neduvasal 450தேசிய மற்றும் இன அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கும் சக்திகள் வலுப்பெற்றுத் திரியும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மைகளை அறிந்து ஏற்றுக் கொள்ள மானுடம் எப்பொழுதும் முயன்றதே இல்லை. அதன் விளைவே காலங்காலமாய் நிகழ்ந்து வரும் வரலாற்றுத் திரிபுகளும், இருட்டடிப்புகளும், இவ்வகை நிகழ்வுகள் இந்தியத் திருநாட்டில் மிக அதிகம்.

இந்திய நாடு என்ற அமைப்பு முதற்கோணலால் உருப் பெற்ற ஒன்று. பல தேசிய இனங் களையும் ஒருங்கிணைத்து வெள்ளையனோடு, அன்று தேசியவாதிகள் என்று மார்தட்டிக் கொண்டவர்கள் பிடித்த “இந்தியா” என்ற பிள்ளையார் இன்று குரங்காய் நிற்கிறது. இன்று இந்திய நாட்டில் வசிக்கும் ஒருவருக்கும் “இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற பச்சை உண்மை தெரியாது. அவ்வாறே தெரிந்தாலும் பேச மறுக்கும் நிலை. இந்நிலைக்கு காரணம், காலங்காலமாய் போதிக்கப்பட்டுவரும் பொய் புனைவு வரலாறும், பொதுவான இந்தியப் பண்பாடு என்ற “இல்லா” ஒன்றாகும்.

மொழி, பண்பாட்டின் ஒரு உயரிய அங்கமாகும். இலக்கியம் மற்றும் எழுத்தில்லா மொழிகள்கூட ஒரு இனக்குழு அல்லது மக்கள் குழுவின் பண்பாட்டைத் தாங்கி நிற்கும் அடித்தளங்களாகவே உள்ளன. இந்திய நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் அதனதன் அளவில் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தவையே. தமிழ் அதன் பழமையாலும், மெய்ஞானத்தாலும், இலக்கிய வளத்தாலும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதனால்தான் எல்லா கபளீகரங்களையும் தாங்கி இன்னும் உயிர்வாழ்கிறது. தமிழுணர்ந்த ஒரே ஒருவன் இருக்கும் வரை என்றும் வாழும்.

மொழியும், பண்பாடும் இரண்டரக்கலந்தே தேசிய இனத்திற்கான வரையறையைத் தகவமைக்கின்றன. இவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமாக அறியப்படும் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதலை சங்க இலக்கியங்கள்வழி நம்மிடம் தெரிவிப்பது மொழியேயாகும். தமிழர் பண்பாட்டிற்கும் மொழிக்கும் உள்ள இணக்கத்தை ஏறுதழுவுதல் உறுதி செய்கிறது.

“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற ஏமாற்றுச் சொல்லாடலால் கட்டமைக்கப்பட்ட இந்திய நாடு இன்று ஒரே தேசம், ஒரே வரி என்ற கூப்பாட்டை முன்வைக்கிறது. இதைவிட முக்கியமானது “இந்து கலாச்சாரம்” என்ற வெற்றான ஏமாற்றுத்தனத்தை முன்வைத்து தேசம் கட்ட முயலும் சில கும்பல்களின் முயற்சி. அம்முயற்சியின் தலையாயது செத்தொழிந்த மொழியான சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்கச் செய்யும் முயற்சி. இது ஒரு அடாவடித்தனமான அயோக்கியத்தனம். வழக்கிலிருக்கும் மொழிச்செல்வங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தும் மத்தியில் ஆட்சி செய்பவர்கள், பிற்போக்குத்தனமான செத்தொழிந்த (தெய்வபாஷையாம்) மொழியான சமஸ்கிருதத்தை முகிழ்க்கச் செய்வதற்கான முயற்சி அக்கிரமத்தின் உச்சகட்டம். அதற்கான எந்த நியாயமும் இல்லை. ஆட்சியில் இருக்கின்றோம் என்ற திமிர்த்தனத்தில் இந்த அடிப்படைவாதிகள் ஆடும் ஆட்டம் பகுத்தறிவிற்கு சிறிதும் ஒவ்வாததாகும்.

