பெரியாரியப் பின்புலத்தோடு தமிழகத்தில் பெண்கள் அமைப்பை முதலில் கட்டியவர் ஓவியா. சிறுவயதிலேயே திராவிட இயக்கச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்றளவும் பெரியாரிய நெறியில் வழுவாது வாழ்ந்து வருபவர். அவரை கீற்றுக்காக ‘கருப்புப் பிரதிகள்’ நீலகண்டன் இல்லத்தில் சந்தித்தோம். ஓவியாவுடன் நான், நீலகண்டன் நடத்திய உரையாடலிலிருந்து...

oviyaஉங்களுடைய குடும்ப பின்னணி குறித்து?

என்னுடைய வாழ்க்கை என் தாத்தா பாட்டியிடமிருந்துதான் துவங்குகிறது. தாத்தா ‘சு’ னா ‘ம’ னாக்காரர். அதாவது சுயமரியாதைக் கட்சிக்காரர். தனது முதல் மனைவியை இழந்திருந்த அவர் எனது பாட்டியை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறார். எந்த இயக்கப் பின்ணணியும் இல்லாமலேயே, தன்னியல்பில் சுயமரியாதையைப் பேணுபவராகவும், மூடநம்பிக்கை மறுப்பாளராகவும், பெண் பிள்ளைகளை துணிவுள்ளவர்களாகவும் வளர்த்த சண்முகம் அய்யா அவர்களின் மகளாக வளர்ந்திருந்த எனது பாட்டிக்கு தாத்தா வழியில்தான் சுயமரியாதை இயக்கம் அறிமுகமாகிறது. அதன்பின் தாத்தாவுடன் வாழ்ந்த நாட்களிலும், அவருடைய மரணத்திற்குப் பின்னும் தனது வாழ்வில் பல்வேறு மேடு பள்ளங்களை சந்தித்த எந்த நிலையிலும் ஓர் எளிய ஆனால் தீவிரமான திராவிடர் கழகத் தொண்டராகவே இன்று வரை வாழ்ந்து வருகிறார். சாதி மறுப்புத் திருமணம் மிகப் பெரிய எதிர்ப்பை சந்தித்த அந்த நாட்களில் அதற்காக ஊர் தள்ளி வைத்து விட்ட குடும்பம் எங்களுடையது.

எனவே எனது சமூகம் என்பது முழுமையாக திராவிடர் கழகம், அதன் உறுப்பினர்கள் என்பதாகத்தான் இருந்தது. நெருங்கிய இரத்த உறவினர் தவிர நீண்டநாட்கள் குடும்ப நண்பர்கள், கட்சிக்காரர்கள் இவர்களே உறவு என்று எனக்கு என் குடும்பத்தாரால் அடையாளங் காட்டப்பட்டவர்கள். யாரொருவருடனும் பழகுவதற்கும், உறவு கொள்வதற்கும் அவருடைய ‘சாதி’ அடிப்படையாக இருக்கிற ஒரு சமூகத்தில் நான் பிறந்திருக்கிறேன் என்பது நான் என் வாழ்வின் பிற்காலத்தில் தெரிந்து கொண்ட உண்மையாகவே இருந்தது. சடங்குகள், பண்டிகைகள், திருவிழாக்களைப் புறக்கணித்த எங்கள் குடும்பம் சடங்கு, பண்டிகைகள் மறுப்பு, கடவுள் வழிபாடு மறுப்பு, ஆடம்பரம் மறுப்பு என்ற அடையாளங்களின் சுருக்கக் குறியீடாக ‘கறுப்புச் சட்டைக்காரர்’ குடும்பமாக இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த சமூகம் எங்களை விவாதத்திற்கு சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால் எனது காலத்தில், அந்த சீண்டல் எங்கள் தாத்தா காலத்திலிருந்தது போல் பாம்பின் சீறலாக இல்லாமல் நான் என்னை வளர்த்துக் கொள்ள உதவிய கேள்வித்தாளாகவே இருந்தது.

சனாதன முறைப்படி வளர்க்கப்பட்ட மாணவர்களோடு தான் உங்கள் பள்ளிப்படிப்பு இருந்திருக்கும். அவர்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?

சிறுவயதிலேயே கடவுளை மறுத்து வாழ்வது என்பதே உங்களுக்கு எதிர்ப்புரட்சிக்கான சக்தியைக் கொடுக்கும். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களே என்னை விமர்சிப்பார்கள். கடவுளை மறுத்துப் பேசினால் கடவுள் உன்னை தண்டித்து விடுவார், நீ நரகத்துக்கு சென்று விடுவாய் என்று என்னை பயமுறுத்துவார்கள். இப்படி சமுதாயம் ஒருபக்கம் பயமுறுத்த, கடவுளை மறுக்கும் குடும்பம் ஒருபுறம் இருக்க இந்தப் போராட்டங்களை நான் என்னுடைய ஐந்து வயதிலேயே சந்தித்திருக்கிறேன்.

இதை என்னுடைய தாத்தாவிடமும் பேசியிருக்கிறேன். கடவுளை மறுக்காமல் சமுதாயப்பணிகளை ஆற்றுவதை மட்டும் செய்ய முடியாதா என்று கேட்டிருக்கிறேன். கடவுளை மறுக்காமல் மற்ற எந்த வேலையைச் செய்வதாக சொல்வதும் போலியானது என்று அவர் கூறுவார். அதன்பிறகு என்னுடைய ஆசிரியர்கள், சகமாணவர்களுக்கான பதிலை நானே தேட ஆரம்பித்தேன். இதுதான் என்னுடைய தர்க்க ரீதியான சிந்தனையை வளர்த்தெடுக்க உதவியது.

அவ்வாறு எதிர் வாதம் செய்வது என்றாகிப் போனபின் வாழ்க்கையே விவாத மேடையாகிப் போனது. எந்த இடத்தில் நாம் கேள்விக்குள்ளாவோம் என்று தெரியாது. அது குழாயடியாக இருக்கலாம், அல்லது பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகள் மத்தியில் அமர்ந்திருக்கும் ஜெபக் கூட்டமாக இருக்கலாம். இதில் ஆசிரியர்களுடன் சந்தித்த விவாதங்கள் ஒன்று அச்சுறுத்தலாக அமையும். இல்லை வியப்பும் பாராட்டுமாக அமையும். இருப்பினும் ஆசிரியர்களிடம் முரண்படுவது கொஞ்சம் சிக்கலாகதான் இருந்தது. பிற்காலத்தில் ஓர் அரசு அலுவலகத்தின் மேலதிகாரிகளிடம் மற்றும் நிர்வாகத்துடன் முரண்படுவதற்கான மனப்பயிற்சியை எனது பள்ளி அனுபவங்களிலிருந்துதான் நான் பெற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஓர் ஒட்டுமொத்த சமூகத் திரட்சிக்கு நடுவே நின்று கொண்டு அவர்களைனைவரும் கொண்டிருக்கும் ஓர் ஒருமித்த கருத்துக்கு மாற்றுக் கருத்தை ‘இதுதான் என்னுடைய கருத்து’ என்று தக்க வைத்துக் கொள்வது ஒரு போராட்டத்தின் மூலமே சாத்தியமாகிறது.

