இந்தியாவின் மேற்குக் கடற்கரை பெரும்பாலும், செம்மண் நிறமாக, சிவப்பு வண்ணத்தில் காணப்படும். அதுபோலவே மங்களூரு பகுதியிலும் காணப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலை, மும்பை வரையிலும் நீண்டு இருக்கின்றது என்று புவியியல் பாடத்தில் படித்து இருக்கின்றேன். ஆனால், மங்களூரு பகுதியில் உயரம் குறைவாகவே உள்ளது.

நான் பயணித்த மத்ஸ்யகன்யா விரைவு வண்டி உடுப்பி வழியாகத்தான் சென்றது. ஆனால், என்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு அலைய முடியாது என்பதாலும், சாலை வழியாகவும் பயணித்துப் பார்ப்போம் என்ற உணர்வோடும்தான், காலையில் பேருந்தில் உடுப்பி சென்று வந்தேன். புகழ்பெற்ற, ஓரளவு பெரிய ஊராகவும் இருந்தாலும், உடுப்பி தொடர்வண்டி நிலையத்தில், நடைமேடையில், மூன்று அடி அகலத்துக்கு மட்டும்தான், சிமெண்டுக்கல் பதித்து இருக்கின்றார்கள். மற்ற இடங்களில் மணல்தரைதான். மேற்கூரையும் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. இதே நிலைமைதான், அடுத்தடுத்து வந்த, கொல்லூர் ரோடு, முர்டேஸ்வர், கோகர்ணா ரோடு போன்ற தொடர்வண்டி நிலையங்களுக்கும். இவை அனைத்துமே, புகழ்பெற்ற வழிபாட்டு இடங்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற ஊர்கள். ஏராளமான தொடர்வண்டிகள் இந்தத் தடத்தில் ஓடுகின்றன. ஆனால், இந்தத் தொடர்வண்டி நிலையங்கள் மேம்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தொடர்வண்டி நிலையங்கள் எப்படி இருந்தனவோ, அப்படி இருக்கின்றன. தற்போது, தமிழகத்தில் பரவலாக தொடர்வண்டி நிலையங்களை ஓரளவு மேம்படுத்தி இருக்கின்றார்கள்.

சரக்குத் தொடர்வண்டியில் இராணுவ டிரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால், சரக்கு ஏற்றப்பட்ட, தனியார் லாரிகளை முழுக்க முழுக்க ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு மூன்று சரக்குத் தொடர்வண்டிகளை இந்தத் தடத்தில்தான் பார்த்தேன். அதை, ரோரோ ரயில் என்கிறார்கள்.

கொங்கண் ரயில்வே

இந்தியாவின் மேற்குக் கரையில், கோவாவைத் தென் எல்லையாகக் கொண்டு, வடக்கே மும்பைக்கு இடைப்பட்ட கடலோர மாவட்டங்கள், ‘கொங்கண் வட்டாரம்’ என்று அழைக்கப்படுகின்றது. தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைப் போல. முன்பு, கேரளாவில் இருந்து மும்பைக்குச் சென்ற தொடர்வண்டிகள், கோவை வழியாக, அரக்கோணம் வரையிலும் வந்து, ஆந்திராவின் குண்டக்கல் வழியாகத்தான் சென்று கொண்டு இருந்தன. வரைபடத்தைப் பாருங்கள்; எந்த அளவுக்குச் சுற்றுவழி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மங்களூருவில் இருந்து மும்பை செல்ல வேண்டும் என்றால், கர்நாடக மாநிலத்துக்கு உள்ளேயே பேருந்து வழியாகத்தான் செல்ல முடியும்.

madgaon_640

எனவேதான், கேரளாவையும், மராட்டிய மாநிலத்தையும், கடலோரமாகவே இணைக்கின்ற, ஒரு புதிய தொடர்வண்டித் தடத்தை அமைக்கின்ற முயற்சிகளை, விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசு மேற்கொண்டது. இது மிகக் கடினமான பணி. ஏனென்றால், நெடுகிலும் மேற்கு மலைத் தொடர்கள்.

இந்தத் தடத்தை அமைப்பதற்காகவே,கொங்கண் தொடர்வண்டிக் கழகம் என்ற புதிய நிறுவனம் அமைக்கப்பட்டது.