தொடக்கமறியவியலா பல நம்பிக்கைகளை நிறுவனப்படுத்தி இந்துமதம் எனும் பெயரிட்டு அதன் பெயரால் பிழைப்பு நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சிறு கூட்டத்தின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் இன்றும் தவிக்கிறது இந்திய துணைக் கண்டத்தின் பல தேசிய இனங்கள்.

தேசிய இனங்களின் பகுத்தறிவு சார்ந்த எந்த முன்னெடுப்பையும் இந்த குதர்க்கக் கும்பல் அனுமதித்ததேயில்லை. இக்கும்பலின் நோக்கம் தேசிய இனங்களின் மொழியை குலைத்து சிதைப்பதிலேயே இருந்தது. இச்சூழ்ச்சியில் சிக்கிச் சிதைந்து உருத் தெரியாமல் நிற்கும் இந்திய நாட்டு மொழிகளில் தப்பிப் பிழைத்தது தமிழ் மட்டுமே. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் குறைகூறும் மானங்கெட்ட தமிழர்கள் பொருளாதார அளவுகோளை ஒன்றைமட்டும் வைத்தே வாழ்வை நோக்கும் அரைவேக்காடுகள் மட்டுமல்ல தமிழ்மொழியின் தனித்துவத்தையும், அறிவுச் செரிவையும் அறியாதவர்கள். அதைவிட முக்கியமாய், இந்தி என்பது ஒரு மொழியே அல்ல என்பதையும், இந்தியா ஒரு தேசமே அல்ல என்பதையும், அதையும்தாண்டி இந்தி ஒரு அலுவல் மொழியேயன்றி தேசிய மொழி அல்ல என்ற உண்மையையும் அறியாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் உதவியால்தான் மத்தியில் ஆளும் கழைக்கூத்தாடிகள் அம்மண ஆட்டம் ஆடுகின்றார்கள். இவ்வாறான முன்னெப்பொழுதுமில்லாத ஒரு அசாதாரண சூழலில் தேசிய இனங்கள் தன்னிலை குறித்து சுயநினைவற்றுப் போயுள்ள நிலையில் தமிழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு, மக்களால் நடத்தப்பட்ட, பண்பாட்டு விழுமியம் (இது குறித்த பல விமர்சனங்கள் எனக்கு இருந்த போதிலும்) சார்ந்த ஜல்லிக்கட்டுக்கான மக்கள் எழுச்சி பல ஐயப்பாடுகளையும், வினாக்களையும் நம்முன்னே வைக்கின்றது.

தமிழகம் கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்திய நாட்டின் அமைப்பிற்கேயான சாபக்கேடுபோல், தகுதி மிகவும் குறைந்த, பொது அரசியல் நாகரீகமற்ற, ஊழலில் திளைத்துப் போன கும்பல்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. இங்கு அரசியல் என்பது அதில் பங்கெடுப்போர் இலாபம் ஈட்டும் நிறுவனமாக, அதையும் தாண்டி தலைமுறை தலைமுறையாய் தன் சந்ததிகள் கோலோச்ச ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக மாறிப்போனது. மக்களாட்சி என்பதெல்லாம் உதட்டளவிலும், ஆள்வோர் மக்களை புத்தி மழுங்கச் செய்து ஏமாற்றுவதுமாகிப் போனது. இதற்காக மக்களையும் அரசியல்வாதிகளையும் மாறி மாறி குறைகூறியதுதான் மிச்சம்.

போராட்டம் என்பதை ஒரு கெட்ட வார்த்தையாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி குண்டர்கள் கட்டமைத்ததையும், அதை மக்களாட்சியின் ஏதோவொரு தூணான நீதிமன்றம் வழிமொழிந்ததும் பழைய கதை. தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்களும், மாதரசிகளும் மக்கள் எழுச்சியை முளையிலேயே கிள்ளி பிசுபிசுத்துப் போகச் செய்த வரலாறு இந்த ஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் வரை நீடித்த ஒன்று.