நமது குரலை எழுப்ப முடியாமல் போகிற நேரங்களில் நமது மவுனம் கூட அந்தப் போராட்டத்தைத்தான் தொடர்ந்து நடத்துகிறது. நான் படித்த ஓ.சி.பி.எம் (மதுரை) பள்ளியில் அய்நூறு அறுநூறு மாணவர்கள் கூடியிருக்கும் ஜெபக் கூட்டங்களில் சில ஆசிரியர்கள் நாத்திகத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்கிற வேளையில் என்னைக் குறிப்பிட்டு எனக்குக் கடவுள் நல்ல புத்தியை தர வேண்டும் என்று சத்தமாக ஜெபித்திருக்கிறார்கள். சிலர் சபித்திருக்கிறார்கள். ஆனால் எனது குடும்பமும் இயக்கமும் என்னை இது போன்ற விசயங்களை எப்படி எதிர்கொள்வது என்று சரியாகவே வழிநடத்தின. இந்த முரண்பாடுகளை எனது கல்வியை பாதிக்காத அளவில் சந்திக்க வேண்டும் என்று ஆசிரியர் வீரமணி அவர்களே எனக்கு அறிவுரை கூறி வழிநடத்தியதுண்டு. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் மவுனம் காத்திருப்பேனேயொழிய எனக்கு ஒவ்வாத கருத்தோடு உடன்பட்டதில்லை. அதே நேரத்தில் என்னுடைய கல்வி, பேச்சு, பிற நன்னடத்தைகள் மூலமாக ஆசிரியர்களுக்கு நான் ஒரு நல்ல மாணவியாகவே இருந்தேன்.

உங்களுடைய சிறுவயதில் நீங்கள் பெரியாரைச் சந்தித்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களை சொல்ல முடியுமா?

அருப்புக்கோட்டைக்கு பெரியார் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில் தான் தங்குவார். அதனால் பெரியாருக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமான குடும்பம் என்னுடையது. பெரியார் பேச வருகிற கூட்டங்களில் பெரியார் மேடைக்கு வரும் முன்பாகவே குடும்பமாக அவர் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று வணக்கம் தெரிவித்துக் கொள்வோம். கூட்டத்தின் போது மேடைக்குச் சென்று பெரியாருக்கு அருகாமையில் அமர்ந்து கொள்வதும் அவர் என்னை அடையாளங் கண்டு எனது குடும்பத்தாரை விசாரிப்பதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றன. ஆனால் விபரமிறிந்த பின் உளமார்ந்த தலைவர்களாக நான் ஏற்றுக்கொண்டு மிகப் பெரிய அன்புடனும் மரியாதையுடனும் அதே போல் அவர்களால் நன்கு அறியப்பட்டவளாகவும் பழகியது மணியம்மையார் அவர்களுடனும் அதன்பின் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும்தான்.

ஒருமுறை மதுரையில் பெரியார் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் வந்து விட்டது. பெரியார் இன்னமும் வரவில்லை. ஒரு பெஞ்சில் என்னை உட்கார வைத்து என்னை பேசச்சொன்னார்கள். எனக்கு அப்போது ஒன்பது வயதிருக்கும். சுற்றிலும் அறுபது, எழுபது பேர் அமர்ந்து கொண்டு நாத்திகம், கடவுள்மறுப்பு தொடர்பாக என்னிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். நான் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பெரியார் வந்துவிட்டார்.

தன்னுடைய கருத்துக்களை ஒரு பெண் அதுவும் சிறுமி பேசுவதைக் கேட்டதில் அய்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அப்போதெல்லாம் அய்யாவோடு ஒரு புகைப்படம் எடுப்பதற்கு ஆறு ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் என்னை தன்னருகில் அமர்த்திக்கொண்டு இலவசமாக ஒரு போட்டோ எடுக்கச் சொன்னார். அய்யா அப்படி இலவசமாக போட்டோ எடுக்கச் சொல்வது இலேசுப்பட்ட விஷயமல்ல.

சிறுவயதிலேயே கழகப் பேச்சாளராக இருந்திருக்கிறீர்கள். கழகத்தில் உங்கள் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

மதுரை நரிமேடு பகுதியில் ஒவ்வொரு தீபாவளிக்கும், தீபாவளி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். அப்படி ஒரு கூட்டத்தில்தான் நான் முதன்முறையாகப் பேசினேன். அதற்கு முன்பாகவே கூட்டங்களில் கோஷமிடுவது, ஊர்வலங்களில் முழக்கமிடுவது என்பன என்னுடைய பொதுவாழ்வு பயணத்தின் துவக்க கால செயல்பாடுகளாக இருந்தன. இவை எல்லாவற்றையும் வெறும் பாராட்டுக்காக மட்டுமின்றி உணர்வுப்பூர்வமாக செய்து வந்தேன்.

பெரியார் ராமரை செருப்பால் அடித்ததாக சொல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கூட்டத்திலும் நான் இருந்தேன். பொதுவாகவே மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் கடவுளின் படங்களில் நாத்திக வாசகங்கள் எழுதி எடுத்து வருவார்கள். அதே போல் சேலத்தில் நடைபெற்ற அந்தக்கூட்டத்திலும் இராமர் உருவப்படம் எடுத்து வரப்பட்டு மூடநம்பிக்கை, இராமர் வழிபாடு எதிர்ப்பு முழக்கங்களோடு வந்த அந்த ஊர்வலத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தெருவின் இருமருங்கிலும் நின்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தீடீரென நாங்கள் (பெண்கள்) நடந்து வந்து கொண்டிருந்த பகுதியில் யாரோ சிலர் செருப்பெடுத்து எறிந்தார்கள். அது ஊர்வலத்தின் முன்பகுதியாகும். எங்களுக்கு சற்று பின்தங்கிதான் பெரியார் அமர்ந்திருந்த ஊர்தி வந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தின் மீது செருப்பு எறியப்பட்டதும் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த செருப்பையே எடுத்து இராமர் உருவத்தை அடிக்கத் துவங்கினார்கள். இது எந்தவிதத் திட்டமுமின்றி மிகவும் எதிர்பாராமலும் தன்னிச்சையாகவும் திராவிடர் கழகப் பெண்கள் செய்த செயலாகும். ஆனால் அந்நாட்களில் ‘சோ’ இதனை தி.மு.க வைத் தேர்தலில் தோற்கடிக்கும் திட்டத்துடன் இராமரை பெரியார் செருப்பாலடித்தாகவும் கலைஞர் அதனைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்ததாகவும் தமிழ்நாடு முழுக்க சுவரொட்டி அடித்து ஒட்டினார். ஆனாலும் தி.மு.க பெருவெற்றி பெற்றது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க ஊர்வலங்களில் மிகச் சிறுவயதிலேயே உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்ட அனுபவங்கள்தாம் எனது சிறுவயது வாழ்க்கையாக இருக்கிறது.

