"தமிழர் பண்பாடும் தத்துவமும்," நா.வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், 4/9, 4வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம் பாக்கம் , சென்னை- 600024. பக்.192 விலை ரூ.100.

"முருகனின் மனைவி வள்ளியா? தெய்வயானையா?" இப்படி யாராவது கேட்டால்; `அட! இது என்னய்யா தேவையற்ற வேண்டாத பட்டிமன்றம்" என்று சொல்லத்தோன்றும். ஆனால் தமிழர் பண்பாடு பற்றி பேசப்போகும்போது இது முக்கியமான கேள்வி ஆகிவிடுகிறது. பரிபாடல் காலம் வரை; அதாவது கிபி.11ஆம் நூற்றாண்டு வரை தமிழனின் கடவுளாக இருந்தது முருகன் மட்டுமே. அவனுக்கு வேலன் என்ற பெயரும் உண்டு. வள்ளிதான் அவன் காதல் மனைவி. ஆனால் வடபுலத்தில் இருந்த சுப்பிரமணியன் என்ற ஸ்கந்தன், அவனது மனைவி தெய்வயானை எப்படி முருகனோடு இரண்டற கலக்கப்பட்டு முருகன் இரண்டு பெண்டாட்டிக்காரன் ஆக்கப்பட்டான் என்பது விழிப்புணர்வு ஊட்டும் வரலாற்றுத் தரவு அல்லவா?

இந்நூலில் இரண்டு அத்தியாயங்கள் முருகன் பற்றி ஒதுக்கி இருப்பது முக்கியமானது. பக்தி இலக்கியங்களையோ, கடவுள் கதைகளையோ வெறுமே பக்தி பரவசத்தோடு படிப்பவர் ஒருபுறம்; அதன் ஆபாசக் குப்பைகளை கிளறி காட்டுவோர் இன்னொரு புறம். சமூக அறிவியல் பார்வையோடு அந்த தொன்மைக் கதைகளை அலசிப்பார்த்து நமது பண்பாட்டு வேர்களை அறிய முற்படுவது சமூக அறிவியல் பார்வை. நா. வானமாமலைக்கு அப் பார்வை வலுவாக இருந்தது. இந்நூல் அதற்கொரு சான்று.

கலைகளின் தோற்றம் குறித்த சமூகவியல் கண்ணோட்டத்தை தமிழ்ச்சமூக உதாரணங்களோடு எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கும் கட்டுரை ஒன்று இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. பண்பாட்டுத் தளத்தில் செயலாற்றும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் படித்து உள்வாங்க வேண்டிய முக்கிய செய்திகளாகும்.

உலகம் எப்படிப் பிறந்தது? இது குறித்து உலகம் முழுவதும் பேசப்படும் படைப்புக் கதைகளுக்கு பின்னால் இருந்த சமூக நிலை, தாய்வழிச்சமூகம், தந்தையர் வழிச் சமூகமாக மாற்றம் பெற்ற வரலாற்றுப் பின்புலத்தோடு இருப்பது சாலச் சிறந்தது. தமிழர் பண்பாட்டை தொன்மை கதைகளூடே தேடி கட்டமைக்க வேண்டிய முற்போக்காளர்களுக்கு இது ஒரு ஆதாரக் கட்டுரையாகும்.

உலோகாயத மரபை தமிழ் இலக்கிய மரபு எவ்வாறு கொண்டிருந்தது என்பதை மூன்று கட்டுரைகள் மூலம் பல்வேறு புதிய பார்வைகளை நம்முள் விதைக்கிறார் நா.வா. மணிமேகலையின் பௌத்தம், பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள், பரபக்க லோகாயதவாதம் ஆகிய மூன்று கட்டுரைகளும் இந்த தத்துவ எதிர்ப்புப் போரில் வலுவான தத்துவ ஆயுதங்கள் ஆகும்.

தமிழர் பண்பாடு குறித்து உரக்க, விரிவாக, கூர்மையாக, விவாதிக்க வேண்டிய காலகட்டம் இது. ஏனெனில் மேல்சாதி ஆதிக்கப் பண்பாட்டை ஏக இந்தியப் பண்பாடாக கட்டியெழுப்பிட இந்துத்துவாவாதிகள் வெறியோடு களத்தில் நிற்கும் காலம் இது; எல்லாவற்றையும் லாபவெறி அளவுகோலில் சர்வநாசம் செய்து வர்த்தகக் குடுவைக்குள் அடைக்கும் நுகர்வோரியப் பண்பாட்டை மையப்படுத்தும் ஏகாதிபத்திய சதிகள் மேலோங்கும் காலம் இது; நமது சொந்த முகத்தை நமது வேர்களை அடையாளங் காண ஒளிவுமறைவற்ற விவாதங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய காலத்தில் இந்நூல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது, சாலப் பொருத்தமே!

இந்நூலை படிக்கும் முன்பும், படித்த பின்பும் பேரா.வீ.அரசு முன்னுரையாக எழுதியுள்ள, "நா. வானமாமலை ஆக்கங்களை மீண்டும் வாசிக்கும் அனு பவம்" என்ற கட்டுரையை வாசிப்பது அவசியம். திராவிட இயக்கம் சார்ந்த வரலாற்றுப் பார்வையை நா.வா. போன்றவர்கள் எதிர் கொண்ட அதே அணுகுமுறை இன்றைக்கு அப்படியே பொருந்துமா? இக் கேள்வி அரசு அவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. நாமும் விவாதிக்க வேண்டிய விஷயம் தான் அது.

சமூக அறிவியல் கண்ணோட்டத்தோடு பண்பாட்டுப் பார்வையை விசாலமாக்கிட இந்நூலும் இதர நா.வா. படைப்புகளும் நமக்கு தொடக்க பாடமாக அமையும். அறுபதுகளில் அவர் தொடங்கியதை இன்றைய தேவைக்கும் வளர்ச்சிக்கும். ஏற்ப பண்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இடதுசாரிகள் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இக்கேள்வியை ஆழமாக இந்நூல் எழுப்புகிறது.

- சு.பொ.அகத்தியலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)