“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்”

என 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசியவர் பாலகங்காதர திலகர். இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய ஸ்ரீபத் அம்ரிட் டாங்கே மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸ் அமைப்பைத் தொடங்கிய கேசவ் பல்ராம் ஹெட்கேவர் ஆகிய இருவருமே திலகரின் சீடர்கள். மராட்டியப் பார்ப்பனர்கள்.

karunanidhi and stalin 3

இந்த மூன்று அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் பார்ப்பனர்கள் தான் இன்றளவுக்கும் இந்தியாவின் அரசியலை இயக்குபவர்களாக உள்ளனர். ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது. அகில இந்திய அரசியல் தளத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நாம் இன்னும் அசைக்கக் கூட முடியவில்லை.

ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தில், நீதிபதிகளாக, ஆலோசகர்களாக, ஆட்சித்தலைவர் களாகப் பார்ப்பனர்களே வீற்றிருந்தனர். அந்த ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். அந்தச் சூழலில் தான் 1916 இல் தமிழ்நாட்டில் ‘தென்னிந்திய நலஉரிமைச் சங்கம்’ தொடங்கப்படுகிறது.

1918 ஆம் ஆண்டு, மிகச்சரியாக 100 ஆண்டு களுக்கு முன்பு, இதே ஆகஸ்ட் மாதத்தில் தான் (02.08.18) திராவிட இயக்கப் போராளி டி.எம்.நாயர் அவர்கள் இங்கிலாந்து பிரபுக்கள் சபையில் பார்ப்பனர் அல்லாதாருக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் தேர்தல் அரசியலில், சட்டமன்றத் தொகுதிகளில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகச்சிறப்பான எழுச்சியுரையாற்றினார்.

டி.எம்.நாயரின் வாதத்தின் நியாயத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு, பார்ப்பனரல்லா தாருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் தேர்தல் அரசியலில் வாய்ப்புக் கொடுக்கலாமா என ஆராய்வதற்காக, “சவுத்பரோ கமிட்டி”யை அமைத்தது. அந்தக் கமிட்டிக்கும் தலைவர்களாக சீனிவாச சாஸ்திரி, எஸ்.என்.பானர்ஜி என்ற இரண்டு பார்ப்பனர்கள் தான் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நமது தலைவர்கள் டி.எம். நாயர், கே.வி.ரெட்டி மற்றும் பலரும் அந்தப் பார்ப்பன சவுத்பரோ கமிட்டியையும் எதிர்த்துப் போராடி, மீண்டும் 1919 இல் இலண்டன் சென்று வாதாடி, ஆங்கிலேயர் களுக்குச் சமூகநீதியைப் புரியவைத்து, நமக்குரிய சட்டமன்றத் தொகுதிகளை - தேர்தலில் நிற்கும் உரிமையைப் பெற்றுத் தந்தனர். அந்த உரிமைகள் மாண்டேகு செம்ஸ்போர்ட் அறிக்கை எனும் பெயரால் நமக்குக் கிடைத்தன. அந்த அறிக்கைக்காக, வாதாடச் சென்ற டி.எம்.நாயர் இலண்டனிலேயே உயிர்துறந்தார்.

1919 இல் ஜூலை 19 ஆம் நாள் இலண்டனில் அவர் இறந்த நாளில், சென்னைப் பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். காஸ்மோ பாலிடன் க்ளப்பில் பார்ப்பன நீதிபதிகள் வடை, பாயாசத்துடன் சிறப்பு விருந்து நடத்தினர். திருவல்லிக்கேணி கோவிலில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. அதே பாயாசப் பார்ப்பனர்கள் இன்று 100 ஆண்டுகள் கழித்து கலைஞரின் மறைவுக்கு வடை, பாயாசம் செய்கின்றனர் என்றால்... திராவிடர்களுக்குத் தலைவன் யார் என அவர்கள் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர். நமக்குத்தான் வரலாறு தெரியவில்லை.

1920 வரை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அரசியல் என்றால் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, பானர்ஜி, முகர்ஜி, பாண்டே, என்று அக்ரஹார அரசியலாகவே இருந்தன. மாண்டேகு செம்ஸ்`ஃபோர்ட் சீர்திருத்தத்தின்படி தேர்தல் அரசியல் இந்தியாவில் அறிமுகமானது.

பார்ப்பனர்களின் பிடியிலிருந்து ஆட்சி நிர்வாகம், பனகல் அரசர், தியாகராயர், பொப்பிலி அரசர், புதுக்கோட்டை அரசர், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கேசவப்பிள்ளை, நடேச முதலியார், தஞ்சை அப்பாசாமி வாண்டையார், கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை போன்ற பெரும் நிலக்கிழார்களின் கைக்கு மாறியது.