வீட்டின் முன் கரும்பலகையில் சிந்தனையாளர்களின் மேற்கோள்களை எழுதி வைப்பது (இதற்காகவும் பள்ளியில் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் உண்டு), துண்டறிக்கைகள் விநியோகிப்பது, கட்சிக் கூட்டங்களில் புத்தகம் விற்றுக் கொடுப்பது இது போன்ற நடவடிக்கைகளை மிக மிக உள்ளார்ந்த ஈடுபாட்டோடு எனது இயக்க நடவடிக்கைகளாக அந்த வயதில் நான் மேற்கொண்டிருந்தேன். வெறும் பேச்சாளராக மட்டும் வளர நான் விரும்பவில்லை. அந்தப் பருவத்திலேயே நானும் பாட்டியும் பல்வேறு சிற்றூர்களில் கழகத்தின் கிளைக் கழகங்களை வாசக சாலைகளை திறந்து வைக்க சென்றிருக்கிறோம். இத்தகைய செயல்பாடுகளுக்கு பாட்டியே என்னை அழைத்துச் செல்வார். தாத்தா தனது உடல்நிலை காரணமாய் வீட்டிலிருந்தபடியே எங்களை அனுப்பி வைப்பார். அன்றைய திராவிடர் கழகத்தில் என்னை அறியாதவர் இருந்திருப்பது மிக அரிது. அன்று அவர்களின் செல்லப்பிள்ளை நான். நான் சென்னையில் படிக்க வந்தபோது சென்னை மகளிர் பாலிடெக்னிக்கில் எனக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தாம். என்னுடைய விடுதியில் கார்டியனாக முதலில் ஆசிரியர் அவர்களின் பெயர்தான் போடப்பட்டிருந்தது.

என்னுடைய பதினாலு, பதினைந்து வயதுகளில் இருந்தே திராவிடர் கழகம் சார்பில் வெளியூர்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேச ஆரம்பித்தேன். விடுதலை பத்திரிகையில் பேச்சாளர் சுற்றுப்பயண விவரத்தில் என்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்தது.

என் சிறு வயதிலேயே கறுப்பு சட்டை அணிவது என்பதை ஒரு பெருமிதமாகக் கருதினேன். நான் மட்டுமல்ல அதை அணிந்த அத்தனை பேருக்கும் அந்த எண்ணம்தான் இருந்தது. அப்போது கறுப்புச்சட்டை என்றாலே அது பெரியார் கட்சிதான் என்ற நிலை இருந்தது. அதற்குப் பிறகு திட்டமிட்டு நடைபெற்றதா எனத் தெரியவில்லை, சபரிமலை போகிறவர்களும் கறுப்புச் சட்டை அணிய ஆரம்பித்தார்கள். அதற்கு முன்புவரை அவர்கள் காவியுடைதான் அணிவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை கறுப்புச் சட்டை என்பது பெரிய சமூக அங்கீகாரமாக கருதப்பட்டது. ஏதாவது முன்பின் தெரியாத இடத்திற்குச் செல்லும்போது அங்கு ஒரு கறுப்புச் சட்டைக்காரரைப் பார்த்து விட்டால் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் சிறுவயதில் கறுப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு சினிமா தியேட்டருக்கு செல்லக் கூட கூச்சப்படுவேன், ‘இந்த சட்டையைப் போட்டுக் கொண்டு கேளிக்கைக்குச் செல்வதா?’ என்று. அப்படி உணர்வுப்பூர்வமாக கறுப்புச் சட்டைக்கு மரியாதை கொடுத்தோம். ஆனால் இன்று அந்த அடையாளம் நீர்த்து சிதைந்து போய்விட்டது வருத்தமளிக்கிறது.

இயக்கத்தில் இருக்கும்போதுதான் உங்கள் காதல் திருமணம் நடைபெற்றது... இயக்கம் தான் உங்களையும் வள்ளிநாயகத்தையும் இணைத்ததா? இந்தக் கலப்பு மணத்திற்கு உங்கள் இருவர் வீட்டிலும் ஆதரவு இருந்ததா?

என்னுடைய அப்பா எங்கள் திருமணத்தை எதிர்த்தார். அதற்கு முன்னரே குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நானும், பாட்டியும் அப்பாவை விட்டுப் பிரிந்திருந்தோம். அதன் தொடர்ச்சியாகத் தான் எங்கள் திருமணத்தை அப்பா எதிர்த்தார். வள்ளிநாயகத்தை நான் சந்திக்கும்போது அவர் திராவிடர் கழகத்தில் மிகப்பெரிய ஒரு பொறுப்பில் இருந்தார். சில பிரச்சனைகளால் அவர் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் எங்கள் திருமணத்தையொட்டி இயக்கமும் எங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தது.

இந்த சூழ்நிலையில் இயக்கத்தில் என்னுடைய இடம் என்ன என்பதே கேள்விக்குறியானது. வள்ளிநாயகத்தோடு தொடர்புடைய யாரும் இயக்கத்தோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என இயக்கம் உத்தரவிட்டது. இதனால் நான் மறைமுகமாக இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். சிறுவயதிலிருந்தே இயக்கம் தான் குடும்பம் என்று இருந்து விட்டு திடீரென விசாரணை கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டதன் வேதனை எனக்கு இன்றும் உண்டு.

அதன்பிறகு உங்கள் செயல்பாடுகள் என்னவாக இருந்தது?

இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு வள்ளிநாயகத்தின் செயல்பாடுகளின் நிழலாகத்தான் நான் இருந்தேன். எங்கள் இருவருக்குமான பொருளாதார நெருக்கடி வேறு இருந்தது. இருவருக்கும் ஆதரவு இல்லை. அன்றாட வாழ்க்கையே பெரிய சுமையாகவும், அதை எதிர்கொள்வதே வாழ்க்கையாகவும் ஆகிப்போனது. அதனால் வேலைக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு வேலை கிடைத்தது.

இதற்கிடையில் குழந்தை, குடும்பம் என மேலும் மூன்றாண்டுகள் ஓடிப்போனது. ‘என்னையும் இந்தக் குடும்ப அமைப்பு இப்படி ஒரு சராசரி வாழ்க்கையில் தள்ளிவிட்டதே’ என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்நேரத்தில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த தோழர் முத்துலிங்கம் மேற்கத்திய பெண்ணிய நூல்கள் சிலவற்றை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே பெரியாரின் பெண்ணியக்கருத்துக்களோடு வளர்ந்த நான் இந்தப் புதிய பெண்ணியக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டபோது தான் ‘நான் மீண்டும் வெளிப்பட வேண்டும், செயல்பட வேண்டும்’ என்ற அழுத்தம் ஏற்பட்டது.

