு ‘வேதாந்தம்’ என்று பெயர்.

               200க்கும் மேற்பட்ட உபநிடதங்கள் இருக்கின்றன. ஆனால் வேதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுவது 108 உபநிடதங்கள் தான். ஆனால், புரோகிதக் கலாச்சாரத்துக்கு, சத்திரியர்களிடமிருந்து (அரசாளும் பிரிவு) எழுந்த முதல் எதிர்ப்பை உபநிடதங்களில் காண முடிகிறது.

*  அரசர்களாக இருந்த சத்திரியர்களுக்கும், புரோகிதப் பார்ப்பனர்களுக்கும் சமூகத்தில் யாருக்கு அதிக அதிகாரம் என்பதில், பகைமை முற்றிக் கொண்டே வந்தது. சில சத்திரிய மன்னர்களே, பார்ப்பனர்களின் வேதங்களையும், யாகங்களையும் கற்றுக் கொண்டு, புரோகிதர்களைப் புறக்கணித்தனர். உதாரணமாக ஜனமே ஜெயன் என்ற மன்னன், புரோகிதர்களை அழைக்காமலே யாகம் நடத்தினான். 

*  உபநிடதங்களில் மறுபிறப்பு - மறு உலகம் - கடவுள் - ஆன்மாவை மறுக்கும் கருத்துக்கள் அங்குமிங்குமாக காணப்படுகின்றன. ‘சுவம் சவேதம்’ என்ற ஒரு உபநிடதம் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறுவதோடு மூடநம்பிக்கைகளைச் சாடுகிறது.

*  ஆனால், ஒரு திட்டமிட்ட வரலாற்று மோசடி அரங்கேற்றப்பட்டது. பகுத்தறிவைப் பேசிய உபநிடதங்களைப் பார்ப்பனர்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். கருத்து முதல்வாத அடிப்படையில் ஆன்மீகம் பேசிய உபநிடதங்களை மட்டுமே பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தினார்கள். இப்போது தொகுக்கப்பட்டுள்ள ‘வேதாந்தத்தில்’ கருத்து முதல்வாதத்தை முன்னிறுத்தும் - ‘ஆன்மீகம்’ பேசும் உபநிடதங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இந்திய தத்துவ இயலில் இதுவே அதிகார பூர்வமானது என்று உறுதியாக்கி விட்டார்கள். முதலில் வேதங்கள் - பிறகு பிராமணங்கள்; இதிலிருந்து ஆரண்யங்கள்; இறுதியாக உபநிஷத்துக்கள் என்று வந்து, ‘வேதாந்தம்’ என்று இறுதி வடிவம் எடுத்தது. சக மனிதனாக வேதங்களில் பாடப்பட்ட கடவுள்களை விண்ணுலகத்தவராக மாற்றி, பார்ப்பனர்கள் முதலில் மதிக்கப்பட்ட மனிதர்கள் என்ற நிலையிலிருந்து, புரோகிதர்களாக மாறி ஆதிக்கவாதிகளானார்கள். அடுத்த கட்டமாக, தங்களையும் கடவுளுக்கு சமமாக்கிக் கொண்டார்கள். இறுதியாகத் தங்களையே கடவுளுக்கும் மேலானவர்களாக்கிக் கொண் டனர்.

               இப்படித்தான் புரோகிதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண்டனர்.

