ஒரு பக்கம், இந்துத்துவா பயங்கரவாதத்தின் வளர்ச்சி மறுபக்கம் இராஜஸ்தான் மாநில இடைத் தேர்தல்கள் சற்றே ஆறுதலாக இருக்கின்றன. இருந்தாலும், இதன் வீச்சு இந்தியாவெங்கும் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஓட்டு வங்கி பலம் ஒருபக்கம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இந்துத்துவ பயங்கரவாத வளர்ச்சியை யாரும் மறுக்கமுடியாது.

பா.ஜ.க. இன்று 19 மாநிலங்களில் நேரிடையாக அதிகாரத்தில் உள்ளது. இந்த மாநிலங்களில் பார்ப்பனிய பண்பாட்டு அம்சங்கள் தெளிவாக புகுத்தப்படுகின்றன. பாடத் திட்டங்களில் வரலாறு புரட்டப்படுகின்றது. மாநில நிர்வாக எந்திரங்கள் பாசிசமயமாக்கப்படுகின்றன.

“காங்கிரஸ் இல்லாத இந்தியா”, கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியா” என்று எதிர்க்கட்சிகளின் மீது பா.ஜ.க. தாக்குதலை தொடுக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி உள்ள மே. வங்கம், கர்நாடகா, திரிபுரா, கேரளா மாநிலங்களில் எல்லாவிதமான பார்ப்பன கயமைத்தனங்களை கையாள்கிறது. மே. வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை பின்னுக்கு தள்ளுகிறது. திரிபுராவில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது. கேரளாவில் யாத்திரை நடத்தியது. சுதந்திரநாள், குடியரசு நாளில் R.S.S தலைவர் மோகன் பகவத் வலிந்து கொடியேற்றினார்.

ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளை அழிக்க எத்தனிக்கும் அதே வேளையில் மறுபக்கம் மாநிலக்கட்சிகளை ஒழிக்கும் வேலையில் இறங்கி உள்ளது. “கழகங்கள் இல்லாத தமிழகம்” என்று திராவிடக் கட்சிகள் அழிந்தது போன்ற போலியான பாசிச பிம்பத்தை தமிழகத்தில் கட்டி அமைக்க முயற்சிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இல்லாமல் பி.ஜே.பி. மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஒரு முழுமையான பாசிச சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறது. இந்தச் சூழலில் இந்துத்துவ பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டிய போராட்டக் களமோ எதிர்க்க தயாரில்லாமல் பலவீனமாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மாவோயிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் கணபதி பெயரில் வந்த பத்திரிகைச் செய்தியில் இந்து பாசிசத்திற்கு எதிரான அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஆனால் அதற்கு செயல்பூர்வமான முயற்சி இருந்ததாகத் தெரியவில்லை. மாவோயிஸ்டு கட்சியிடமாவது கொள்கையளவில் முயற்சி இருந்தது. ஆனால், மார்க்சிஸ்டு கட்சியிடம் அது கூட இல்லை.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி முன்வைப்பு பிரகாஷ் காரத்தால் பெரும்பான்மை என்ற பெயரில் முறியடிக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக பிரகாஷ் தலைமை குறுங்குழுவாத, தூய்மைவாதத்தை முன்நிறுத்துகிறது. இப்போக்கு சொந்த கட்சியையும் பலப்படுத்தவில்லை; உருவாக்கவில்லை. “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” கட்சி கரைந்து இந்து பாசிசம் வளர்வதற்கு பிரகாஷ் தலைமை துணை செய்கிறது.

மேற்கண்டவாறு நிலைமை இருக்க, பலத்தில் சிறியதாக இருந்தாலும் புரட்சிகர சக்திகளும் சனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் ஓரளவு சரியாகவே இச்சக்திகள் செயல்படுகின்றனர். ஆனால், ஓரணியில் திரளவில்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க. மூலம் குறுக்குவழியால் அதிகாரத்தை செலுத்தும் பி.ஜே.பி. கமல் மற்றும் ரஜினியை அரசியலில் இறக்கியதன் மூலம் எதிர்கால அதிகாரத்தை குறிவைக்கிறது. இத்தகைய பி.ஜே.பி.யின் சதிகளை முறியடித்து இந்துத்துவா பாசிசத்தை தமிழகத்தில் வேறூன்றாமல் செய்ய அனைத்து புரட்சிகர சக்திகளும் சனநாயக சக்திகளும் இந்துத்துவா பயங்கரவாத எதிர்ப்பு அணியில் திரளவேண்டிய கட்டாயமும் கடமையும் உள்ளது.