அதன்பிறகு தான் நாத்திகம், சாதிய விடுதலை போன்றவற்றை விட மிக அழுத்தம் கொடுத்து பெண்ணிய விடுதலையைப் பார்க்க ஆரம்பித்தேன். மற்ற எல்லாத்தளங்களையும் உள்ளடக்கிய தளமாக பெண்ணியத்தளம் இருந்தது.

oviyaஇது அமைப்பு ரீதியான செயல்பாடாக மாற ஆரம்பித்தது எப்போது?

அப்போது நான் மகேந்திரகிரி ISRO-வில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து கொண்டே என்ன மாதிரி செயல்படுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இந்த சமூகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டின் மீதும் எதிர்க்குரல் எழுப்ப வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. ஏற்கனவே இருக்கிற அமைப்பில் சேர்ந்து செயல்படுவதை விட நாமே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்களுடன் சேர்ந்து நாகர்கோவிலில் ‘மகளிர் விடுதலை மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். இது ஒன்றுதான் தமிழ்நாட்டில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து கட்டிய பெண்கள் அமைப்பு.

இந்த அமைப்பில் என்னைத்தவிர மற்ற நண்பர்கள் எந்தவிதமான இயக்கப் பின்னணியும் இல்லாதவர்கள். அதில் சிலர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகக் கூட இருந்தார்கள். ஆனால் எல்லோரும் ‘பெண்விடுதலை, சாதிஒழிப்பு’ என்ற தளங்களில் ஒன்றுபட்டோம். தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், செயல்பாடுகளின் முடிவில், பெண்விடுதலை அடைய வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டுமானால் பார்ப்பானை எதிர்க்க வேண்டும், இது எல்லாவற்றுக்கும் அடிப்படை கடவுள் - எனவே கடவுளை மறுத்துப் பேச வேண்டும் என்ற நிலைக்கு வந்தார்கள்.

எங்கள் அமைப்பு சார்பாக கூட்டங்கள் நடத்துவதற்கு ஓர் இடம் வேண்டும் என்ற நிலைவந்தபோது நாகர்கோவில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் சங்கரநாராயணன் தான் தன் கட்டிடத்தை இலவசமாக எங்களுக்குக் கொடுத்தார். ‘புதிய குரல்’ என்ற சிறிய பத்திரிகையைத் தொடங்கினோம். தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தினோம்.

அந்த நேரத்தில் தான் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. ஒரு பெண் கனரக ஓட்டுனர் பயிற்சி எடுத்து அதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளார். அவருக்கு வேலை கிடைக்குமா? என்று செய்தி வந்திருந்தது. அப்போது தமிழக அரசு மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளித்திருந்தது. ஆனால் தகுதியுள்ள ஒரு பெண்ணுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அந்தப் பெண்ணை நான் தேடிச் சென்றேன்.

விவாதிப்பது, பேசுவது என்றிருந்த எங்கள் இயக்கம் ஒரே பாய்ச்சலாக போராட்ட தளத்திற்கு மாறியது அப்போது தான். அந்தப் பெண்ணுக்கு ஓட்டுநர் வேலை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாகப் போராடினோம். அந்தப் பெண்ணை பேருந்து ஓட்ட வைத்து ஊர்வலம் நடத்தினோம். இதற்கிடையில் எங்கள் போராட்டத்தால் அந்தப் பெண்ணுக்கு ஓட்டுநர் வேலை கிடைத்தது. ஆனால் அந்தப் பெண் ‘இது ஜெயலலிதாவின் கருணையால் கிடைத்தது’ என்று பேட்டி கொடுத்தார்.

நான் நாகர்கோவிலில் இவ்வாறு இயங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் வள்ளிநாயகம் பெரும்பாலும் வெளியூர்களிலேயே இயங்கிக் கொண்டிருந்தார். குறிப்பாக அப்போது அவர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களிடம் நெருக்கமாக இருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் துவக்க காலமான அப்போது மருத்துவர் அவர்கள் பெரியார் இயக்கத்தின் தொடர்ச்சியாக தான் இயங்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். பெரியார் இயக்க சிந்தனையாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும் அவரோடு மிகவும் அணுக்கமான உறவு கொண்டிருந்தார்கள். மருத்துவர் மீது வள்ளிக்கு தனிப் பிரியம் கடைசி வரையிலும் இருந்தது. எனது இயக்க நடவடிக்கைகள் முதிர்ச்சியடைந்து வருகிற வேளையில் அவற்றை ஒரு வெகுமக்கள் அமைப்போடு இணைந்து நடத்த வேண்டும் என்று என்னை வழிநடத்தி மருத்துவர் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் வள்ளி.

அரசியல் கட்சி சார்பற்ற தனித்த பெண்கள் அமைப்பு கட்ட வேண்டியே செயல்பட விரும்புவதாகவும் அன்று செயல்பட்டுக்கொண்டிருந்த பெண்கள் இயக்கத்திலிருந்து பல்வேறு வகையில் மாறுபட்ட செயல்திட்டங்களோடு அவ்வியக்கம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் எனது விருப்பத்தினை அவரிடம் நான் தெரிவித்தேன். அவர் அதனை ஆதரிப்பதாக முன்வந்து அவரைப் புரவலராகக் கொண்டு தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் சென்னையில் துவங்கப் பெற்றது. தோழியர் சிவகாமி வின்செண்ட் தலைவராகவும், நான் பொதுச்செயலாளராகவும், திருப்பூர் தமிழ்ச்செல்வி பொருளாளராகவும் பொறுப்பேற்றோம். மற்றும் திண்டுக்கல் வசந்தி கணேசன், கோவை புவனா, மதுரை வெண்மணி குமரி விஜி, டார்வி போன்றோர் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். நாங்கள் அதுவரை நடத்தி வந்த மகளிர் விடுதலை மன்றம், புதிய குரல் வாசகர் வட்டம் போன்ற அமைப்புகளை முழுமையாக இதில் ஈடுபடுத்தி தமிழக அளவில் செயல்பட வேண்டும் என்று நாங்கள் முன்வந்தோம்.

ஆனால் நாகர்கோவில் அளவில் இயங்கி வந்த தோழர்கள் முக்கியமாக அரசு அலுவலர்கள் அவர்களது எல்லையை மீறிய செயல்பாடுகளாக இவற்றைக் கருதத் துவங்கினார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அளவில் அவர்கள் ஒத்துழைப்பு தந்தே வந்தார்கள். இயக்கம் மதுரை, கோவை, திருச்செந்தூர் என ஓரளவுக்கு பரவலாக்கம் பெறவே செய்தது. ஆனால் பெரிய அளவில் வெகுமக்கள் இயக்கத்திலிருந்து எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. உண்மையில் திராவிடர் கழகப் பின்னணியில் இருந்து வந்த தோழர்களே எங்களது பெரும்பான்மை பலமாக இருந்தார்கள். கோவை சாந்தகுமார், மதுரை முருகானந்தம், இராமகிருட்டிணன், மணிமாறன், திருச்சி அரசெழிலன், வி.சி வில்வம், திண்டுக்கல் இராசா, பொள்ளாச்சி நசன் (நினைவிலிருந்து சொல்கிறேன் இது முழுமையான பதிவு அல்ல) போன்றோர் எல்லோருமே பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவர்களே.