இவ்வகைப் போக்கிற்கு முன்னோடியாக செயல்பட்டவர் கருணாநிதி. ஈழப்போரின் போது மக்கள் எழுச்சியை நயவஞ்சகமாய் அடக்கி பெருங்கொலைக்கு வழிவகுத்துத் துணை போனவர் என்ற முறையில் சோனியா காந்தி மற்றும் ராஜபக்ஷ போன்றோரின் புகழ் உள்ளவரை அவர் புகழும் இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு பய உணர்வுடன் வாழ்ந்த மக்களை வீதிக்கு வந்து போராட வைத்த உந்து சக்தி எது? ஜெயலலிதா போன்ற துணிவான(?) மக்கள் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் ஒரு ஆளுமை இல்லாமல் போனதால் உண்டான அரசியல் வெற்றிடமா? அல்லது மக்களின் பெரும்பான்மை உணர்வைத் தூண்டிப் பார்த்து கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று இருந்த தற்போதைய சூழல் முதல்வரின் பயந்த போக்கா? அல்லது ஜெயலலிதாவே இருந்திருந்தால்கூட மக்கள் போராடி இருப்பார்களா?

எவ்வாறாயினும், போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் வயது, அரசியல் சார்பின்மை மற்றும் அவர்கள் முன்வைத்த வாதங்களை வைத்து பார்க்கின்ற போது, ஜல்லிக்கட்டு என்பது பல காரணங்களில் ஒன்றாகவே தெரிகிறது. இதுவரை அனுசரித்து, தன் சுயத்தில் கை வைக்காத மத்திய அரசு, அப்போக்கை மாற்றி ஒற்றை தேசியத்தை நோக்கி தன்னை உந்துவதாக, தமிழ்த் தேசியம் என்ற பழந்தேசியத்தின் மக்கள் உணர்வதன் எதிர்வினையாகக்கூட இதைக் கொள்ளலாம்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழ்த் தேசியம் குறித்த புரிதல் இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும் அவர்களுடைய உள்மனதில் தன் சுயம் பற்றிய பிரக்ஞை இருப்பதாகவும், அதை யாரோ தட்டிப் பறிக்க அல்லது இல்லாததாக்க முயல்கிறார்கள் என்ற பயத்தின் எதிர்வினையாகவே இப்போராட்டம் அமைந்தது எனக் கொள்ளவும் வாய்ப்புண்டு.

காலங்காலமாய் சாதி அடிப்படையில் பிரிந்து பகைமை பாராட்டிய ஒரு சமூகம், பண்பாடு சார்ந்து (ஜல்லிக்கட்டு அனைவருக்குமான பண்பாடா அல்லது தமிழனின் பொதுப் பண்பாடா என்பது விவாதத்திற்குரிய ஒன்று) ஒருங்கிணைவது என்பது ஒரு அரிய நிகழ்வாகும். இந்த பிரச்சனையில், நேரடியாக தொடர்பில்லாத, ஜல்லிக்கட்டை எதிர்க்காத மோடியை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வசை பாடியதையும், தன்னாலான அனைத்தையும் செய்து போராட்டத்தை குலைக்க முனையாத பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் அவர்கள் இணையாக திட்டியதையும் பார்க்கும் போது போராட்டக்காரர்களின் தேவையைத் தாண்டி அவர்கள் எதையோ எதிர்பார்த்தார்கள் அல்லது உணர்த்த விரும்பினார்கள் என்பது தெளிவாகும். பிரச்சனையைக் கையாள்பவர்கள், ஜல்லிக்கட்டுத் தொடர்பான எந்தொரு சாதகமான முடிவையும் தனக்கு ஆதாயமாய் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது எங்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிட்டால் இதே கதிதான் என்ற எச்சரிக்கையாகவும் இருக்கலாம். ஜெயலலிதா மறைவையொட்டி உண்டான அரசியல் வெற்றிடத்தை கள்ளத்தனமாய் நிரப்ப முயலும் நயவஞ்சக அமித்ஷா கோஷ்டியின் போக்கை வைத்துப் பார்த்தால் மேற்சொன்ன கூற்றின் சாரம் விளங்கும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மற்றுமொரு முக்கியமான கூறு தலைமையற்ற நிலையில் மக்கள் பங்கெடுத்தப் பாங்கு, கட்சிசார்ந்த குழுக்கள் இதில் பங்கெடுத்திருப்பார்களா என்பது தெரியவில்லை. இந்நிலையில் பல கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஆதங்கமே மக்களின் எண்ணவோட்டத்தை தமக்காக பயன்படுத்த இயலவில்லையே என்பதேயாகும். இதற்கு யாரை குறை சொல்வது?