நீதிக்கட்சியின் தலைவர்கள் பெரும் ஜமீன்தார்களாக, பணக்காரர்களாக இருந்தாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பதில் தங்களது ஜாதிகளின் நலத்தை மட்டும் முன்னிறுத் தாமல், பட்டியலின மக்களின் விடுதலையையும் இணைத்தே முன்னெடுத்தனர். அனைத்துத் துறைகளிலும் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவ உரிமைகளை மறுக்கவில்லை. இவர்களின் ஆட்சியில் தான் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக வழங்கப்பட்டன என்பது ஒரு சிறு சான்று. 30 களின் இறுதியில் நீதிக்கட்சி தோல்வியைத் தழுவியது. பெரும் பின்னடைவைக் கண்ட நீதிக்கட்சியின் தலைவராக 1938 இல் பெரியார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பெரியாரின் தலைமைக்கு வந்த பிறகு, 1944 இல் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஒன்றாகி, திராவிடர் கழகமாகப் பரிணாமம் பெற்ற போது - வெறும் பெயர் மட்டும் மாறவில்லை. அதுவரை பண்ணையார்களின் கட்சியாக இருந்த அமைப்பு, திராவிடர் கழகமாகிய போது பாமரர்களின் கட்சியாகியது. பெரியார், பார்ப்பனர்களையும், பண்ணையார்களையும், ஒருசேர எதிர்த்துக் களம் கண்ட காலங்களில் அவருக்குத் தளபதியாகத் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் அண்ணா.

நீதிக்கட்சிக்குப் பிறகு திராவிடர்களுக்கான அரசியல் கட்சி என்று எதுவுமே இல்லாத காலத்தில், திராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக, திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலை தொடர்பாக பெரியாருடன் முரண்பட்டுத் தான் தி.மு.க உருவானது. ஆனாலும், பெரியாரிடம் கற்ற சமுதாய அறிவு அண்ணாவின் அரசியல் அமைப்புக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்தது.

நீதிக்கட்சி காலத்துக்கு முன்பு ஒரு ஜில்லாக்கமிட்டித் தலைவர் என்றால், அவர் உறுதியாகப் பார்ப்பனராகத்தான் இருப்பார். நீதிக்கட்சி தோன்றிய பிறகு, ஜில்லாக் கமிட்டித் தலைவர் என்றால் பெரும் பணக்காரராகவோ, ஜமீனாகவோ தான் இருப்பார். தி.மு.க. தோன்றிய பிறகு, இந்தத் துறையில் ஒரு தலைகீழ் மாற்றம் உண்டானது. “அரசியல் கட்சி நிர்வாகிகள்” என்ற தளத்தில் மாபெரும் புரட்சி நடந்தது.

ஏழை எளியவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், குரலற்றவர்களும் தி.மு.க வின் முக்கியப் பொறுப்பாளர்களாக அறிமுகமானார்கள். சின்னஞ்சிறு கிராமங்களில்கூட கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். படிப்பகங்கள் தோன்றின. நாடக மன்றங்கள், கலை மன்றங்கள் தோன்றின. சிற்றிதழ்கள் புற்றீசல் போலத் தொடங்கப்பட்டன. ஊருக்கு ஊர் சொற்பொழிவாளர்கள் தோன்றினர். அரசு அலுவலங்களுக்குச் சென்று, அதிகாரிகளிடம் மக்களின் நிறைகுறைகளைப் பேசும் கிராமப்புற அரசியல்வாதிகள் தோன்றினர்.

சேரிகளில் தி.மு.க கொடிகள் பறந்தன. சேரிகளிலும் பொறுப்பாளர்கள் தோன்றினர். வெகு அதிகமான மக்கள் அரசியல் அறிவு பெற்றனர். இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கதாகலாட்சேபம் செய்து கொண்டிருந்த கிராமங்களில் பொதுக்கூட்டங்களும், சீர்திருத்த நாடங்களும் நடக்கத்தொடங்கின. எழுத, படிக்கத் தெரியாதவர்கள்கூட அரசியல் பேசினர். வெகு மக்கள் அரசியல்படுத்தப்பட்டனர்.

