எறும்பு முட்டி யானை சாயுமா?
சாயும் அன்பிருந்நால் யானை என்ன எறும்பின் முட்டுதலுக்கு இந்த பூமியும் கொஞ்சம் சாயும்

kaviji book 600எறும்பு முட்டுது
யானை சாயுது
அப்பாவும் பையனும்

இது தந்தை மகன் பாசத்தால் விளைந்த கவிதை.

சிறு குழந்தைகள் இரு விரல்களை நீட்டி துப்பாக்கியென சுடும்போது குண்டடி பட்டதாக கீழே சாய்வோம். விரல்களை மடக்கி பிஞ்சு கைகளால் குத்தும் போது கண்களை மூடி அழுவோம். இந்த தோல்வியில்தான் அன்பின் வெற்றியே அடங்கி இருக்கிறது. மகன் முட்டி தந்தை சாய்ந்த கதைதான் எறும்பு முட்டி யானை சாய்ந்த கவிதையானது. இந்நூலின் தலைப்புமானது..

கவிதை, கதை , நாவல், கட்டுரை, விமர்சனம் என எல்லா தளங்களிலும் முத்திரை பதித்து வரும் கவிஜி இந்நூலில் மூன்று வரிகளில் குட்டி குட்டிக் கவிதைகளாக பாமரனும் புரியும் வண்ணம் தொகுத்து புத்தகமாக நம் கைகளில் தந்துள்ளார்.

நூலிலிருந்து சில கவிதைகளை பார்ப்போம்

கவிஞனுக்கு மரணமில்லை

சரி

வாழ்வுமில்லை

**

கவிஞனுக்கு மரணமில்லை சரி.. உடலை விட்டு உயிர் விடுபடுவது எல்லாம் கவிஞனுக்கு மரணம் ஆகாது. அவன் எழுத்து இருக்கும் வரை இப்புவியில் வாழ்ந்து கொண்டே இருப்பான்..

சரி வாழ்வுமில்லை என்கிறாரே.. ஆமாம் கவிஞனுக்கு வாழ்வுமில்லைதான்

பொங்கலன்று கவிஜியிடம் பேசும் போது 'என்ன செய்கிறீர்கள் ஜி.. பொங்கல் எப்படி போகிறது என்றேன்'

'சிம்ப்ளி ரைட்டிங் அமர்' என்றார்

ஒரு பண்டிகை நாட்களில் கூட ஒரு எழுத்தாளனால் அதை கொண்டாட விடுவதில்லை அவனுள் குடியிருக்கும் சிந்தனைப் பேய்..

இதைதான் இன்னொரு கவிதையிலும் சொல்கிறார்
கரடியோடு வாழ்ந்து விடலாம்
கவிதையோடு வாழ்வதுதான் கடினம்
சதா பிராண்டிக்கொண்டிருக்கிறது என்று.

இப்படி தன்னை வருத்தி எழுதும் கவிதைகளைதான் சில முகநூல் லைக் விரும்பிகள் தங்கள் பெயரோடு பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைகிறார்கள். உங்களுக்கு பிடித்து உங்களை அந்த கவிதை ஏதோ செய்ததால்தானே அந்த கவிதையை உங்கள் பக்கத்தில் பதிவு செய்கிறீர்கள் உங்களை ஏதோ செய்த அக்கவிதை எழுதிய கவிஞனுக்கு எத்தனை முக்கியமானதாக இருக்கும் நினைத்துப்பாருங்கள். எழுதியவன் பெயரோடு பதிவிட்டால் ஏதாவதொரு வகையில் வாய்ப்புகள் அக்கவிஞனுக்கு கிடைக்குமல்லவா.? நினைத்துப் பாருங்கள். திருந்தினால் நலம். 