*  வேதங்களில் துவங்கி - வேதாந்தம் வரை பல்வேறு மாறுதல்களுக்குட்பட்ட சிந்தனைப் போக்குகளில் - வேத எதிர்ப்புக் கருத்துக்களும் உள்ளடக்கமாக இருந்தாலும் - வேதச்சார்பு சிந்தனைகளை மட்டுமே பார்ப்பனர்கள் வேதாந்தமாக்கி - மற்றவைகளை ஒதுக்கி விட்டதையும் பார்த்தோம். இதனைத் தொடர்ந்து மேலும் பல சிந்தனைகளும் இருந்தன. பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம் அல்லது வேதாந்தம், வைசேஷிகம், நியாயம், சாங்கியம், யோகம் - எனும் 6 சிந்தனை மரபுகள் தோன்றின. இவைகளில் வைசேஷிகம், நியாயம், சாங்கியம், யோகம் ஆகிய நான்கு மரபுகளும் பகுத்தறிவை நோக்கியே சிந்தித்தன. ஆனாலும் நாட்கள் செல்ல செல்ல - பழமைப் போக்குடன், இவைகள் சமரசம் செய்து கொண்டன.

*  சாங்கியம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க - பகுத்தறிவுச் சிந்தனையாகும். இந்தச் சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர் கபிலர் என்ற பார்ப்பனரல்லாதவர். இவரை ‘அசுரர்’ என்று குறிப்பிடுகிறார்கள். சாங்கியச் சிந்தனைகளை ‘அசுரர்களுக்கு’ கற்றுத் தந்ததாக, ‘பாகவதம்’ குறிப்பிடுகிறது. உலகம் படைக்கப்பட்டது அல்ல; அது பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டது என்ற பகுத்தறிவு அடிப்படையிலான பரிணாமக் கோட்பாடு சிந்தனைக்கு ஏற்ப இதன் கோட்பாடுகள் அமைந்திருந்தன. ஆனாலும், இதிலும் பார்ப்பனியக் கருத்துகளைப் பார்ப்பனர்கள் தந்திரமாக நுழைத்து விட்டார்கள். “சாங்கியம் - கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டது; வேதப் புரட்டுகளுக்கு எதிரானது. பின்னாட்களில் இதில் வேதங்களுக்கு ஆதரவான கருத்துகள் இடைச் செருகல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் வெட்டி எறிந்து விட்டால்கூட, சாங்கிய மூலக் கருத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; இதிலிருந்தே இவை இடைச் செருகல் என்பதை உறுதி செய்ய முடியும்” என்கிறார், ஆய்வாளர் கார்பே. வைசேஷி யகம், நியாயம், சாங்கியம், யோகம் ஆகிய சிந்தனைகளின் பகுத்தறிவுக் கருத்துக்களை பார்ப்பனர்கள் ஊடுருவி சிதைத்த பிறகு, வேண்டா வெறுப்பாக, இவைகளையும் பார்ப்பனர்கள் அங்கீகரித்தார்கள். 

*  கபிலரைப் போலவே - மற்றொரு சிந்தனையாளர் கணாதர். இவர் தோற்றுவித்தது வைசேஷிகம். இவர் கூறிய ‘அணு’ பற்றிய கொள்கைகள் - தாராள சிந்தனைக்கு தூண்டுதலாக இருந்தது. கபிலர், கணாதர் வழிவந்த சிந்தனையாளர்கள் - எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் வேதக் கடவுள்கள், யாகங்கள், மந்திரங்கள், சடங்குகள், உபநிடதங்கள், உட்பட அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரித்து, தூக்கி எறிந்தார்கள்.

*  கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சமயத் தொண்டு அமைப்பு உருவானது. இந்த அமைப்பில் இடம் பெற்றவர்களின் பெயர் ‘பரிவிராஜகர்’ என்பதாகும். இவர்கள் - நாடோடிகள். வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து, வைதீகப் பார்ப்பனியத்துக்கு எதிரான மத மறுப்புப் பிரச்சாரங்களை செய்தனர். பார்ப்பன புரோகிதர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தாலும், அது பற்றிக் கவலைப்படவில்லை. அறிவுப் புரட்சி நடப்பதற்கான களம் அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள் தான். 