எந்தொரு கட்சியும் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த பிரச்சனைக்காக முழுமனதுடன் போராடியதில்லை. காரணம், அவ்வகைப் போரட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்காது அல்லது அதனால் தங்களுக்கு இலாபம் இல்லை என்ற கயமைத்தனம். அவ்வாறு மக்கள் பிரச்சனைக்காகப் போராடிய சில கட்சிகளும் தனித்தன்மையை பலமுறை இழந்து சமரசம் செய்து கொண்டு பிற தொழில்முறைக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டதால் நம்பகத்தன்மை இழந்து போயினர். கம்யூனிஸ்டுகள் உட்பட, மக்களை முட்டாள்களாக எண்ணிச் செய்யும் அரசியல் இந்த நிலையில்தான் முடியும். இயக்கங்களாகச் செயல்படும் சில குழுக்கள் சாதிச் சண்டையில் மூழ்கித் தன் பேரைக் கெடுத்துக் கொண்டு பத்தோடு பதினொன்றாகி நிற்கின்றன. இச்சூழலை பயன்படுத்தி உட்புகுந்த லாரன்ஸ் போன்ற நடிகர்கள் இப்போராட்டத்தில் முக்கிய முகமாகிப் போனது முரண்பாடான ஒன்றாகும். எது எவ்வாறாயினும் பிரபல முகங்களும், அரசியல்வாதிகளும், மக்களின் எண்ண ஓட்டத்தைப் பார்த்து பயந்து போயுள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது.

பல நாட்கள் நடந்து கலவரத்துடன் முடிந்த இப்போராட்டம் வெற்றியா, தோல்வியா என்பது இன்னொரு கேள்வி. போராடியவர்களே ஏற்க மறுத்தாலும், அரசு முந்திக்கொண்டு போராட்டம் வெற்றியென அறிவிக்கும் அளவிற்கு முடிவுக்கு வந்தது இப்போராட்டம். அறிவார்த்தமாய் வாதாடியிருந்தால் நீதிமன்றத்திலேயே சாதகமான முடிவைப் பெற்றிருக்கக்கூடிய நிலையைத் தாண்டி, முட்டாள்தனமான வாதத்தின் மூலம் நிலைமையை மோசமாக்கிய “விலங்கு ஆர்வலர்கள்” எதிரியாக சித்தரிக்கப்பட்ட நிகழ்வு தேவையற்ற ஒன்றாகவே படுகிறது. ஒரு மாட்டை ஒரு நாள் வைத்து பராமரிக்க திராணியற்ற நாகரீக உலக விலங்கு ஆர்வலர்கள் மிருகவதையைப் பற்றி ஒரு சொல்கூடப் பேசத் தகுதியற்றவர்கள்.

