peri ghand 350ஜனநாயகம் என்பது பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நடக்கும் விஷயங்கள் மட்டும் அல்ல. மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டு மக்களுக்கு அருகாமையில் மக்கள் பிரதிநிதிகளை வைத்து மக்கள் பிரச்சனைக்குத் தீர்வுக்காணச் செய்தலே ஜனநாயகம் ஆகும். இது போன்ற ஜனநாயக இந்தியாவைத்தான் கட்டமைக்க எண்ணினர் காந்தியும், நேருவும். இதற்கான ஆதாரங்களை அவர்களின் செயல்பாடுகளிலும் எண்ணங்களிலும் காணலாம்.

உதாரணமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நான்காவது அட்டவணையில் வழிகாட்டும் விதிகள் (Directive Principles of State Policy - DPSP) என்ற பெயரில் இடம்பெற்றுள்ள காந்தியக் கொள்கைகளைக் குறிப்பிடலாம்.  இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில், ஷரத்து 40 உள்ளாட்சி நிர்வாகம் பற்றியது. காந்தியும், நேருவும் சொன்ன ஜனநாயகம் என்பது உள்ளாட்சி ஆகும்.

அதாவது இந்திய அரசின் அதிகாரம் கிராமத்தில் இருக்க வேண்டும் என்றும்,  அதிகாரம் கீழிருந்து மேலானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக மக்கள் பிரதிநிதியை மக்கள் அருகில் இருந்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பவராக இருக்க வேண்டும் என்று எண்ணினார் காந்தி . அதேபோலத்தான் நேருவும் காந்தியின் எண்ணங்களுக்கு உருவம் கொடுத்தவராகவே இருந்துள்ளார். அதற்கான ஆதாரமும் இங்கு உள்ளது . 1952 ல் சமுதாய வளர்ச்சித் திட்டத்தையும் (Community Development Program - 1952), 1953 ல் தேசிய விரிவுப் பணித்திட்டத்தை உருவாக்கியது மட்டுமின்றி (National Extension Service -1953)

1957-ல் சமுதாய வளர்ச்சித் திட்டத்தைக் கண்காணித்து அறிக்கை வழங்கப் பல்வந் ராய் மேத்தா தலைமையில் குழு அமைத்தார். இந்த நிகழ்வு பின்னர் வர இருந்த உள்ளாட்சி சாம்ராச்சியத்திற்கு வலுசேர்த்ததாக அமைந்தது. இப்படி நேருவின் செயல்பாடுகள் ஒரு ஜனநாயக இந்தியாவைக் கட்டமைக்கும் பாதையிலையே சென்று கொண்டிருந்தது. நேருவைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒரு சிலர் ஜனநாயக இந்தியாவைக் கட்டமைக்க எண்ணினார்கள். அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் மொரார்ஜி தேசாயும், இராஜிவ் காந்தியும் தங்களது பங்கிற்குக் கீழ் நோக்கிய அதிகாரம் கொண்ட இந்தியாவை உருவாக்கப்  பாடுபட்டனர்.

உதாரணமாக 1977-ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்திய அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வலு சேர்க்க அசோக் மேக்தா தலைமையில் குழு அமைத்து உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த அதன் ஆலோசனைகளை இந்திய அரசுக்கு வழங்கியது. இந்த இரு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ராஜிவ்காந்தி தலைமையிலான அரசு 1984-ல் சட்டப் பூர்வமான அதிகாரமிக்க ஒரு உள்ளாட்சி அமைப்பை உருவாக்க எண்ணியது.

இதற்காக 5 வருடக் கடின உழைப்புக்கு பின் 1989-ல் 63 வது மற்றும் 64 வது சட்டத்திருத்தம் நாடாளுமன்ற கீழ் அவையில் ஒப்புதல் பெற்று மேல் அவைக்கு சென்றது . ஆனால் 1988 அக்டோபர் 15ல் அதற்கான ஆதரவு பாராளுமன்ற மேலவையில் கிடைக்க வில்லை. அன்றிரவு கண்ணீர் மல்க பாராளு மன்றத்தை விட்டு வெளியேறிய ராஜிவ் காந்தியின் கனவு ஒருவழியாக 1992 இல் நரசிம்மராவ் தலைமையிலான இந்திய அரசு உள்ளாட்சி நிர்வாகம் என்ற சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கிய போது நிறைவேறியது .

