சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட கொடூரன்களின் செயலைக் கண்டித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் வேலுச்சாமி கொடூரமாகக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள நிலையில் பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி ஒழிப்பு மாநாடு மே-23ந் தேதி நடைபெற்றது.

தமிழகத்தில் வராக்கடன் அதிகரிப்பு

விவசாயம் செய்ய, வீட்டுக்கடன், தனிநபர்கடன், சிறுதொழில் கடன் என 9 கோடி பேருக்குத்தான் இந்தியாவில் தேசவுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் கிடைக்கிறது. கடந்த 2006-ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் தலா 2 லட்சம் மற்றும் அதற்குக் குறைவான அளவு கடன் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக்கடனில் 18 சதவிகிதம் தான். நூறு கோடி பேர் உள்ள நாட்டில் வெறும் 9 கோடி பேருக்கு வழங்கப்பட்ட கடன் தொகை என்பது கிராமப்புறங்களில் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் வழங்கிய கடனுதவி 10.4 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதமாகக் குறைந்து விட்டது. வசதிபடைத்தவர்களுக்கு முன்னுரிமை தந்து கடன் வழங்கும் வங்கிகள், கஷ்டப்படுவர்களைக் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2007 செப்டம்பர் வரை 225 நிறுவனங்கள் தங்கள் வங்கி கணக்கின் வழியாக 1,600 கோடி ரூபாய் வராக்கடனாக நிலுவையில் வைத்துள்ளன. 365 நிறுவனங்கள், வழக்கு காரணமாக 2,300 கோடி ரூபாயை வங்கிக்குச் செலுத்தாமல், வராக்கடனாக நிலுவையில் வைத்துள்ளன.

யெச்சூரி வேண்டுகோள்

மழைபெய்யாததாலும், மலட்டு விதையாலும் போட்ட முதல் எடுக்கமுடியாமல் தற்கொலைப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரை மாய்க்கும் விவசாயிகளின் சாவுக்குப் பின் கட்டாயம் கந்துவட்டிக் கடைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ஏனெனில் கந்துவட்டிக் கடைகள் என்பது தேசம் முழுவதும் நீக்கமற நிறைந்திருந்திருக்கின்றன. விவசாயிகளின் கந்துவட்டிக் கடனை அடைக்க கடந்த 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின்படி, குறிப்பிட்ட காலத்தில் விவசாயிக்கு எவ்வளவு விவசாயக் கடன் தேவையோ அதில் 20 சதவீதம் அல்லது ரூ.50 ஆயிரம் இதில் எது குறைவோ அந்தத் தொகைதான் கடனாகக் கிடைக்கும். மேலும் அதற்கு ஈடான நிலம் விவசாயி கையில் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளினால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாகத்தான் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தில் விசைத்தறி தொழிலாளி, கைத்தறி தொழிலாளி, நகைபட்டறை தொழிலாளி ஏராளமானோர் கந்துவட்டிக் கும்பலில் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சீத்தராம் யெச்சூரி குறிப்பிட்டதைப் பதிவு செய்வது அவசியமாகும். "தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசாங்க நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கடன்கள்தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கடன்பெற்றிருக்கும் விவசாயிகள், மொத்த விவசாயிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஆவார்கள். ஆனால் மூன்றில் இரு பங்கு விவசாயிகள் தனியாரிடமும் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடமும் வட்டிக்குக் கடன் பெற்று அதை மீண்டும் அளிக்க முடியாமல் செத்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் இவர்கள்தான் கணிசமானவர்கள். அவ்வாறு தனியாரிடம் கடன் பெற்றவர்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவர்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மீட்க வேண்டியது அவசியமாகும்" என்று குறிப்பிட்டார்.

1.66 லட்சம் விவசாயிகள் தற்கொலை

ஏனெனில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் பட்டியலைப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும். கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவலை தேசியக் குற்றப் பதிவு வாரியம் பதிவு செய்துள்ளது. இதே போல, தமிழகக் காவல்துறையும் ஒரு கணக்கைச் சொல்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 வரையிலான ஐந்து ஆண்டு கணக்குப்படி 65 ஆயிரத்து 532 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் சுயஉதவிக்குழுக்களையும் கந்துவட்டிக்கும்பல் விட்டு வைக்கவில்லை. மதுரையில் சில பெரிய நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைத்து கந்து வட்டி தொழிலை துவக்கி உள்ளன. இவர்களிடம் வட்டிக்கு வாங்கி, பணம் செலுத்தாதவர்கள் தாலியை விற்றுக் கூட கடனை அடைக்கும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். சிலர் பாலியல் ரீதியான சித்திரவதைக்கும் ஆளாகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

தமிழகத்தில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புறங்களில் கந்துவட்டிக்கொடுமை ஒரளவேனும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழுக்களுக்கு கடன்வழங்குவதில் வங்கிகள் தொடர்ந்து சுணக்கம் காட்டிவருகின்றன.

