தமிழ்மக்களிடம் ‘இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?’ என்ற ஒரு சொலவடை வழங்கி வருகின்றது. இதன் பொருள் எத்தகைய அரசு அமைப்பிலும் தங்கள் நிலை மாறவில்லை என்பதாக எல்லோரும் கருதுகின்றோம். ஆனால் எந்த அரசு வந்தாலும் ஏன் அந்த மாற்றம் நிகழவில்லை என்று யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. அதாவது ஆட்சி மாற்றங்கள் என்பது மேல்நிலையில் மட்டும் ஏற்படுகின்றது. பொதுமக்கள் வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. இதனை மார்க்ஸ் ‘ஆசிய உற்பத்தி முறை’ மற்றும் ‘கீழைத் தேய வல்லாட்சி’ என்று குறிப்பிடுவார். சோழர் காலத்தை ஆராய்ந்த பர்ட்டன் ஸ்டெயில் ‘சமய-நீர்ப்பாசன சமூகம்’ என்பார். அதாவது இந்திய- தமிழ்நாட்டு அரசமைப்புகள் உலகின் மற்ற பகுதிகளிலிருந்த அரசு அமைப்புகளிலிருந்து வித்தியாசமானது என்பதைக் குறிக்க மேற்கூறிய சொல்லாட்சிகளைக் கையாண்டனர்.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இடங்களில் கோவில் நிர்வாகம் சார்ந்த பார்ப்பன உயர்சாதிச் சூத்திரக் கூட்டமைப்புகளாலும், நீர்ப்பாசன வசதியற்ற மேட்டு நிலப்பகுதிகளில் சாதியமைப்புச் சார்ந்த குழுக்களாலும் சிவில் நிர்வாகம் என்று சொல்லப்படுகின்ற உள்ளூர் நிர்வாகம் நடைபெற்று வந்தது. இத்தகைய அமைப்புகளில் பேரரசன் அல்லது அரசன் என்பவன் பெரும்பாலான காலகட்டங்களில் உள்ளூர் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளதாகக் கூறியுள்ள குறிப்புகள் குறைவு. அரசன் என்பவன் இராணுவத் தலைமை சார்ந்து மட்டும் செயல்பட்டான். எந்த அரசன் அல்லது அரசு மாறினாலும் உள்ளூர் நிர்வாகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. அதனால் மேற்படி இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்ற சொலவடை உருவாகி நிலைபெற்றது. இத்தகைய அமைப்பில் ஆளும் சாதிகளுக்கும் ஆளப்படும் சாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போராட்டங்களாக வெளிப்பட்டபோது அதனை வலங்கை -இடங்கைச் சாதிப் போராட்டமென்று வரலாற்றாளர்கள் மயங்கிக் குறித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதியவர்கள் பலரால் குறிப்பிடப்படும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ‘இடங்கை - வலங்கை’ப் போராட்டம் ஆகும். சோழர் காலத்தின் மையப் பகுதி என்று கருதப்படும் 11ஆம் நூற்றாண்டின் இறுதி - 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான சுமார் 900 ஆண்டுகள் இப்போராட்டம் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் தொடர்ந்து குறிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்த சாதிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்து நீண்ட காலங்களாகத் தங்களுள் பூசலிட்டு வந்ததாக அக்குறிப்புகள் பேசுகிகின்றன. இந்தச் செய்தியைப் பற்றி வரலாற்றாசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.

