நேர்காணல்: பல்லடம் நாராயணமூர்த்தி, தீபா, வடிவேல், திருப்பூர் வேணி

என்பெயர் கவிதா. நான் பிறந்தது பழனி. திருமணம் செய்து கொடுத்தது பெதப்பம்பட்டி என்கிற ஊருக்கு. எனது அம்மா பெயர் சரோஜினி. அப்பா பெயர் நடராஜ். எனது சகோதரி திலகவதி. நான் பத்தாம் வகுப்புவரைதான் படித்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். அதன்பிறகு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.

மாப்பிள்ளை பார்க்க வரும்போது உங்கள் எதிர்பார்ப்பு எப்படி இருந்தது?திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

என் கணவர் எப்படி இருக்க வேண்டுமென்று நினைத்தேன் என்றால், என் தந்தை மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்தேன். பெண் அடிமைத்தனம் என்பது அங்கள் வீட்டில் மிகவும் அதிகமாக இருக்கும். அம்மா, அப்பா சொல்வதை மட்டும் தான் கேட்கவேண்டும் என்று நினைப்பார். மற்றபடி வேறொன்றும் நான் நினைக்கவில்லை. என் திருமணம் ஐயர் எல்லாம் பூசை செய்து வாத்தியங்களுடன் நடைபெறவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் குணா அவர்கள் அப்படி யெல்லாம் இருக்கக்கூடாது. தாலி கட்டக்கூடாது, ஐயர் வைக்கக்கூடாதென்று சொன்னார். ஆனால் குணாவோட அப்பா ஐயர் வேண்டாம், ஆனால் தாலி கட்டி தான் திருமணம் செய்யவேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.

திருமணத்திற்கு முன்பு உங்க வீட்ல இருந்ததற்கும் திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் இருப்பதற்கும் வேறுபாடு என்ன?

எங்க வீட்டில் இருக்கும்போது முழுக்க முழுக்க அப்பாவோட கட்டுப்பாட்டில் இருந்தேன். ஆனால் இங்க அப்படியெல்லாம் இல்லை. குணா என்னைச் சுதந்திரமாக விட்டுவிட்டார். பெரியாரியலைப் பற்றி அறிந்திருப்பதால் என்னைச் சுதந்திரமான பெண்ணாக மாற்றினார்.

தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டீங்க. பிறகு எப்படி தாலி அறுத்து எறிய முன் வந்தீங்க?

எனது விருப்பமே தாலி கட்டித் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான். அவரின் தந்தையும் கடுமையாகச் சொல்லிவிட்டார். அதனால் தாலிகட்டித் திருமணம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு பெரியார் இயக்க நிகழ்ச்சிகளுக்கு கூட்டிச் செல்லும்போது அங்கு வரும் தோழர்கள் யாரும் தாலியும் கட்டிக்கொள்ளவில்லை, மெட்டியும் போடவில்லை.

அதைக் கேட்கும் போது சொன்னார்கள், ஆணுக்குப் பெண் அடிமையுமில்லை பெண்ணுக்கு ஆண் எஜமானும் இல்லை என்ற வாசகத்தையும் சொல்லி அதன் விளக்கத்தையும் சொன்னார். நானும் அந்த அடிமைச் சங்கிலியை எடுக்க விரும்பினேன். பின்பு 2012 டிசம்பரில் மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் தாலியை அறுத்துவிட்டேன். என்னுடன் சாந்தி-விஜயன், சுபா-பிரகாஷ் ஆகிய தோழர்களும் அறுத்துவிட்டனர்.

தாலியை அறுத்த பிறகு உங்களுக்கு எந்த மாதிரிப் பிரச்சனைகள் வந்தன?பொது இடங்களில் எப்படி எதிர்கொண்டீர்கள்?