ஆனால் 63 மற்றும் 64 வது சட்டத்திருத்தமாக அல்ல, 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தமாக.  காரணம், 1988 முதல் 1992 ஆகிய இடைப்பட்ட இந்த 4 வருடத்தில் பல சட்டத்திருத்தம் வந்ததால் உள்ளாட்சி நிர்வாகச் சட்டத் திருத்தம் 73 மற்றும் 74 க்கு மாறியது. இந்த 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தம் 1993 ஏப்ரல் 24-ல் இருந்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இப்படி பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகச் சட்டத்திருத்தம் பல்வேறு அதிகாரங்களை மக்கள் கையில் கொடுத்தது. குறிப்பாக கிராம சபா அதிகாரம், வளர்ச்சிப்பணியில் மக்கள் பங்கேற்பு, திட்டம் தீட்டுதல், பொருளாதார வளர்ச்சி, ஒளிவு மறைவில்லாத மக்கள் அதிகாரம் கொண்ட அமைப்பு என காந்தி, நேருவின் கனவுகள் இடம் பெற்றிருந்தது. இதற்கும் மேலாக சமூக நீதி, இடஒதுக்கீடு, சமஉரிமை, பெண்ணுரிமை போன்ற பெரியாரின் கருத்துக்களும் இடம் பெற்று மாபெரும் மக்கள் அதிகாரம் பெற்ற அமைப்பாக உருவானது. இந்தச் சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்பின் மிக பெரிய மைல்கல் மற்றும் புரட்சி என்றே சொல்லலாம் .

இப்படி  காந்தி, நேரு, பெரியார் அவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உள்ளாட்சி அமைப்பு 1994-ல் தமிழக சட்டமன்றத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டு 1998 ல் தமிழக உள்ளாட்சி நிர்வாகச் சட்டம் திருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இப்படி காந்தி, நேரு, பெரியார் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உள்ளாட்சி அமைப்பு உண்மையாகவே இவர்களின் கனவுகளை நிறைவு செய்ததா? என்றால் ஆம் என்றே சொல்லலாம்.

உதாரணமாக, இந்திய சமுதாயத்தில் அதிகார பலம் இல்லாதவர்களாகக் கருதப்பட்ட பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள்; 73-வது சட்டத் திருத்தத்தின் தேர்தல்முறை மூலமாகப் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் மனதில் உறங்கிக்கொண்டிருந்த உரிமை வேட்கையை நிறைவேற்றின. எடுத்துக் காட்டாக, இராமநாதபுரம் மாவட்டம் மிக்கல்பட்டிணத்தைச் சார்ந்த ஜேசுமேரி. இவர் தமிழகத்தின் முதல் பெண் பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர் . 73 வது சட்டத் திருத்தம் மூலமாக அதிகாரம் பெற்ற இவர் தனது 5 வருட காலத்தில் நீர் மேலாண்மையில் மிகப் பெரிய சாதனை செய்து உலக அளவில் தனது புகழைக் கொண்டு சென்றார்.

அதே போல கேரளா மாநிலம் பில்லாட்சிமடம் கிராமத்தில் கொக்கோகோலா என்ற மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் தண்ணீர்க்கொள்ளையின் மூலமாகப் பாதிக்கப் பட்ட மயிலம்மா என்ற பட்டியலினப் பெண்மணி, உள்ளாட்சியின் கிராமசபா அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தப் பன்னாட்டு நிறுவனத்தை ஓடச் செய்தார். இதற்காக இந்திய அரசின் ‘$ சாந்தி புரஷ்கார்’ விருதும் அவுட் லுக் நாளிதழின் ‘ஸ்பீடு அவுட்’ விருதும் பெற்று பெண்களின் போர்க் குணத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல திருவள்ளூர் மாவட்டம்  குத்தம்பாக்கம் கிராமத்தைத் தமிழக உள்ளாட்சி வரலாற்றின் ஒரு சாதனை கிராமம் என்றே  சொல்லலாம். குத்தம்பாக்கம் இளங்கோ அய்யாவின் பெயரைப் பயன்படுத்தாமல் இந்தக் கட்டுரையை முடித்திருந்தால் அது சிறப்பாகவே இருந்திருக்காது. இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், 1996 உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுத் தலைவரான பின்னர் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னோடி கிராமங்களுக்குப் பயணம் செய்து அங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களைக் குத்தம்பாக்கத்திற்குக் கொண்டு வந்து குத்தம்பாக்கத்தைப் பொருளாதாரத்தில் முன்னேறிய கிராமமாக மாற்றினார்.