               “இவர்களில் பார்ப்பனர்கள் எவரும் இல்லை. இவர்களின் கருத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. மன்னர்கள், சான்றோர்கள், அரசு அலுவலகர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள், உழவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பரிவிராஜகர்களை வரவேற்று பெருமதிப்பு செய்தனர்” - என்று ரைஸ்டேவிட்ஸ் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இவர்களுக்காக - மக்கள் ஊர் தோறும் மேடைகளை அமைத்துக் கொடுத்தார்கள்.

*  வேத - யாகங்களில் நம்பிக்கை இல்லாமல், வீட்டை விட்டு வெளியேறி காடுகளுக்குச் சென்று, ‘தவம்’ செய்த கால கட்டத்தைத் தொடர்ந்து - காடுகளுக்குச் செல்லாமல், ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து சிந்தனைகளைப் பரப்பும் அமைப்பு உருவாகி, அறிவுப் புரட்சிக்கு அடித்தளமிட்டது. பரிவிராஜகர்கள் - துறவிகளின் கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கினார்கள். இதிலிருந்து முகிழ்த்தது தான், பவுத்தம், சமணம்.

*  சுய சிந்தனையாளர்களின் வளர்ச்சி, பார்ப்பனர்களுக்கு நெருக்கடிகளைத் தோற்றுவித்தன. இவர்கள் மீது வெறுப்பைத் தூண்டிவிடும் பிரச்சாரத்தைப் பார்ப்பனர்கள் மேற்கொண்டார்கள். வேதத்தை மறுப்பவர்களை ‘நாத்திகர்கள்’ என்றும் வேதத்தை நம்புகிறவர்களை ‘ஆத்திகர்கள்’ என்றும் பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆத்திகம் - நாத்திகம் என்பது பார்ப்பனர்கள் உருவாக்கிய சொற்றொடர்களே! (கடவுளை மறுப்பவர்கள் நாத்திகர்கள் அல்ல; வேதத்தை மறுப்பவர்களே நாத்திகர்கள் என்று இறந்து போன சங்கராச்சாரியும் கூறியிருக்கிறார்.)

*  பவுத்த - சமண மதங்களுக்கு அடித்தளமிட்ட மற்றொரு சிந்தனை ‘லோகாயதா’. இந்தச் சொல்லுக்கு ‘மக்களிடையே பரவி இருப்பது’ என்பது பொருள். இது முழுமையான கடவுள் - வேத மறுப்பு சிந்தனைகளைக் கொண்ட அமைப்பு. ரிக்வேத காலத்திலேயே - இது தோற்றம் கொண்டுவிட்டது. ஆனால் லோகாயதவாதிகளின் நூல்கள் முழுவதையும் பார்ப்பனர்கள் - அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அழித்து விட்டார்கள். இவர்களின் முக்கிய இலக்கியமான ‘பிரகஸ்பதி சூத்திரம்’ (கி.பி.600) முழுதுமாக அழிக்கப்பட்டு விட்டது. பார்ப்பனர்களின் ‘இதிகாசங்களிலும்’, புத்தரது உரையாடல்களிலும் லோகாயதவாதம் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. “இந்தியப் பொருள் முதல்வாத சிந்தனைகளை (பார்ப்பன வேத - எதிர்ப்பு சிந்தனை) அவற்றின் எதிர்ப்பு இலக்கியங்களிலும், திறனாய்வு நூல்களிலும் காணப்படும் மேற்கோள்களிலிருந்து மட்டுமே அறிய முடிகிறது” என்கிறார், முன்னாள் குடியரசுத் தலைவரும் - இந்து மத ஆய்வாளருமான பார்ப்பனர் இராதாகிருஷ்ணன்.

*  லோகாயதக் கருத்துக்களை எளிமையாக விளக்கியவர் - சார்வாகர். இதனால் பார்ப்பனர்களின் பழிப்புக்கும், தூற்றுதலுக்கும் உள்ளானார். ‘சார்வாகம்’ என்ற சொல்லுக்கு ‘இனிமையான பேச்சு’ என்று பொருள்.               இப்படி பரிவிராஜகர்களின் நாடு தழுவிய பிரச்சாரமும், சார்வாகரின் லோகாயதமும் - பவுத்த சமண சிந்தனைகளுக்கு அடித்தளமிட்டன. 

