கருப் பொருளுக்குள் கண்டடைந்த எதுவும்....அதுவாக ஆகி விடுகிறது. அதுவென்பது இதுவாகவும் இருக்கும்.. என்பது மிர்தாதின் சூட்சுமம். நான் அப்படி என்றால் நீங்களும் அப்படியே. அன்பிற்கான திறவுகோல் புரிதல்" என்கிறார். புரிய புரிய தான் புரிதலின் நீட்சி அன்பின் சுவடை பிரதிபலிக்கும். தேக மார்க்கத்தின் மாறுபட்ட கனவுக்குள் யாவையும் நிவர்த்தி செய்யும் கோட்பாடுகளை அன்பே செய்யும். உங்களுக்கு பசிக்கிறதென்றால் இப்புத்தகத்தை படித்தே தீர்வீர்கள். பசி கொண்டவன்... வாழக் கடவன்.. என்பது நியதி. அதுதான் மிர்தாத் புத்தகம்.

puviarasu bookஎழுதியது "மிகைல் நெய்மி"யாக இருந்தாலும் அதை அத்தனை சிரமத்துக்கு இடையே மொழி பெயர்த்து நமக்கு அளித்த அய்யா தான் எனக்கு மிகைல் நெய்மியாக தெரிகிறார். சிக்கல் நிறைந்த மொழி நடையில் எழுதப்பட்ட இந்நூலை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் அறிய நிகழ்வை நிகழ்த்தியது நமது "அய்யா புவியரசு". மிர்தாத் புத்தம் மொழி பெயர்த்த கதையை என்னிடம் கூறி இருக்கிறார். அதுவே ஒரு நாவலுக்கான வெளியை சுமந்து கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இதை அவர்தான் செய்திருக்க முடியும் என்று முழுதாக நம்புகிறேன்.

"இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசி யாருக்கெல்லாம் உண்டோ அவர்களெல்லாரும் தமது கூடைகளை ஏந்தி வாருங்கள்" என்கிறார் மிர்தாத். அதை அய்யா புவியரசின் மொழியின் மூலம் இன்னும் நெருக்கமாய் கண்டடைகிறோம்.

"இதைப் படிக்காமல்....படித்து முடிக்காமல்....... விட்டு விடாதீர்கள்..... அவ்வாறு செய்தால்.... அது உங்களை நீங்களே அவமதித்துக் கொண்டதாக ஆகிவிடும்" என்று கூறும் அய்யா புவியரசின் தேடலில் இது மிகச் சிறந்தது.

கரமசோவ் பிரதர்ஸ் பற்றி சொல்ல வேண்டும். தாஸ்தாவ்ஸ்கியை பற்றி அவர் சொல்ல கேட்க வேண்டும். அது ஆனந்த தத்துவம். அந்த முன்னுரையிலேயே படிப்பவனை தன்னை தானே உணரும் தவநிலைக்கு தள்ளி விட்டிருப்பார். சுய பரிசோதனை தான் இவ்வாழ்வின் பெரும் பங்கு என்று.... தத்துவமும்... தவமும் கலந்து அடித்து நொறுக்கியிருப்பதை மிரட்சியோடு தான் படிக்க முடியும்.

அவர் மொழிபெயர்த்த இன்னொரு புத்தகம் "டிராகுலா". டிராகுலாவை கொடுத்து படி என்றார். படித்து விட்டு ஒரு வாரம் முழுக்க ட்ராகுலாவா திரிந்தேன். அத்தனை அழுத்தம். அத்தனை ஆக்கம். "கையொப்பம்" கவிதை தொகுப்பை நானே தேடி படித்தேன். ஒவ்வொரு கவிதையிலும் அவரின் சிக்னேச்சர் இருந்தது.

*

ஆளுக்கொரு வேலை.. வாழ்வு என இருந்தபோதிலும் இலக்கியம்...என்ற ஒற்றை குடை, நம்மை இணைத்திருப்பதில் அகம் மகிழத்தான் வேண்டும். குட்டியோடு அலையும் கங்காருதான் எழுத்தாளன். அவன் சதாகாலமும் தன் எழுத்துக்களை இமைக்குள் சுமந்து கொண்டு அலைகிறான். அப்படி அலைவதுதான் அந்த எழுத்துக்களுக்கு அவன் செய்யும் மரியாதை என்றே நம்புகிறேன்.

ஒரு நாவலை 500 பக்கத்துக்கு எழுதி சென்று அவரிடம் கொடுத்தேன். அவர் நாலைஞ்சு பக்கம் படித்து விட்டு "ஐயோ கவிஜி... உள்ளயே போக முடியல...... அவ்ளோ இறுக்கமா இருக்கு.. எளிமை படுத்துங்க"ன்னு சொன்னார். அதன் பிறகு மூன்று முறை திருத்தி திருத்தி எழுதி அதன் பிறகு 250 பக்கத்துக்கு "பச்சை மஞ்சள் சிவப்பு" என்று நாவலானது. அதையும் அவர் தான் சப்னா வெளியீடாக கொண்டு வந்தார். இப்படி எளிமையின் வழி கொண்டே வாழ்வை தேடு என்று சொல்லாமல் சொல்லும் அய்யா எப்போது நினைத்தாலும் பார்த்து விடும் தூரத்தில் தான் எல்லாருக்கும் இருக்கிறார். அவர் தலையில் இலக்கிய கொம்புகளை ஒருபோதும் நான் கண்டதில்லை.