***
சீ போவென விரட்டிய கைககள்

என்ன நினைத்திருக்கும்

பசித்த காகம் 

கிராமத்தில் கஞ்ச தனம் நிறைந்தவர்களை இப்படி சொல்வார்கள் 'அவன் எச்சி கையால் கூட காக்கா விரட்ட மாட்டான்' என்று.

என்ன நினைத்திருக்கும் பசித்த காகம் என்று கேள்வி எழுப்புகிறார் கவிஜி. அந்தக் கேள்வியில்தான் இப்போது மனம் காகமாய் கரைந்து கொண்டிருக்கிறது.

இந்த கவிதை காகத்துக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும்.. காதலுக்கு எப்படி என்றால் அதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன் நான்.

***

கழுத்திருகி தொங்குகின்றன

தண்ணீர் பாட்டில்கள்

சாவு சீக்கிரத்தில்

சாவு சீக்கிரத்தில். யாருக்கு?
கழுத்திருகும் பாட்டிலுக்கா?
இல்லையில்லை மனுச பயலுக நமக்குதான்.

இந்த பூமி எப்படி அழியும் ? வானத்துக்கும் பூமிக்கும் தண்ணீர் நிக்குமாம் நாமெல்லாம் அதுல மூழ்கி செத்து போய்ருவோமாம் என்று ஒரு கதை சொல்லி பயமுறுத்தினார் யாரோ ஒரு கதைசொல்லி என் பால்யத்தில்.

ஆம் பூமியின் அழிவு நீராலானது என்றே நினைக்க தோன்றுகிறது. அது நான் கேட்ட பால்ய கதை போலவும் இருக்கலாம். இல்லை சொட்டு நீரில்லாமல் தவித்தும் சாகலாம் என்று மனிதன் நீரை பாட்டிலுக்குள் அடைத்து விலை வைத்து விற்க ஆரம்பித்தானோ அன்றே மனிதம் செத்து விட்டது.

அக்கா மதினி என்று காலையில் உறவு கொண்டாடிவிட்டு மாலையில் அடிபம்பில் தண்ணீருக்கு அடித்து கொள்பவர்களை காணவே முடிகிறது . இன்னொரு உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்காகதான் இருக்கும் .

எப்படியோ சாவு நிச்சயம் என்று இந்த கவிதை பொட்டில் அடித்து பேசுகிறது..

இப்போதே விழித்துக் கொண்டால் கொஞ்சம் பிழைத்துக் கொள்ளலாம்...

***

எரி என்கிறது புதை என்கிறது

இரு சாதிகளுமே

அப்பனை பிணமென்கிறது

சாகும்வரைதான் இந்த சாதியும் மதமும் மணக்கும் அதை தலையில் தூக்கி சுமக்கும் எல்லோருக்கும்.
செத்த பிறகோ பிணமென்றும் நாற்றமென்றும்தான் மூக்கை பிடித்து நகர்ந்து செல்லும் மனித ஜாதி..
எரித்தாலும் புதைத்தாலும் கடைசியில் மண்ணுக்குதான் உரமாகிறோம்.

கல்வியில் நிறைந்தவர்கள்
காதலில் நிறைந்தவர்கள்
கவிதையில் நிறைந்தவர்கள்
இவர்களை சாதிப் பிணி அண்டாது
ஏதாவது ஒன்றை கொண்டு நிறைத்து கொள்ளுங்கள் உங்களை நீங்கள்.

***

போகிறபோக்கில்

வீசி செல்கிறார்கள்

குளம் நிறைய செல்பிகள்.