*  உபநிடதங்களில் கூறப்பட்ட சிந்தனைகள்; கணாதர், கபிலர் போன்ற சிந்தனையாளர்களின் புரோகித எதிர்ப்பு கருத்துக்கள்; பரிவிராஜகர்கள் எனும் நாடோடிப் பிரச்சாரகர்களின் வேத மத எதிர்ப்புப் பிரச்சாரம்; எல்லாவற்றுக்கும் மேலாக சார்வாகர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் - எல்லாம் சேர்ந்து, பார்ப்பனர்கள் சமூக மேலாதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கின. பார்ப்பனர்களின் ஆதிக்கப்பிடி குலையத் துவங்கியது. சமூகம் ஒரு சிந்தனைப் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

*  பார்ப்பனர்களுக்கு எதிரான இந்தப் புதிய சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்தவர்கள் - அரசு அதிகாரத்தில் இருந்த சத்திரியர்கள்கள் தான். உபநிடத காலத்துக்குப் பின்பு, வணிக சமுகத்தின் துணையுடன், சத்திரியர்கள் பார்ப்பன புரோகித ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார்கள்.

*  பார்ப்பன வேத மரபுகளுக்கு எதிரான மெய்யியல் சிந்தனை மரபுகளை நிறுவியவர்கள் அனைவருமே பார்ப்பனரல்லாதார் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. சிலர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிலர் அடிமைச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்; சிலர் “தீண்டத்தகாதவர்கள்” .

*  புத்தர் சத்திரிய இனத்தைச் சார்ந்தவர். சாக்கிய குல மன்னர் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை சுத்தோதனன் நேபாளப் பகுதியில் கபிலவஸ்து என்ற நகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். அரசரின் துணைவி மாயாதேவி. இருவருக்கும் கி.மு.543இல் லும்பினி என்ற சிற்றூரில் சித்தாந்த கவுதமன் மகனாகப் பிறந்தார்.

*  இளவரசராக வளர்ந்தும் - அரண்மணையை விட்டு வெளியேறிய சித்தார்த்தன் - முனிவர்களிடம் பாடம் கற்பது - ஆழ்ந்த தியானம் செய்வது என்று பல ஆண்டுகளைக் கழித்தார். பரிவிராஜகர் என்ற நாடோடிப் பகுத்தறிவுப் பிரச்சாரகர்களுடன் இணைந்து, பல இடங்களில் சுற்றித் திரிந்து விவாதித்தார். இறுதியில் அவர் உருவாக்கிய புத்த மார்க்கம் - சமூகத்தில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்தது.

*  பிக்குகளின் சங்கம் ஒன்றை உருவாக்கி அவர்கள் வழியாக நாடு முழுதும் பவுத்தக் கொள்கைகளைப் பரப்பச் செய்தார். பெண்கள் முன்னேற்றத்தை புத்தக் கொள்கை வலியுறுத்தியது. அவர்களும் துறவியாகும் உரிமை வழங்கப்பட்டு, பிக்குளிகளாக நியமிக்கப்பட்டனர். அதுவரை - பார்ப்பன வீடுகளுக்குள் மட்டுமே நடந்து வந்த குருகுலக் கல்விமுறை மாற்றப்பட்டன. கல்விக் கூடங்கள் - பவுத்த கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டன. புரோகிதர்களின் மொழியான சமஸ்கிருதம் மறைந்து, மக்கள் மொழியான பாலி பிரபலமடைந்தது. வறட்சி மற்றும் பஞ்சத்தைப் போக்குவதற்கு யாகங்களை நடத்தும் முறை கைவிடப்பட்டு, பாசனத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சமூகத்தை வர்ணாஸ்ரம அடிப்படையில் பிரிந்ததை புத்தர் கடுமையாக எதிர்த்தார். புத்தர் மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். சாதி, ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். தனது எண்பதாவது வயதில் - கி.மு.483அல் புத்தர் இறந்தார்.