எழுதுவது எப்போதும் ஒரு சுகமான சுமை. கூட, பிரச்சனைகளை நம்முள் கொட்டுவதும் கூட. எந்த ஒரு நாளில் பிரச்னை உங்களுக்கு வாய்க்கவில்லையோ அந்த நாளில் நீங்கள் வாழவில்லை என்கிறார் விவேகானந்தர். எழுதுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அது தன்னை ஒப்புக் கொடுத்தல். புத்தி முழுக்க இலக்கிய தாகம் பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் மீது கட்டமைக்கப்படும், எதையும் எதிர்பாராத துறவு நிலை அது. வேகத்தின் விவேகமென எல்லாமே சாத்தியம் என்ற நேர்மறை ஓட்டத்தில்தான் இந்த "கண்மணி சோபியா" உருவாகி இருக்கிறது.

எழுத்தாளன் என்பவன் எப்போதும், யாராலோ, எப்படியோ கீறப்பட்டுக் கொண்டேயிருப்பவன். அவனுக்கு இளைப்பாறுதல் என்பதே அவன் எழுத்து தான். சிந்தனைக்குள் பிராண்டிக் கொண்டே இருக்கும் எழுத்துப் பூனையை ஒருபோதும் அவன் விரட்டுவது இல்லை. அது சாம்பல் நிறமோ கருஞ்சாந்து நிறமோ. அய்யாவுக்கு எப்போதும்போல இப்போதும் அது சிவப்பு நிறம்.

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகள் மட்டுமல்ல எதிரில் இருப்பவர்களும் தீர்மானிக்கும் காலம் இது.

பெண்களுக்கு எதிராக இங்கு நடக்கும் குற்றங்களை.......அவமதிப்புகளை....... அச்சுறுத்தல்களை.....அடக்குமுறைகளை பார்த்து பார்த்து....பொறுக்க முடியாமல் எழுதப் பட்டது தான் "கண்மணி சோபியா" என்று நினைக்கிறேன்.

ஒரு பெண்.... அவள் கணிப்பொறியாக இருந்தாலும்.. விடாது கருப்பு போல இந்த காமுக கூட்டம் துரத்தி துரத்தி அவளை சிதைத்து விடுகையில் அந்த கணிப்பொறி பெண் திரும்பி அவர்களை வேட்டையாடுதல் தான்.. "கண்மணி சோபியா". நம் யூகத்துக்கு விடப் பட்ட காட்சிகளை நிறைய இடங்களில் காண முடிகிறது. அவள் கணிப்பொறி பெண். அவளை எப்படி..... என்று கேள்வி வராமல் இல்லை. ஆனால்...அது தான் கதையின் சூட்சுமம். படபடவென... கதைக்குள் செல்லும் கண்களை அதே வேகத்தில் திருப்பிக் கொள்ள முடியாது. படித்து முடித்த பிறகு ஆயிரம் கேள்விகள். அத்தனையும் மானுட குலத்தின் நவீன தடுமாற்றத்திடம் வைக்கப் படும் கேள்விகள். மனித பரிணாமத்தின் அடுத்த கட்ட நகர்வில் ஏற்படும் குளறுபடிகளை எதிர் கொள்ளும் வலிமையை பற்றி சிந்திக்க தூண்டும் தூண்டில்கள்.

நாம் எந்த மாதிரி சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பதைபதைப்பை உணர செய்யும் நிகழ் கால சம்பவங்களின் கோர்வையை சற்று கோபத்தோடு தான் கூறுகிறார். பெண்ணை எப்போதுதான் சக உயிராக பார்ப்போம் என்ற ஆதங்கம் வரிக்கு வரி நெருக்குகிறது. பெண்ணை மதிக்காத சமூகம் உருப்படாது என்ற குறியீட்டில் தொடர் கொலைகள் என்று கதை பயணிக்கிறது. வசனங்களால் நகரும் கதைக்குள் "அய்யா" பேனா மையில் தன் நியாயமான கோபங்களை நிரப்பி இருக்கிறார். நியாயமான விமர்சனங்களை கோபமாகவே வைக்கிறார். மனிதனுக்கும் மெஷினுக்குமான போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். இனி வரும் அதி நவீன தொழில் நுட்ப காலகட்டத்தில் கணிப்பொறி பெண்கள் போல இன்னும் ஏராளமான குளறுபடிகள் சாத்தியம் என்ற அச்சுறுத்தலோடு கதையை இப்போதைக்கு முடிக்கிறார். ஆக, "கண்மணி சோபியா...நாம் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அது, நவீன காலத்து பெண்களின் விடுதலை பற்றிய அடுத்த கட்ட விவாதத்துக்கு இழுத்து செல்லும் என்று நம்புகிறேன்.

*

அய்யா வாழும் கால கட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமைக்குரிய விஷயம். அதுவும் அவரோடு பேசி......உரையாட.... நடைபோட வாய்த்திருப்பதெல்லாம் எனக்கான தனித்த கொண்டாட்டங்கள். இந்த வானம்பாடி கவிஞரை, வானம் வசப்பட்ட எழுத்தாளரை வாழ்த்துவதெல்லாம் என் போன்ற இளைய தலைமுறைக்கு ஒரு போதும் இயலாது. புவியரசு என்ற நூலகத்திடம் இருந்து கற்றுக் கொண்டே இருக்கும் நாங்கள் எப்போதும் அவரை வணங்குவது தான் பொருத்தமாக இருக்கும்.

- கவிஜி