கரோனா தொற்றுநோய் உலகையே அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் 21 நாள் ஊரடங்கின் ஒரு நாளன்று, திருலோக சீதாராம் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட இந்த நாவல் என் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.

siddharthan novelகி.மு. 5 ஆம் நூற்றாண்டு. (கொஞ்சம் முன் பின்னாகவும் இருக்கலாம்) . வேதமும் வேத மறுப்பும் தத்துவ மோதல்களுக்கு உள்ளான காலகட்டம். வேத பாராயணம் மூலம் வேள்விகளில் பலி கொடுத்து பரிகாரம் செய்து பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வேதம், சமூகத்தின் பல்வேறு இண்டு இடுக்குகளிலும் அதன் வேர்களைப் படர விட்டுக் கொண்டிருந்தது.

இயக்கவியலின்படி ஒன்றிலிருந்து ஒன்று பரிணமித்து ஒன்று ஒன்றை மறுத்து ஒன்றுடன் ஒன்று இணைந்து மாற்றங்கள் தொடர்ந்தன.

வேதத்தின் மீது கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்கள் அதைத் தாண்டி அதிலிருந்து சிந்திக்கத் தலைப்பட்டனர். வேதக் கருத்துகளிலிருந்து புத்த சமணக் கருத்துக்கள் கூர்மைப் படுத்தப்பட்டிருக்கும். இல்லை புத்த சமண கருத்துகளிலிருந்து வேதக் கருத்துகள் கூர்மைப்படுத்தவும் பட்டிருக்கலாம். இதற்கு இது முந்தியது இதற்கு இது பிந்தியது என்று எவர் கூற முடியும்?

வேதத்தை முழுக்க நம்பும் ஒரு அந்தணர் குருகுலம் நடத்துகிறார். அவரது மகன் சித்தார்த்தன் அந்தக் குருகுலத்திலேயே மிகச் சிறந்து விளங்குகிறான். அந்தக் காலத்தில் அவர்கள் சிறந்ததென்று எதைக் கருதினார்களோ அவற்றிலெல்லாம் அவன் சிறந்திருந்தான். அவனுக்கு வேதக் கருத்துகளில் நம்பிக்கை தகர்ந்தபோது சமணத்தை நோக்கி ஓடுகிறான். அவன்மீது கொண்ட அன்பால் அவனது நண்பன் கோவிந்தனும் கூடவே செல்கிறான். சித்தார்த்தன் இப்போது கடுமையான சமணத் துறவி. சமணத்தில் மிகப் பெரும் பதவியை அவன் அலங்கரிக்கப் போகிறான் என்று எல்லோரும் கருதும் சூழலில் புத்தரின் மீது ஆவல் கொண்டு புத்தரை சந்திக்க ஜேதாவனத்திற்குப் போகிறான். அங்கு கோவிந்தன் புத்தத் துறவியாக மாறி விடுகிறான். ஆனால் புத்தரிடம் விவாதம் செய்துவிட்டு அவரின் புன்னகையோடு அங்கிருந்து கிளம்புகிறான் சித்தார்த்தன். ஒரு தோணிக்காரன் குடிசையில் தங்கியிருந்துவிட்டு அவன் உதவியுடன் ஆற்றைக் கடக்கிறான். நகரில் தாசி கமலாவை ஆசைப்படுகிறான். அவள் உதவியுடன் காமசுவாமி என்கிற வணிகனிடம் சேர்ந்து வணிகம் செய்து சகல போகங்களையும் அனுபவிக்கிறான். கிழடு தட்டிப் போன பிறகு அவற்றில் அலுத்து கமலாவைப் பிரிந்து வெளியேறுகிறான், அவள் கர்ப்பவதி என்பதை அறியாமலேயே.

ஆற்றங்கரையில் சாக விரும்பியவன் தூங்கி எழும்போது காவல் காக்க எண்ணி கண்ணயர்ந்த புத்தபிக்கு கோவிந்தன் யாரென்று தெரியாமல் இருக்கிறான். யாரென்று தெரிந்ததும் விலகி அவன் வழியே செல்கிறான்.

பழைய நண்பன் தோணிக்காரன் வாசுதேவன் தோணியில் ஏறி செல்லும்போது பழைய கடனை நினைவுபடுத்துவதன்மூலம் நட்பு புதுப்பிக்கப்படுகிறது. அவனது குடிசையில் ஆற்றினை மையப்படுத்தி வாழத் தொடங்குகிறான். புத்தரைத் தரிசிக்க தன் மகனுடன் பயணித்த கமலா கருநாகம் தீண்டி சித்தார்த்தன் முன்னிலையில் இறக்கிறாள். மகனைப் பொறுப்புடன் வளர்க்க எண்ணித் தோற்கிறான். மகன் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடுகிறான். தேடிச் சென்றவன் நகரத்தில் காண வழியில்லாமல் வாசுதேவனுடன் திரும்புகிறான்.

