      ஈழத் தமிழர் இனப் படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கையைச் செயல்படுத்தக் கோரியும்,

      சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில்… கண்டனப் பேரணி

முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஈராண்டு முடிவுற இன்னும் சில நாட்களே உள்ளன. போர் நிறுத்தத்தையும் அமைதிப் பேச்சுவார்த்தையையும் வீசியெறிந்து விட்டு 2008–2009இல் இராசபட்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்த இனக் கொலைப் போர் குறித்து முறையாகப் புலனாய்வும் விசாரணையும் செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகத் தமிழினத்தின் கோரிக்கை மட்டுமல்ல, அமைதியையும் மக்களாட்சியையும் மனித உரிமைகளையும் நேசிக்கிற அனைவரின் கோரிக்கையும் ஆகும்.

இந்தக் கோரிக்கைக்கு சிங்கள அரசோ, அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு உள்ளிட்ட பிற அரசுகளோ இணங்காமல் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டு முன்பு ஐ.நா. பொதுச்செயலாளர்  ‘பான் கி மூன்’ இது தொடர்பாகத் தமக்கு அறிவுரை சொல்வதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமர்த்தினார்.

மனித உரிமைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மூன்று பெரும் வல்லுநர்களான மார்சுகி தாருஸ்மன் (இந்தோனேசியா), யாஸ்மீன் சூகா (தென்னாபிரிக்கா), ஸ்டீவன் ராட்னர் (அமெரிக்கா) ஆகியோர் முறைப்படி ஆராய்ந்து அளித்துள்ள அறிக்கை சிங்கள அரசின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளது.

1. 2008 செப்டெம்பர் முதல் 2009 மே வரையில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா ஆயுதப் படையினர் நடத்திய போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வலயங்கள் என்று அரசு அறிவித்ததை நம்பி அவற்றுக்குள் தஞ்சம் புகுந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது பீரங்கி, எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்றன. மருத்துவமனைகள், செஞ்சிலுவைச் சங்க நிலையங்கள், ஐ.நா. பணிமனைகள்… ஆகியவை கூட விட்டுவைக்கப்படவில்லை. மக்களுக்கு மருந்தும் உணவும் கிடைப்பதை சிறீலங்கா அரசு தடுத்தது. வன்னியில் இருந்த மக்கள் தொகையை அது குறைத்துக் கூறியது. உண்மைகள் வெளிப்படா வண்ணம் இருட்டடிப்புச் செய்ததோடு, ஊடகத் துறையினர் பலரைக் கடத்திச் சென்று படுகொலையும் செய்தது.

2. போர் முடிந்த பிறகும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களைத் தடுப்புக் காவலில் வைத்து அவர்களில் பலரைப் பிரித்துக் கொண்டுபோய்ப் படுகொலை செய்;தது, பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. பொதுமக்களைச் சிறை முகாம்களுக்குள் அடைத்து வைத்தது. இந்தக் கொடுமைகள் இன்றளவும் தொடர்கின்றன. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்துள்ள போதிலும் தமிழ் மக்களின் துயரத்திற்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி எதையும் செய்யவில்லை.

இவ்வாறு சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி வருவதை ஐ.நா. குழுவின் அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்தக் கொடுமைக்குத் தீர்வாக ஐ.நா. குழு தெரிவித்துள்ள பரிந்துரைகள் எதையும் ஏற்க முடியாது என்று சிங்கள இராசபட்சே அரசு திமிரோடு கூறி விட்டது. இந்நிலையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அறிந்தேற்று அவர்கள் தமக்கான தமிழீழத் தனியரசை ஏற்படுத்திக் கொள்ள உலகம் துணை நிற்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். உலகக் கருத்துக்கு மதிப்பளிக்காமல் சண்டித்தனம் செய்யும் இராசபட்சேயிடம் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதால் தமிழீழத் தனியரசு அமைப்பது தவிர வேறு வழியில்லை என்று மனித உரிமைப் பேரறிஞர் பிரான்சிஸ் பாயில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களை மட்டும்தானா? தமிழகத் தமிழர்களை – நம் உடன் பிறப்புகளாம் மீனவத் தமிழர்களை – வங்கக் கடற் பரப்பில் சிங்களக் கடற்படை படுகொலை செய்வது தொடர்கதையாக நீள்கிறதே!

அரசுக் கணக்கின் படியே இது வரை கிட்டத்தட்ட 600 தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் படுகொலை செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொடுங்காயம்! இலட்சக் கணக்கில் பொருட்சேதம்! சிங்கள வெறித் தாக்குதல் நிகழும் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில், குறிப்பாக மீனவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவதும், அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிடுவதும், தமிழக முதல்வர் தில்லிக்கு மடல் விடுப்பதும், தில்லி அரசு கள்ள மவுனம் காப்பதும் நமக்குப் பழகிப் போன செய்திகள்.