மத எதிர்ப்பை முதன்மைப்படுத்திய தமிழினம் என்ற அடையாளத்தை தங்கள் இயக்கப் பெயரிலேயே கொண்டு வந்த முதல் பெண்கள் இயக்கம் எங்களுடையதுதான். அரசியல் ரீதியாக தமிழினம் என்ற தளத்தை பெண்கள் கைக்கொள்ள வேண்டும் என்றும் அடிப்படையில் பாலியல் ரீதியான வேலைப் பிரிவினையை எதிர்த்து செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்றும் திருமண ஏற்பாடுகளில் சாதி ஒழிப்பை, தாலி ஒழிப்பை அடிப்படைத் தேவையாக்க வேண்டுமென்றும் நாங்கள் திட்டங்கள் வகுத்து செயல்பட்டோம்.

அதே நேரத்தில் மண்டல் கமிஷன் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. அது தொடர்பாக பல்வேறு சாதித்தலைவர்களையும் சந்தித்து அவர்களுக்கு மண்டல் கமிஷன் குறித்து புரிய வைத்து பெரிய அளவில் பொதுக்கூட்டம் ஒன்றை நாகர்கோவிலில் நடத்தினோம். இதுபோன்ற செயல்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது.

நீங்கள் செயல்பட்ட கன்னியாகுமரியாகட்டும், கோயம்புத்தூராகட்டும் ஆர்.எஸ்.எஸ். வலுவாக உள்ள இடங்கள். உங்கள் செயல்பாட்டுக்கு அவர்கள் இடையூறாக இருந்தார்களா?

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இருந்து வித்தியாசமான ஒரு மாவட்டம். ஒரு பெண்ணும், ஆணும் பேசுவதைக் கூட ஜீரணித்துக் கொள்ள முடியாத மக்கள் அவர்கள். எனக்கு அதுமாதிரியான அனுபவங்கள் அங்கு ஏற்பட்டிருக்கின்றன. மாலை ஆறுமணிக்கு அலுவலகத்தை முடித்து விட்டு அதற்குப் பின்னர் நாகர்கோவிலுக்கு ஊழியர்களை இறக்கிவிடச் செல்லும் எங்கள் அலுவலக பேருந்துகளில் இயக்க வேலைகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வோம். அங்கு எங்கள் பணிகளை முடிக்க இரவு எட்டு, ஒன்பது மணியாகி விடும்.

பொதுவாக இதுபோன்ற பணிகளுக்குச் செல்லும்போது அவர்கள் மத்தியில் நான் ஒருத்திதான் பெண். மற்ற நண்பர்கள் அனைவரும் ஆண்கள், பெரும்பாலும் திருமணமாகாதவர்கள். எனக்குத் திருமணம் முடிந்து கணவர் வேறு ஊரில் இருக்கிறார். எங்களை எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவதூறான பேச்சுக்கள் எப்போதும் எங்களை வட்டமிட்டபடியே இருக்கும்.

ஒருமுறை நானும், நண்பர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு நாகர்கோவில் திரும்புவதற்காக பேருந்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அதைப் பார்த்த நடத்துனர், ‘ஒரு பெண்ணும், பல ஆண்களும் சேர்ந்து சிரித்துக் கும்மாளமடிப்பதற்கு வெட்கமாக இல்லையா?’ என்று நேரடியாகவே எங்களைத் திட்ட ஆரம்பித்து விட்டார். எனக்கு அவர் திட்டுகிறார் என்பதை விட எங்களை இப்படித் திட்டுவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பது தான் ஆச்சரியமாக இருந்தது. அந்த மாவட்டத்தைத் தவிர வேறு எங்காவது ஒரு நடத்துனருக்கு இப்படிப்பட்ட சமூக அங்கீகாரம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

அதேபோல் இன்னொரு சம்பவம். வேலை முடிந்து நாகர்கோவில் ஒழுகினசேரி பேருந்து நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம், ‘ஒன்பது மணிக்கு பஸ் ஸ்டாண்டுல நிக்கிறியே, ஒன்பது மணி வரைக்கும் ஒரு பெண்ணுக்கு என்னம்மா வேலை?’ என்று நேரடியாகவே கேட்டார். ‘உங்களுக்கு ஒன்பது மணி வரைக்கும் என்ன வேலையோ, அதே போலத்தான் எனக்கும் ஏதோ வேலை’ என்று பதில் சொன்னேன். நான் அங்கு இருந்த வரைக்கும் அந்த மக்களால் என்னை ஜீரணிக்கவே முடியவில்லை.

உங்கள் மாநில அளவிலான செயல்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?

மதுரையில் எங்களுடைய முக்கியமான செயல்பாடாக எங்களது ஒரு போராட்டத்தைக் குறிப்பிடலாம். இந்து அறநிலையத்துறையின் ஒரு குறிப்பிட்ட பணியிடத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று அப்போது ஒரு சட்டம் இருந்தது. பெண்களை வேலைக்கு அனுப்பினால், மாதவிடாய்க் காலங்களில் கோயில் தீட்டாகி விடும் என்பதற்காக அப்படிச் செய்திருந்தார்கள். இதை எதிர்த்து நாங்கள் ஓர் ஊர்வலம் நடத்தினோம். அதில் முழுக்க முழுக்க மாதவிடாய் சம்பந்தமான முழக்கங்களை நாங்கள் எழுப்பினோம். ‘ஆண்கள் மல,ஜலம் கழிப்பது தீட்டாகாது என்றால் பெண்களின் மாதவிடாய் மட்டும் எப்படித் தீட்டாகும்’ என்று ஊர்வலம் முழுக்க கேள்வி எழுப்பினோம். மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஊர்வலம் அது.

சுவரொட்டி கிழிப்பு, வரதட்சணை எதிர்ப்பு என்று பெண்விடுதலை இயக்கங்கள் நடத்தும் வழக்கமான போராட்டங்களில் இருந்து நாங்கள் வேறுபட்டோம். அதனால் தானோ என்னவோ எங்களை எந்த பெண் விடுதலை இயக்கமும் ஆதரிக்கவில்லை. நான் இன்றிருக்கிற பெண் விடுதலை இயக்கங்களுக்கு வைக்கும் வேண்டுகோள் இதுதான். வரும் தேர்தலுக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு தரவில்லையென்றால் எந்த ஆணுக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று முழக்கம் எழுப்புங்கள்’.

