1935களில் லாகூரில் நடக்க இருந்த ஜாத்பட் தோடக் மண்டல் என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த உரை புத்தகமாக வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. சாதியை அழித்தொழிப்பதற்கான வழிகளைக் கூறும் இந்நூல் இன்று வரை பலரால் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

saathi ozhipuஇந்நூலிலிருந்து சில குறிப்புகள்...

1.சாதி என்பது எண்ணம்; அந்த எண்ணப் போக்கிற்கு மதமே காரணம்.

2.இந்திய நாட்டில் சமூகச் சீர்திருத்தத்திற்கான வழி சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைப் போலவே கரடுமுரடானது.

3.சமூகச் சீர்திருத்தம் என்றால், இந்துக் குடும்பத்தைச் சீர்திருத்துவதா? அல்லது இந்து சமுதாயத்தைச் சீர்திருத்தி புத்தாக்கம் செய்வதா? என்னும் வகைப்படுத்தி இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாகக் கூறப்பட்டுள்ள சீர்திருத்தம் விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் ஆகியவற்றோடு தொடர்புடைய குடும்பச் சீர்திருத்தம் சார்ந்தது. இரண்டாவதாகக் கூறப்பட்ட சீர்திருத்தம் சாதி அமைப்பை ஒழிப்பது தொடர்புடைய சமூகச் சீர்திருத்தம் சார்ந்தது.

4.அரசியல் அமைப்பு சமூக அமைப்பைப் பொறுத்தே அமைய வேண்டும்.

5.இந்திய சமூக அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும்.

6. அரசியல் சீர்திருத்தவாதிகள் அவர்கள் விரும்பும் எந்த வழியில் சென்றாலும் சரி, அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்கும் போது தம் நாட்டில் நிலவும் சமுதாய அமைப்பிலிருந்து எழுகின்ற பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு அரசியல் அமைப்பை உருவாக்கிவிட முடியாது.

7. பொதுவாக அரசியல் புரட்சிகளுக்கு முன்பே சமூக, மத சம்பந்தமான புரட்சிகள் ஏற்படுகின்றன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

8.மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது.

9.சுதந்திரம் என்பதுதான் மனித வாழ்வின் குறிக்கோள் என்றால், 'ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதே சுதந்திரத்தின் பொருள்'.

10. ஒரு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும், மதமும் சமுதாயமும் அடிப்படைகளாக இருந்தால் அந்தக் கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான சீர்திருத்தம், மதசீர்திருத்தமும் சமுதாய சீர்திருத்தமுமே ஆகும்.

11. நீங்கள் எந்த திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாது.

12.தனி மனிதனின் இயற்கையான ஆற்றல்களுக்கும், இயல்பான விருப்பங்களுக்கும் எதிராகச் சமூக விதிகள் என்ற பெயரால் கட்டாயத்துள்ளாக்குவதே சாதியின் தன்மை.

13.சாதி, இந்துக்களை முற்றிலுமாகச் சிதைத்துச் சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளது.

14.இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை; இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே ஆகும்.

15. இந்து முஸ்லீம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் பிற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் உணர்வதில்லை. மற்ற சமயங்களில் ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளிடமிருந்து தம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கின்றன.

16.சமூகவியலாளர்கள் கூறும் 'குழு உணர்வு' இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு தன் சாதி உணர்வு மட்டும் தான்.

17. மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றைப் பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது.

18. நாடுகள் எவ்வாறு தம் தன்னலம் கருதித் தனித்திருக்க முற்படுகின்றனவோ அவ்வாறே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதிப் பிறரோடு உறவின்றித் தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக வெளிப்படுகிறது.

19.ஒரு தனிமனிதன் தனது சொந்தக் கருத்துகளையும் நம்பிக்கைகளையும் தனது சொந்த சுதந்திரத்தையும் நலனையும், தான் சார்ந்துள்ள குழுவின் நெறி வரையறைகளையும் குழு அதிகாரத்தையும், குழு நலன்களையும் மீறி வலியுறுத்துவதுதான் எல்லாச் சீர்திருத்தங்களுக்கும் தொடக்கமாகும்.

20.பொதுநல உணர்வையே சாதி கொன்றுவிட்டது. ஒரு இந்துவுக்குப் பொதுமக்கள் என்பதே அவரது சாதிதான்.

21.சாதி கூடாது என்றால், உங்களுடைய லட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயமாக எழும். என்னுடைய லட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

22.ஜனநாயகத்தின் மறுபெயர் தான் சகோதரத்துவம். ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சிமுறை மட்டுமல்ல. முதன்மையாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை; கூட்டாக ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களைத் தெரியப்படுத்திக் கொண்டு வாழும் முறை. ஒவ்வொரு மனிதரும் மற்ற மனிதர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்து நடப்பதே அதன் சாராம்சம்.