உங்கள் ஊரில் குளமென்று ஒன்று இருந்தால் அதில் நீர் என்று ஒன்று இருந்தால் கொஞ்சம் குளக்கரையில் நின்று பாருங்கள் கவிதை புரியும்

புரியாத கவிதைகள் எழுதுகிறார் கவிஜி. சிலரிடமிருந்து இவ்வாறான விமர்சனம் சில நேரங்களில்..
ஆமாம் கவிஜியின் சில கவிதைகள் எனக்கும் கூட புரியாது... கவிஜியின் கவிதைகள் மட்டுமல்ல வள்ளுவரின் குரல் கூட.
ஆமாம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

என்னடா இது? என்னத்த எழுதியிருக்கார் வள்ளுவர் ஒன்னும் புரியலையேனு பாப்பையா கலைஞர்னு பெரியாளுங்க எழுதின விளக்கவுரை தெளிவுரைனு எல்லாம் படித்த பிறகுதான் ஏதோ கொஞ்சம் புரிஞ்சுது. எனக்கு புரியலையேனு வள்ளுவர்ட்ட சட்டையை பிடிச்சு என்னத்தயா எழுதியிருக்கேரு என்று கேட்கலாம்னு நினைத்தேன். ஆனால் நமது கற்றலறிவை குறைவாக வைத்துக் கொண்டு மற்றவரை குறை சொல்லி எதற்கு? புரியவில்லை என்றால் எழுதியவரிடமோ அல்லது விளக்கம் அறிந்தவரிடமோ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து குறை சொல்லி எதற்கு?

குறை சொல்லி குறை சொல்லியே இந்த சமூகம் வளரும் ஒருவனையும் முடக்கி விடும்.. மேலும் நிறைகள் மட்டும் வாழ்க்கையாகி விடாது. மூன்றாம் பிறை தான் முழு நிலவாகும்..

ஓரு படைப்பாளியின் கவிதையோன்று நமக்கு புரியவில்லை என்றால் அவரை விட நமது கற்றலறிவு குறைவாக இருக்கும் இல்லையென்றால் ஈஹோவாக இருக்கும் வேறு என்ன சொல்ல...

***

குனிந்த தலை நிமிராமல் வா
முள்காட்டு கழிப்பிடம் முக்காடிட்டு அமர்ந்திருப்பது
உன் கல்லூரி தேவதையாகவும் இருக்கலாம்.

இது ஒரு நண்பனுக்கு இளைஞர்களுக்கு சொல்லும் அறிவுரையாகவும் இருக்கிறது. கழிப்பறை வசதி இல்லாத கிராமத்தின் அவலநிலையை சொல்வதாகவும் இருக்கிறது. இப்போது இந்த அவலநிலை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னும் பல இடங்களில் இந்த அவலம் இல்லாமலில்லை. கொண்டாடப்பட வேண்டிய கவிதை இது.

இப்படி புத்தகம் முழுவதும் கருத்துக்கு பல கவிதைகளும் காதலுக்கு பல கவிதைகளுமாய் நிறைந்துள்ளன.

இதோ காதலுக்கு சில கவிதைகள் உங்களுக்காக..

நீ குனிந்து நீரெடுக்கிறாய்
ஓடும் ஆறு
நின்று நகல் எடுக்கிறது
*
உனக்கு விற்ற
பஞ்சுமிட்டாய்க்காரன்
பறக்கிறான்
*
கண்ணாடி பார்க்கும்
அழகி மட்டும் அல்ல
கண்ணாடியும் பார்க்கும் அழகி நீ
*
கடவுளே என கைகள் விரித்தாய்
எதற்கும் வராத கடவுள் இதற்கு
வந்தார்

காதல் முட்டி கடவுள் சாய்ந்த க(வி)தை இது.
கடவுளே சாயும் போது மனிதன் எம்மாத்திரம்..

சில படம் பார்த்து விட்டு வரும்போது சொல்வோம். அந்த பாட்டுக்கே நூறு ரூபாய் கொடுக்கலாம் அந்த ஃபைட்டுக்கே நூறு ரூபாய் கொடுக்கலாம் என்று. அது போல இந்த ஒரு கவிதைக்கே புத்தகம் வாங்கலாம்

புத்தகம் கிடைக்குமிடம்: கவிஜி, +918807215457 மற்றும் படைப்பு குழுமம்

- மணி அமரன்