selffipullaசெல்ஃபிபுள்ள கவிதைநூல் விமர்சனம்

              “மூளைக்குள் விஷம் வைத்து

              முகத்தில் அதை மறைத்து வைத்து

              எப்போதும் என்னைச் சுற்றி - மிருகங்கள்

              இனம் கண்டு எழுந்து கொள்ளும்

              என்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்

              நீதி வேண்டும் - என்னுள்

              நிரந்தரமாய் மிருகம் வேண்டும்”

ஒரு கவிஞனைச் சமூகம் சில நேரங்களில் மிருகமாக்குகிறது. மனிதனாக வாழவிடாது, ஆதிகால காட்டுமிராண்டித்தனத்தை உசிப்பேற்றி விடுகிறது. அந்த அவதாரம், பிறரைப் பயமுறுத்துகிறது. அவ்வாறு இருக்க, கவிஞனாகிய நான் விரும்பவில்லை. ஆனால் சமூகம் மாற வேண்டுமானால் கவிஞனாகிய நான் மிருகமாக ஆக வேண்டும்.

கவிஞர் க.வீரமணியின் “செல்ஃபிபுள்ள” கவிதைகள், படைப்பின் தன்மையில் அனுபவத்தை வெளிப்படுத்தும் பதிவுகளாகும். படைப்பு எவ்விதம் உருவாகிறது என்பதைக் கவிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன.

படைப்பில் “முழுமை” இரு வகைகளில் சாத்தியமாகிறது. ஒன்று அனுபவத்தை கூறுகளாகக் கண்டு, அக்கூறுகளில் ஒன்றில் சாராம்சத்தை, முழுமையை, குறிப்பால் உணர்த்துவதாக மாற்றுவது. இதையே கவிதைகள். காவியங்கள் நக்கலாகச் செய்கின்றன.

சிறுகதைகளில் தளமும் இதுவே. இன்னொன்று, அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டு பண்ண முயல்வது. இரண்டாம் வகைச் செயல்பாடுகள் தான் நாவலுக்கு உரியது என்று ருஷ்ய பேரிலக்கியங்கள் நிறுவுகின்றன என்பார் எழுத்தாளர் ஜெயமோகன்.

அனுபவம் அதிகமாக அதிகமாக பக்குவமாகிப் படித்த வாழ்க்கைப் போக்கை ஏதோவொரு வகையில், பிறரிடம் பகிர்ந்துக் கொள்ள எத்தனிப்பது உலக இயல்பு. அதுவே, மாபெரும் இலக்கியப் பதிவுகளாக இதுகாறும் கண்டிருக்கின்றோம். ஆதிகால இலக்கியம் முதல் இன்று வரை இதுவே நிகழ்கின்றது. உலகின் அனைத்து நிகழ்வுகளும், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கின்றன.

இன்றைய சமூகம், கொஞ்சமும் எதிர்பார்க்காத, சகிக்க முடியாத அனுபவங்களைத் தருகின்றவைகளாகவே கூடுமானவரை மாறிப் போய் இருக்கிறன. லஞ்சம், வாவண்யம், குடி, பொய், பித்தலாட்டம், களவு, கற்பழிப்பு, சாதிய ஏற்றதாழ்வு, மதக்காழ்ப்பு இவற்றைக் கண்டு முகச் சுழிப்போடு இதோடு பயணம் செய்கிறவர்களாக அதிகப் பேர் இருக்கின்றனர்.

அவ்வகையில், தம் வாழ்வில் அடைந்த சமூகச் சிக்கல்களை மனக் குமுறலாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். க.வீரமணி அவர்கள். அதற்கான வடிவமாக அவர் கவிதையை எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் நக்கல் நிறைந்த கவிதைகளாக…

‘செல்ஃபிபுள்ள’ எனும் கவிதைத் தொகுப்பு தற்பொழுது அவரின் முதல் கவிதை நூலாக வெளி வந்திருக்கிறது. சமூகச் சாடல்கள் காரசாரமாகப் பரிமாறப் பெற்றுள்ளன. கொஞ்சம் கூடப் பாராபட்சம் இல்லாமல் தவறுகளை இனம் காட்டி, வெறுப்புக்களையும், கடும் கோபத்தினையும் பதிவு செய்துள்ளார்.