தேர்தலில் நின்று வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது அரசியல் மாற்றம் மட்டுமே. தி.மு.க. என்ற அரசியல் கட்சி, அரசியல் வெற்றியைப் பெறுவதற்கு முன் சமுதாய மாற்றத்தில் கவனம் செலுத்தியது. திராவிடர் கழகத்தோடு அறிவிக்கப்படாத போட்டி ஒன்றை நடத்தியது. பெரியாரின் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய விடுதலை மறுப்பு ஆகிய எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்து கொண்டவர் அண்ணா. ஆனால், நடைமுறையில் மேற்கண்ட கொள்கைகளுக்காக தோழர் பெரியார் அறிவித்த போராட்டங்களில் ஒரு கூட்டுப்பணியாளராக - சக போராளியாகவே அண்ணாவும், தி.மு.க வும் களத்தில் நின்றன.

இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்றுவருவதற்கு - கல்வி உரிமை பெற்றதற்கு மிக முக்கியக் காரணம், 1951 ஆம் ஆண்டு நடந்த இந்திய அரசியல் சட்டத் திருத்தப் போராட்டம். அந்தப் போராட்டத்தைத் தொடங்கி வென்றவர் பெரியார். சட்டரீதியாக அதற்குத் தோள் கொடுத்தவர் அம்பேத்கர்.

அதுபோல, தமிழ்நாட்டு மக்களின் கல்வி உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முயன்ற குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கடுமையான போராட்டங்களைத் தொடங்கியவர் பெரியார். சட்ட ரீதியாக அத்திட்டத்தை ஒழிக்கத் துணைநின்றவர் காமராசர். மேற்கண்ட இரண்டு முக்கியப் போராட்டங்களிலும் அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் உழைப்பும், தி.மு.க என்ற அரசியல் இயக்கத்தின் அர்ப்பணிப்பும் வரலாற்றில் இன்னும் முழுமையாகப் பதிவாகவில்லை.

1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் “இராமனைச் செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு?” என பார்ப்பனர் அலறித்துடித்த போதும் மிகப்பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார் கலைஞர். இராமனைச் செருப்பாலடித்த பிறகு நடந்த தேர்தலில் வென்றவர் கலைஞர்.

முதலமைச்சரான உடனேயே, பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, ஒரு பக்திப்பழமாக அவதாரம் எடுக்கவில்லை. தனது இயல்பாக, நாத்திகராகவே வாழ்ந்தார். நாத்திகராகவே ஆண்டார். ஊடலோ, கூடலோ அது திராவிடர் கழகத்தோடு தான். பாசம், கோபம் எதுவானாலும் அது திராவிடர் கழகத்தோடு தான் என வாழ்ந்தார். எந்தச் சூழலிலும் சங்கர மடத்தில் போய் மண்டியிடவில்லை.

இந்தியப் பகுதியில் சமுதாய மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பார்ப்பனர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டனர். காலத்துக்கேற்பத் தங்களைத் தயாரித்துக்கொண்டனர். தாங்கள் படையெடுத்து வந்து இந்தியப் பகுதியை ஆக்கிரமித்ததற்குப் பிறகு, பார்ப்பனர்களைப் போலவே ஏராளமான அந்நியர்கள் இந்நாட்டுக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த முதல் அந்நியர்கள். அந்த வரிசையில் ‘ஜனநாயம்’, ‘தேர்தல் அரசியல்’ என்ற நிலைக்கு சமுதாயம் மாறியபோது, காங்கிரசைத் தொடங்கினார்கள். இந்தியாவில் தொடங்கப்பட்ட அனைத்து அரசியல் அமைப்புகளிலும் ஊடுருவினார்கள். நீதிக்கட்சியிலும் ஊடுருவினார்கள்.

“மீண்டும் மனுசாஸ்திரத்தையே இந்திய அரசியல் சட்டமாக்குவோம்” என்று பார்ப்பனர்கள் திட்டமிடத் தொடங்கி 100 ஆண்டுகள் முடிந்து விட்டது. அத்திட்டத்திற்கு அரசியல் தளத்தில் மிகப்பெரும் எதிரியாக இருப்பது தி.மு.க மட்டுமே. ‘மனு’ வை எதிர்க்கும் சமுதாய அமைப்புகள் ஏராளமாக உள்ளன. ஏறத்தாழ 2 கோடி வாக்காளர் களைக் கொண்ட அரசியல் அமைப்பான திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே அரசியல் களத்தில் அவர்களுக்கு எதிராகத் தெரிகிறது. அதனால் தான், டி.எம். நாயரின் மறைவுக்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்து கலைஞரின் மறைவுக்குப் பார்ப்பனர்கள் பாயாசம் சாப்பிட்டு மகிழ்கின்றனர்.