உண்மையில், சாதியமைப்பும் அது உணர்த்தும் சமூக, பொருளாதார முறைகளும் ஏறக்குறைய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் ஆக்கப்பட்ட சமூக ஒழுங்கை நிலைநிறுத்துவது அரசனின் முக்கிய கடமையாகக் கொள்ளப்பட்டது. வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், உணவு, விவாகம் சம்பந்தப்பட்ட வரையில் தனித்தனியே பிரிந்து நின்றதற்கும், அதே வேளையில், கோவிலையும் அதன் சுற்றாடலையும் முகாமை செய்தல், கிராமத்தில் நில, நீர்ப்பாசன உரிமைகளை ஒழுங்குசெய்தல், தல விவகாரங்களைப் பாலனஞ் செய்தல் முதலிய பொது வேலைகளில் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்ததற்கும் இதுவே காரணமாக விருந்தது. தனி ஒருவனது அல்லது ஒரு கூட்டத்தினரது உரிமைகளிலும் பார்க்க, ஒருவன் எந்த நிலையில் (சாதியில்) இருக்கின்றானோ அதற்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அழுத்திக் கூறப்பட்டது.

சமூக ஒற்றுமையும், அப்போதிருந்த சமூக ஒழுங்கில் திருப்தியும் நிறைந்த சூழ்நிலையே பொதுவாக நிலவியது. வேறுபாடுகளும் சண்டைகளும் இருந்தன என்பது உண்மைதான் - இவையின்றி எந்த ஒரு சமூகமும் இருக்கவில்லை - ஆனால், அவை ஒருபோதும், கடுமையானவையாக இருக்கவில்லை. ‘வலப்பக்கச் சாதி, இடப்பக்கச் சாதி’ என்ற வேறுபாடு பழைய காலத்திலேயே இருந்தது. இது எவ்வாறு தொடங்கியதென்பது மர்மமாகவே இருக்கிறது; இந்த இரு சாதியினருக்குமிடையே ஏற்பட்ட சண்டைகள்கூட, இதற்குப் பிற்பட்ட காலங்களிற் காணப்பட்ட பலாத்காரத்தையும் முரட்டுத்தனத்தையும், அப்போது அடையவில்லை. பட்டணங்களிலும் கிராமங்களிலும் பல்வேறு சாதி மக்களும் தத்தமது சாதிக்குச் சொந்தமான தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்து, தத்தம் சாதியினரின் பிரத்தியேக பழக்க வழக்கங்களை மேற்கொண்டொழுகினர். சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள், கிராமத்திலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள குக்கிராமங்களில் வாழ்ந்தனர்; (அடிமைத் தனத்திலிருந்து அதிக வேறுபாடற்ற நிலையிலிருந்த) அவர்கள் நிலத்தைக் கொத்தியும் வேறு இழிந்த வேலைகளைச் செய்துகொண்டுமிருந்தார்கள்.(தென்னிந்திய வரலாறு, பக்.365, 366)

ஆனால் சாஸ்திரியாரே தன்னுடைய ‘சோழர்கள்’ என்ற நூலில், ஒரு புராண நூலின்படி கரிகாலன் காலத்தில் இரு தரப்பினரிடையே சண்டை மூண்டு வழக்கு அரசரின் தீர்ப்புக்கு விடப்பட்டபோது ஒரு தரப்பினர் அரசனின் வலப்புறமும் மற்றொரு தரப்பினர் அரசனின் இடப்புறமும் நின்றதாகச் செவிவழிச் செய்தி உண்டு என்றும், முதலாம் குலோத்துங்கன் இரண்டாம் ஆட்சியாண்டில் பாபநாசம் வட்டம் (தஞ்சை மாவட்டம்) இராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலத்தில் வலங்கை, இடங்கைச் சண்டை பெரிய அளவில் நடந்து, அச்சண்டையில் அவ்வூர்க் கோவில் சொத்துகள் கொள்ளையிடப்பட்டு, கோவிலும் இடித்துச் சேதப்படுத்தப்பட்டது என்றும், பிராமண, வேளாளச் சாதிகளைச் சேர்ந்த நிலக்கிழார்களும் அரசாங்க அதிகாரிகளும் வன்னியர் சாதிகளைச் சேர்ந்தவர்களை இணைத்துக்கொண்டு இடங்கை வகுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடுகிறார். (சோழர்கள், பக்.724, 725)

