தோழர் தியாகி முத்துகுமார் தீக்குளிப்பிற்கு பின் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு பல்வேறுவகைப்பட்ட போராட்டத்துடன் தேர்தலையும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் சந்தித்தோம். தமிழ் சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த கொடூர அரசியல் படுகொலை நிகழ்வாக இது பதிவானது. ஈழம் சார்ந்து ஒவ்வொரு உணர்வாளர்களும் தம்மளவில் பல்வேறு இயக்கங்களுடனும் தனிப்பட்ட முறையிலும் அரசியல் நிகழ்வில் பங்கேற்றோம். அவலமான பின்னடைவான ஒரு நிகழ்வு மே 17 ,18 அன்று நிகழ்ந்து முடிந்தபோது வலியான மனச்சுமையுடன் அமைதி காத்தது தமிழகம்.

தமிழீழ விடுதலை போரில் சிங்கள அரசு உலக அரசுகளின் துணையோடு நடத்திய தமிழினப் படுகொலை என்பது தமிழனம் தன்னுடைய அரசியல், சமூக பொருளாதார நிலைகளை மீளாய்வு செய்யவும் மாறி வரும் உலக ஒழுங்கில் தன்னை பாதுகாத்து கொள்ளவும் ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் இன்று உணர்கிறோம்.. முள்ளிவாய்க்கால் வரை நடந்த இன அழிப்பையும் அதன் பிறகு மெளனமாக நடந்து கொண்டிருக்க கூடிய இன அழிப்பையும் தமிழ்நாடு தமிழர்கள் வலியோடும், கையறு நிலையிலும் எதிர்கொண்டார்கள். இந்த பச்சை இனப்படுகொலைக்கு பிறகு தமிழக அரசையோ மத்திய அரசையோ எதிர்த்து போருக்கு பிந்தைய ஈழ மக்களின் பெருந்துயரத்தை துடைக்கும் போராட்டம் பெரும் அளவில் நிகழவில்லை என்பது நிதர்சனம்.

இந்த இன அழிப்பின் பின்னணியில் இருந்து செயலாற்றிய சக்திகள், நிறுவனங்கள், மனிதர்கள் என்று பலவற்றை தமிழக தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நெருக்கடியான காலகட்டம் நம்மை மேலும் வலுவுள்ளவர்களாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இந்த இனஅழிப்பின் பின்னணியில் இருந்தவர்கள், காரணங்கள், தமிழக மக்கள் தாங்கள் செயலாற்ற வேண்டிய களம் , புரிந்து கொள்ளவேண்டிய சதி வலைகள், எடுக்கப்படவேண்டிய அரசியல் நடவெடிக்கைகள் என்பதை பற்றிய கருத்தரங்கிற்கு உங்களை அழைக்கிறோம்.

கலை- பண்பாட்டு தளத்தில் நமது செயல்பாடுகள், போருக்கு பிந்தைய தமிழீழ நெருக்கடிகள், அழிப்பின் பின்னணியில் இருந்த பொருளாதார காரணிகள்,.புவி சார் அரசியல், ஊடக செயல்பாடுகள், நாம் எதிர்நோக்கி உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 , போருக்கு பின் சர்வதேச நாடுகளின் பங்கேற்புகள் என இந்த சிக்கலில் பிணைந்துள்ள பன்முகப்பட்ட கோணங்கள் வைக்கப்பட உள்ள இந்த கருத்தரங்கில் தமிழகம் எங்கும் இருந்து பங்கேற்க அனைத்து தமிழர்களையும், உணர்வாளர்களையும் மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

பேரா.தொ.பரமசிவன், கா. அய்யநாதன், அருள்முருகன் , லேனாகுமார், புருஷோத்தமன், திருமுருகன்

இடம் : இறையியல் கல்லூரி, அரசரடி, மதுரை
நாள் : 19 டிசம்பர்
நேரம் : மதியம் 3 .00 மணி முதல்
பேச : 9443486285 ,9444146806