*  புத்தர் தனது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர்களையும் தனது மார்க்கத்துக்குள் சேர்த்துக் கொண்டார். அதைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் புத்த மார்க்கத்தை ஊடுருவி அழித்துவிட்டனர். நாகார்ஜூனன் என்ற பார்ப்பான் ‘மகாயானம்’ என்ற பவுத்தப் பிரிவை உருவாக்கினான். ‘சூன்யவாதம்’ என்ற கோட்பாட்டை, புத்த மார்க்கத்துக்குள் வெகுநுட்பமாக இவன் நுழைந்துவிட்டான். உறுதிப்படுத்த முடியாததை ‘வெறுமை’ என்று சூன்யவாதம் கூறியது. நாகார்ஜூனன் ‘வெறுமை’க்கு புதிய வியாக்யானம் தந்தான். ‘வெறுமை’ என்பது ‘இல்லா ஒன்று’ அல்ல. எல்லாவற்றுக்குமே இதுவே ஆதாரனமானது என்றான். இந்த ‘வெறுமை’யை ‘பிரம்மம்’ என்று கூறி - அதை பவுத்தத்துடன் இணைத்து ‘பவுத்த பிரம்மம்மே’ அறுதியான உண்மை என்று வியாக்யானம் செய்தான். புத்தர் என்பவரை மாமனிதராகக் கருதாமல், உலகத்துக்கு அப்பாற்பட்டவர்’ என்று கூறி, புத்தர் உலகில் தோன்றி மறைந்தார் என்றும் - புத்தராக அவர் வலம் வந்தது மாயத் தோற்றம் என்றும் நாகார்ஜூனனின் மகாயானம் கூறி - புத்த மார்க்கத்தின் அடிப்படையையே தகர்த்தது. புத்த மார்க்கம் நிறுவனப்படுத்தப்பட்ட மதமாகியது. ஏராளமான பார்ப்பனர்கள் மகாயான புத்த மதத்தில் சேர்ந்தனர்.

பவுத்தர்களைப் படுகொலை செய்த பார்ப்பனர்கள்!

*  பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு - முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கியங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கியங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர்களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டு துண்டாக லோகாயதவாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர் தேவிபிரசாத் சட்ட பாத்யாயாயா இவ்வாறு கூறுகிறார்:

               “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங்களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப்பிலக்கியங்களின் மூலப்படிகள் மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டு விட்டன. துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சில வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை கூட லோகாயத எதிர்ப்பாளர்களின் நூல்களில் தான் உயிர் வாழ்கின்றன.”

*  படைப்பிலக்கியங்களை மட்டுமல்ல; புத்தகக் கலைகளையும் - பண்பாட்டையும் அழித்து ஒழித்தனர்; புத்த மடலாயங்களை எல்லாம் அழித்தார்கள்.

*  நயவஞ்சகமாக படுகொலைகளைப் புரிந்து ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திரன் என்னும் பார்ப்பன அரசன், அசோக மன்னர் நிறுவிய 84,000 கல்வெட்டுத் தூண்களை இடித்தான். இந்தக் கல்வெட்டுத் தூண்களில் அசோகர் பிறப்பித்த சமூக சீர்திருத்த அரசு ஆணைகளும், புத்தரின் சிந்தனைகளும், மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன.

*  பவுத்த பிக்குகளும், பிக்குனிகளும், பவுத்தத்தைத் தழுவிய பாமர மக்களும், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பவுத்தத்தை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கும் வரை, இந்தப் படுகொலைகள் தொடர்ந்தன.