‘கல்வெட்டில் வாழ்வியல்’ என்ற நூலில் அ. கிருட்டிணன், விஜயநகர காலத்து வலங்கை இடங்கை பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கூறுமிடத்தில்,

“அந்நாட்டில் பிறந்த அந்தணரும், வேளாளரும் வார வரி வசூலிப்பதினின்றும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பொய்க் கணக்கு எழுதியும், தரவுக்கள ஊழியர்களின் பயனைப் பெற்றும், அரசினர் மற்றும் சீவிதக்காரர்களின் பயனைப் பெற்றும், அரசு அலுவலர்க்கு அச்சமுதாயத் தினரைப் பற்றிப் பொல்லாங்கு கூறி எவரும் நாட்டுக்குத் தீங்கு செய்யக் கூடாதென முடிவெடுக்கப்பெற்றது.

தன் வகுப்பைச் சேராதவர்களின் கொடைகள் மற்றும் வாழ்வியல் அடிப்படை உரிமை நலங்களை எவரேனும் விலைக்கு விற்றாலோ, விலைக்குப் பெற்றாலோ அரசு வரியான இராசகரம் என்னும் வரியைத் தவிர பிற வரிகளை மக்களிடையே வசூலிப்போர் நாட்டுத் துரோகிகளாகக் கருதப்பெற்றனர். (பக்.162, 163)
என்கிறார்.

‘தமிழ்நாட்டு வரலாறு- சோழப் பெருவேந்தர் காலம்’ என்ற நூலில், "வடநாட்டிலிருந்து கொண்டுவந்து புகுத்தப்பெற்ற நால்வருண சமுதாய அமைப்புக்கு எதிராக ஏற்படுத் தப்பட்ட ஓர் அமைப்பே இவ்விடங்கை - வலங்கைச் சாதிப் பாகுபாடு என்று ஒருசில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். வருணாசிரம அமைப்பில் பிராமணர் கள் பெற்ற தனி உரிமைகளைக் கண்டு மனம் புழுங்கிய பிராமணரல்லாதார் ஒன்றுகூடித் தாங்களும் அரசனிட மிருந்து பல்வேறு உரிமைகளைப் பெறுவான் வேண்டி இவ்வித அமைப்பைத் தோற்றுவித்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. எனினும் இந்தச் சமுதாயப் பிரிவுகள் எங்ஙனம் தோன்றின என்பது இன்னும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

"வலங்கை, இடங்கைச் சாதி வரலாறு” எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தின் பழஞ்சுவடிகள் பிரிவில் (Old Manuscript Library) காணப்படுகிறது. இச்சுவடியானது இடங்கை-வலங்கைப் பிரிவினைச் சேர்ந்த 98 சாதிகள் கரிகாற்சோழன் காலத்தில் ஏற்பட்டன என்றும், வெள்ளாளரும் அவர்களது ஆதரவாளர்களும் இடங்கைச்சாதியினர் என்று கருதப்பட்டார்கள் என்றும் கூறுகிறது. நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளாளர், பறையர் ஆகியோர் வலங்கைச் சாதிகளிலும், இடம் விட்டு இடம் பெயர்ந்து கைவினைத் தொழில்கள் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கம்மாளர்கள், சக்கிலிகள், கோமுட்டிகள் முதலியோர் இடங்கைச் சாதிகளிலும் இச்சுவடியில் தொகுக்கப்பட்டுள்ளனர். இதற்கேற்பப் பிரெஞ்சுக்காரர் ஆண்ட காலத்தில் புதுச்சேரியில் நீதிபதி ஒருவர் ஒரு வழக்கை விசாரித்த போது வேளாளர், பறையர் போன்ற வலங்கைச் சாதியார் நீதிபதியின் வலப்பக்கத்திலும், கம்மாளர், சக்கிலியர், கோமுட்டிகள் முதலிய இடங்கைச் சாதியார் அவருடைய இடது பக்கத்திலும் நிற்பது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது” (தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - பக். 59, 60)

மேலே காட்டப்பட்ட கருத்துகள் அனைத்தும் இடங்கை வலங்கைப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டு வரலாற்றில் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சாதியப் பிரச்சினை என்பது போலத்தான் குறிப்பிடுகின்றன. உண்மையில் இந்தக் கருத்து நியாயமானதுதானா?