எங்க சொந்த ஊர்லையே ஒரு மாதம் வேலை செய்தேன் . அப்போது என்னுடன் வேலை செய்தவர்கள் இத்தனை நாள் தாலி கட்டிக்கொண்டு வந்தாய், இப்பொழுது எங்கே? தாலியைக் காணவில்லை என்றனர். நான் சொன்னேன், பெண்களுக்கு மட்டும் எதுக்குத் தாலி? ஆண்களுக்குப் பெண்கள் அடிமையில்லை என்று சொன்னேன்.

பின்பு ஒருநாள் மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி ஒருவர், கொஞ்சம் வயதானவர், பெரியார் அமைப்பில் இருப்பவர்களெல்லாம் தாலி கட்டவேண்டாம் என்றால், யார் யாருடன் வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாமா? என்று கேட்டார். நான் கூறினேன், யார் யாருடன் வேண்டுமானாலும் அவர் விரும்பினால் போய்க்கொள்ளலாம் என்று சொன்னேன் அவர் பதில் பேசவில்லை.

தாலியை அகற்றிய பின்பு குடும்பத்தில் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

தாலியை அகற்றியது எங்கள் வீட்டிற்குத் தெரியாது. அதைப் பெரியார் முழக்கம் என்ற பத்திரிக்கையின் மூலமாகதான் அறிந்துகொண்டனர். என் அத்தை கோபத்தில் அது அவர்களது விருப்பம். நாமெல்லாம் அதை கேட்கமுடியாது என்று சொல்லிவிட்டார். அம்மா இரண்டு வருடமாகத் தாலி கட்டுனாத் தான் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் இப்படி இருக்கத்தான் விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன். திரும்ப அந்த வாழ்க்கைக்கு என்னால் வர முடியாது பெரியார் வாழ்வியலைத் தான் கடைபிடிப்பேன் என்று சொல்லிவிட்டேன்.

தாலியை கட்டிய மாப்பிள்ளையே தாலியை அறுத்துவிட்டார் என்று உங்கள் வீட்டில் ஏதேனும் சொன்னார்களா?

அவர்கள் அந்தக் காலத்து ஆட்கள் என்பதால் அவர்கள் கணவரிடம் அதிகமாகப் பேசமாட்டார்கள் என்னிடம்தான் கேட்பார்கள். ஒரு நாள் என்னிடம் ஒரு கையில் தாலியையும் ஒரு கையில் விஷ மருந்தையும் வைத்துக்கொண்டு மிரட்டினார்கள். தாலியைக் கட்டவில்லை என்றால் நான் விஷத்தைக் குடித்துவிடுவேன் என்று கூறினார்கள். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அழுகைதான் வந்தது. அதற்குப் பிறகு எனது அம்மாவிடம் நாங்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் நீங்க தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் மனசக் கொழப்பிக்கவேண்டாம் என்று சொல்லிச் சமாதான படுத்திவிட்டேன். அன்று முதல் இன்று வரை நான் தாலி கட்டக் கூடாதென்று உறுதியாக இருக்கிறேன்.

தாலி இல்லாமல் இருப்பதை உங்கள் தோழிகள் எவ்வாறு எடுத்துகொண்டனர்?

என்னோட தோழிகள் தாலியில்லாம நீ முண்டச்சி மாதிரி, அதாவது கணவனை இழந்தவர் மாதிரி இருக்க என்று சொன்னார்கள். என்னுடன் பணிபுரியும் ஒரு பார்ப்பனப்பெண் வந்து சொன்னாங்க, தாலி இல்லாமல் நீ எப்படி தைரியமா இருக்க? நான் குடும்பச் சூழ்நிலை காரணமா தாலியை அடகு வச்சதுக்கே மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கேன் என்று சொன்னாங்க. அதுக்கு நான் சொன்னேன், ரெண்டு பேரும் ஒருவரைஒருவர் புரிதலோடும், அன்போடும் இருக்கும் போது தாலி ஒரு பெரிய விசயமே இல்லை அப்படினு சொல்லிட்டேன்.

நீங்கள் பெரியாரியல் இயக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர்கள் யார்?

