vekkai novelஇந்த கோடைக்காலத்தில் எதிர்பாராது கிடைத்த இடைவெளியும்.. எதிர்பாராமல் கிடைத்த எழுத்தாளர்.பூமணி அவர்களின் "வெக்கை" நாவலும் மனதின் வெக்கையை இன்னும் அதிகப்படுத்தி விட்டது...

வெய்யிலிலும், மலங்காட்டிலும், மலை அடிவாரங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் இந்நாவல்...

ஒரு தேர்ந்த திரைப்படத்திற்கு ஒப்ப... சிதம்பரம், வடக்கூரானை கொலை செய்வதில் இருந்தும், குண்டு வெடித்து புகை கிளப்புவதிலும் திடீரெனப் புறப்படும் கதை... தொடரும் அத்தியாயங்களிலும், உரையாடல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக நமது மனதுக்குள் நுழைகிறது...

சிதம்பரம் அவனது மாமா மற்றும் அய்யா ஆகியோரின் உரையாடல்களின் மூலம் ஃபிளாஷ் பேக் உத்திகளாகக் கதையைக் கையாள்கிறார் ஆசிரியர்.

ஆண்ட பரம்பரை எனத் தாமாக நினைத்துக் கொள்பவர்களுக்கும், சொந்த நிலத்தில் உழைத்து உயர்வதில் ஆர்வமுள்ளவர்களுக்குமான பிரச்சினையை மூலமாகக் கொண்டு கதை வேர் பிடிக்கிறது...

வடக்கூரான் மற்றும் உறவினர்கள் சிதம்பரத்தின் அண்ணனைக் கொன்று விட, அதனால் மனமுடைந்த சிதம்பரத்தின் குடும்பம் இடிந்து போவதும்.. அதற்கான பழிவாங்குதலும், தப்பித்து அலைவதையும்... நாமே சிதம்பரமாகவும், அவனது அய்யா, ஆத்தாவாகவும், மாமாகவும் உணர வைத்தது ஆசிரியரின் லாவகம்.

இக் கதாபாத்திரங்களுக்கு பசிக்கும் போது நமக்கும் பசிக்கிறது.. தவிக்கும் போது.. நமக்கும்... அவர்கள் காரம்பழத்தை நமட்டும் போது நமக்கும் இனிக்கிறது.

பகல்களில் அடிக்கும் வெய்யிலும், இரவில் வாட்டும் குளிரும் நமக்கும் தோன்றுகிறது.

ஒரு சாதாரண குடும்பத்திற்கு அந் நாட்களில் நடந்த நிகழ்வுகள் பெரிய வார்த்தை ஜாலங்கள் இன்றி... மிகச் சாதாரணமான, இயல்பான, வட்டார வழக்குமொழியில் எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த சிறிய பையனுக்கு அவனது அய்யா உலகத்து நடைமுறைகளை விவரிக்கும் முறையில் தெரியும் விரக்தியும், கரிசனமும், விழிப்புணர்வும் நமது வீட்டில் இருக்கும் ஒரு பெரிய உறவு நமக்கு இந்த உலகத்தை குறித்து எடுத்துரைப்பதை ஒத்திருக்கிறது.

ஆசிரியரின் உவமைகள் மிகச் சிறப்பு.. எடுத்துக்காட்டு யானைக்கால் போன்று இருக்கும் ஆலம் விழுதுகள்...

கொறண்டிப்பூவின் வாசனை எப்படி இருக்கும்? என்ற யோசனையுடன் தங்கள் யாவரையும் இந்த அனுபவத்தைப் பெற அழைக்கிறேன்..

அசுரன் படத்தை இதுவரை பார்க்காததும் ஒரு வகையில் நல்லதாகப் போய்விட்டது.

நன்றி.திரு.பூமணி அவர்களே...

- பாலமுருகன் வரதராஜன், தஞ்சாவூர்.