இதனை சாதியம் சார்ந்த பிரச்சினையாக இவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டதனால்தான் இந்தக் குழப்பம் நேர்ந்துள்ளது. இடங்கை வலங்கைப் பிரச்சினை என்பது அரசியல் நிர்வாகம் சார்ந்த ஒன்று. அதிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் அரசியலும் நிர்வாகமும் என்பது உலக அரசியல் வரலாற்றிலிருந்தும் இந்திய அரசியல் வரலாற்றிலிருந்தும் பெரிதும் வேறுபட்ட தன்மையுடையது. இதற்கான அடிப்படையான காரணம் தமிழ்நாட்டுச் சைவ வைணவக் கோயில்கள். தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலத்திலிருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி வரையிலான காலத்தில் தமிழ்நாட்டு வளமான நிலங்களின் பெரும்பகுதி இந்தக் கோவில்களின் உடைமையாக இருந்ததுவும் உள்ளூர் நிர்வாகம் என்பது இந்தக் கோவில் சார்ந்த நிர்வாகக் குழுக்களிடம் இருந்ததுவும்தான். (இது பற்றிய விரிவான ஆய்வுகள் கோவில்-நிலம்-சாதி என்ற என்னுடைய கட்டுரைகளில் காணலாம்).

இடங்கை வலங்கைப் பிரச்சினைகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளிலும் கல்வெட்டுச் செய்திகளிலும் சொல்லப் பட்ட சில செய்திகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

1. இந்தச் செய்திகளில் பெரும்பாலானவை ஏதாவதொரு கோவிலை மையமாகக் கொண்டே குறிப்பிடப் பட்டிருக்கும்.

2. அரசனுடைய அதிகாரிகள், படைவீரர்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கும்.

3. பெரும்பாலும் இடங்கைப் பிரிவினர் பாதிக்கப்பட்ட தாகச் செய்திகள் இருக்கும்.

4. இவர்களைத் துன்புறுத்துபவர்களாகப் பார்ப்பனர், வெள்ளாளர் போன்றவர்களைப் பற்றி மிகுதியாகவும் மற்ற உயர்சாதி நிலவுடைமையாளர்களைப் பற்றி ஓரளவும் குறிப்புகள் கிடைக்கின்றன.

5. சில கல்வெட்டுகளில் இடங்கை வலங்கை ஆகிய இரு பிரிவினரும் இணைந்து பார்ப்பன, வெள்ளாள நிலவு டைமையாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்ததாக இருக்கும்.

6. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலக் கல்வெட்டுகளில் செருப்புப் போடுதல், குடை பிடித்தல், மாடி வீடு கட்டிக்கொள்ளுதல், கல்யாண ஊர்வலங்கள் இன்னின்ன பகுதிகளில் செல்லலாம் என அனுமதி கூறுதல் போன்ற சமூக மதிப்புகளைக் கோருவதாக இருக்கும்.

இத்தகைய செய்திகளினூடே வலங்கைப் பிரிவில் பறையர் சாதியார் இடம்பெற்றிருப்பதும் இடங்கைப் பிரிவில் கைவினைத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பள்ளர் சாதியார் இடம்பெற்றிருப்பதும் ஆய்வாளர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய பறையர் சாதியார் ஆளுகின்ற சாதிகளுடன் எவ்வாறு இணைந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தவித்தனர்.

