கவிதையும் கவிதை சார்ந்த வாழ்வும் என்பது பட்டாம் பூச்சிகளுடன் காதல் செய்வது. தவம் கலைந்த புத்தனோடு குத்துப்பாட்டுக்கு ஆடுவது. மூச்சு முட்ட முத்தமிட்டுக் கொண்டே மூக்கும் மூக்கும் முட்டுவது. கனவில் கால் படாமல் நடப்பது. நதியில் மேலாடையின்றி குதிப்பது. இன்னும் அவரவர் சாய்ஸ்க்கு அவரவர் சார்பு நிலை. இங்கே ரயில் ஏறி விடுகிறது "அகதா"வின் சார்பு. ஓடி சென்று பின்னால் தொத்திக் கொண்டபோது இன்னும் கொஞ்சம் முன்னமே வந்து நிதானமாய் ரயில் ஏறி இருக்கலாமோ என்று தோன்றியது.

"அசோக வனம் செல்லும் கடைசி ரயில்" தலைப்பு அவரின் நண்பர் கொடுத்தது என்று முன்னுரையில் எழுதி இருக்கிறார். அந்த நண்பரை வியக்காமல் இருக்க முடியாது. முதல் டேக் ஆப் இந்த தலைப்பு தான். திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

agatha bookஅசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில் அசோக வனம் செல்லும் கடைசி ரயில்.......... நிற்காத ரயில் சொல்லும் சொல்லில் எல்லாம் ரயிலூரும் தூரத்தில் மனதுக்குள் கேட்கும் சத்தம் சிக்கு புக்கு....கவிதை புக்கு ...சிக்கு புக்கு.......கவிதை புக்கு ...சிக்கு புக்கு....கவிதை புக்கு...!

பனி தேசம் தாண்டி....பாலைவனம் கடந்து.......மலை முகடு குடைந்து..... பச்சை மலை தேடி போவதாக நம்புகிறது மனது. மனதிற்குள்தான் இந்த ரயில் எத்தனை நீளம். பெட்டி பெட்டியாய் கவிதை குவித்து வைத்திருக்கும் சதுர யோசனையை அத்தனை சீக்கிரத்தில் இறக்கி வைக்க இயலவில்லை.

இந்த புத்தகத்தில் ஆக சிறந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன... கட்டுரையின் நீளம் கருதி மூளைக்குள் பூ நட்ட இதயத்துள் தீ சுட்ட சிலதை மட்டும் இங்கே தொட்டு பார்க்கிறேன். இடம் விட்டு கோர்க்கிறேன்.

"உள்பெட்டியில்" என்றொரு கவிதை.

இன்றைய முகநூலில் உள் பெட்டிக்கு வரும் இரு ஆண்கள் பற்றியது. அதில் யார் யார் எவன் எவன் சென்று மனம் ஒன்று நினைக்க மானுடம் ஒன்று நினைக்கும் புள்ளியை வெகு அழகாய் நுண்ணிய முனையில் முகம் உரித்துக் காட்டிய போது நான் அந்த இருவரில் யார் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். கேள்விகளின் விளிம்பில் நிற்பது அத்தனை கஷ்டம் அல்ல. உள் பெட்டி போலொரு அத்துமீறலின் எதிர்நிலையில் தான் நல்ல அண்ணன்களும்.....அவரவரின் சொந்த முகத்தோடு கிடைக்கிறார்கள். உள்பெட்டி புத்தன்கள் பெரும்பாலும் தவம் கலைந்தவர்கள்தான்.

"தேவியக்கா" ஆடிய சாமியாட்டத்தை அடுத்த சிறந்த கவிதையாக காண்கிறேன்.

சொல்லொணாத் துயரங்களே சாமி ஆடுகின்றன.. சமயத்தில் பேயாகவும் ஆடுகின்றன. தேவியக்காவின் துயரம் இரண்டிலும் இருந்து வெகுண்டெழுகிறது. சாமியாடும் அறிவியல்தனத்தை ஆதுர்யமாய் போகிற போக்கில் கவிதையாக்கி விடும் பெண் மை 'அகதா'வுக்கு வாய்த்திருக்கிறது. ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சாமி ஆடும் ஊரில் தான் பேயும் ஆடுகிறது என்று எனக்குள் ஒரு கவிதையை ஆட வைத்த போது மெல்ல ஆடி பார்த்துக் கொண்டேன். பேயா சாமியா என்பது காண்பவருக்கு சொந்தம்.