மிகக் குறைந்த அளவில், மனம் சார்ந்த உள்வெளி வெளிப்பாடுகளையும், காதல் உணர்வுகளையும் கூறும் ஆசிரியர், பெரும்பான்மையாக, மக்களின் இயலாமை, கொடுமைகள், மனச்சோர்வு, திண்டாட்டம், வயிற்றெரிச்சல், பிரச்சனைகள் இதனை அப்படியே அனல் தெறிக்கும் வார்த்தைகளால் வெளிப்படுத்தித் தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டுள்ளார்.

இராணுவ வீரர்கள் மனம் நேர்மைக்குப் பழக்கப்படடிருக்கும். அவர்களின் சிந்தனைகள் நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், சுயமரியாதையையும், நாட்டு நலனையும் காக்கக் கூடியதாகவே அமைந்திருக்கும். ஆனால், இன்றிருக்கும் நடைமுறைச் சீரழிவுகள் அவர்களின் மனதைப் பெரிதும் பாதிக்கின்றன.

நாம் சந்திக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மக்களோடு ஒத்துப் போவதில் சிரமப்படுகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கான காரணம் அவர்கள் எதிர்பாக்கும் உலகம் மிக நேர்மையானதும், உண்மையானதும் ஆகும். கவிஞர் க.வீரமணி அவர்களும் முன்னாள் இராணுவ வீரர் என்பதால், இச்சமூகச் சீர்கேடுகள் அவரது உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கின்றன என்பதை அவர்தம் கவிதைகள் மூலமாகவே அறிய முடிகின்றது. ‘தன்னிறைவு’ எனும் கவிதையில், தேசம் எவ்வாறு பிரித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை,

              “அரசியல் வாதிகளுக்கு - ஊழல்

              அரசு அதிகாரிகளுக்கு - லஞ்சம்

              ரவுடிகளுக்கு - கொலை

              ஆண்களுக்கு - கற்பழிப்பு

              பெண்களுக்கு-  பேதைமை

              பிரித்து வைத்திருக்கின்றோம் - இப்படி

              தவறுகளை - தனித்தனியே

              தவறுகளில் – தன்னிறைவு - என்தேசம்”

என்கின்றார். காவல் நிலையமும், சிறைச்சாலையும் எவ்வாறு இருக்கும் என்பதை நம் மனம் ஆண்டாண்டு காலமாய் கற்பனை செய்து வைத்திருக்கிறது. நீதியைக் காக்கும் தூய்மையான இடம் காவல் நிலையமாகவும், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கும் இடம் சிறைச்சாலையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றோ,

              “கைதிகளுக்கு

              நாள் தவறாமல்

              யோகா. மூச்சுப் பயிற்சி,

              எழுத்து, ஓவியம், கவினை, மேல்படிப்பு….

              காவலர் முகாமில் - எப்போதும்

              கோழிக்கறி - விஸ்கி

              நீலப்படம் - பீடி - சிகரெட்

              சீட்டுக்கட்டு - பெண்சிட்டு”

என இவ்வாறு இருக்கின்றன என்பதை மனம் நொந்துபோய் பதிவு செய்திருக்கின்றார்.

‘தமிழன் என்று சொல்லுவோம்’ எனும் தலைப்பிலான கவிதை நமது இருப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கேவலமான வாழ்க்கைச் சூழலில் நம் வாழ்ந்து கொண்டு, அதைப் பெருமையாகப் பிதற்றிக் கொண்டு வாழ்வதைச் சாடுகின்றார். இதுவல்ல வாழ்க்கை இது நரகவாழ்க்கை என விளக்குவதாக இக்கவிதை அமைந்துள்ளது.

தமிழினம் எத்தகைய மாட்சிமைகளைக் கொண்டது. ஆனால் இன்று கீழ்மையான வாழ்க்கை முறைகளால் பெருமைகள் இழந்து நிற்கின்றன என்பதாக அவரது குரல் இருக்கின்றது. இதே போல், விவசாயின் நிலை கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கும் கவிதையாக ‘செல்ஃபிபுள்ள’ கவிதை இருக்கிறது.