கோவில்-நிலம்-சாதி கட்டுரைத் தொடரை நான் எழுதிவரும்போது கோவில் நிர்வாக ஆளும் குழுக்களில் கடைநிலை ஊழியர்களாகப் பறையர் சாதியார் குறிக்கப் படுவதைக் கண்டேன். உள்ளூர் நிர்வாக அமைப்பில் தலையாரி போன்ற கடைநிலை அரசு ஊழியர்கள் பெரும் பாலும் பறையர் சாதியினரே. கோவில் நிர்வாகத்திலிருந்து ஊதியம் பெறுபவர்கள் இவர்கள். ஆனால் பள்ளர் சாதியார் உட்பட இடங்கைச் சாதிகளைச் சார்ந்தஅனைவரும் கோவிலுக்கு மகன்மை, வரி போன்றவற்றைச் செலுத்துபவர் கள்தான். சுருக்கமாகக் கூறினால் "வலங்கை” என்பது கோவில் சார்ந்த நிலவுடைமை "ஆளும் சாதிகள்”. "இடங்கைஃ என்பது அந்தக் கோவிலின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்கள். அதாவது ஆளப்படும் சாதிகள். வலது என்பது அதிகாரம் சார்ந்தது. இந்த முடிவுக்கு நான் வந்தபோது இதனை உறுதிசெய்வதற்கு வேறு சான்றுகள் கிடைக்குமாவென தேடிக்கொண் டிருந்தேன். அயோத்திதாசர் எழுத்துகளைப் படிக்கும்போது வலங்கை இடங்கை பற்றிய செய்திகளை அவர் எழுதி யிருப்பது கண்டு ஆச்சரியத்துடன், ஆனால் கவனமாக வாசித்தேன். முதல் தொகுதியில் 11 இடங்களிலும் இரண்டாம் தொகுதியில் ஒரு இடத்திலும் இதனைப் பற்றி அவர் பேசுகிறார்.

""1814-வது வருடத்தில் விஸ்வபிரம வம்மிஷத்தாரெனும் கம்மாளருக்கும், பிராமணரென வழங்கும் விப்பிராளுக் கும் விவாக சம்மந்த விஷயமாய் வியாஜியங்கள் நேரிட்டு மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டிலும், சித்தூர் ஜில்லா அதவுலத் கோர்ட்டிலும், கம்மாளர்களே ஜெயமடைந்து விட்டபடியால் விப்பிராளென்னும் பிராமணர்களென் னப் பட்டவர்கள் சகல சாதியோரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டதுபோக கம்மாளர்களுடன் சண்டை சச்சரவு செய்து தங்களைக் காப்பதற்கு தங்களால் பறையரென்று தாழ்த்தி வந்த சாதியோரை சினேகப்படுத்திக்கொண்டு அவர்களைக் கிஞ்சித்து உயர்த்தி வைத்தார்கள்.

அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்துக் கூடுவோர் தேசாயச்செட்டி பஞ்சாயத்தென்று வகுத்து வைத்திருந்தவற்றுள், சுங்கச்சாவடியண்டையிலிருந்து சுங்கம் அல்லது ஆயம் வாங்குவோர்களுக்கு தேய ஆயச் செட்டியென்று கூறப்படும் அவர்களிடம் பஞ்சாயத்து செய்யப்போகிறர்வகள் மீனாட்சியம்மன் முத்திரை யையும், மணியையும் மத்தியில் வைத்து அதன் வலங்கைபுறமாக பிராமணர்கள், வேளாளர்கள், பறையர்கள் வீற்றிருக்கலாமென்றும், அதன் இடங்கை புரமாக கோமுட்டிகள், சக்கிலியர், கம்மாளர்கள் வீற்றிருக்கலாம் என்றும் ஓர் நூதன ஏற்பாட்டைச் செய்து காரைக்கால், புதுச்சேரி முதலிய தேசங்களிலுள்ள பௌத்தக் குடிகளை கம்மாளர் அடிதடிக்கு பயந்து வலங்கைசாதியார் வலங்கைசாதியாரென சிறப்பில் வைத்திருந்தார்கள்.
என்ன உயர்த்தி வைத்திருந்தபோதிலும் அவர்களுக்கு கம்மாளர்களால் ஆபத்து நேரிடுங் காலத்தில் வலங்கையர்களும்,

வலங்கை சாதியென்போர் முன்னுக்கு வர ஏற்படுங்கால் பழயப் பறையர்கள் என்றே தாழ்த்தப்படுவார்கள். இ*து நாளதுவரையில் நிறைவேறிவரும் அநுபவங்களாகும்.