கொங்கண் பகுதியைச் சேர்ந்த பாரிஸ்டர் ராஜ்நாத் பை இதற்கான விதையைத் தூவினார். 1966 ஆம் ஆண்டு, மும்பையின் டிவா என்ற இடத்தில் இருந்து, பன்வல் வரையிலும் பாதை அமைக்கப்பட்டது. இதே பகுதியைச் சேர்ந்த, பேராசிரியர் மது தண்டவதே, ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் இந்தியத் தொடர்வண்டித் துறையின் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தபோது, எண்பதுகளில் இந்தத் திட்டப்பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்தத் தடத்தை அமைப்பதற்காக, 43,000 பேர்களிடம் இருந்து, நிலம் கையகப்படுத்தப்பட்டது. வழியில் உள்ள சிற்றோடைகள், ஆறுகள் மீது 2000 சிறு மற்றும் பெரிய பாலங்கள் கட்டப்பட்டன. 91 மலைக்குகைகள் குடையப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழைப்பொழிவு, நிலச்சரிவுகள், காட்டு விலங்குகளின் தாக்குதல் ஆகியவற்றுக்கு இடையில், பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

கோவா மாநிலத்தின் வழியாக, 105 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை அமைக்கப்பட்டது. காடுகள் அழிக்கப்படுவதால், எங்களுக்கு இந்தப் பாதை வேண்டாம் என்று கோவாவில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எத்தனையோ இடையூறுகளைக் கடந்து, 740 கிலோமீட்டர் தொலைவுக்கு கொங்கண் தொடர்வண்டித் தடம் அமைக்கப்பட்டது. உலக தொடர்வண்டித்துறையின் வரலாற்றில், இந்தத் திட்டம் ஒரு மைல்கல் என்றே செல்லலாம். விடுதலைக்குப் பிறகு, இந்தியாவில் அமைக்கப்பட்ட நீண்ட தொடர்வண்டித் தடம் இதுதான். இந்தத் திட்டத்தின் தலைமைப் பொறியாளர் ஸ்ரீ தரன் என்ற தமிழர் என்பதும், அவர்தான் தில்லி மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்துக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு, அதையும் வெற்றிகரமாக இயக்கிக் காட்டிய பெருமைக்கு உரியவர் என்பதும், தமிழகத்துக்குச் சிறப்பு ஆகும்.

1998 ஜனவரி 26 ஆம் நாள் இந்தத் தடம் திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் முதல், மங்களூரு-மும்பை இடையே பயணிகள் போக்குவரத்து தொடங்கியது. அப்போது, இந்தத் தடம் குறித்து, விரிவான அளவில் செய்திகள் வெளியாகின.

கொங்கண் தொடர்வண்டிப் பயணத்தில்...

இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் தடத்தில் பயணிக்க வேண்டும் என நீண்டகாலமாக விழைவு கொண்டு இருந்தேன். அதற்காகத்தான், இந்த வழியாகப் பயணிக்கின்றேன்.

மங்களூரில் இருந்து புறப்பட்ட பத்துப் பதினைந்து நிமிடங்களில் நீண்ட குகை வழியாகச் சென்றது. அடுத்து, கொல்லூரில் ஒரு குகை. தில்லிக்குச் செல்லும் வழியில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குகை வழிகள், நீளம் குறைந்தவை. சில குகைகள் மட்டும்தான், இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் நீளமானவை. ஆனால், கொங்கண் தொடர்வண்டித் தடத்தில் உள்ள குகைகள் எல்லாமே நீளமானவை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில், உயரமான பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் என எண்ணி இருந்தேன். ஆனால், சற்றே மேடும் பள்ளமுமான பகுதிகள் வழியாகவே தொடர்வண்டி சென்றது. பைண்டூர், சிரூர், பட்கல், கேனகோனா, ஹொன்னாவர், கும்டா, கார்வார் என பல ஊர்களின் வழியாகச் சென்றது.