‘அதிதி தேவோ பவ’ கவிதை, சுற்றுப்புறச் சூழலில். இந்தியா எவ்வளவு மோசமான நிலையை அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது. இதனால் அன்னியச் செலவாணி குறையும் என்பதோடு. எதிர்காலச் சமூகம். தம் வாழ்வாதாரத்தை இழந்து வாழ்க்கைச் சிக்கலில் கிடந்து சாகும் என்பதை நக்கலாகக் கூறுகிற பொழுது,

              “சுற்றுலா வாசிகளே

              இந்தியா உங்களை

              இனிதே வரவேற்கிறது

              ஆனால்.

              மூக்கைப் பிடித்துக் கொண்டு வரவும்”

என்கின்றார். நாட்டின் மேன்மை வளமாக வேண்டும் என்றால், சுற்றுப்புற சூழலில் மிகுந்த கவனத்தை மக்கள் காட்ட வேண்டும் என்பது இவரது அறிவுரையாக உள்ளது.

ஆண், பெண் இருவரும் இன்று வேலைக்குச் செல்வது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கியமாகிறது. அவ்வாறு நகரில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையை ‘மல்லிகைப் பூ’ கவிதை குறும் படமாக்கிக் காட்டுகிறது. அவளுக்கு சமூகம் தரும் இன்னல்களைப் பட்டியல் போடுகிறது.

ஓவ்வொரு நாளையும் கடத்துவதற்கு அவள் படும்பாடு, அவளுக்கு நேரும் இன்னல்கள் அதனால் அவள் அடையும் வேதனை இவை மாற வேண்டும் எனப் பதிவு செய்கின்றார். இக்கவிதையைப் போல் “ஆபிஸ் கோயிங்” கவிதையும் இத்தகையதே.

“சுபஸ்ரீ - பேனர் எனும் கவிதை அரசியல்வாதிகளினால் இறந்த சுபஸ்ரீயின் இறப்பைப் பற்றியது. சாலையில் பேனர் வைக்கும் கலாச்சாரம் தேவையற்றது. மக்களின் வரிப்பணத்தில். அரசுகள், அரசியல்வாதிகள் செய்யும் பல்வேறு ஊதாரித் தனமான செலவுகளும், அதனால் விளையும் பாதிப்புக்களையும் இனம் காட்டி, தம் நெருடல்களை மனக் குமுறலாக விளக்குகிறார்.

தமிழ் உணர்வும். தமிழின உணர்வும் அவரது பல கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதைப் பதைபதைப்புடன் கவியாக்குவதைக் காண முடிகின்றது.

“கொள்ளி வாய்க்கால்” கவிதையில் இதனையுணரலாம். எவ்வளவு தான் தீமைகள் தமிழனுக்கு வந்தாலும், காக்க வேண்டிய கடவுள்கள் ஏன் வரவில்லை? எனப் படிப்பவரிடம் கேள்வி கேட்கின்றார். மொழியினால் கடவுளைப் பிரித்தலையும் சூழ்ச்சியையும் நக்கல் செய்கின்றார்.

தனிமனிதக் காதலுணர்வுக் கவிதைகளும் கவிஞரின் அற்புதமான காதல் மொழியை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கான கவிஞரின் இடம் அலாதியான இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கு மிகச் சரியான மரியாதையைத் தரும் மனதின் வெளிப்பாடுகள் காதல் கவிதைகளாக எழுதப் பெற்றுள்ளன.

எதார்த்த நடை, அழகியல் வெளிப்பாடு, கூட்டி குறைத்துக் கூறாத வார்த்தைகள் இவை இந்நூலின் தரமாகும். ‘எடை குறைப்பு’, ‘கமர்சியல் பிரேக்’ கவிதைகளில் கவிஞரின் சமூக விமர்சனம் மேலோங்கி நிற்கின்றது. நளினமாகப் பிறரின் போக்கைச் சாடும் தன்மையும் விளங்குகிறது.

பொதுவாக, கவிதைக்குள் கவிநயம் மிக்க வார்த்தைகள் குறைவு. உணர்வு மிக்க வார்த்தைகள் மிகமிக அதிகம். கவிதை வடிவத்தில், இன்னும் புனைவியலைத் தொட முயற்சிக்கலாமென்றாலும், வெளிப்பாட்டுத்திறன் கூற விழைந்த பொருளைச் சிறப்பாகவே கூறிச் செல்கின்றன. சமூகக் கவிதைகள் காலத்தின் பதிவுகளாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன என்பதே இந்நூலின் மிகப் பெரும் சாதனையாக அமைந்திருக்கிறது.

- பாரதிசந்திரன்