இன்னும் இக்குலத்தோருக்கு உற்சாகம் உண்டாக்கித் தாங்கள் கோவில்களுக்கு வலு தேடிக்கொள்ளுவதற்கும், கம்மாளர்களைத் தாழ்த்தி வைப்பதற்கும், சிவன் கோவிலில் பறையனென்னும் ஓர் அடியான் இருக்கின் றான் என்றும், விஷ்ணு கோவிலில் பறையனென்னும் ஓர் அடியானிருக்கின்றான் என்றும் பொய்க்கதைகளால் இவர்களை உற்சாகப் படுத்தி வைத்துக்கொண்டு தற்காலந் தங்களுக்கு எதிரிகளாகத் தோன்றிய கம்மாளர்களுக்குள் ஓரடியாரையுஞ் சேர்க்காமல் தொழுது வருகிறார்கள்.

திராவிட பௌத்தர்களுக்கு வலங்கையரென்னும் பெயர் விப்பிராளென்னும் பிராமணர்கள் கம்மாளர்கள் அடிதடிக்கு பயந்து மீனாட்சி முத்திரையின் வலபுரம் நிறுத்தி பறையனென்னும் பெயரை தாட்சண்ணியத் தினால் அகற்றி, முத்திரைக்கு வலங்கையிலிருந்த படியால் வலங்கை சாதியோர்கள் என வகுத்து நாளதுவரையில் புதுச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் வழங்கி வருகின்றார்கள்.ஃஃ
(அயோத்திதாசர் சிந்தனைகள் ஐ பக்.137)

அயோத்திதாசர் இடங்கை வலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி (1909) எழுதும் காலத்தில் தமிழக வரலாறு பற்றிய நூல்கûள் பெரும்பாலும் வெளிவரவில்லை எனலாம். இருந்தாலும் தன் காலத்தில் வெளியிடப்பட்ட பல புதிய செய்திகளை அவர் தன் எழுத்துகளில் பயன்படுத்துகின்றார். தமிழ்நாட்டில் நிலவிய நிலவுடைமை முறை பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் அன்றைய காலத்தில் தொகுக்கப்பட வில்லை. ஆயினும் பார்ப்பனர்களுடனும் உயர்சாதிச் சூத்திர நிலவுடைமையாளர்களுடனும் இணைந்து நின்று பறையர் சாதியினர் பிற சாதியினரைத் துன்புறுத்தி வந்தனர் என்பதையும் உயர்சாதிக்காரர்களுக்கு அடியாள்கள் போலச் செயல்பட்டார்கள் என்பதையும் தன்னுடைய எழுத்துகளில் அயோத்திதாசர் குறிப்பிட்டாலும், பறையர் சாதியினர் மட்டும் ஏன் அவர்களுடன் சேர்ந்தார்கள்? என்பதும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதியினர் உயர்சாதி யினருடன் ஏன் இணையவில்லை என்பதை அவரால் விளக்க முடியவில்லை. ஆனால் வலங்கை இடங்கைப் போராட்டங்கள் பற்றி செய்திகளில் காணப்படும் பார்ப்பன, உயர்சாதிச் சூத்திர வலங்கை ஆளும் குழுக்களுடன் பறையர் சாதியினர் இணைந்திருந் தனர் என்பதை அயோத்திதாசர் வழியாக நாம் உறுதிபடுத்திக் கொள்ள முடிகின்றது.