இந்தியா ஒரு ஏழை நாடு. இன்றைய கோமாளி அரசியல்வாதிகள் இருக்கும்வரை நிலைமை இப்படியேதான் இருக்கும். இன்றும் ஒரு மாட்டை நம்பி ஒரு குடும்பமே வாழும் நிலை உள்ளது. இது ஒரு சார்பு வாழ்க்கை. அவர்கள் விலங்குகளை நேசிப்பவர்கள். உளமாற மாடுகள் குறிப்பாக காளைகள் வேலை வாங்கவே வளர்க்கப்படுகின்றன. விவசாய எந்திரங்களின் வரவால் அவைகளின் முக்கியத்துவம் குறைந்துபோன நிலையிலும் கூட இவ்வாறு வளர்க்கப்படும் காளைகளை ஒரு பருவத்தில் காயடித்து விடுவார்கள். காயடிப்பது என்பது விதைப்பையை நசுக்குவது. விலங்கு ஆர்வலர்களின் பார்வையில் இது மிருகவதையா? அடுத்து மாடுகளை நிலைக்குக் கொண்டுவர மூக்கணாங்கயிறு குத்துவார்கள். இது மிருகவதையா? அடுத்து பொதி சுமக்கும் வண்டி மாடுகளுக்கு குளம்பு நீக்கி “லாடம்” கட்டுவார்கள். இது மிருகவதையா? இவையணைத்தும் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டை விட வலிமிகுந்தவை, உடற்காயம் ஏற்படுத்தக்கூடியவை. இவைகளையெல்லாம் மிருகவதை என்று போராட வேண்டியதுதானே ஆர்வலர்கள். அதைவிட கொடுமை 10 டன் எடையை மாட்டு வண்டியில் வைத்து சுமக்கச் செய்வார்கள். மாடுகள் அதை இலாவகமாகச் செய்யும். இதையெல்லாம் மிருகவதை என்று மேற்சொன்னவர்கள் சொன்னால் சந்தி சிரிக்கும் அவர்கள் அறியாமை குறித்து. இவ்வகை விலங்கு ஆர்வலர்கள் போலிகள். மாட்டுச்சாணத்தைக் கண்டாலே மூக்கைப் பொத்திக் கொண்டு ஒரு காததூரம் ஓடுபவர்கள்.

இவர்களின் வாதத்தை வைத்து ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த நீதிமன்றத்தை நினைத்தால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாதி, பிரதிவாதிகளின் வாதங்களைத் தாண்டி சிந்திக்க அனுமதிக்கப்பட்டவர்கள். பல நேரங்களில் அவர்களின் வாக்கு சட்டமாகி உள்ளது. அல்லது சட்டமுன்வரைவிற்கு அச்சாரமாய் இருந்துள்ளது.

இன்று நாம் வரிந்து பேசும் அடிப்படை உரிமைகள் குறித்த சட்டப்பாதுகாப்பு, பெண்ணுரிமை சட்டங்கள், சுற்றுச்சுழல் சட்டங்கள் உட்பட நடுவுநிலைமை தவறாத நீதிபதிகளால் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டு சட்ட அங்கீகாரம் பெற்றவையே. அப்படிப்பட்ட நீதிபதிகள் அருகிப்போய்விட்ட நிலையில் நாம் நினைப்பதையெல்லாம் சட்டமாக்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்தில், தன்புரிதல் மற்றும் ஒருபக்க எண்ணத்தில் சிந்திப்பவர்களாக இன்றைய நீதியரசர்கள் உள்ளனர். அதன் வெளிப்பாடே திரையரங்குகளில் தேசியத்தைத் திணிக்கும் நீதிபதியின் உத்தரவு. அவ்வுத்தரவில் தேசப்பற்று மற்றும் இந்தியப் பண்பாடு குறித்த நீதிபதியின் கருத்து அவருடைய மத நம்பிக்கை சார்ந்து கூறப்பட்டது என்பது வெளிப்படை. இந்தியா பண்பாடுகளின் உச்சம் என்று எதை வைத்து அவர் கூறினார் என்று தெரியவில்லை. திணிக்கப்பட்ட எதுவுமே நிலைத்ததில்லை என்பதே வரலாறு.

