(14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம்)

‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை எளிதில் பெறுவதற்கான வாய்ப்பு என்று வெளியில் கூறப்பட்டாலும் இதன் அடிப்படையான நோக்கமே ஒவ்வொருவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்துவதுதான்.

2006 ஆம் ஆண்டு மத்திய திட்டக்குழு, அங்க அடையாளங்களுடன் கூடிய ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை எடுக்கும் திட்டத்தை முன்வைத்து மத்திய தகவல் ஆணையம் வழியாக ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிட்டார்கள். பிறகு 2009 ஆம் ஆண்டில் இதற்காக ஒரு தனி ஆணையத்தை உருவாக்கினார்கள். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய நந்தன் நிலகேணி என்பவர் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். மத்திய அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டு, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றும் அவருக்குக் கீழே ஆலோசனை கூற உருவாக்கப் பட்டது.

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம் அகதிகள், இந்த அட்டையைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்களா வதற்கு முயற்சிப்பதாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வழியாகவே இதை அமுல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதைத் திட்டக் குழு துணைத் தலைவராக இருநத மாண்டே சிங் அலுவாலியா எதிர்த்தார். இருவரும் வெளிப்படையாகவே மோதிக் கொண் டனர். பிறகு 2012இல் ஒரு முடிவு செய்யப்பட்டது. 60 கோடிப் பேர் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வழியாகவும் 60 கோடிப் பேர் ஆணையத்தின் வழியாகவும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இந்தப் பணி மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையின் கீழ் வந்தது.

இந்தியாவில் சட்டவிரோதமாக அகதிகள் குடியேறுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதை அமைச்சர்கள் குழுவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் 2002 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியிலேயே ‘பல்நோக்கு தேசிய அடையாள அட்டை’ என்ற பெயரில் இதைத் தொடங்க முடிவு செய்தார்கள். 1999 ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பிறகு, நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், உளவு அமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. அமைச்சரவை பரிந்துரைத்தது. இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குனரான ஏ.கே.டோவல் என்பவர் அப்போதே இத்திட்டத்தின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். நாட்டின் சட்ட விரோத சக்திகளையும் அந்நியர் ஊடுருவலையும் அடையாளம் காண வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், ஆனால், மக்கள் நலத் திட்டங்களுக்காகவே இத்திட்டம் என்று கூறினால்தான் மக்கள் ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், இத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். தேச முன் னேற்றம் என்பதன் பெயரில் தனிமனித சுதந்திரத்தை விலைபேச முடியாது என்று அவர் கண்டித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு பல் வேறு துறைகளிடமிருந்து நேரடியாக தகவல்களைப் பெறக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த ஆணையத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட் டிலுள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம், உயர்நீதிமன்றத்திலும் விக்ரம் கிருஷ்ணா என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்திலும், 2012இல், கர்நாடக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி புட்டசாமி என்பவர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந் தனர். புட்டசாமி தமது மனுவில் சட்டவிரோதமாக முஸ்லிம் அகதிகள் ஊடுருவி விடுவார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தையே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே ஆதார் அட்டையை கட்டாயமாக்கிய மகாராஷ்டிரா மாநில அரசு நீதிபதிகளேயானாலும், ஆதார் அட்டை இல்லாமல் ஊதியம் வாங்க முடியாது என்று அறிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்தப் பின்னணியில் ஆதாருக்கு இடைக்காலத் தடையை பிறப்பித்தது.

எரி வாயு, உணவுப் பொருள்களுக்கான மான்யங்களை ரொக்கமாக வழங்குவதாகக் கூறும் இத்திட்டத்தின் நோக்கத்தில் இரண்டு ஆபத்துகள் அடங்கியுள்ளன. பொருட்களை வெளிச் சந்தையில் வாங்குவதற்கு கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருள்களின் விலை நிர்ணயம் சந்தைக் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவரப்படுகின்றன. இரண்டா வதாக, ரேஷன் கடைகள் இழுத்து மூடப்படுவதற்கும் வழியமைக்கப்படுகிறது. நீண்டகாலமாக உலகவங்கி இதைத்தான் வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் நந்தன் நீலகேணி தெரிவித்துவரும் கருத்துகள் அதிர்ச்சி யூட்டுபவையாகும். கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் அவர் பேசினார். அப்போது வட அமெரிக்கக் கண்டத்துக்கு பிழைப்புக்காக வந்த அய்ரோப்பியர்கள் பற்றி அவர் குறிப்பிட்டார். கனடா நாட்டில் எல்லீஸ் தீவுக்கு வந்த அய்ரோப்பியர்களை - குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் தங்கள் பெயரை உச்சரித்தனர். அப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள், அவர்களின் தாய்மொழிப் பெயர் அனைத்தையும் நீக்கிவிட்டு, அதிகாரிகளே, ஒரு பெயரை சூட்டி, இனி இதுதான், இந்த நாட்டில் உனக்கான பெயர் என்று அறிவித்தார்கள். நந்தன் இதை நினைவு கூர்ந்து, “ஆதார் - உலகின் மிகப் பெரும் பெயர் சூட்டுவிழா; 21 ஆம் நூற்றாண்டின் எல்லீஸ் தீவு” என்றார். பெயர், இனம், மொழி, தொழில் அடையாளங்களைவிட ஒரு மனிதன் என்ற முறையில் உடலின் தனித்துவமான அடையாளங்கள் பதிவு செய்யப்படும் திட்டமாகும். சோதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் வந்தால், இந்த ‘பயோ மெட்ரிக்’ அளவீடுகளைக் கொண்ட உடலமைப்பைக் கொண்ட மனிதன் நான்தான் என்பதை ஒவ்வொரு வரும் நிரூபிக்க வேண்டும்.