வாசுதேவன் ஞானம் பெற்று கானகம் ஏகுகிறான். சித்தார்த்தன் ஆற்றிடம் தியானிக்கிறான். கோவிந்தன் மீண்டும் சந்திக்கும்போது அவர்கள் உரையாடுகிறார்கள்.

  1. இவ்வளவு காலத்தில் நீ கண்டடைந்த கோட்பாடு எது? நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
  2. ஒரு சிறு கருத்து கூடவா இல்லை? சொற்களால் உணர்த்த முடியாது. ஞானம் வழங்கப்படுவது இல்லை. எந்த ஒன்றிலும் அதன் எதிர்மறையும் இணைந்திருக்கிறது. கற்பனை உலகோடு ஒப்பிடாமல் இருக்கும் உலகை அப்படியே ஏற்பது.
  3. நிர்வாணம் என்பது சொல் அல்ல, எண்ணம்தானே? எண்ணத்திற்கு அல்ல. பொருளுக்கே முக்கியத்துவம்.
  4. நீ சொல்லும் பொருள் புத்தர் மாயை என்று மறுத்ததாயிற்றே? இங்கு தோன்றும் பொருள் எல்லாம் பொய்யென்றால் பொருளான நானும் பொய்தான். உயர்ந்தது அன்பு ஒன்றே. உலகின்மீது அன்பு செய்வதே உயர்ந்த செயல். புத்தரின் எண்ணத்தால் அல்ல. அவரது செயலையே மதிக்கிறேன்.

நிம்மதியற்றிருந்த புத்தபிக்குவான கோவிந்தனுக்கு அன்பை உணர்த்த, கோவிந்தன் அன்புடன் ஒரு முத்தமிடுகிறான். அப்போதுதான் சித்தார்த்தன் புத்தனாய்த் தெரிகிறான். கோவிந்தன் வீழ்ந்து வணங்குகிறான். இதுதான் நாவலின் சுருக்கமான கதை.

சித்தார்த்தனுக்கும் நண்பனுக்கும் இடையில் குருகுலத்தில் நடக்கும் உரையாடல், சமணத்தில் சேர தந்தையுடன் நடக்கும் உரையாடல், சமணக்கூட்டத்தில் இருக்கும்போது அவனுக்கும் கோவிந்தனுக்கும் இடையிலான உரையாடல் புத்தரைக் காணச் செல்ல சம்மதம் வேண்டும்போது சமணத் தலைவருக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல் (மறைமுகமாக), ஜேதாவனத்தில் புத்தருக்கும் அவனுக்குமிடையில், பிறகு புத்த மார்க்கத்தில் சேர்ந்த நண்பன் கோவிந்தனுக்கும் அவனுக்கும் இடையிலான உரையாடல், தோணிக்காரனுக்கும் அவனுக்கும், தாசி கமலாவுடன், வணிகன் காமசாமியுடன், மீண்டும் கோவிந்தனுடன் , மீண்டும் தோணிக்காரனுடன், மீண்டும் கமலாவுடன், மீண்டும் தோனிக்காரனுடன், மீண்டும் கோவிந்தனுடன் என்று இடம்பெறும் உரையாடல்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.

தந்தையிடமிருந்து வேதம் மறுத்து விலகுதல் சமணம் மறுத்து விலகுதல் புத்தம் ஏற்காது விலகல் இன்பங்களை வாரி வழங்கிய தாசி கமலாவிடமிருந்து விலகல் செல்வ போகத்திலிருந்து விலகல் மகனின் பாசத்திலிருந்து விலகல் இப்படி விலகல்கள் சில.

தந்தையிடம் கால்கடுக்க நின்று பிடிவாதம் பிடித்து விலகும்போதும் சமணத் தலைவரை வசியம் செய்து விலகும்போதும் அவன் செய்த முயற்சிகள் போல் புத்தரிடமிருந்து விலகும்போது கடினமாக இல்லை. கமலாவிடம் கூட அப்படித்தான்.

நிகழ்காலத்தின் நொடிகளை ரசிக்கச் சொல்லும் ஜென் தத்துவம் இதற்குள் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அறிவை பிறருக்குத் தரலாம் ஞானத்தை எவரும் தர முடியாது. அவரவர் ஞானம் அவரவர்க்கே. தன் வாழ்க்கையைத் தான் வாழ்தலே ஞானம் என்கிறது நாவல்.