இது மட்டுமா குத்தம்பாக்கத்தை சமூக நீதி கிராமமாக மாற்றி பெரியாரின் கனவை நனவாக்கி வரலாற்றுச் சாதனை செய்தார். ஆம் குத்தம்பாக்கத்தில் வீடு இல்லாத அனைத்துச் சாதியினரையும் ஒருங்கிணைத்து சமத்துவபுரம் உருவாக்கி சமூகநீதிப் பஞ்சாயத்தை உருவாக்கினார். இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இந்தியா வல்லரசாக, இந்தியா முழுவதும் 100 சிறந்த மனிதர்களை அழைத்தபோது அந்த 100 பேரில் இவர் பெயரும் இருந்தது என்பது இவரின் மற்றொரு சிறப்பு.

இப்படி குத்தம்பாக்கம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காலத்தில் 2006 உள்ளாட்சித் தேர்தல் வந்தது. குத்தம்பாக்கம்  பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது இளங்கோ அய்யா ஆதரவோடு போட்டியிட்ட கீதா என்ற பெண் வெற்றிபெற்று, தலைவரானார். இந்தச் சமயத்தில் தான் 2009 ல் தமிழக அரசு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் குத்தம்பாக்கத்தில் குப்பைக்கிடங்கு உருவாக்க எண்ணியது. இதனை எதிர்த்து கிராம சபாவில் தீர்மானம் போட்டு நீதிமன்றம் வரை சென்று மாநில அரசை வென்று சாதனைப் பெண்ணாகத் தனது பெயரை வரலாற்றில் பதிய வைத்தார் .

இந்தச் சமுதாயம் யாரையெல்லாம் அதிகாரம் அற்றவர்களாக ஒதுக்கி வைத்ததோ, அவர்கள் இன்று உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரம் மூலமாக பன்னாட்டு முதலைகளை, அதிகார பலம் மிக்க மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் வல்லமையுடன் வளர்ந்து நிற்கின்றனர். இது தான் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கிடைத்த  மிகப்பெரிய வெற்றி. இவர்களைப் போல் பலர் இந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக அதிகாரம் படைத்து கிராம வளர்ச்சிக்கு உதவுகின்றனர்.

ஆனால், நாம் தற்போது உள்ளாட்சியின் சாதனை, அதிகாரம் பற்றிப் பேசும் சமீபத்திய காலத்தில்தான் இன்னும் நமது நாட்டில் தாழ்த்தப்பட்டவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆதிக்க சாதியின் தலையீட்டால் சுதந்திரம் அற்று இருப்பதும் , பெண்  வெற்றிபெற்றும் அவர்களின் கணவன்மார்கள் ஆட்சி நடத்தும் அவலமும் இன்னும் நடந்துகொண்டுதான் உள்ளன. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் காந்தி, நேரு கனவுகளுக்கு நேர் எதிரானதாகவும். பெரியாரின் சமூக நீதி, பெண்விடுதலைக் கருத்துக்களைக் குழிதோண்டிப் புதைப்பதாகவும் உள்ளது. ஆதலால் இங்கு உள்ள அனைத்து ஜனநாயகவாதிகளும் நேரு, காந்தியின் உள்ளாட்சி நிர்வாகத்தையும், பெரியாரின் சமூகநீதிக் கருத்துக்களையும் கொண்ட 100 சதவீத வெளிப்படையான உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

நாட்டில் எந்தச் சிறந்த சட்டம் வந்தாலும், எந்தச் சிறந்த திட்டம் வந்தாலும், சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் இந்துமத, சாஸ்திர சம்பிரதாயச் சட்டங்கள் அவற்றை அனுமதிப்பதில்லை. பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கங்களின் பிடியிலிருந்து விடுதலை பெறாத கிராமங்களில் உள்ளாட்சிச் சட்டங்கள் சிறு கலகத்தை உருவாக்கியுள்ளன. அந்தக் கலகத்தை வளர்த்தெடுப்போம்.