காந்திஜியின் இறுதி இருநூறு நாட்கள் எனும் நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது ஒரு நக்ஸலைட் நண்பர் "மார்க்சிஸ்டுகள் இப்போது காந்தியைப் போற்றித் துதிக்கத் துவங்கிவிட்டீர்களே!" என ஏகடியம் செய்தார். எதையும் வறட்டுத்தனமாக அணுகும் அவரிடமிருந்து வேறு மாதிரி எதிர்பார்க்க முடியாது தான்; ஆயினும் அவர் போன்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பாளர்கள் பரப்பும் விஷ வதந்திக்கு பதில் சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது அல்லவா?

முதலாவதாக சமீப வரலாற்று பதிவு என்கிற முறையில் அந்நூல் வெளிவந்தது பாராட்டத்தக்கதே; இரண்டாவதாக மதவாதம் வெறிக் கூத்து நடத்திய நாட்களில் ஒற்றை மனிதனே மாபெரும் சேனையைப்போல் சுழன்று சுழன்று வெறுங்காலுடன் நடந்து நடந்து மதவெறித் தீ பரவாமல் தடுத்த செய்திகளை இன்றைய தலைமுறை அறிவது அவசியமே; மூன்றாவதாக மதவெறி மடிந்து விடவில்லை மீண்டும் மீண்டும் தலைதூக்குகிறது. இதற்கு எதிரான போரில் இன்னமும் ஒரு வலுவான ஆயுதமே. எனவே அந்நூல் வெளியிடப்பட்டது சாலப் பொருத்தமே.

அதே வேளையில் காந்தி மீது கண்மூடித்தனமான பக்தியோ, குருட்டுத்தனமான வெறுப்போ இந்திய வரலாற்றை புரிந்துகொள்ள உதவாது. காந்தியம் குறித்த ஆய்வுகள் முற்றுப்பெறவில்லை. இன்னும் தொடர்கிறது.

“காந்தியின் தலைமையில் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று கோடிக்கணக்கானவர்கள் மகிழ்ந்த அதே தருணத்தில் மனிதனின் குணத்தை புத்துயிர்ப்பு செய்வது என்கிற தன்னுடைய லட்சியம் தோற்று விட்டது என்று காந்தி தன்னுடைய கருத்தைக் தெரிவித்தார். பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் முதலாளி வர்க்கத்தின் அரசியல் உத்தியாகவும் தந்திரமாகவும் காந்தியிசம் வெற்றி பெற்றது. ஆனால், அதே நேரத்தில் மனிதனைப் புத்துயிர் பெறச் செய்யும் ஒரு புதிய முறை, ஒரு புதிய சித்தாந்தம் என்கிற வகையில் அது முழுத்தோல்வி கண்டது என்பதற்கு இதை விடச் சிறந்த புரிந்துகொள்ளக்கூடிய தீர்ப்பு வேறு ஒன்று இருக்க முடியாது"

"இது மகாத்மாவும் இசமும்" நூலில் 1958ல் தோழர் இஎம்.எஸ். நம்பூதிரிபாட் அளித்த தீர்ப்பு. 1981ல் அவர் இந்நூலில் சில திருத்தங்கள் செய்து மறுமதிப்பு செய்தபோதும் தீர்ப்பு மாற்றி எழுதப்படவில்லை. புதிதாக சேர்க்கப்பட்ட கடைசி அத்தியாயமும் இதன் நீட்சியே. இன்றும் இதில் மாற்றம் இல்லை என்பதை இந்த மறுபதிப்பு (2008லும்) நிரூபிக்கிறது.

“காந்திக்கு தனிப்பட்ட குறைகள் எதுவும் இல்லை. முதலாளி வர்க்கத்தை அவர் முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் எந்த தனிநபரையோ அல்லது குழுவையோ அல்ல'' என்கிற இஎம்எஸ் வரையறுப்பு மேம்போக்கானது அல்ல; மார்க்சிய ஆய்வு நெறி நின்று பெறப்பட்ட முடிவு ஆகும்.

காந்தி விடுதலைப் போராட்ட தலைவராக உயர்ந்தது எப்படி? அவரின் தத்துவ நிலைபாடுகள் முதலாளித்துவத்துக்கு வலு சேர்ப்பதாக இருந்தபோதும் இறுதிநாட்களில் அவர் சோர்ந்தது ஏன்? தர்மகர்த்தா தத்துவம் ‘அகிம்சா தத்துவம்' எனஅவர் நம்பிய கோட்பாடுகள் தோல்வியடைந்தது ஏன்? வெகு ஜனங்களை போராட்ட களத்துக்கு திரட்டிய அவரே அதற்கு எதிராகவும் நிலையெடுத்த தத்துவமயக்கம் ஏன்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் தத்துவப் பார்வையோடும் எளிமையாய் விளக்கியிருக்கிறார் இஎம்எஸ்.

இந்த நூலை இப்போது மீண்டும் படிக்க வேண்டும். புதிய இளைஞர்கள் கட்டாயம் இந்நூலை வாசித்தால் மட்டுமே காந்தியிசத்தின் அர்த்தம் ஓரளவு பிடிபடும்.

குறிப்பிட்ட பிரச்சனைகளில் கூட்டு நடவடிக்கையை வளர்க்க சாத்தியம் இருந்தால் அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றபோதும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகள் காந்தியத்தின் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் எதிராக கொள்கை ரீதியான தத்துவார்த்த ரீதியான போராட்டங்களை தொடர்ந்து நடத்தவேண்டும்" என்று இஎம்எஸ் வழிகாட்டியிருப்பதை மனதில் பதித்து இந் நூலை உள்வாங்க முயற்சிப்பது ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் வரலாறு விதித்துள்ள கடமையாகும்.

தோழர் இஎம்எஸ் எழுதிய ‘வேதங்களின் நாடு' ‘இந்திய வரலாறு' மகாத்மாவும் இசமும்' ‘நேருவின் கொள்கையும் நடைமுறையும்' ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' ‘இந்திய பொருளாதார திட்டமிடலும் நெருக்கடிகளும்' ‘சோஷலிசத்திற்கான இந்தியப் பாதை' என்கிற ஆறு புத்தகங்களையாவது வரிசையாகப் படித்தால் இந்திய சமூக அரசியல் வரலாற்றைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். மலையாளிகளுக்கு கேரள சமூகம் குறித்து அவர் எழுதிய நூல் மேலும் ஒரு போனஸ். தமிழில் அப்படி ஒரு நூல் இல்லாதது பெருங்குறையே. எது எப்படியோ இந்நூலை வாசிப்பது அரசியல் பயிற்சியின் அடிப்படையாகும்.


மகாத்மாவும் அவரது இசமும்,
இ எம் எஸ் நம்பூதிரிபாட்,
பக்கங்கள் 160.
விலை ரூ.75.00,
பாரதி புத்தகாலயம்,
7.இளங்கோ சாலை,
சென்னை 600018

- சு.பொ.அகத்தியலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)