இந்தப் பகுதியில் டிசம்பர் மாத குளிரின் தாக்கம் இல்லை. நான் பார்த்தவரையில், கார்வாரில்தான் ஓரிருவர் குளிர் உடை அணிந்து இருந்தார்கள். பொதுவாக வெள்ளைக்காரர்கள், பொதுப் பெட்டிகளில் பயணிப்பது குறைவு. ஆனால், இந்தத் தடத்தில் சிலர் பொதுப்பெட்டியில் வந்தார்கள். அவர்களுள் ஒரு ஜோடி, கையில் நீண்ட கிடார் வைத்து இருந்தார்கள். அவர்கள் வைத்து இருந்த உடைமைகளை விட, இதுதான் பெரிதாக இருந்தது. எங்கு சென்றாலும் அதையும் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்றால், இசையோடு இயைந்த வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேற்கத்திய நாடுகளில் எல்லோருமே இசை ரசிகர்களாக இருக்கின்றார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் கூட ஒரு செவ்வியில், ‘ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில், ஒருவர் இசை அமைப்பில் ஒரு பாடல் மக்கள் நெஞ்சங்களை ஈர்த்தாலும் போதும், வாழ்க்கை முழுமைக்கும் தேவையான பணமும், புகழும் கிடைத்துவிடும். இந்தியாவில் புகழ்தான் கிடைக்கின்றது; இசை அமைப்பாளர்களுக்குப் பணம் கிடைப்பது இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தது நினைவுக்கு வந்தது.

இத்தகைய சிந்தனைகளோடு, கொங்கண் வழியில் பயணித்துக் கொண்டு இருந்தேன். காடு, வயல் என கண்ட இடங்களில் எல்லாம் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்து இருக்கின்றேன். இங்கே ஒரு இடத்தில் மேடு பள்ளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அதாவது, பந்து எறிபவர், மேட்டில் இருந்து கீழ் நோக்கி ஓடிவந்து, சாய்தளத்தில் நிற்கின்ற மட்டையாளருக்குப் பந்தை வீசினார். இது சற்றே புதுமையாக இருந்தது. படம்கூட எடுத்தேன். இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறே பயணம் தொடர்ந்தது.

சிவராம் பூஜாரி

எனது எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தவர், வண்டியில் ஏறியபோது தலையைச் சாய்த்தவர்தான், மாலை ஏழு மணி வாக்கில்தான் தூக்கத்தில் இருந்து விழித்தார். மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். பெயர் சிவராம் பூஜாரி. உடுப்பிக்காரர். மும்பையில் குடியேறி நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டனவாம். அவரது வாழ்க்கையைப் பற்றிச் சொன்னார்:

ஐந்தாம் வகுப்பு வரையிலும்தான் படித்தேன். பதினோரு வயதிலேயே உறவினர் ஒருவர் மும்பையில் உணவக வேலைக்காக அழைத்து வந்து விட்டார். ஐந்து ஆண்டுகள் அவரோடு இருந்தேன். பிறகு, ஒரு மார்வாடியின் நகைப்பட்டறையில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். என் பெயர் பூஜாரி என்றாலும், நான் பூஜை செய்வது கிடையாது. அவர்கள் வேறு பிரிவினர். (முன்பு காங்கிரஸ் கட்சியின் அனைத்து இந்தியச் செயலாளராகவும், பின்னர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த ஜனார்த்தன் பூஜாரி, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.)

எனக்கு மூன்று மகன்கள். மூத்தவன் சரியாகப் படிக்கவில்லை. வேலை பார்க்கின்றான். அடுத்தவன், பெங்களூருவில் பொறியியல் கல்வி படிக்கின்றான்; மூன்றாவது மகன், மேனிலைப்பள்ளி படிக்கின்றான். மிகவும் சிரமப்பட்டுப் படிக்க வைக்கின்றேன். வயது ஐம்பது ஆகிறது என்றார்.

வெற்றிலை மற்றும் வட இந்திய போதைப் பொருள்களைப் போட்டுப் போட்டு, காவி ஏறிய பற்கள். ஒரு தூளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, லேசாக சுண்ணாம்பு சேர்த்து, நீண்ட நேரம் உள்ளங்கையில் வைத்துத் தேய்த்து, மை போன்ற பொடியாக ஆக்கி வாய்க்கு உள்ளே திணித்துக் கொண்டார்.