23.சட்டப்படி ஒருவரைத் தமக்கு ஆட்பட்டு இருப்பவராக வைப்பது மட்டுமே அடிமை முறை அல்ல. சமூகத்தில் சில மனிதர்கள் தங்களுடைய செயல்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பிறர் தீர்மானிக்கவும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவுமாக உள்ள நிலையும் அடிமை முறையே.

24.சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால், ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான் அவ்வாறு உயர்ந்த பலனைப் பெறுவதற்கு வழியாகும். இந்தக் காரணத்தினால் சமத்துவம் தவிர்க்க முடியாததாகிறது.

25.உலகின் மற்ற நாடுகளில் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை என்பது பற்றி நான் மிகவும் சிந்தித்திருக்கிறேன். கொடுமைகள் நிறைந்த சதுர்வர்ண அமைப்பு, கீழ் வகுப்புகளைச் சேர்ந்த இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கு முற்றிலும் சக்தியற்றவர்களாகச் செய்துவிட்டது என்பதுதான் இந்தக் கேள்விக்கு கிடைக்கும் ஒரே விடை.

26.சதுர்வர்ண முறையை விட அதிகமாக மனிதனை இழிவுபடுத்தும் சமூக அமைப்பு எதுவும் இருக்க முடியாது.

27. இந்திய வரலாற்றிலேயே சுதந்திரமும் பெருமையும் புகழும் மிகுந்து விளங்கிய ஒரே காலம் மௌரியப் பேரரசின் காலம்தான். மற்ற எல்லாக் காலங்களிலும் நாடு தோல்வியிலும் இருளிலும் தவித்தது. மௌரியர் காலத்தில் சதுர்வர்ணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

28.செயல் உலகில் தனி மனிதன் ஒரு எல்லையிலும் சமூகம் மறு எல்லையிலும் இருக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையே சிறியதும் பெரியதுமாக எத்தனையோ விதமான கூட்டு அமைப்புகள், குடும்பங்கள், நட்புறவுகள், கூட்டுறவுச் சங்கங்கள், வர்த்தக கூட்டமைப்புகள், அரசியல் கட்சிகள், திருடர் கும்பல்கள், கொள்ளைக் கூட்டங்கள் அமைந்திருக்கின்றன.

29. ஒரு சமுதாயம் வாழ்கிறதா, இறக்கிறதா என்பது இங்கு பிரச்சினை அல்ல என்பது என் கருத்து. என்ன நிலையில் வாழ்கிறது என்பதே முக்கியம்.

30. உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.

31.சாதி என்பது ஒரு எண்ணம். ஒரு நிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்.

32.சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேடுகளுக்கும் மூலகாரணம்.

33. சாஸ்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அதிகாரத்தை அழிக்க வேண்டும்.

34. பிராமணர்கள் அரசியல் சீர்திருத்த இயக்கங்களிலும் சில சமயம் பொருளாதாரச் சீர்திருத்தத்திலும் முண்ணனியில் நிற்கிறார்கள். ஆனால் சாதித் தடைகளை உடைக்கப் புறப்பட்டிருக்கும் படையில் கடைசி இடத்தில் கூட அவர்கள் காணப்படவில்லை.

35.சாதி பகுத்தறிவுக்கு முரணானது.

36. சாதி, வர்ணம் என்ற விஷயங்களில் ஒரு இந்து தனது பகுத்தறிவைப் பயன்படுத்துவதை சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை.

37. சீர்திருத்தக்காரருக்குப் பகுத்தறிவும் ஒழுக்கமும் இரண்டு சக்திமிக்க ஆயுதங்களாகும்.

38. சாதிக் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் , நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையுமே வெடி வைத்து தகர்க்க வேண்டும்.

39. இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பிராமணியம். பிராமணியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும்.

40.இந்து சமூகம் சாதியற்ற சமூகமாக மாறினால்தான் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேண்டிய பலத்தைப் பெற முடியும்.

இவ்வாறு சாதி ஒழிப்புக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி அறிவாயுதமாக உள்ள இந்நூலை சமத்துவ சாதியற்ற சமூகம் அமைக்க விரும்பும் அனைவரும் வாசித்துப் பாருங்களேன்!

டாக்டர் அம்பேத்கர் - சாதி ஒழிப்பு..
பாரதி புத்தகாலயம்
ரூ.70/-
பக்கங்கள்... 96

- இராமமூர்த்தி நாகராஜன்