நவீன புரட்சிக்காரர்களின் தத்து பித்துவை விட நவீன கவிதைக்காரனின் சித்து பித்து கெத்து....

பெரும்பாலும் ஊரெல்லாம் புரட்சி பேசும் நவீன புரட்சிக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் வீட்டிலிருந்து மருந்துக்கு கூட ஒரு புரட்சிக்காரன் வருவதில்லை. மாறாக காலத்துக்கும் சில பார்வையாளர்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மேடை கிழிய பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அலுத்துப் போன சிந்தனையில்.... நம்பிக்கையூட்டும் ஒளி மறைந்து கொண்டிருக்கிறது. காலத்தின் மாற்றம் படைப்புகளிலும் நிகழும்.

இல்லை... 90ல் எழுதியது மாதிரி இது இல்லை.. ஆகவே இது அது இல்லை என்று பேசிக் கொண்டிருந்தால்.... பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான். பேசும் உதடுகளில் பழமை மட்டுமே இருந்தால்... கேட்கும் செவிகளிலும் பழமை மட்டுமே இருக்கும். புதுமை பழைய சாலையில் நிகழாது. அதன் பாதையை அதுவே போட்டுக் கொள்ளும்.

விமர்சனம் என்பதற்கு எது அளவுகோல் என்று பல விமர்சனப் புலிகளுக்குத் தெரிவதில்லை. அவர்கள் கூட்டில் இல்லை என்றால்... போடு விமர்சனம் என்ற கல்லைத் தூக்கி. விமர்சனம் படைப்பாளியை வடித்தெடுக்க வேண்டும். கழுத்தறுக்க கூடாது. வெஞ்சன்ஸின் மறுபெயர் தான் விமர்சனம் என்றால்.... மண்ணாங்கட்டி அந்த விமர்சனத்தை தூக்கி கிடாசுவதைத் தவிர வேறு வழி இல்லை.

இவர்கள் கழுத்தோடு சேர்ந்து முதுகெலும்பையும் அறுக்கிறார்கள். அவர்கள் கொள்கையில் நாம் இல்லை என்றால்... தீர்ந்தது கதை. நாம் எழுதுவது எல்லாமே... மடக்கி போட்ட சொற்கள் தான்.

விமர்சகர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. நேர்மை இருந்தால் விமர்சனம் என்ன.. வியாக்கியானம் கூட ஏற்கப்படும். இல்லை என்றால் எதிர் விமர்சனம் இயல்பு தானே,. எறும்பை சுண்டினாலும் திரும்பிப் பார்க்கும் என்பது நியூட்டன் லா..

வார்த்தையை மடக்கிப் போட்டு எழுதி கவிதை என்று சொல்லும் அளவுக்கு என் கவிதை உலகம் இல்லை. வாழ்க்கையை மடக்கி போட்டு வாழும் அளவுக்கு என் கனவு உலகமும் இல்லை....

சமூக கவிதைகளை எட்டிக் கூட பார்க்காத இந்த விமர்சனப் புலிகள் தான்.. முத்த கவிதைகளுக்கும் மத்த கவிதைகளுக்கும் மாங்கு மாங்கென பின்னூட்டம் இடுகிறார்கள். கேட்டால்.....நீ சமூக கவிதை எழுதுவதில்லை என்ற நக்கல் வேறு. நான் எழுதுவதில் 70% சமூகம்... உளவியல் சார்ந்த கவிதைகள் தான். மீதி 30% தான் காதல் கவிதைகள். காணும் நோக்கத்தில் இருக்கிறது.... கவிதைகளின் தேவை எதுவென்று.

எங்கோ தேங்கி விட்ட நீருக்கு தூரத்து கடல் துயரம் தான். பின்னும் ஒளி வட்டங்களில் ஒன்றுமில்லை என்று கடலுக்குத் தெரியும். சூரியன் உள்பட
சூனியம் உள்பட.

"God of Small Things" என்று அருந்ததி அவர்கள் எழுதிய நூல் ஒன்று இருக்கிறது. (உடனே இது புக்கர் அவார்ட் வாங்கிய நூல் என்று ஓடோடி வந்து சொல்லி விடாதீர்கள் விமர்சகர்களே. அந்த வெங்காயமும் தெரிந்து தான் எழுதுகிறோம்) தமிழில் "சின்ன விஷயங்களில் கடவுளைக் காணலாம்"

சின்ன சின்ன விஷயங்களில் தான் பெரிய பெரிய திருப்தி கிடைக்கிறது என்பது கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் புரிந்து விடும். அவ்வகையில்....தான் 'இந்த பாராட்டுதல்' என்பதையும் காண்கிறேன். சின்ன விஷயங்களுக்குள் தான் பெரிய பெரிய சந்தோஷங்கள் கிடைக்கிறது. ஒரு பாராட்டு.....ஒரு சின்ன கை தட்டு... ஒரு நம்பிக்கையூட்டும் பேச்சு.... ஒன்னும் இலக்கிய குடி முழுக வைத்து விடாது. விமர்சனம் கூட கண்ணியத்தில் இருந்தால்... படைப்பவன் இன்னும் தன்னை மெருகேற்றிக் கொள்வான். அவனை ஒரே அடியாக குழி தோண்டி மூடி விடும் விமர்சனத்தில் எத்தனை புத்திசாலித்தனம் இருப்பினும்.... அது குப்பைக்கு சமம்.

பாராட்டு என்பது சக மனிதன் மீதுள்ள கரிசனமாகவே பார்க்கிறேன்.

சின்ன கை தட்டல்..... சின்ன பாராட்டு.... சின்ன புன்னகை.. சின்ன உத்வேகம் தரும் சொல்.... சக மனிதனை இன்னும் கொஞ்சம் நேரம் புன்னகைக்க வைக்கும். இன்னும் கொஞ்சம் தூரம் தம் கட்டி ஓட வைக்கும். எல்லாம் விட்டு நீ நோபிள் பரிசு வாங்கினால் தான் நான் பாராட்டுவேன் என்று யோசிப்பதெல்லாம்.... தனி மனித அட்டூழியம்.

- யுத்தன்