மீண்டும் மார்ச் மாதம் அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற இரண்டு கேள்விகளுக்குள் பிரச்சினைகளை முடித்து விடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அமெரிக்க தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும்.

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த வுடனேயே 2009இல் அய்.நா. மனித உரிமைக் குழுவில் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம், இனப்படுகொலை என்றுகூட குறிப்பிடப்படவில்லை. மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை முடக்கி தோல்வியடையச் செய்வதில் இந்தியா, அய்.நா.வில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு இலங்கைக்காக ஆதரவைக் கேட்டது. தீர்மானத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” ஒழித்துவிட்டதைப் பாராட்டி, ஒரு பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தது. அய்.நா.வில் அத்தீர்மானம் நிறைவேறியது.

2012 ஆம் ஆண்டில் அய்.நா.வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் கூறியது. இதை ஆதரிப்பதில்கூட இந்தியா தயக்கம் காட்டியது. அந்த விசாரணைக்கு அய்.நா. தலையிட்டு உதவும் என்றிருந்த வாசகத்தையும் இந்தியா நீக்க வேண்டும் என்று கூறியது. இலங்கை அரசின் அனுமதியுடன் அய்.நா. தலையிடலாம் என்று அந்த வாசகம் திருத்தப்பட்டது. அதன் பிறகு இலங்கை அரசே நியமித்துக் கொண்ட விசாரணை ஆணையத்தின் (டுடுசுஊ) பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2013 ஆம் ஆண்டிலும் இதே போன்ற நிலைதான். பன்னாட்டு சட்டமுறைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்து இலங்கை அரசே நம்பகத் தன்மை கொண்ட சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. அத் தீர்மானத்தில் அய்.நா. அதிகாரிகள் இலங்கைக்கு நேராகச் சென்று விசாரணை நடத்தலாம் என்றும், இலங்கை அரசின் செயல்பாடுகள் திருப்தி தரவில்லை என்றும் இடம் பெற்றிருந்த வாசகங்களை இந்தியா தலையிட்டு நீக்கியது.

2009இல் இலங்கைக்கு எதிராக 12 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 2012இல் இது 24 ஆகவும், 2013இல் 25 ஆகவும் உயர்ந்தது. கடைசியாக இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் ஆஸ்திரேலியா, பெனின், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமேலா, இந்தியா, இத்தாலி, லிபியா, பெரூ, போலந்து, மால்டோவா, ருமேனியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், கோடி டி ஐவரி, எஸ்டோனியா, ஜெர்மனி, அயர்லாந்து, மாண்டிநீக்ரோ, தென் கொரியா, சியரலியோனி ஆகிய நாடுகள்.

இலங்கைக்கு 2009 இல் 29 நாடுகள் வாக்களித்தன. 2012 இல் இது 15 ஆகவும், 2013இல் 13 ஆகவும் குறைந்தது. கடைசியாக ஆதரவளித்த நாடுகள் காங்கோ, ஈகுவேடார், இந்தோனேசியா, குவைத், மாலத் தீவு, மொருசியானா, பாகிஸ்தான், பிலிப்பைன்சு, கத்தார், தாய்லாந்து, உகாண்டா, அரபு, எமரேட்ஸ், வெனிசுலா.

இப்போது இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முன்னெழுந்துள்ளது. பிரித்தானியா தமிழ் அமைப்பு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு நேரடிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையிலும் இதை வலியுறுத்தியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர் பிரச்சினையில் பேசக்கூடிய அதிகாரம் பெற்ற தமிழ் ஈழ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சில் போர்க் குற்றங்கள் குறித்த பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரே கோரிக்கையாக இது வடிவம் பெற்றுள்ளது. இதற்கு மாற்றாக ‘இனப் படுகொலை’ நிகழ்ந்துள்ளதை தீர்மானமாக ஏற்க வேண்டும் என்று சில தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ‘இனப் படுகொலை’ என்ற முடிவுக்கு வந்து விட்டாலே தனித் தாயகம் என்ற கோட்பாடு அதனுடன் இணைந்து நிற்பதால் சர்வதேச சமூகம் அந்த எல்லைக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு முதற்படியாக ‘பன்னாட்டு புலனாய்வு’ என்ற கோரிக்கை இருக்கும். பன்னாட்டு புலனாய்வு விசாரணையில் போர்க் குற்றங்கள் மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்பட்டால், அது, ‘இனப் படுகொலை’ என்ற முடிவுக்குத்தான் இழுத்துச் செல்லும்.

எனவே, போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு விசாரணை என்ற ஒற்றைக் கோரிக்கையை தமிழர்களின் முழக்கமாக முன்வைக்க வேண்டும் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் கோரிக்கைக்கு நாம் வலிமை சேர்க்க வேண்டும். அதற்கு மாறாக இலங்கையின் உள்நாட்டு விசாரணையையே வலியுறுத்துவதாக அமெரிக்கா தீர்மானம் மீண்டும் கூறினால், அதை ஆதரிப்பதும் ஒன்றுதான், எதிர்ப்பதும் ஒன்றுதான். கண்துடைப்பு நாடகமாகவே இருக்கும்.

அமெரிக்காவின் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்துவதாக இருந்தால் அதை ஆதரிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். தீர்மானத்தைக் கொண்டு வருவது அமெரிக்கா என்பதால் எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு சரியாக இருக்க முடியாது. அமெரிக்காவின் வஞ்சகமும் அடாவடியும் ‘பெரிய அண்ணன்’ அணுகுமுறையும் மறுக்க முடியாத உண்மை தான். இதற்க மாறாக இந்தியாவே இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், இந்தியா கொண்டு வருமா என்பதே கேள்வி.

‘காமன்வெல்த் மாநாட்டில் சடங்குத்தனமான எதிர்ப்பைக் காட்டி இந்தியா நடத்திய நாடகத்தை நாடு பார்த்தது. தமிழ் ஈழத்தில் இனப் படுகொலை போர்க் குற்றங்களை இந்தியா ஒப்புக் கொள்வதற்கு பார்ப்பன அதிகார வர்க்கம் அனுமதிக்காது. இந்தியாவில் அதையே காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியா நடத்திக் கொண்டிருக்கும்போது எப்படி ஒப்புக் கொள்வார்கள்? இந்த அரசியல் பின்னணியில் ‘எதார்த்த கள நிலையை’ கவனத்தில் கொண்டுதான் முடிவுகளைத் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகிறது.

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதே இப்போதைக்கு சரியானதாகஇருக்கும்.