தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூ வரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவற்றில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவசக்தி. உள்ளார்ந்த ஆற்றல். இந்த மரபுத் தொடர்ச்சி பாணர்களின் பண்ணத்தியில் இருந்து தொடங்கி புலவர் மரபின் பாட்டுகளில் பயணித்து இன்றைய கவிதைகளில் நிலைபெற்றுள்ளது. என்றைக்குக் கவிதைகள் அச்சு வாகனம் ஏறத் தொடங்கினவோ அன்றுமுதல் இசையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டன. ஆனாலும் தாளலயம், சொற்சந்தம் முதலான பந்தங்களை விட்டு விலகவில்லை. விலகவும் முடியாது.

கவிதை, மனித இனத்தின் தனிப்பெரும் சொத்து. மனிதன் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டதைப் போலவே கவிதை படைக்கவும் கற்றுக் கொண்டான். மொழியோடு உடன்பிறந்த கலை கவிதைக் கலை. மொழியறிந்த ஆதிமனிதன் தொடங்கி இன்றுள்ள நவீன மனிதன் வரை கவிதை படைக்காத மனிதர்கள் இல்லை. மனித சமூகத்தின் வளர்ச்சி வரலாற்றில் கவிதைகள் அவனை இன்புறுத்தின, எழுச்சியூட்டின, போராடத் தூண்டின. சமூக மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிதைகள் உடனிருந்து உற்ற துணைபுரிந்து மனிதர்களை வளப்படுத்தி உள்ளன. சாதாரண பாமர உழைக்கும் மக்கள் தொடங்கிப் புலமையாளர் களுக்கும் மன்னர்களுக்கும் மதகுருமார்களுக்கும் தத்துவ வித்தகர் களுக்கும் கவிதைகளே அன்றைய ஊடகங்களாயிருந்தன. மனிதகுல வரலாறு கவிதைகளோடு தொடங்கிக் கவிதைகளோடு பயணித்துக் கவிதை களோடு வாழ்கின்றது. தமிழ்க் கவிதைகளும் இப்படித்தாம்.

*** *** ***

இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னர் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அகில உலகையும் காத்து இரட்சிக்கும் பேராற்றலாகத் தம்மைத் தாமே வரித்துக்கொண்டனர். அந்த சூழ்ச்சிக்குத் துணையாக அவர்கள் சுட்டிக்காட்டி பயமுறுத்திய பெரும்பூதம்தான் சோவியத் ரஷ்யா. அதாவது கம்னியூசம், பாட்டாளி வர்க்க வல்லரசு, குறிப்பாக சிவப்பு வண்ணம். இந்த பூச்சாண்டிகளை முன்னிறுத்தி அச்சமூட்டியே அமெரிக்கா முதலான வல்லரசுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டன. போர் அச்சம், பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத் தளவாட விற்பனைகளில் அவர்கள் தம்மை வளப்படுத்திக் கொண்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவித் ரஷ்யா சிதறுண்டு பலமிழந்தபோது வல்லரசு நாடுகளின் வியாபாரத்திற்கும் மேலாதிக்கத்திற்கும் ஒரு பொது எதிரியைக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. சிவப்பைக் காட்டிக் காட்டி அச்சமூட்டிய வல்லரசுகளால் கட்டமைக்கப்பட்டதுதான் இசுலாமியத் தீவிரவாதம். சிவப்புக்கு பதில் பச்சை. இன்று உலக அளவில் திட்டமிட்டு உருவாக்கப்படும் 'இஸ்லாமோபோபியா' என்ற உளச் சிக்கலுக்கான சதியும் பின்னணியும் இதுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலோக நம்மை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் யாராக இருந்தபோதும் நம்மை உண்மையில் ஆண்டது என்னவோ மனுதர்மம்தான். வேதமும் மனுவும் வருணாசிரமும் இந்திய அதிகாரத்தின் ஆட்சி பீடங்கள். வேதத்தின் மனுவின் மையம் வருணாசிரம தர்மம், அதாவது சாதிய அடுக்குமுறை சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பணீய மேலாதிக்கம். இருபதாம் நூற்றாண்டில் இதற்குப் பெயர் இந்துத்துவா, பூசி மெழுகிச் சொன்னால் இந்துதர்மம். இந்த இந்துத்துவா ஆட்சிக்கு ஆபத்து வரும் காலங்களில் எல்லாம் பார்ப்பனியம் பலவகையான ஆயதங்களைக் கையிலெடுத்து ஒரு எதிரியை முன்னிறுத்தும். சுதந்திரப் போராட்டக் காலங்களில் திலகர் முதலான தீவிர தேசியவாதிகளின் இந்து தர்மத்தைக் காப்பாற்றுதல் என்ற செயல் திட்டத்திற்கு எதிரிகள் ஆங்கிலேயர்கள். இன்றைக்குச் சுதந்திர இந்தியாவில் இந்து தர்மத்தைக் காப்பாற்றுதல் என்ற இந்துத்துவா செயல் திட்டத்திற்குப் பொது எதிரி இசுலாமியர்கள். இந்து ராஷ்டிரம் என்ற கனவோடு அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு உரமும் ஊட்டமும் இசுலாமிய எதிர்ப்பு அரசியல்தான்.