இது என்ன? என்று கேட்டேன்.

‘தம்பாக்கு. கெட்ட பழக்கம்தான். இதனால்தான் காவி ஏறி பல பற்கள் உதிர்ந்து விட்டன. ஆனாலும்கூட இந்தப் பழக்கத்தை விட முடியவில்லை’ என்று கூறிச் சிரித்தார்.

மட்காவன் தொடர்வண்டி நிலையத்தில்...

சரியாக இரவு 8.30 மணிக்கு, கோவா மட்காவ்ன் தொடர்வண்டி நிலையத்துக்கு உள்ளே வந்தது வண்டி. இந்த நிலையம், தெற்கு கோவாவில் இருக்கின்றது. மங்களூரில் இருந்து 427 கிலோமீட்டர்கள். ஆனால், 6 மணி நேரத்தில் வந்து விட்டது. தொடக்கத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஊர்ந்துதான் வந்தது. அதிவேகத்தில் வந்தது போலவும் தெரியவில்லை. ஏறத்தாழ இதே தொலைவு, சென்னையில் இருந்து மதுரைக்கு, எட்டு, எட்டரை மணி நேரம் ஆகின்றது. கோவா மாநிலக் கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. இந்தியாவிலும், இலட்சக்கணக்கான பயணிகளை ஈர்த்துக் கொண்டு இருப்பவை. ஆனால், மட்காவ்ன் தொடர்வண்டி நிலையம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மொத்தம் இரண்டே நடைமேடைகள்தான். முதலாவது நடைமேடைக்கு மட்டும்தான் மேற்கூரை இருக்கின்றது. இரண்டாவது நடைமேடையில் முழுமையாக இல்லை. பெரும்பாலான பயணிகள் ஆங்காங்கே படுத்துக் கிடந்தார்கள். விடுதி அறைகள் கிடைக்காதவர்கள் அல்லாடிக் கொண்டு இருந்தார்கள். அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்கள். என் நிலையும் அதுதான்.

முகநூல் நண்பர் வால்டர் வில்லியம்ஸ், கோவாவில் வசிக்கின்ற, அவரது ஊரைச் சேர்ந்த ஒரு நண்பரை, அலைபேசி வழியாக அறிமுகம் செய்து வைத்து இருந்தார். அவரோடு தொடர்பு கொண்டு இருந்தேன். ‘தொடர்வண்டி நிலைய கூட்டுப்படுக்கை அறையின் பொறுப்பாளரைப் பாருங்கள். உங்களுக்கு ஒரு படுக்கை கொடுப்பார்கள் என்று முகம் தெரியாத அந்த நண்பர் பாலன் கூறி இருந்தார். அதன்படி, அந்தப் பொறுப்பாளரைப் பார்த்தேன். அவர், இடம் இல்லை என்று ஒரே வரியில் கூறி விட்டார்.

மட்காவ்ன் தொடர்வண்டி நிலையத்துக்கு முந்தைய நிலையமான கேனேகோனா வரையிலும் நண்பர் பாலனுடன் அலைபேசியில் பேச முடிந்தது. மட்காவ்ன் வந்தபிறகு அவ்வளவுதான். அரை மணி நேரம் அலைபேசியை எடுக்கவே இல்லை. பல முயற்சிகளுக்குப் பின்னர் திடீரென ஒரு அழைப்பில் பேசினார். நிலவரத்தைச் சொன்னேன்.

தொடர்வண்டி நிலையத்தில் படுக்கைகள் வழங்குகின்ற பொறுப்பாளர் மோகன் பகத் என்பவரிடம் அலைபேசியைக் கொடுங்கள் என்றார். கொடுத்தேன்; பேசினார்.

அதற்குப்பிறகு அவர், ‘இடம் காலியானால் தருகிறேன். ஆனால், உங்கள் உடைமைகளை அந்த அறையில் வைக்கக்கூடாது; பொருள்கள் காப்பகத்தில்தான் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். சரி என்றேன்.

மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து, பொருள்கள் வைக்கும் அறைக்குச்சென்றேன். அங்கேயும் ஒரு அணிவகுப்பு நின்றுகொண்டு இருந்தது. வரிசையில் நின்று, படிவத்தை நிரப்பி, அடையாள அட்டை பயணச்சீட்டு அனைத்தையும் காண்பித்து, பெட்டியை ஒருவழியாக உள்ளே வைத்தாயிற்று. அவர்கள் கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு, உணவகத்துக்குச் சென்றேன். அங்கும் கூட்டம் அலைமோதியது. கவனிப்பார் யாரும் இல்லை. ஒருவழியாக டோக்கன் வாங்கினேன். ஒரு சப்பாத்தி ஐந்து ரூபாய். நல்ல பெரிய அளவில் இருந்தது. மூன்று சப்பாத்தி போதுமானது. ஆனால், அதற்கான பருப்பு, ஒரு கோப்பை 40 ரூபாய். பரவாயில்லை. 55 ரூபாயில் இரவு உணவு முடிந்தது.

மீண்டும் மேலே ஏறி வந்தேன். இப்போது, பொறுப்பாளரைக் காணவில்லை. அறைக்கதவைச் சாத்திவிட்டு வேறு எங்கேயோ போய்விட்டார். நல்லவேளை, பூட்டுப் போட்டுப் பூட்டவில்லை. எனவே, எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டு இருந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை. பத்துப் பதினைந்து நிமிடங்களில் வந்து விட்டார். அவரிடம் சென்றேன்.

‘உங்களுக்கு இப்போது உடனடியாக இடம் கிடைக்காது. இரவு 10.30 மணிக்கு மேல்தான் பார்க்க வேண்டும் என்றார். ஆனால், உறுதியாகக் கொடுப்பேன்’ என்றும் கூறினார்.

அந்த நம்பிக்கையோடு, அங்கேயே தரையில் அமர்ந்தேன். இவ்வேளையில், பள்ளி மாணவ, மாணவியர் கூட்டம் ஒன்று அங்கே வந்தது. அனைவரும் தாங்கள் கையோடு கொண்டு வந்து இருந்த உணவை எடுத்து உண்ணத் தொடங்கினர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.

‘மும்பை பாந்த்ராவில் இருந்து வருகின்றோம்; கர்நாடக மாநிலம் முர்டேஸ்வர் போகின்றோம். இரவு ஒரு மணிக்குத்தான் எங்களுக்கு வண்டி. அதுவரையிலும், இங்கேயேதான் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்’ என்றனர்.

நானும் தரையில் பேப்பரை விரித்து அமர்ந்தேன். உடுப்பி பேருந்து நிலையத்தில் வாங்கிய தினத்தந்தி நாளிதழ், தமிழில் செய்திகளை அறிந்து கொள்ள உதவியது; இப்போது விரித்துப் படுக்கவும் உதவியது. இன்று நேற்றல்ல, ஐம்பது ஆண்டுகளாக இப்படித்தானே தினத்தந்தி தமிழர் வாழ்வோடு கலந்து ஒன்றி உறவாடி நிற்கின்றது?

இரவு 11.00 மணிக்கு என்னை அழைத்த மோகன் பகத், ஒரு படுக்கையை ஒதுக்கித் தந்தார். அங்கே இரண்டு அறைகள். ஏழு படுக்கைகள். ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர். என்னேடு சேர்த்து நான்கு பேர். விடியும் வரையிலும் வேறு யாரும் வரவில்லை. மூன்று படுக்கைகள் காலியாகவே கிடந்தன. இரண்டாவது நாள், நானும், மற்றொருவரும் மட்டுமே தங்கி இருந்தோம். மூன்றாம் நாள் இரவில் நான் ஒருவன்தான்.

முதலில் நான் அறை கேட்டபோது, என்னோடு வந்த எத்தனையோ பேர் கேட்டபோதும், இடம் இல்லை என்ற பதிலையே சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இங்கே ஒருவரும் இல்லை. எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? அவர்களுக்குத்தான் மாதம் பிறந்தால் சம்பளம் கிடைத்து விடுகின்றதே? ஆள்களைத் தங்க விட்டால், அறைகளைச் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டுமே? எனவே, ஆள்கள் வரவில்லை என்று கூறிவிடுவார்கள் போலும். அறையின் பராமரிப்பும் மோசம்.

தொடரும்...

- அருணகிரி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It