போகங்களின் பின் புலனடக்கம் புத்தன் என்றும் புலனடக்கத்தின் பின் போகம் சித்தார்த்தன் என்றும் படைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

சொற்கள் அர்த்தமில்லாதவை என்றும் எண்ணங்கள் முழுக்க நிரம்பாதவையென்றும் வெளிப்படுத்தலை விடவும் ஒரு ஆற்றின் சலசலப்பைப்போல் உள்வாங்குதலையும் தன்னை அகலாது வெளியில் தேடாமல் உள் நாடி உள் ஓடி தன்னையறிந்து தனக்காக தன்பற்றால் வாழ்க்கையை ரசிக்கச் சொல்லும் இருத்தலியம் சலசலத்து நெளிகிறது.

போதனைகள் எதையும் கற்றுத் தந்துவிடாது புரிதல்கள் நான் என்பதைப் பொறுத்தது என்று வெளிப்படையாகப் பேசுகிறது. போக சித்தார்த்தன் போகம் வெறுத்து கானகம் ஏகி போதிமரத்தடியில் தன் உள்ளுணர்வு கூறியதைக் கண்டடைந்ததே ஞானம் என்பதையும் அது வலியுறுத்த அழைத்துக் கொள்கிறது. நாவலின் சித்தார்த்தன் போகங்களிலிருந்தே தன் உள்ளுணர்வு கூறியதைக் கண்டடைந்து ஞானம் பெறுகிறான், வழி தேடுவதை விடுத்து வழி காண்கிறான் என்கிறார் ஹெஸ்ஸே.

எந்த இடத்திலும் எவராக இருப்பினும் தன்னையறிந்து தன் குரல் கேட்கும் ஞான நிலையை அடைவது உயர்ந்த கொள்கைதான். இங்குக் கட உள் என்னும் பொருள்முதல்வாத மெய்ம்மை உயர்த்தப்படுவதையும் கருத்துமுதல்வாதமான கடவுள் புறந்தள்ளப்படுவதையும் அவதானிக்க முடியும்.

வேத பிராமணனாக இருந்தபோது அவன் அதில் கரைகாணுகிறான். அதாவது பிரம்மச்சாரியம் கிருகஸ்தம் வனப்பிரஸ்தம் சன்னியாசம் என்ற நிலைகளில் முதலாவது நிலையில் - . வேதக் கொள்கையின்படி மற்ற பிந்திய மூன்றும் சிறக்க முதல் நிலையான பிரம்மச்சரியம் கட்டாயமான ஒன்று. அதில் தேர்ந்தபின்புதான் - வெளியேறுகிறான்.

சமணத் துறவியாக இருக்கும்போது கூட தலைமையாக மாறும் தகுதி அடைந்து கொண்டிருந்த சூழலில்தான் வெளியேறுகிறான். புத்தரிடம் வாதிடும்போதும்கூட வீடுபேறு என்பது பொருந்தாக் கொள்கை. உண்மை உலகைக் கடந்த கற்பனை. என்று நேரில் சொல்கிறான். புத்தரின் புன்னகை பரிசாகக் கிட்டுகிறது.

இன்பங்களின்மீது பற்று வரும்போது கமலாவிடம் மையல் கொண்டபின் பொருள் நிலம் ஒன்றன்பின் ஒன்றாக பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை என்பவை முறையே வந்து சேர்கின்றன. பெண் பொன் மண் ஒழிந்து மீள்கையில் தன்னை தேடிக் கண்டடைய ஆறு துணை நிற்கிறது.

கடந்தகாலத்தில் தந்தையின் வேதனையோடு தான் வந்ததையும் எதிர்காலத்தின் வாழ்வான மகனின் வேதனையையும் ஒரு சேர ஒதுக்கி விடும்போது நிகழ்காலம் வசமாகிறது சித்தார்த்தனுக்கு.

பிள்ளைப்பிராயம் தொட்டு கோவிந்தன் பயணிக்கிறான் சித்தார்த்தனோடு. ஒரு பாதையிலும்… தனிப்பாதையிலும்…

ஆற்றங்கரைகளில் வளர்ந்த நாகரிக வரலாற்றை ஒப்புநோக்கும்போது தன்னை அறிதல் என்பதே நாகரீகமடைவதுதான் என்பதும் உள்ளுறைகிறது.