என்னை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிச் சென்றது எல்லாமே குணா, விஜியண்ணன், மூர்த்திஅண்ணன் தோழர்கள்தான் காரணம். அதன்பிறகு 2014-ல் ‘அகமணமுறையை அகற்றுவோம் ஆரோக்கியமான தலைமுறையை வளர்ப்போம்’ என்ற பிரச்சாரப் பயணம் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. சூலூர் தமிழ்ச்செல்வி அக்கா அவர்களின் தலைமையில் பிரச்சாரம் செய்தோம். பிரச்சாரத்திற்கு குணாவே 10 நாட்கள் அனுப்பிவைத்தார். தமிழ்நாடில் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றிருந்தோம். என்னால் முடிந்த கருத்துக்களை மக்களுக்கு நாடகங்கள் மூலமாக எடுத்துச் சொன்னோம்.

10 நாள் பிரச்சாரத்தில் எந்த மாதிரியான கருத்துக்களை எடுத்துச் சொன்னீர்கள்?

ஒரே ஜாதியிலும், இரத்த சொந்தத்திலும் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கும் என்று நாடகங்கள் மூலமாக நடித்துக் காண்பித்தோம். அதைப் பார்த்து நிறைய கிராமத்து பெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்கள் குழந்தைகளும் ஒரே ஜாதி இரத்த சொந்தத்திலும் திருமணம் செய்து கொடுத்ததால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஊனமாக பிறந்து உள்ளார்கள் என்று சொல்லி அழுதார்கள். இதன்மூலமாக எங்கள் பிரச்சாரப்பயணம் வெற்றி பெற்றதாக உணர்ந்தோம்.

நாடகங்கள் மூலம் நீங்கள் கற்றது என்ன?

நான் கற்றது ஒரே சாதியில் திருமணம் செய்யக்கூடாது என்பதை தான். திருமணம் செய்துவிட்டதால் இனிவரும் தலைமுறை இது மாதிரி செய்யக்கூடாதென்று நான் விரும்புகிறேன். அகமணமுறை வேண்டாம் என்று நான் விரும்புகிறேன்.

இந்த காலத்துப் பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

தன் கையே தனக்கு உதவி என்பதைத்தான் நான் சொல்வேன். கடவுளை நம்புவதை விடுத்து தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்வேன். பிறரை நம்பி வாழவேண்டாம் என்பேன்.

பெரியாரியலில் வாழ்வதை எப்படி உணர்கிறீகள்?

பெரியாரியலைக் கற்றுக்கொண்டதால் நான் இப்போது தைரியமாகவும் தன்நம்பிக்கையுடன் இருக்கிறேன். அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்கமுடியும். நான் என் குழந்தையையும் சுதந்திரமாய் வளர்ப்பேன் என்று உறுதியுடன் இருக்கிறேன்.

முன்பு எங்கள் வீட்டில் என் தந்தையின் கட்டுப்பாட்டிற்குள் அதாவது கூண்டில் அடைப்பட்ட கிளிபோல் வாழ்ந்து கொண்டிருந்தேன் . ஆனால் இப்போது சுதந்திரமாக உணர்கிறேன். கூண்டை விட்டு வெளியே வந்த ஒரு சுதந்திரப் பறவைபோல் இருக்கிறேன். பெண்விடுதலையை உணர்த்தும் பெரியாரியலைதான் நான் கடைபிடிப்பேன்.

தோழர் குணசேகரன்

என்னுடைய பெயர் குணசேகரன். உடுமலை அருகில் பெதப்பம்பட்டி என்ற ஊரில் பிறந்தேன். நான் பத்தாம் வகுப்புவரை படித்தேன். பெற்றோருக்கு ஒரே மகன் தந்தை இறந்து எட்டாண்டுகள் ஆகின்றது.

உங்கள் திருமணம் எந்த முறையில் நடந்தது?எந்த ஊரில் நடந்தது?