அண்மைக் காலங்களில் வலதுசாரிச் சிந்தனையாளர்களின் கைகளில் நாடு சிக்கிக்கொண்ட நெருக்கடியான சூழலில் இந்தியாவின் பன்மைத் தன்மையும் மதநல்லிணக்கமும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பல்வேறு தேசிய இனங்களின் சமயம், மொழி, பண்பாடு முதலான தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்பட்டு ஒரே நாடு, ஓரே மொழி, ஒரே பண்பாடு என்ற அரசியல் சித்தாந்தம் மெல்ல மெல்ல நம் மீது திணிக்கப்படுகிறது. மிகப்பெரும் பேராபத்தாக மதச் சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் தொடர்ந்து பல தளங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த காலச் சூழலில் இஸ்லாம் எங்கள் மதம், இந்தியா எங்கள் தேசம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்த மத நல்லிணக்க நம்பிக்கையோடு இந்த தேசத்தில் வாழும் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட இசுலாமியர்களின் குரலாகவும் எதிர்க் குரலாகவும் வெளிப்படும் கவிதைத் தொகுதிதான் கவிஞர் கோட்டை கலீமின் “அழைப்பொளிஎன்ற தலைப்பிலான இக்கவிதைத் தொகுப்பு.

கவிஞர் கோட்டை கலீம் இஸ்லாமிய மார்க்கச் சிந்தனைத் தளத்திலும் அரசியல் சமூகச் செயற்பாட்டுத் தளத்திலும் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். மத நல்லிணக்கப் பணிகளில் எப்பொழுதும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் தோழர் கலீம் ஒரு முற்போக்குச் சிந்தனையாளரும் கூட. சரியான வரலாற்றைப் பதிவு செய்வதிலும் புதிய வரலாற்றை உருவாக்குவதிலும் அவர் முனைப்போடு செயல்பட்டு வருவது கண்கூடு. எழுத்து, சொல், செயல் மூன்று தளங்களிலும் தமது தலைமைப் பண்பு மிளரச் செயல்படுவதில் வல்லவர். அண்மைக் காலமாகத் தொடர்ந்து முகநூல் முதலான சமூக ஊடகங்களில் மதவாத சக்திகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து நடத்திவரும் கருத்துப் போராட்டம் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கோட்டை கலீமின் பதிவுகள் மிகவும் காத்திரமான விவாதங்களை தொடங்கி வைக்கும், தொடர்ந்து விவாதிக்கும், எட்டிய வரையிலான தீர்வுகளையும் முன்மொழியும்.

சமகால அரசியல் குறித்த அவரின் கூர்த்த அவதானிப்பு நேரடி விவாதங்களிலும் முகநூல் பதிவுகளிலும் மிகச் சிறப்பாக வெளிப்படுவதை நான் பலமுறை கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன். அவரது கருத்தாடல்களுக்கான எதிர்வினைகளை அவர் ஒருபொதும் சலிப்போடோ விரக்தியோடோ எதிர்கொண்டதில்லை. விவாதங்களில் தெளிவு பிறக்கும் என்ற தெளிவு அவருக்கு எப்பொழுதும் உண்டு. அண்’மையில் அவர் எழுதி வெளியிட்ட 'மார்க்கமா பேசறேன்' என்ற சமய சமூக அரசியல் கட்டுரைத் தொகுப்பு அறிஞர்கள் பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. அந்நூல் மிகப்பரவலான கருத்தாடல்களுக்கு இடமளித்ததோடு நூலாசிரியர் கோட்டை கலீமின் நேர்மைக்கும் உண்மைக்கும் சான்றாக விளங்கி வருகின்றது.