என் கையில் இயக்கம் இல்லை, இருந்தால் நான் இதைத்தான் செய்திருப்பேன். தொடர்ந்து என்னுடைய இந்தக் கருத்தை நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால் எந்த பெண்கள் அமைப்பும் இதற்கு ஆதரவு தரவில்லை. நாங்கள் பதினைந்து பேர் முனைப்போடு செயல்பட்டபோதே எங்களால் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது என்றால் தமிழகம் முழுவதும் குறைந்தது ஐம்பது பெண்கள் முழுநேரம் வேலை செய்தால் பெண்கள் வாழ்க்கையில் நிச்சயம் பல மாற்றங்களை கொண்டு வரமுடியும்.

உங்கள் இயக்கம் தொடர்ச்சியாக செயல்பட முடியாமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

இயக்கத்தின் எல்லாப் பொறுப்புகளிலும் பெண்களை செயல்பட வைக்க எங்களால் முடியவில்லை. அத்தகு சமூக ஆளுமையோடு பெண்கள் விளங்கவில்லை என்பதும் ஒரு காரணம். ஆண்களை நம்பியே இயக்கத்தின் பல பொறுப்புகள் இருந்தன. இன்றைக்கு பொருளாதார தற்சார்புடைய பெண்கள் முன்வந்து ஒரு பெண்கள் விடுதலை இயக்கத்தை கட்டமைக்க முடியும். அன்று எங்களிடம் அத்தகைய பொருளாதார பலம் இல்லை. இதெல்லாம் தான் எங்கள் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெற முடியாமல் போனதற்கான காரணங்கள்.

திராவிட இயக்க மேடைகளில் பாலின சமத்துவம் பேசும் தோழர்களின் வீடுகளில் அது நடைமுறையில் இருக்கிறதா?

என்னைப் பொறுத்தவரை பாலின சமத்துவம் என்பது பெண்கள் போராடி பெற வேண்டிய ஒன்று தான். பாலின சமத்துவம் என்பது பெரியாருடைய காலத்தில் பெரியாரால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது. பெரியார் சொன்னதற்காக பெண் குழந்தைகளுக்கு முடி வளர்க்கக் கூடாது போன்ற மாற்றங்கள் நடைமுறையில் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில் அதை தொடர்ச்சியாக செயல்படுத்த முடியவில்லை. காரணம் பெரியார் சொன்ன மாற்றங்கள் சாராம்சமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெரியாரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கொண்டு வரப்பட்டது. பெரியார் சொன்னதை உள்வாங்கி செயல்படுத்தியவர்கள் 25 சதவீதம் பேர் என்றால், பெரியார் சொல்கிறார் என்பதற்காக செய்தவர்கள் 75 சதவீதம் பேர். ஆனால் அது அப்படித்தான் நிகழும்.

பெரியார் சொன்னது போல், ‘ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வாழும் இந்தக் குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு’ நீங்கள் எந்த பாலின சமத்துவத்தையும் கொண்டு வர முடியாது.

குடும்ப அமைப்பு தகர்க்கப்படுவது தான் பெண் விடுதலைக்கு முன்நிபந்தனை என்று சொல்ல முடியுமா?

பெண் விடுதலையில் அடுத்த நிலைக்குப் போவதற்கு இந்தத் தலைமுறையைச் சேர்ந்த முற்போக்கான ஆணினுடைய அரவணைப்புள்ள குடும்ப அமைப்பு பெண்ணுக்குத் தேவைப்படுகிறது. ஒரே பாய்ச்சலாக ஆண்கள் இல்லாமல் ஒரு அமைப்பை பெண்கள் ஏற்படுத்தி விட முடியாது. ஆனால் பெண் விடுதலை என்ற பாதையின் ஊடாக இந்தக் குடும்பம் என்ற அமைப்பு தகர்ந்து விடும் என்பது என்னுடைய கருத்து.

அதே நேரத்தில் குடும்பத்தைத் தகர்ப்பது தான் உங்கள் இலக்கா என்று கேட்டால் நிச்சயமாக நான் இல்லை என்று தான் சொல்வேன். ஒரு சில பெண்கள் அப்படி வாழ்ந்து காட்டலாம். ஆனால் அவர்களால் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி விட முடியாது. அதை ஆண்களும், பெண்களும் இணைந்து தான் உருவாக்கிக் காட்ட முடியும். குடும்பம் சிதைவது என்பது பெண்ணின் நன்மைக்காக மட்டுமல்ல, அது இருபாலாருக்குமான நன்மைக்கானது.

குடும்ப அமைப்பு சிதைவது ஆண்களுக்கு எப்படி நன்மை தருவதாக இருக்க முடியும்?

பெண்ணை அடிமையாக வைத்திருப்பதே ஆணுக்கு ஒரு சுமைதானே! இந்தக் குடும்ப அமைப்பில் ஆண்களும் நிம்மதியாக இல்லை. தான் தலைவனாக இருக்கிறோம் என்ற வெற்றுப் பெருமிதத்தை தவிர வேறு என்ன அவனுக்கு இருக்கிறது? எனவே குடும்பம் சிதைவது ஆணுக்குமான விடுதலையாகத் தான் இருக்க முடியும்.

நீலகண்டன் : உளவியல் பூர்வமாக இச்சைகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தித்தான் இந்தக் குடும்ப அமைப்பை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவின் முதலாளித்துவ சிதறடிப்பில் இவையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்திய சாதிய அமைப்பில் இவையெல்லாம் கட்டிக் காப்பாற்றப்படுகிறது. சமூக விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள் கூட இதைப்பற்றி எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

90களில் குடும்ப அமைப்பு உடைவது பற்றி ஒரு கருத்து நிலவியபோது குடும்பத்தை ஜனநாயகப்படுத்துவது என்ற முழக்கத்தை இடதுசாரிகள் முன்வைத்தனர். ஆனால் எந்தக் குடும்பமும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அது ஒரு துயரமிக்க அமைப்பாகவே இன்றும் தொடர்கிறது.

பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்தும் சமத்துவ ரீதியாக முன்னேற்றமடையாததற்குக் காரணம் என்ன?

பெண்களின் பொருளாதாரத்துக்கான வாய்ப்பை இந்த சமுதாயம் வழங்குகிறது. ஆனால் அவர்களின் சுதந்திரத்தை அவர்களே தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் வேலை பார்க்கிறேன், இந்தச் சம்பளம் என்னுடையது என்று எண்ணும் மனவலிமை அவர்களுக்கு இல்லை. அவளுடைய சம்பளம் குடும்பத்திற்குப் போகிறது, குடும்பம் ஆணின் தலைமையில் இருப்பதால் ஆணுக்குச் செல்கிறது. அதையும் மீறி தான் இந்தப் பொருளாதார முன்னேற்றம் பெண்களுக்கு பெரிய பலத்தை தந்திருக்கிறது.