விழிப்பாவை, கைரேகைகளில் மாற்றம் வந்தால், அடையாளங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையத்தின் விதி கூறுகிறது. மாட்டுக்கு சூடு வைப்பதைப் போன்ற அடையாளம் இது. இது ‘ஒற்றைத் தேசிய அடையாளம்’ என்று பெருமையுடன் கூறுகிறார் தேசிய புலனாய்வு வலைப் பின்னலின் தலைவர் ரகுராமன். உள்நாட்டு பாதுகாப்புகளைக் கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட உளவுத் தகவல் வலைப்பின்னல் அமைப்பு இது.

அனைவரின் தொலைபேசி, இணைய சேவை, ரயில்-விமானப் பயணத் திட்டங்கள், கடன் அட்டைகள், வீடு-நிலப் பத்திரங்கள், ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆதாருடன் இணைக்கப்படவுள்ளன.

கிராமப்புற மக்களின் சேமிப்புகளையும் வங்கிகளை நோக்கி இழுத்து, உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை அழித்து, தேசிய நுகர்வுச் சந்தையுடனும் வங்கிக் கடன் சந்தையுடனும் கிராம மக்களை இணைப்பதும் இத் திட்டத்தின் மற்றொரு நோக்கம். கிராம மக்கள் சட்டிப் பானைகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புகளை வங்கிக்குக் கொண்டுவரவேண்டும் என்கிறார், ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன்.

வங்கிகள், கிராமங்களில் கிளைகளைத் திறக்காமல், முகவர்களை கிராமங்களுக்கு அனுப்பி, அவர்களிடம் அட்டைகளை ‘ஸ்வைப்’ செய்யும் கருவிகளை வழங்கி, நடமாடும் வங்கிகளாக மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஆதார்’ பணிகளில் அமர்த்தப்பட்ட அமைப்புகள், இந்தியாவில் திரட்டப்பட்ட ஒவ்வொரு குடிமகன் பற்றிய தகவலையும் அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’வுக்கு அனுப்பி வைக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிவந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த ஆபத்தை சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஜெர்மனியில் இட்லர் ஆட்சியில் யூதர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி, இட்லரின் இனப்படு கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்படும் நிறுவனம் அய்.பி.எம். அமெரிக்க இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள மற்றொரு நிறுவனம் ‘எல்.ஒன் சர்வீசஸ்’. முன்னாள் அமெரிக்க உளவுத் துறை நிர்வாகிகளைக் கொண்டு செயல்படுவது ‘அசென்ச்சர்’ என்ற நிறுவனம். இந்த நிறுவனங்கள் வழியாகத் தான் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவை எதிர்க்கும் கிரீஸ், எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டைகள் அமெரிக்க அரசிடம் வந்து சேர்ந்துவிட்டன என்பதை ‘விக்கி லீக்ஸ்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. மேற்கு வங்க மாநில ஆட்சி சட்டசபை தீர்மானத்தின் வழியாக ஆதார் அட்டைக்கு மாநிலத்தில் தடை விதித்துவிட்டது.

அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் உறுதி செய்யப்படுகின்றன. அங்கே வழக்கப்படும் அட்டைகளோடு அடிப் படைத் தேவைகளையே புறக்கணிக்கும். இந்தியா போன்ற நாடுகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது.. இது போன்ற ‘பயோ மெட்ரிக்’ அடையாளத் திரட்டல் இங்கிலாந்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.  மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடு வோரை அடக்குமுறைச் சட்டங்களில் கைது செய்து சிவில் உரிமைகளை உறுதி செய்யாத மக்களை சந்தேகிக்கக்கூடிய ஆட்சிகளின் கீழ் இத்தகைய கண்காணிப்பு தொழில் நுட்பங்கள் இருப்பது ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும். தமிழ்நாட்டுக் குடிமகனாக இருப்பவர்களை நேரடியாக இந்திய ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ஆதார், அடையாளம் அல்ல; ஆபத்து என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.