2000 ஆண்டுகளாக மண்ணாங்கட்டி களாகவே வாழ்ந்த பெரும்பான்மை மண்ணின் மைந்தர்கள், பெரியாரால் மனிதரானார்கள். அண்ணா, கலைஞர் ஆகியோரால் அரசியல் நிர்வாகிகளானார்கள். 2000 ஆண்டுகளாக நம்மை அடக்கி வந்த பார்ப்பனர்களால் இந்தப் புரட்சியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒதுங்கிச் சென்ற மக்கள், அதே துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு, வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை எனச் சுத்தமாக உடை உடுத்திக் கொண்டு அரசு அலுவலகங்களில் ஏறி இறங்குவதையும், அதிகாரி களை மிரட்டி வேலை வாங்குவதையும் எந்தப் பார்ப்பான் ஏற்றுக் கொள்வான்?

அண்ணாவும், கலைஞரும் பார்ப்பனர் களோடு பெரிதாக உரசாமல் இருந்தாலும் கூட, பார்ப்பனர்கள் இந்தத் தலைவர்களை இன்றுவரை பரம்பரை எதிரிகளாகவே எண்ணுவதற்குக் காரணம் இதுதான். இங்கு சமுதாயம் அரசியல்படுத்தப் பட்டுள்ளது. அதுவும், அந்த அரசியல்படுத்தலைப் பார்ப்பனரல்லாதவர்கள் நடத்துகிறார்கள். அதன் பயனையும் அவர்களே அடைகிறார்கள். அதை முறியடிக்க வேண்டும். பார்ப்பனரல்லாதோர் அரசியலில் இருக்கக்கூடாது. அப்படியே இருந்தாலும் அதன் பயன் அவர்களுக்குச் செல்லக் கூடாது என்று - பார்ப்பனர்கள் துடிக்கின்றனர். 1919 க்கு முந்தைய வாழ்க்கை முறைக்கு நம்மை இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

2019 இல் நாடாளுமன்றத் தேர்தல். அதை அடுத்து சட்ட மன்றத் தேர்தல். இந்தத் தேர்தல்கள் தான் அடுத்த 100 ஆண்டுகால எதிர்காலத்தை உறுதிசெய்யப்போகும் தேர்தல்கள். ஆம், 2019 தேர்தலில் பார்ப்பன இந்து மத அமைப்புகள் வென்றுவிட்டால், அதற்குப் பிறகு இந்தியாவில் தேர்தல்கள் நடக்காது. தேர்தல் முறையும் இருக்காது. இந்தியா வெளிப்படையான இந்து நாடாக அறிவிக்கப்படும். மீண்டும் மனுசாஸ்திரம் சட்ட நூலாக மாறும். மாநிலங்கள் அவை, மக்கள் அவை என்ற இரு அவைகளும் ஒழிக்கப்பட்டு, “குருசபா”க்கள் உருவாகப் போகின்றன. அதற்குரிய முன்வரைவுகள் தயாராகிவிட்டன. அவற்றை எதிர்க்கும் சமுதாயச் சூழல் தமிழ்நாட்டில் உள்ளது.

அகில இந்திய அளவில், இரண்டு நாத்திகர்கள் அதுவும், ஜாதிஒழிப்பை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தை ஏற்றுக்கொண்டவர்கள் முதலமைச்சர்களாக இருந்தது தமிழ்நாட்டில் மட்டுமே. இந்திய அளவில், இராணுவ மரியாதை, அரசு மரியாதைகளைப் பெற்ற மூன்று நாத்திகர்களைக் கொண்ட நாடும் தமிழ்நாடு மட்டுமே.

இந்து மத வேதங்களையும், அவை உருவாக்கிய இந்துப் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களுக்கு எதிராக வாழ்ந்து - அவற்றுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து - கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விடுதலைக் கனலை உண்டாக்கி - இலட்சக் கணக்கான மக்கள் திரளோடு இறுதிப் பயணங்களை மேற்கொண்ட மூன்று தலைவர்களைக் கொண்ட நாடும் தமிழ்நாடு மட்டுமே.

இந்த வரலாற்றுச் சிறப்புகளை ஆயுதங்களாக்க வேண்டும். ஆரிய - திராவிடப் போரின் அடுத்த களங்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலும், அதை அடுத்த வர உள்ள சட்டமன்றத் தேர்தலும் ஆகும். இன்றைய நிலையில் இந்தக் களத்தில் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தி.மு.க. மட்டுமே. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குத் தோள்கொடுப்போம். பார்ப்பனப் பரம்பரைப் பகையை எதிர்கொள்ளும் அனைத்துத் தளங்களிலும் தளபதி ஸ்டாலின் அவர்கள் வெல்வதற்குத் துணை நிற்போம். அவருக்காக அல்ல. தி.மு.க.வுக்காக அல்ல. நமக்காக. நமது விடுதலைக்காக!