தமிழக வரலாற்றில் நிகழ்ந்த இடங்கை - வலங்கைப் போராட்டங்கள் ஒரே மாதிரியாக இல்லை. சோழர், பாண்டியர் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட பதினைந் தாம் நூற்றாண்டு வரை இடங்கைக் குழுவிலுள்ள சாதிகள் பார்ப்பனர், சூத்திர உயர்சாதி, பறையர் சாதி என்ற கோவில் வழி ஆளுகை செலுத்தும் வலங்கைப் பிரிவினரை எதிர்த்தும், சில காலங்களில் உயர்சாதி வலங்கைப் பிரிவினருடன் இணைந்திருந்த அரசு அதிகாரிகளை எதிர்த்தும் நிகழ்ந்துள்ளன. இஸ்லாமியர்களைத் தமிழ்நாட்டிற்குள் பாண்டியர்கள் அழைத்து வந்ததனால் அடுத்துவந்த காலங்களில் தமிழ்மக்கள் மீதான தங்கள் ஆதிக்கத்தையும் சாதிய மேன்மையையும் இழக்கும் தருவாயில் இருந்த இவர்கள், விஜயநகர இந்து சாம்ராஜ்ய அரசர்களுடன் இணைந்து அதனைமீட்டெடுத்தனர். இதனால் பின்வந்த காலங்களில் தமிழ்நாட்டு வலங்கை உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை, நிலவுடைமையை விஜயநகர இந்து-தெலுங்கு ஆதிக்க சக்திகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பிறகான வலங்கை இடங்கைப் போராட்டங்களில் தெலுங்க பேசும் கைவினைச் சாதியினர் தமிழ்நாட்டு இடங்கைப் பிரிவின ருடன் இணைந்து கொண்டது கவனிக்கத் தக்கது. சுருக்கமாகச் சொன்னால் தெலுங்கு பேசும் ஆதிக்க சாதிகள் தமிழ்நாட்டு வலங்கைப் பிரிவினருடனும் தெலுங்கு பேசுகின்ற ஆளப்படும் சாதிகள் தமிழ்நாட்டு இடங்கைச் சாதியினருடனும் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கால கட்டங்களில் தமிழ்நாட்டு நிலவுடைமையில் சிறிது மாற்றம் ஏற்படுகிறது. தமிழ், தெலுங்கு உயர்சாதியினரிடையே தனியார் நிலவுடைமையாளர்களும் உருவாகின்றனர். இத்தகையவர்களுடைய கொடுமைகளை எதிர்த்து இடங்கைப் பகுதியினர் போராடுவதும் விஜய நகர நாயக்கர் மன்னர்கள் அதனைத் தீர்த்து வைப்பதையும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் குறிப்பிடுகின்றன.

ஆங்கிலேயர்கள் காலத்தில் வலங்கைச் சாதியினர் அனுபவிக்கும் பல்வேறு உரிமைகள் தங்களுக்கும் வேண்டுமென்று இடங்கைச் சாதியினர் ஆங்கில ஆட்சியாளரிடமும் பிரெஞ்சு ஆட்சியாளரிடமும் வேண்டுகோள் விடுப்பதும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் உருவாகி விட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதும் என்று மூன்று வகையான இடங்கை- வலங்கைப் போராட்டப் பிரச்சனைகளை வரலாற்றில் நாம் சந்திக்கிறோம்.

பயன்பட்ட நூல்கள்:

1. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி; தென்னிந்திய வரலாறு, இலங்கை அரசாங்க வெளியீடு, முதற்பதிப்பு 1966, பக்.365, 366.
2. அ. கிருட்டிணன்; கல்வெட்டில் வாழ்வியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற் பதிப்பு 1991, பக்.162, 163.
3. தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு; தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, முதற்பதிப்பு 2000, பக்.59, 60.
4. ஞான அலாய்சியஸ் (தொகுப் பாசிரியர்); அயோத்திதாசர் சிந்தனைகள் 1, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை. பக்.137, முதற்பதிப்பு 1999.

Pin It