சிறீலங்கா அரசாங்கம் இனிமேல் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை என உறுதியளித்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சேதி சொன்னார். அதன்படித்தானோ என்னவோ துப்பாக்கியால் சுடுவதற்குப் பதில் கழுத்தை நெரித்தும், கயிற்றில் தூக்கிட்டும், வாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும், கொடுவதை புரிந்தும், கடலில் வீசியும் படுகொலை செய்யும் நடைமுறையை சிங்களக் கடற்படை மேற்கொண்டு வருகிறது.

       அண்மையில் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு சென்னை வந்த சோனியா காந்தி தமிழக மீனவர்கள் மீது இனி ஒருபோதும் தாக்குதல் நடைபெறாது என்று பொதுக் கூட்டத்திலேயே உறுதியளித்தார்.

       ஆனால் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் சிங்கள வெறிச்செயல் முடிவடைந்து விடவில்லை என்பதற்குச் சான்றாக இந்த ஏப்ரல் மாதத்திலேயே நான்கு உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன.

நடந்தது என்ன? சென்ற ஏப்ரல் 2ஆம் நாள் இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த விக்டஸ், ஜான் பால், அந்தோணிராஜ், கமுதி வட்டம் வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகிய மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அன்று நள்ளிரவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி தோற்கடித்த செய்தி பரவியது. சிங்களக் கடற்படையினரின் இனவெறி இதனால் கொலை வெறி ஆயிற்று. அவர்கள் தங்கள் கையில் சிக்கிய விக்டஸ், ஜான் பால், அந்தோணிராஜ், மாரிமுத்து நால்வரையும் பிடித்து கை கால்களைக் கயிற்றால் கட்டி, தடியால் அடித்து, அரிவாளால் வெட்டினர். ஒரு பாவமும் அறியாத அந்த நால்வரும் துடிதுடித்துச் செத்தனர்.

கடலில் வீசப்பட்ட விக்டசின் உடல் யாழ்ப்பாணம் கடற்கரையில் ஒதுங்கியது இரு உடல்கள் தமிழகக் கடற்கரையில் ஒதுங்கின. கிடைத்த உடல்களில் காணப்பட்ட காயங்கள் அவர்கள் கொடிய முறையில் வதைத்துக் கொலைசெய்யப்பட்டதற்குச் சான்றாய் உள்ளன.

தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இந்த மீனவர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் கொலைகாரச் சிங்களர்களைப் பிடித்து இழுத்து வந்து கூண்டில் ஏற்றி;க் கடும் தண்டனை விதிக்க வேண்டும். மீனவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு இந்தியக் கடற்படையையோ கடலோரக் காவற்படையையோ  நம்புவதில் பொருளில்லை என்பதால் அவர்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இந்தியக் குடிமக்கள் ஆகிய தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்குமானால் அது சிறீலங்கா அரசுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அவ்வரசின் மீது அனைத்தளாவிய தடைகள் விதிப்பதோடு சர்வதேச அளவில் தடைகள் விதிக்கச் செய்வதற்கும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

       ஈழத் தமிழர் இனக்கொலை தொடர்பான ஐ.நா.குழுவின் பரிந்துரைகளை உடனடியாக முழு அளவில் செயல்படுத்தக் கோரியும், சிங்கள வெறிப்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும் இந்தப் படுகொலை இனி நிகழாமல் தடுத்து நிறுத்தக் கோரியும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் வருகிற 2011 ஏப்ரல் 30ஆம் நாள் மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் புறப்பட்டு உழைப்பாளர் சிலை வரை பேராசிரியர் சரசுவதி தலைமையில் கண்டனப் பேரணி நடைபெறும். தமிழ் உணர்வும் மனித உரிமைப் பற்றும் கொண்ட அனைவரையும் இப்பேரணிக்கு அன்போடு அழைக்கிறோம்.

கண்டனப் பேரணி

தலைமை: பேராசிரியர் சரசுவதி

புறப்படும் இடம்: சென்னை பட்டினப்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம் (சீனிவாசபுரம்)

சேரும் இடம்: கடற்கரை உழைப்பாளர் சிலை

புறப்படும் நேரம்: 2011 ஏப்ரல் 30 சனிக்கிழமை மாலை 3.00 மணி

கைகள் உயர்த்திக் கண்டனம் முழக்கிட…    அனைவரும் வருக!   ஆதரவு தருக!

- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம், தமிழ்நாடு