ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும், உமாசக்கரவர்த்தி, தமிழில் : வ.கீதா பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, சென்னை-600018. பக்.104.விலை.40/-

"சாதியை எடுத்துக் கொள்வோம். நாம் உண்ணும் உணவு பேசும் விதம், தொனி, கையாளும் சொற்கள், நாம் வாழும் இடம், கொள்ளும் உறவுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் அமைப்பாகவும் கருத்தியலாகவும்" சாதி இருப்பதை புகுமுன் உரைக்கிற வ.கீதா, நாம் வாழும் வாழ்வாகவும் அது உள்ளது என்கிற யதார்த்தத்தை உணர்ந்தவராகவும் எனவே சாதியை உணர்வுப் பூர்வமாகவும் விமர்சன அறிவுடனும் அணுகுவதென்பதும் ஆராய்வதென்பதும் அத்தனை எளிதல்ல, வாழ்தலுக்கிடையேதான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது என்ற நடைமுறைப் புரிதலோடும் ‘புகுமுன்' பேசுவதால் இந்நூலைப் புரட்டும் முன் நம்பிக்கை அதிகரிக்கிறது.

வருணம் அளிக்கும் சமூக மதிப்பு அல்லது தகுதி என்பதற்கு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் உடைமை உறவுகளும் உற்பத்தி உறவுகளுமே ஆதாரமாக உள்ளதை நாம் காணலாம் என்பதையும் உயர்த்தப்பட்ட சாதியினர் வகுத்துள்ள கருத்தியலின் படி செயல்படும் இடைநிலை சாதிகள் நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்க சாதிகளாக செயல்படுகின்றன என்பதையும் உரக்க இந்நூலில் ஆசிரியர் வாதாடுகிறார். இது ஒரு மொழி பெயர்ப்பு நூல். ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் தமிழ்நாட்டின் சமூக வரலாற்று செய்திகளோடு பிசைந்து தந்துள்ளார் தமிழாக்கம் செய்துள்ள வ.கீதா. நல்ல முயற்சி. எனினும் மேலே குறிப்பிட்ட வாதங்களுக்கு தமிழகத்தில் இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை உதாரணம் காட்டியிருப்பது எந்த அடிப்படையில் என்கிற கேள்வி எழுகிறது. ஆய்வு அடிப்படையிலா? ஊகத்தின் அடிப்படையிலா? அல்லது ஆசிரியர் அனுபவமா?

சமூகவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது வரலாற்று பார்வையோடு சொல்ல முயற்சிக்கும்போது இட்டுக் கட்டல்களும் அனுமானங்களும் தவிர்க்க முடியாமல் சேர்ந்துவிடும். சில நேரங்களில் அது ஆய்வுக்கு வலுசேர்க்கும். சில நேரங்களில் அது ஆய்வின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். இந்நூலில் இந்த இரண்டு வித விபத்துகளும் நடந்துள்ளன.

சுத்தம் -அசுத்தம் என்ற எதிர்வுகள் சாதியத்தின் முக்கிய அச்சாணிகளில் ஒன்றாக இருப்பதை மிக வலுவாக இந்நூல் வாதிடுகிறது; மேல் -கீழ் என்கிற சாதிய படிநிலை அமைப்புக்கு தூய்மை எப்படி வினையாற்றுகிறது? தூய்மை என்ற கருத்துக்கு அகமண முறை எப்படி அடித்தளமாக்கப்பட்டது? அகமண முறை சிதையாமல் இருக்க பதிவிரதைத்தன்மை அல்லது கற்பு என்ற கருத்தியல் சமூக நடைமுறையாக்கப்பட்டது எப்படி? போன்ற கேள்விகளுக்கு நுட்பமாக விடையளிக்க இந்நூல் முயன்றுள்ளது.

சாதியமைப்பு குறிப்பிட்ட பிரதேசத்தில் புவியியல் அமைப்பு, அங்கு உருவாகியுள்ள உற்பத்தி முறை, தந்தைமை ஆதிக்கம் இவற்றோடு தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதை நடைமுறை உதாரணங்களோடு, புராணக் கதைகளை மறு வாசிப்பு செய்தும் இந்நூல் நிறுவுகிறது. பார்ப்பன ஆணின் அறிவு பலத்தைப் பார்ப்பனப் பெண்கள் அங்கீகரிக்க நேர்ந்ததை யக்ஞவல்லி- கார்க்கி கதை மூலம் சுட்டுவது ஆய்வுக்கு வலுசேர்க்கும் கோணத்தில் செய்யப்பட்ட அனுமானம்,

பதிவிரதை தருமமும் பெண்கள் தமக்குரிய அறமாக ஏற்றுக்கொண்ட கற்பும் (சுயக் கட்டுப்பாடும்) சாதியமைப்பையும் அதன் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான தந்தைமை குடும்பத்தையும் நியாயப்படுத்தின என்பதை எடுத்துரைக்கும் இந்நூல் அதிலும் பார்ப்பன சாதிகளுக்கும் பிற சாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும் அதன் அடிப்படையான நில உற்பத்தி உறவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

வேதமரபு, பவுத்த மரபு, பக்திமரபு, என வரலாறு நெடுக பெண் மீதான ஆணாதிக்கமும் கற்பும் ஆற்றிய பங்கையும் சாதி சமூகத்தின் வேராக அது இருப்பதையும் நூலாசிரியர் இந்நூலின் மைய இழையாகவே கொண்டுள்ளார் எனில் மிகையல்ல. குமரி மாவட்டத்தில் சாணர் பெண்கள் தோள் சேலை உரிமைக்காக நடத்திய சாதி ஆதிக்கத்துக்கு எதிரான வலிமைமிக்கப் போராட்டத்தை குறித்த அனுமானம் தெளிவற்றதாக உள்ளது.

பெண்களின் தூய்மையில்தான் சாதி அடங்கியுள்ளது என்கிற மநுதர்ம நியதியை தோலுரிக்க இந்நூல் ஆயுதம் எனினும் விமர்சனப் பார்வையோடு பரிசீலிக்க வேண்டிய நூல்.

சாதி எதிர்ப்புப் போரில் ஈடுபடுவோர் கட்டாயம் வாசிக்க வேண்டியது நூல் பட்டியல் தயாரிக்கும்போது அதில் இந்நூலும் தவறாமல் இடம்பெறும்.

- சு.பொ.அகத்தியலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)