எத்தனையோ படிக்காத தாய்மார்கள் தங்கள் பெண்களிடம் இப்படிப் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன். ‘நாங்க தான் படிக்கலை, வேற வழியில்லாம பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தோம். நீ தான் படிச்சு வேலைக்குப் போறே, அவனைப் பிடிச்சு ஏன் தொங்கறே? விட்டுட்டு வாடி’. அவர்களுக்குத் தெரிகிறது, பொருளாதாரம் இல்லாததால் தான் தங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று. ஆனால் இன்றைய தலைமுறைப் பெண்கள் சமூகத்தை நினைத்துப் பயந்து அதை செயல்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்.

oviyaஇன்றைக்கும் ஒரு பெண் தனித்து வாழ்வது என்பது சிக்கலாகத் தானே இருக்கிறது?

அப்படியில்லை. அப்படி நினைப்பது ஒரு மனநிலை தான். தனக்கு சாதகமான மாற்றங்கள் மட்டும் வேண்டுமென்று இந்தத் தலைமுறை பெண்கள் நினைக்கிறார்கள். அது வருத்தத்திற்குரிய விஷயம். மெட்டி போடுறது எனக்குப் பிடிச்சிருக்கு, அதனால் நான் மெட்டி போட்டுக்கிறேன், தாலி போடுறது அசிங்கமா இருக்கு, அதனால் செயின் போட்டுக்கிறேன். இதல்ல மாற்றம். மெட்டியும், தாலியும் அழகா இருக்கா, இல்லையாங்கிறதல்ல பிரச்சனை. இது இரண்டும் எதற்காக போட்டோம், எதற்காக கழட்டுகிறோம் என்ற சிந்தனைக்கு பெண்கள் வர வேண்டும். ஒரு பெண் தனித்து வாழ்வது என்பதில் சிக்கல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதே நேரத்தில் பெருநகரத்தை விட சிறுநகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதாக எனக்குப் படுகிறது. சென்னையில் என்னால் தனியாக ஒரு வீடு எடுக்க முடியவில்லை. ஆனால் இதே பிரச்சனை எனக்கு மதுரையில் வராது. இதுகுறித்து நாம் அதிகம் பேசவில்லை. சமூகத்தில் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

கிராமம் சார்ந்தும் நகரம் சார்ந்தும் பெண்களின் பிரச்சனைகள் எந்த அளவுக்கு மாறுபடுகின்றன?

கிராமத்தில் இருக்கிற பெண்ணுக்கு ஒப்பீட்டளவில் அந்த ஊரே பாதுகாப்பை வழங்கிக் கொண்டுதான் இருக்கும். அவளால் ஒரு சிறிய வேலை செய்து கொண்டு தனியாக ஒரு வீட்டில் வசிக்க முடியும். ஆனால் பெருநகரங்களில் இந்த வாய்ப்பு குறைவு.

நீலகண்டன்: எழுதுகிற பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் நகரங்களை விட கிராமங்களில் ஒடுக்குமுறைகளை அதிகம் சந்திக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். ஒரு புது விஷயத்தை அவர்களிடம் சொன்னாலோ, நாம் அப்படி நடந்து கொண்டாலோ அதை கொடூரமாக எதிர்க்கிறார்கள். ஆனால் நாம் அதில் நின்று ஜெயித்து விட்டால் நம்மை மெல்ல மெல்ல அங்கீகரித்துக் கொள்கிறார்கள்.

நீலகண்டன் : குட்டிரேவதி, இளம்பிறை, மாலதிமைத்ரி போன்றவர்கள் எழுதும் பாலியல் சார்ந்த விஷயங்களை கிராமங்களில் இருந்து கொண்டு எழுதினால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இதுபோன்ற நெருக்கடிகள் இல்லை.

அதாவது கிராமங்களில் ஒரு பெண் தனித்து வாழ முடியும். ஆனால் முற்போக்காக வாழ முடியாது அப்படித்தானே?

சரியாகச் சொன்னீர்கள். அதேபோல் நகரத்தில் ஒரு பெண் தன்னிச்சைப்படி வாழ முடியும். ஆனால் சமூகப்போக்கை அவளால் உருவாக்க முடியுமா என்று கேட்டால் முடியாது. ஆனால் கிராமத்தில் ஒரு பெண் ஊரை எதிர்த்துப் போராடி ஜெயித்து விட்டால் அவளால் ஒரு சமூகப்போக்கை உருவாக்க முடியும்.

நீலகண்டன்: கிராமங்களில் பெண்கள் சிறுதெய்வங்களாக இருப்பதற்கு காரணமே இதுதான்.

இன்றைய உலகமயமாக்கல் பெண்களின் வாழ்க்கையையும் அதிக அளவு பாதிக்கிறது. ஐ.டி.போன்ற துறைகளில் வேலை செய்யும் பெண்கள் இயல்பாகவே மேலைநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது உண்மையிலேயே ஆரோக்கியமான மாற்றம் தானா?

வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் பெண்கள் மேலைநாட்டுக் கலாச்சாரமோ, எந்த நாட்டுக் கலாச்சாரமோ அதை அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதே பெண் தன்னுடைய ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது எப்படிச் செல்கிறாள் என்பதுதான் என்னுடைய கேள்வி. கிடைத்த வாழ்க்கையை தன்னளவில் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களே தவிர மாற்று வாழ்க்கையை கட்டமைப்பதற்கான தியாகமோ, போராட்டமோ இவர்களிடம் இல்லை. இவர்களை திருச்சியிலோ, திருநெல்வேலியிலோ திருமணம் செய்து கொடுத்து விட்டால் மிகச் சிறப்பாக இந்துப் பண்பாட்டை காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்து விடுவார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நீலகண்டன்?

நீலகண்டன்: பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டு டிஸ்கோதே, பார்களுக்குச் செல்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நம்முடைய சமூக, பண்பாட்டு தளத்தில் பெண்ணும், ஆணும் சேர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு ஆடிப்பாடுவதற்கு வழி இருக்கிறதா? இங்கு எல்லாமே தவறு தான். தவறா, சரியா என்பதை ஆணும், பெண்ணும் சேர்ந்து விவாதிக்கும் வாய்ப்பு கூட இங்கு இல்லை. எல்லாமே இங்கு ஆண்வெறிக் குரலில் தான் பதிவு செய்யப்படுகிறது.

மார்வாடித் திருமணங்களில் ஆண்களும், பெண்களும் ரோட்டில் ஆடிப்பாடிக் கொண்டே செல்வதைப் பார்க்க முடியும். இதைப் பார்த்த திராவிடக் கழகத்தோழர்கள் சிலர் கூட ஒருமுறை என்னிடம், “ரோட்டில ஆடிப்பாடி நம்ம தமிழ்ப்பண்பாட்டை மார்வாடிகள் கெடுக்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். கூத்தும், பாட்டுமான கலாச்சாரம் தானே நம்முடையதும். அதை யார் துண்டித்தது? இதைப் பற்றியெல்லாம் நாம் பேச வேண்டிய தேவையிருக்கிறது.

நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே பெரியார் கொள்கைகளில் ஆழத் தோய்ந்து, அந்த இயக்கங்களில் வேலை செய்து வந்தவர். அதனால் உங்களிடம் இந்தக் கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் இலக்கியம் எழுச்சி பெற்ற போது தலித் எழுத்தாளர்களில் சிலர் பெரியாரை புறக்கணித்தனர். அதன் ஒரு பகுதியாக பெரியாரை ‘பொம்பிளை பொறுக்கி’ எனச்சித்தரிக்கும் வேலைகளும் நடைபெற்றன. ஒரு பெரியாரியவாதியாக இதற்கு எதிரான உங்களுடைய குரலை எங்காவது பதிவு செய்திருக்கிறீர்களா?

பெரியாரின் மிகப்பெரிய எதிரி என்றால் துக்ளக் சோவைத்தான் குறிப்பிட வேண்டும். அவர்கூட சொல்ல முடியாத குற்றச்சாட்டுகளை காலச்சுவட்டில் ரவிக்குமார் எழுதியிருந்தார். அதற்கு நான் உடனடியாக எதிர்வினையாற்றினேன். என்னுடைய கட்டுரைகளை பெரியார் முழக்கம் இதழில் பதிவு செய்தேன். ஆனால் எதிர்வினைகளைத் தொகுத்து வெளியிடும்போது ஏன் எனது கட்டுரை இடம்பெறவில்லை எனத் தெரியவில்லை.

ஆனால், இப்படி பெரியார் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் காலச்சுவடு மேடைகளில் நீங்கள் எப்படி கலந்து கொள்கிறீர்கள்?

காலச் சுவட்டின் போக்கும், என்னுடைய போக்கும் ஒன்றல்ல என்பது எனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அழைப்பை எதிர்கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டிய தேவையில்லை என்பது எனது கருத்து. அவர்கள் மேடைக்காக நான் எதையும் மாற்றிப் பேசியதில்லை.

நீலகண்டன் : சிறுபத்திரிகை தளத்தில் பெரியாரை நேரடியாக எதிர்த்துச் செயல்படும் ஒரே பத்திரிகை காலச்சுவடு தான். தொடர்ந்து இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறது. அதன் தந்திரம் தெரிந்து நிறைய பேர் அதிலிருந்து விலகி விட்டனர். உங்களைப் போன்ற சமூக ஆளுமைகளை தங்கள் கூட்டத்தில் பேசவைத்து தங்களை முற்போக்காக காட்டிக்கொள்வதும் கூட காலச்சுவட்டின் ஒரு பார்ப்பனத் தந்திரம் தானே? அதில் எப்படி சிக்கிக் கொள்கிறீர்கள்?

கருத்தும் அதைச் சொல்வதற்கான மேடையும் இருந்தால் யார் அழைத்தாலும் பேசலாம் என்கிற பெரியாரின் அணுகுமுறை தொடக்கத்தில் இருந்தே இருப்பதால் காலச்சுவடு சமீபத்தில் நடத்திய கருத்துரிமை கூட்டத்தில் கலந்து கொண்டேன். மற்றபடி இவ்வளவு நுணுக்கமாக நான் அதைப் பார்க்கவில்லை.

நான் வள்ளிநாயகத்தை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். எங்கள் உரையாடல் மூலம் வள்ளிநாயகம் தீவிரமாக காலச்சுவடு எதிர்ப்பாளராக இருந்ததை அறிய முடிந்தது. அவரது மரணத்திற்குப் பிறகு கொடிக்கால் ஷேக் அப்துல்லா காலச்சுவடு இதழில் சுந்தரராமசாமியின் ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ வள்ளிநாயகத்துக்கு மிகவும் பிடித்த கதை என்று தன்னிடம் தெரிவித்ததாக எழுதியிருந்தார். உண்மையிலேயே அந்தக் கதை மீது வள்ளிநாயகத்துக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததா?

.அய்யா கொடிக்கால் அவர்களோடு வள்ளி ஆழமான நட்பு கொண்டிருந்தார். தன்னிடம் வள்ளி தெரிவித்ததாக அவர் கூறியிருக்கும் செய்தியை நான் மறுக்க முற்பட மாட்டேன். ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதை பற்றி எங்களுக்குள் (எனக்கும் வள்ளிக்கும்) மிகச் சுருக்கமான உரையாடலே நடைபெற்றது. அந்த நேரத்தில் அவரும் அந்தக் கதையை படித்து விட்டுப் பேசவில்லை. நானும் படித்திருக்கவில்லை. அந்தக் கதை மிக மோசமாக இருப்பதாக நமது நண்பர்கள் சொல்கிறார்கள் அதைப் படிக்க வேண்டும் என்றார் வள்ளி. தெரியவில்லை நான் படித்த பின்பு சொல்கிறேன் என்றேன் நான். அதன் பின்பு சுந்தர ராமசாமி அவர்களை நேரில் சந்தித்ததாகவும் நன்கு பேசிக் கொண்டதாகவும் வள்ளி தெரிவித்திருக்கிறார். மற்றபடி அந்தக் கட்டுரையில் அய்யா கொடிக்கால் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல் சுந்தரம ராமசாமி அவர்கள் என்னிடம் அன்பாக இருந்திருக்கிறார் நான் நட்புணர்வோடு அவரிடம் பழகியிருக்கிறேன் என்பதெல்லாம் சரியான தகவல்கள்தான்

இவ்வளவு தீவிரமாக இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த நீங்கள் கொஞ்ச காலமாக ஒதுங்கியிருப்பதற்கு என்ன காரணம்?

ஒரு சிறிய இயக்கமாக தொடர்ந்து நீடித்து இயங்குவதில் பொருளாதாரப் பிரச்சனைகள் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒரு தாயாக ஒரு மகனை வளர்த்து கொண்டுவர வேண்டிய பொறுப்பிலும் முக்கிய கட்டங்கள் நெருக்கடி கொடுத்தன. ஓர் அரசுப் பணியாளராக இருப்பதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள நான் விரும்பினேன். வேறு எந்தப் பொருளாதார ஆதாரமும் இல்லாத நிலையில் அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு கடுமையாக வேலை செய்ய வேண்டி இருந்தது. எனது கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. இப்படி பல்வேறு பிரச்சனைகளில் முடக்கம் என்பது தவிர்க்க இயலாததாகிப் போனது. இன்றைய நிலையில் கருத்தியல் தளத்தில் முதற்கட்டமாக இயங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமுதாயத்திற்கு புதிய சிந்தனைப்போக்குகள் நிறைய தேவைப்படுகின்றன. இன்றைக்கு இருக்கிற சிந்தனைப்போக்குகளின் பெருமையைப் பேசுவதற்கே நாம் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம் என்று தோன்றுகிறது. நான் வேறுமாதிரியாகச் சிந்தித்தால் மார்க்சியத்திற்கு எதிராகப் போய்விடுமோ, பெரியாரியத்திற்கு எதிராகப் போய்விடுமோ என்ற பயத்திலேயே அடுத்த கட்டத்திற்குப் போகாமல் இருந்து விடுகிறோம். கருத்தியல் தளத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

ஓவியா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.