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மங்கலம் பகுதியில் புதன்கிழமையும், சோமனூர் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமையும் கந்து வட்டி வசூல் நாளாக பின்பற்றப்படுகிறது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது பூலாங்குளம். சமீபகாலமாக இந்த ஊரில் கந்து வட்டிக் கொடுமை அதிகரித்து வருகிறது. இங்கு விவசாயம் மற்றும் கூலி வேலை செய்வோர் அதிகம் உள்ளனர். குடும்ப செலவிற்காக பிறரிடம் இவர்கள் சிறிதளவு பணம் வாங்குகின்றனர். கடன் கொடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்து வருகின்றனர். வீட்டுப் பத்திரம் மற்றும் நகை போன்றவற்றை அடமானமாகப் பெற்றுத்தான் இந்த கும்பல் கடன் கொடுக்கிறார்கள். சிறிய தொகையை கொடுத்து விட்டு நீங்கள் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து வீட்டு மதிப்பை விட அதிகமாகி விட்டது என்கிறார்கள். நெய்வேலியில் கந்துவட்டிக்கு கொடுத்த பணத்தை மனிதநேயமின்றி வசூல் செய்யும் கும்பலால், அப்பாவி என்.எல்.சி., தொழிலாளர்கள் தற்கொலை முடிவைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினமும் வட்டிப்பணம் ரூ.20 கோடி

மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கந்துவட்டி பைனான்சியர்கள், கோவை நகரில் ராமநாதபுரம், காந்திபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரத்தில் அதிகளவில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வியாபார கடைகளுக்கு தின வசூல் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றனர். வழங்கும்போதே 15 சதவீத தொகையை வட்டிப்பணமாக பிடித்தம் செய்து கொள்கின்றனர். கடனாளி, 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தால் தினமும் 100 ரூபாய் வீதம், 100 நாட்களில் செலுத்தி முடிக்க வேண்டும். இல்லாவிடில், நாள் வட்டி அடிப்படையில், வட்டித்தொகை எகிறிக்கொண்டே போகும். அதன் பின், அடியாட்களை அனுப்பி வசூலித்து விடுவர். இவ்வகை பைனான்சியர்கள் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்ய பலர் வேலை செய்கின்றனர். பல ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர். இவ்வாறான கடனளிப்பு முறையில் கந்துவட்டிப் பணம் நகரில் தினமும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் புழங்குவதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் தற்போது பல தயாரிப்பு நிறுவனங்கள் கந்துவட்டிக்காரர்கள் மூலம் இயங்குவது தெரிந்த விஷயமாகும். ஒரு படத்தைத் தயாரித்த பிரபல கம்பெனியின் பெயரில் படங்களை வெளியிடுவது தற்போது பேசனாகி விட்டது. தற்போது மதுரையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு படத்திற்கு 1.50 கோடி ரூபாயை முதலீடு செய்யும் கந்துவட்டிக்காரர்கள், படம் வெளியிடுவதற்கு முன்பே, பாடல்களை, காட்சிகளை தொலைக்காட்சிகள், எப்.எம் ரேடியோக்களுக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள். தாங்கள் போட்ட முதலில் முக்கால்வாசி பணத்தை இப்படி எடுத்துக்கொள்ளும் வட்டிக்காரர்கள், படம் வெளியானதும் பத்துநாட்களில் மொத்தப் பணத்தையும் வட்டியோடு எடுத்து விடுகிறார்கள். மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் பல கந்துவட்டிக்காரர்கள் தற்போது படத்தயாரிப்பில் குதித்துள்ளனர்.

பயத்தால் குறையும் புகார்கள்

கந்துவட்டிக்கும்பல் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் பள்ளிப்பாளையம் வேலுச்சாமி படுகொலையே சாட்சியாக இருக்கிறது. கந்துவட்டிக்கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து என 2 முறை பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வேலுச்சாமி அதே கும்பலால் கொல்லப்படுகிறார். கந்துவட்டி குறித்து புகார் கூறினால் ஆபத்து என்பதால் பெரும்பாலும் யாரும் புகார் செய்வதில்லை என்பது பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை வைத்தே கூறமுடியும். கந்துவட்டி சட்டம் கொண்டு வரப்பட்ட 2003-ஆம் ஆண்டு பதிவான வழக்குகள் எண்ணிக்கை 34. அதற்கு அடுத்த ஆண்டு 40 என்றும், 2005 ஆம் ஆண்டு 42 வழக்குகளும், 2006 ஆம் ஆண்டு 13 வழக்குகளும், 2007 ஆம் ஆண்டு 8 வழக்குகளும், 2008- 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும். .

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை விஸ்வபிராமணாள் தெருவைச் சேர்ந்த நகைத் தொழிலாளி உள்ளிட்ட 6 பேரின் தற்கொலை துவங்கி நாகர்கோவில், மதுரை, ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தற்கொலைகள் கந்துவட்டிக்கொடுமையால் தொடர்கதையாகி உள்ளது.

வேலையில்லா இளைஞர்களை சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தும் கூட்டம் ஒருபுறமும், ரன்வட்டி, மீட்டர்வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பெயர் கொண்டு வசூலிக்கப்படும் கந்துவட்டிக் கும்பலிடம் பணத்தைக் கடனாக வாங்கி வெளிநாட்டுக் கனவுகளுடன் பயணித்து கடல்கடந்து கொத்தடிமையாய் சிக்கிக்கொண்டும் அவதிப்படும் கூட்டம் ஒருபுறமும், விற்கும் விலைவாசிக்கு வாழவழியற்று கடன் வாங்கி சிக்கி இருக்கும் வீடுகளை இழக்கும் கூட்டம் ஒருபுறமும், கடன்வாங்கி மானத்திற்குப் பயந்து மாண்டு போகும் கூட்டம் ஒருபுறம் இருக்க தொலைக்காட்சியில் இருந்து விளம்பரம் வருகிறது "சிரிச்சிக்கிட்டே இருங்க". இக்கொடுமைகளை இன்னமும் எத்தனை நாள் சகித்துக்கொண்டு இருக்கப்போகிறோம்?

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It