*  காஷ்மீரத்தைச் சார்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் கல்கணன் கூறுகிறார். “பிறர் பற்றி பழி கூறுவோர் சிலரின் தூண்டுதலால் ஜாலுக்கண் என்ற காஷ்மீர மன்னன், பவுத்த மடாலயங்களிலிருந்து எழுப்பப்படும் சங்கொலி, தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் காரணம் கூறி அவற்றை இடித்துத் தள்ளினான்.”

*  ஆய்வாளர் கல்கணன் மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் தருகிறார். அபிமன்யு என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன், பவுத்தர்களை இனப்படுகொலை செய்தான் அது இனப்படுகொலை அல்ல என்றும், கடும் பனிப்பொழிவினால், இறக்கிறார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்தான்; இந்தப் படுகொலைகள் நடக்கும் குளிர்காலமான 6 மாதங்களில் - தனது நாட்டை விட்டு அவன் வெளியேறி விடுவான். தன்வ பிஷாரா என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கி விடுவான்; பவுத்தர்கள் படுகொலைகள் நாட்டில் திட்டமிட்டபடி நடக்கும். கடும் பனியினால் பவுத்தர்கள் மட்டும் தான் இறப்பார்களா? பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை? “பார்ப்பனர்கள் இறக்காததற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஆன்ம சக்தி; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, அவர்கள் கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய்ததால், அவர்கள் சாவதில்லை. பவுத்தர்கள் அவ்வாறு செய்யாததால் மரணமடைந்தனர்” என்று விளக்கம் கூறினான், அந்தப் பார்ப்பன மன்னன்.

*  பவுத்த மதத்தினர், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்றார்கள் என்று கூறி, ஆத்திரமடைந்து, ஆயிரக்கணக்கான பவுத்த மடாலயங்களைத் தீக்கிரையாக்கினான், காஷ்மீர் மன்னராகிய நரன் என்ற கின்னரன். பவுத்த மதத்தினர் வாழ்ந்த அந்தக் கிராமங்களில் மத்தியமாதா எனும் பகுதியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியேற்றினான். இவை எல்லாம் ஆய்வாளர் கல்கணன் தரும் தகவல்கள்.

*  காஷ்மீர் பகுதியில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பகுகளிலும், பவுத்தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சிராவஸ்தியை ஆண்ட விக்கிரமாதித்தன் பவுத்தர்களைக் கொடுமைப்படுத்தினான். வங்காள மன்னன் சசாங்கன் பவுத்தர்களைத் தனது பிறவி எதிரிகளாகக் கருதினான். புத்தர் அறிவொளி பெற்றதாகக் கூறப்படும், போதி மரத்தை வெட்டி வேரோடு சாய்ப்பதற்குப் பலமுறை முயன்றான். கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன் கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர். சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு இவ்வாறு ஆணையிட்டான், “தனுஷ்கோடிப் பாலத்திலிருந்து (இலங்கைக்கு ராமர் கட்டியதாகக் கூறப்படுவது) இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள், முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கொல்லப்படுவர்கள்.” இத்தகவலை ‘சங்கர விஜயம்’ என்ற நூல் தெரிவிக்கிறது, புத்த மார்க்கத்தை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் பி. லட்சுமிநரசு, தனது ஆய்வுகளில், இந்தப் படுகொலைகள் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.

*  ஆய்வாளர் டபிள்யூ.டி. வில்கின்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “பவுத்தருடைய சீடர்களும் பவுத்த மதத்தைச் சார்ந்த பாமர மக்களும் ஈவு இரக்கமின்றிக் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். வெட்டிக் கொல்வது, நாடு கடத்துவது அல்லது வாள்முனையில் இந்து மதத்துக்கு மாற்றுவது என்று ஏராளமான கொடுமைகள் செய்தார்கள். பிற மதத்தினர் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால் பவுத்த மதத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்காக, செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை.

தொகுப்பு : இராசேந்திரன்

(தொடரும்)