இன்றைய சூழலில் குறிப்பாக இஸ்லாமிய வெறுப்பையே முதலீடாக்கி இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்து இந்து தேசத்தைக் கட்டமைக்கப் பாடுபடும் மதவாத சக்திகளின் அரசியல் களத்தில் அழைப்பொளி என்ற இக்கவிதைத் தொகுப்பின் வருகை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள இருபத்திரண்டு கவிதைகளும் சமகால வாசிப்புக்கானவை. சமகால அரசியல் குறித்து எத்தகைய அக்கறையும் இல்லாமல் வாழும் மனித ஜீவராசிகளுக்கு இந்தக் கவிதைகள் எதுவும் புரியாது, புலப்படாது. கவிஞர்களுக்கு இருவகை வெளிகளில் பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. ஒன்று புறவெளி மற்றொன்று புனைவு வெளி. பெரும்பாலான படைப்பாளிகள் புனைவு வெளிகளிலேயே தமது பயணத்தை நிறைவுசெய்து விடுகின்றனர், தம்மைச் சூழந்திருக்கும் புறவெளியைப் பற்றி இவர்கள் கவலைப் படுவதேயில்லை. இவர்கள் தூய இலக்கிய வாதிகள். இவர்களுக்குப் படைப்பின் அழகும் படைப்பாற்றலுமே இலக்கு. யாருக்காக எழுதுகிறோம்? படைப்பினால் அவர்களுக்கு என்ன பயன் என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. புனைவுவெளியில் உலா வராமல் புறவெளியிலேயே பயணம் செய்யும் சில படைப்பாளிகளும் இருக்கின்றார். அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவர்கள் படைப்பாளிகள் இல்லை, பிரச்சாரகர்கள்.

கோட்டை கலீமின் கவிதைகள் புறவெளி தந்த அனுபவங்களைச் சுமந்து கொண்டு புனைவுவெளியில் பயணம் செய்கின்றன. வெறும் உள்ளடக்கங்கள் படைப்பாக மாறுவதில்லை. சொற்கள் மட்டுமே கவிதையாவதில்லை. கவிதை தருகிற உணர்ச்சி படைப்பவனிடமிருந்து படிப்பவனுக்கு கடத்தப்படும் சூழலில் கவிதை முகிழ்க்கத் தொடங்குகிறது. அழைப்பொளி என்ற இத்தொகுதியில் எண்வகை மெய்ப்பாடுகளில் மிகுதியும் வெளிப்படும் உணர்ச்சி அவலமும் இளிவரலுமே. அச்சமும் வெகுளியும் அடுத்த நிலையில். அங்கதத்தால் வந்த நகைச்சுவை கொஞ்சம் உண்டு. ஆனால் உவகையையும் பெருமிதத்தையும் எங்கும் காண முடியவில்லை. படைப்பாளி என்ன செய்வான்? தேசத்திலேயே அது காணாமல் போய்விட்டால் படைப்பில் மட்டும் எப்படித் தட்டுப்படும்.

தமிழ் இலக்கியப் பயிற்சியும் தோய்வும் மிக்கவராக கோட்டை கலீமைத் தொகுதி அடையாளம் காட்டுகிறது. சொல் விளையாட்டும் பொருள் விளையாட்டும் இத்தொகுதியின் கவிதைகளில் பரவலாகத் தூவப்பட்டுள்ளன. ஆனால் எங்கேயும் துருத்திக் கொண்டு என் மேதாவித் தனத்தைப் பார்த்தீர்களா? என்று படைப்பாளி கூச்சலிடுவதைப் போல் இல்லாதது பாராட்டத் தக்கது. சான்றாக, ‘இரை நம்பிக்கை என்ற முதல் கவிதையின் ஒரு பகுதி இதோ,

இந்த தேசம் விநோதமானது

இங்கு இறை முகவர்கள்

நிர்வாணமாக இருக்கிறார்கள்

பக்தன் ஆடை சாத்துகிறான்

இரை முகவர்களோ

ஆடையணிந்து இருக்கிறார்கள்

வாடிக்கையாளன் அவிழ்த்துப் பார்க்கிறான்.