 புத்தரிடமிருந்து விலகி தன்னந்தனியனாய் வரும்போது எந்தக் குழுவிலும் இணைந்திராத தான் தனியனாய் உணரும் அந்த இடம் கவனிக்கத்தக்க ஒன்று. பிராமணன் அல்லன் சமணன் அல்லன் போதகன் அல்லன் புத்தமதத்தினனும் அல்லன். உலகத்தில் அவன் மட்டும் தனி. உலகப் பொருட்கள் மாயை என்று விலகிப் போகும் தனி அல்ல இது. எதிர்முகமாக உலகப் பொருட்கள் உண்மையானவை என்று திரும்புதல் . உலகத் தொடர்பை அறுத்துக் கொள்வதல்ல கொள்கைகளிலிருந்து விடுபடுவது. அவற்றின் போதாமையை முன்னிறுத்தி தானே தன் வழியில் அனைத்தையும் பார்க்க முயற்சிப்பது. அந்த உணர்வில் அவனுக்கு வீசும் காற்றும் உறைக்கிறது. கண்ணில் படும் உலகப் பொருட்கள் எல்லாம் அவனுக்குள் புத்துணர்வைத் தருகின்றன.

 சிந்தனை உலகினின்று விடுபட்டு பொருள் உலகினைப் புரிந்து கொள்ளத் தொடங்கி தோணிக்காரனின் குடிசையில் படுத்திருக்கும்போது கனவில் ஒரு மாது பாலூட்டுகிறாள். ஆறுகடந்து கரையேறி குடிசைகளின் வழியே குழந்தைகளின் கொண்டாட்டங்களினூடாக துணி துவைக்கும் பெண்ணின் காமம் தீண்டி நகரம் புகுகிறான்.

குருபரம்பரை மரபு மூலம் போதனை செய்து கொள்கைபரப்பும் இந்தியத் தத்துவமரபு மறுக்கப்படுகிறது. அதிகார பீடத்தில் இருத்தப்படும் குருவின் போதனைகள் வெறும் சொற்கள் என்று சாமானியர்களையும் ஆசிரியர்களாக ஒவ்வொருவரையும் முக்கியமானவராகக் கூறும் தலைகீழ்ப் பிறழ்வு இந்த இடத்தில் நிகழ்கிறது.. பெரும் சமணனையே வசியம் செய்தவனால் தாசி கமலாவை எதுவும் செய்ய முடியவில்லையே. அவள்தான் இவனை வசியம் செய்தாள்.

உன்னை வலிந்து கொள்ள முடியும் அபகரிக்க முடியும் துன்புறுத்த முடியும் என்று சித்தார்த்தன் கமலாவிடம் சொல்லும்போது ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக எதையும் முழுமையாகப் பறித்துவிட முடியாது என்பதை அவள் சொல்கிறாள்.

கமலாவிடமும் காமசுவாமியிடமும் வாசுதேவனிடமும் கற்கிறான். இதில் பார்க்கவேண்டியது அவன்தான் கற்கிறான். எவருடைய போதனையாலும் அல்ல. முன்னெப்போதும் பெரியவர்களிடம் இருந்த போதெல்லாம் மனம் ஒன்றாமல் காது கொடுத்தது போலன்றி கமலாவிடமும் வணிகனான காமசாமியிடமும் தோணிக்காரனான வாசுதேவனிடமும் அவன் மகிழ்ச்சியாகக் கற்கிறான். அவர்களிடமிருந்து அவன் கற்றது அவர்களின் அன்பை, அன்பு காட்டுதலை.

புத்தரிடம் கூட ஒன்றாமல் கற்ற மனம் கமலாவிடம் ஒன்றுகிறது.. புத்தருக்கு ஈடு ஒரு பெண். புத்தரின் மறைவையொட்டி நிகழ்கிறது கமலாவின் மரணம்.

ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் மக்களை நேசிக்கத் தொடங்குகிறான். மிகப் பெரும் சிந்தனையாளன் போலதான் ஒரு சாமானியனும் என்று தோன்றுகிறது. எல்லா உயிரும் சமம் என்பது உயர்ந்த ஞானம் என்று தெளிகிறான். விலங்குகளும் கல்லும் உட்பட.

கோவிந்தனும் சித்தார்த்தனும் உரையாடும் கடைசி அத்யாயம் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

”நீ எதைக் கண்டடைந்தாய் நண்ப” என்று கோவிந்தன் குழப்பங்களோடு சித்தார்த்தனிடம் வினவும்போது அவன் இறுக்கும் பதில் வாழ்க்கையை ரசித்து அன்புகொண்டு வாழ்; ஞானம் என்பது தானே அடைவது; தன்னால் அடைய முடிந்ததை விடவும் பிறர் எவரும் அதை அடைய வைக்க முடியாது என்பதுதான். இப்படிக்கூட சொல்லலாம். இது இந்த நாவலை நான் படிக்கும் போது… நீங்கள் இதை வேறொரு விதத்தில் படித்துணர்வீர்கள். அதாவது ஞானம் அவரவர் கண்டடைவதே.

- பொ.முத்துவேல்