மேற்கண்ட தீர்ப்பைக்கூறிய அதே நீதிபதிதான் ஜல்லிக்கட்டு தடையையும் விதித்தார். காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என்ற குதர்க்கச் சொல் வேறு. மனிதனை சாதி அடிப்படையில் பிரித்து அடிமையாக்கி அழகு பார்த்த, பெண்களை அடக்கி, வாழ்வை முடமாக்கிய, பிறமொழிகளையும், பண்பாட்டையும் சிதைத்து பாழாய்ப்போன வேதப் பண்பாட்டை புகுத்திய, வல்லான் வகுத்ததே சட்டம் என்ற பாணியில் பலவீனமானவர்களை கீழ்மைப்படுத்திய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்பாடே அவர்கள் போற்றும் இந்தியப்பண்பாடு. அன்றல்ல இன்றும் அவையெல்லாம் பெருமையாகத் தோன்றும் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டித்தனமாம், மிருகவதையாம். உண்மையில் ஜல்லிக்கட்டில் நடப்பது மனிதவதையே நாகரீக சமூகத்தில் மிருகங்களுடன் மோதி உடல் முடமும், உயிர்ச்சேதமும் அடைவதே வீரமும், பண்பாடும் என்றால் அது அவர்கள் பாடு. அதிகபட்சம் அவ்விளையாட்டை மேலும் முறைப்படுத்தி சேதத்தை தவிர்க்கலாம். அதைவிடுத்து மேதாவிகளான விலங்கு ஆர்வலர்களின் கூற்றை ஏற்று தடை செய்வது எந்தவித நியாயம்?

இது ஒருபுறமிருக்க, நம்மவர்களுக்கு பண்பாட்டு அடையாளமாக ஜல்லிக்கட்டு மட்டும்தான் தெரிகிறதா? பழந்தமிழர் பண்பாடு அறிவுசார்ந்தது என்பதை இலக்கியங்கள் வழி அறிகிறோம். நமது இலக்கியம் உலகின் தலைசிறந்த எந்த இலக்கியத்திற்கும் சளைத்ததல்ல. அவை உணர்த்துவது பகுத்தறிவு சார்ந்த மெய்யுணர்வு வாழ்வியல் சார்ந்த கருத்துக்கள். மக்கட்பண்பு, கல்வி, அறம், வேற்றுமையின்மை, வீரம் என நீளும் பழங்கால பண்பாட்டு ஒழுக்காறு நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷம்.

காதல், இன்பம் இவையெல்லாம்தான் தமிழனின் பண்பாட்டுக் கூறுகள். இவ்வழி வந்த நம்மில் பலர் நம் பண்பாட்டுக் கூறான மொழி சார்ந்த பெயரை நம் பிள்ளைகளுக்கு வைக்கின்றோமா?

இதுதான் பண்பாட்டு அடையாளத்தைக் காப்பதற்கான முதற்படி. “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்ற அறம் சார்ந்த சிந்தனை தமிழருள் எத்தனை பேருக்கு உள்ளது. உற்றுழி உதவியும் உருபொருள் கொடுத்தும் எத்துனை பேர் கல்வி கற்கின்றோம். கசடற கற்று அதன் வழி நடக்கின்றோம். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற :மூதுரையின் வழியும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவத்தின் வழி சாதி ஒழிந்து பண்பாட்டின் அடிப்படையில் ஒன்றுகூடி நம்மவர் ஒருவரை ஆள வைக்க வேண்டியதுதானே, அவையல்லாவிடினும் சரியான மொழி பேசி தன் அடையாளத்தைக் காத்து, பிறன் தன்னை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? அவ்வாறான ஒரு நிலையை அடைய நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். காப்பாற்றுவதற்காக அல்ல, பல வாழ்வியல் அறிவுக் கருவூலங்களை அறிய தமிழை நாம் ஆழ்ந்து கற்க வேண்டும். வருமானத்திற்காக ஆங்கிலம் கற்பதைப் போல. வாழ்க்கைக்காக தமிழ் கற்கும் நிலை வர வேண்டும். அவ்வகைப் புரிதலோடு கூடிய இளைய சமூகமே எதிர்காலத்தில் இந்தியம் என்ற வெற்று தேசியம் நம் மீது தொடுத்துக் கொண்டிருக்கும், தொடுக்கத் தலைப்பட்டிருக்கும் கொடிய தாக்குதலை தடுத்து நிறுத்த முடியும். அதையும் தாண்டி, வேறு தேசிய இனங்களுக்கும் வழிகாட்ட முடியும். அதற்கான ஒரு ஆயத்தக் களமாகவே நடந்த முடிந்த ஜல்லிக்கட்டுக்கான எழுச்சியைக் கருத வேண்டும்.