திருமணம் எங்க சொந்த ஊரில்தான் நடந்தது. பெண் பார்க்கும்போது நான் தாலி கட்டமாட்டேன். சாதி மறுப்புத் திருமணம்தான் செய்வேன் என்று கூறினேன். பார்ப்பானைக் கூப்பிடமாட்டேன் என்று கூறினேன். ஆனால் எங்கள் வீட்டில் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அப்படியெல்லாம் முடியாது இல்லையென்றால் திருமணமே வேண்டாம் என்றேன். அப்பாவும், அம்மாவும் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டினார்கள். ஆனால் பார்ப்பானரைக் கூப்பிடக்கூடாதென்று உறுதியோடு இருந்தேன். ஆனால் தாலி கட்டித்தான் திருமணம் நடந்தது. சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்ததும் நிறைவேறவில்லை. பின்பு என் துணைவியாரும் சாதி மறுப்புக் கொள்கையில் ஆர்வம் கொண்டிருந்தார் எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாய் அமைந்தது.

2012- ல் நடந்த மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் தாலி அகற்றக் காரணம் என்ன?ஆர்வம் எப்படி வந்தது?

நான் ஆரம்பத்திலேயே தாலிக்கயிறு போன்றதைக் கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. அமைப்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தோழர்கள் எங்கள் இருவரிடமும், நீங்க ஏன் இன்னமும் தாலிக்கயிறு கட்டியிருக்கீங்க என்றெல்லாம் கேட்பார்கள். அதன்பிறகு நானும், பல்லடம் விஜயன், அனுப்பட்டி பிரகாஷ் ஆகிய தோழர்களுடன் தாலியை அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஈரோட்டில் மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் தாலியை அகற்ற முடிவு எடுத்தோம் அதில் தாலியை அகற்றி நமக்குப் பின்வரும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழவேண்டும் என்று நினைத்தோம்.

தாலியை அகற்றிய பின்பு உங்க வீட்டிலும் உங்கள் துணைவியார் வீட்டிலும் எப்படி எடுத்துக் கொண்டனர்?

தாலியை அகற்றும்போது யாருக்கும் தெரியவில்லை. வீட்டில் கேட்கும்போது அது சும்மா கழட்டி வைச்சுட்டோம் அப்படின்னு சொல்லிட்டோம். அதற்கு அப்புறம் புத்தகத்தில் பார்த்து அறிந்து கொண்டனர். பிறகு கவிதா வீட்டில் இருந்து அவங்க அம்மாவிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அந்த நிகழ்வுக்கு பின்பு ஒரு வருடம் இருக்கும். அப்போது இருவரையும் வைத்து ஒரு கையில் தாலியையும், மறு கையில் விஷத்தை வைத்துகொண்டு தாலியை கட்டிக்கொள் இல்லைனா நான் விஷத்தை குடிச்சிடுவேன் என்று மிரட்டினார்.

அதற்கு நான் சொன்னேன் அந்த முடிவை நான் உங்க மகள் கிட்டையே விட்டுவிடுகிறேன் என்று சொல்லி விட்டேன். அதற்கு அப்புறம் அவங்க அம்மா சொன்னாங்க, சொந்தக்காரர்கள் எல்லாம் என்ன சொல்லுவாங்க? அவங்க வீட்டுக்கு எல்லாம் எப்படிப் போறதுன்னு கேட்டாங்க. நம்ம சாதிக் கலாச்சாரத்துக்கு எல்லாம் இது ஒத்துவராது என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் கூறுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கலை நாங்க.

இறுதியாக....

தாலிமறுப்பு, ஜாதிமறுப்பு, சடங்குகள் மறுப்பு, பண்டிகைகள், மூடநம்பிகைகள் என நம் இனத்தின் மீது இந்து மத வேதங்களும், இந்து மதச் சட்டங்களும் திணித்துள்ள எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்கிறோம். ஊருக்கு உபதேசம் மட்டும் செய்து வாழ்வதைவிட இயன்றதைச் செய்து காட்ட நினைக்கிறோம்.