இறை நம்பிக்கை கேள்விப் பட்டிருக்கிறோம். இந்தக் கவிதை இரை நம்பிக்கை பற்றியது. உணவு அரசியலை அழகாகப் படம் பிடிக்கும் இந்தக் கவிதை போகிற போக்கில் இரை நம்பிக்கையோடு இறை நம்பிக்கையையும் ஒப்பிடுகிறது. நாசுக்காக.

வலதுசாரி பேரினவாத மத அரசியசியலால் எங்கும் எப்பொழுதும் கண்காணிக்கப்படும் சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களை அவலம் ததும்ப விவரிக்கிறது 'நான் கண்காணிக்கப் படுகிறேன்' என்ற தலைப்பிலான கவிதை. அக்கவிதையின் ஒரு பகுதி,

அறிவுத்தளத்தில்

வேள்வியை வளர்த்து

சாத்திரம் உரைக்கும் வேதியராகி

யாகங்களின் பின்னணியில்

அறிவியல் தேடும் நீ விஞ்ஙானி

கேள்வியை வளர்த்து

சூத்திரம் சொல்லும் அறிவாளியாகி

தியாகங்களின் பின்னணியில் இந்த

வையத் தலைமை கொண்டாலும்

நான் வீணை வாசிக்கும் பாகவதனே!

வேத, புராண, இதிகாசங்களில் அறிவியலைக் கண்டதாகச் சிலாகித்து இன்பம் காணும் மதப் பிற்போக்காளர்களை விஞ்ஞானி எனக் கொண்டாடுவதும். உண்மை தொழில்நுட்ப விஞ்ஞானி அப்துல் கலாமை வீணை வாசிக்கும் கலைஞனாக அடையாளப் படுத்துவதும் மதவாதமன்றி வேறென்ன? கவிஞரின் குரலில் இளிவரல் வெளிப்படுகின்றது.

      அழைப்பொளி தொகுதியின் ஒவ்வொரு கவிதையையும் முழுதாக வாசித்துப் பார்க்க வேண்டும். கவிதையின் அழகு அதன் முழுமையில் வெளிப்படும். கவிதைகளை வெட்டி வெட்டி எடுத்துச் சான்றுகாட்டி அதன் சிறப்பை வெளிப்படுத்த முயல்வது இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்காது.

அழைப்பொளி தொகுதியின் சிறப்பியல்புகளாக நான் கருதும் சில குறிப்புகளை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

  1. சமகால மதவாத அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் சொல்லழகும் பொருளழகும் மிளிர முழுமையான படைப்பாற்றலோடு வெளிப்படுத்தும் சிறப்பான கவிதைத் தொகுதி.
  2. குறியீடுகளும் படிமங்களும் நிறைந்தனவாக இக்கவிதை எழுதப் பட்டிருந்தாலும் இருண்மைப் பிடிக்கும் சிக்கிக் கொள்ளாத தெளிவான கவிதைகள் நிறைந்த தொகுதி.
  3. மிகுந்த சமூக அக்கறையோடும் மனித நேயத்தோடும் நல்லிணக்க உணர்வோடும் வெறுப்பு அரசியலுக்கு இடமளிக்காத கவிதைகளால் நிரம்பியுள்ளது இத்தொகுதி.
  4. இந்து மத புராண, இதிகாச, இலக்கியத் தொன்மங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ள கவிதைகள் இத்தொகுதிக்கு சிறப்பு சேர்க்கின்றன.

அணிந்துரை என்ற பெயரில் ஒவ்வொரு கவிதைக்கும் விளக்கவுரை (வியாக்யாணம்) செய்து கொண்டிருப்பது நூலைப் படிக்கப் போகும் வாசகனை அவமதிக்கிற வேலை, அதை நான் செய்யப் போவதில்லை. இந்த நூலுக்காண சமூக, சமய, அரசியல் பின்னணியைத் தொட்டுக் காட்டிவிட்டேன். அது போதுமென்று நினைக்கிறேன். சமகால இந்தியாவைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டுவதோடு அதனை ஒரு அழகான படைப்பிலக்கியமாகவும் மாற்றிக் காட்டிய சிறப்பு இத்தொகுதிக்குண்டு. இதனைச் சாதித்திருப்பவர் கவிஞர் கோட்டை கலீம். எழுத்துத் துறையில் கட்டுரைத் தொடர்ந்து கவிதைத் துறையிலும் அழுத்தமாகத் தடம் பதித்துள்ளார் கோட்டை கலீம். அவருக்கு பாராட்டும் வாழ்த்தும்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த் துறைத் தலைவர், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி-605008