"யவனிகா" என்றொரு கவிதையில் ஆகச் சிறந்த பத்தி ஒன்று இப்படி வருகிறது

என் அகராதியில் மட்டும்
ஆண்கள் இருவகை
காதலோடு காமம் தேடுவோர்
காமத்தோடு காமம் தேடுவோர்

எழுந்து நின்றுதான் எழுத வேண்டும் போல... எத்தனை நுணுக்கம் கவிஞரே....!

ஆண்களின் மனோதத்துவம் அப்பட்டமாய் வெளிப்பட்டிருக்கிறது. சத்தியமாய் இந்த இரண்டை தாண்டி இன்னொன்று இருந்தால் அதுவும் இந்த இரண்டுக்குள் எப்படியும் அடங்கி விடும் என்பது ஆணாகிய என் சாட்சியம். வாக்கியம். அப்பழுக்கோடு நடை போடுபவன்தான் ஆண். அதில் அழுக்கை தனித்து பிரிக்க பெண்களால் மட்டுமே முடியும். பெண்ணின் பார்வையில் படிநிலை தவறுவதில்லை ஆண். ஆண் சந்தர்ப்பவசத்தின் மீதுதான் எப்போதும் சிம்மாசனமிட்டிருப்பான். தெள்ள தெளிவான பார்வை. தெளிந்த நீரோடையில்........அடியே காணுங்கள். அகக்கண்கள் நிரம்ப மணல் நறுநறுக்கும் வாழ்வின் கரையில் காக்கைக்கு மீசை முளைத்திருக்கும்.

"கடவுள் சொன்னார்" என்றொரு கவிதையில் எனக்குள் இருந்த கடவுள் இதைத்தான் மீண்டும் மீண்டும் சொன்னார் என்று முடியும் போது அட அவர்தான் கடவுள் என்று நம்பினேன். அவளால்தான் கடவுளும் என்று நம்பினேன்.

"செல்வி அக்காவின் வேண்டுதல்" என்றொரு கவிதை... இப்படி முடிகிறது.

அம்மனுக்கு வேண்டி
அக்கா அடித்த மொட்டையில்தான்
அழுதே தீர்த்தது ஊர்

நான் முழங்காலுக்கு முடிச்சிட்டு அமர்ந்து விட்டேன். என்ன விதமான சிந்தனை இது. பெண்ணாக இருப்பதன் பலம் புரிந்த கணம் இது. பெண்ணின் மனதுக்குள் தான் எத்தனை எத்தனை கதவுகள். திறக்க திறக்க மூடும் வாசலில்தான் எத்தனை பூக்கள்.. எத்தனை முற்கள். கூந்தலின் வன்மையிலும் கூந்தலின் தன்மையிலும் இருக்கும் ஆளுமையின் சுவர் அன்புக்கு நீண்டவை. காட்சிக்கும் கணவனுக்கும் இடையில் சிக்கல் எடுத்து தானாய் சிறு சிறு பிரியாய் பிரிந்து கடைசியில் மொட்டையாகவே ஆகி விடுதலில்... முற்றும் இல்லவே இல்லை. முடிவுகளின் வேள்வியில்தான் அருவிக்கு ஆறுதல் என்பது போல... அவள் மீண்டும் மீண்டும் மொட்டை அடித்துக் கொண்டுதான் இருப்பாள். ஏன் என்றால் காதலித்துப் பார். மொட்டையும் அடிப்பாய். மொக்காகவே உதிர்வாய். படிக்க படிக்க கண்ணீர் சொட்டும் இக்கவிதைக்குள் சரவணன்கள் பாக்கியவான்கள். சொல்லும் அசரீரிக்கு தான் அத்தனையும் இதயம்.

"ஞாயிற்று கிழமைகளில் மட்டும்
என் ஜீவ காருண்ய ஒழுக்கம்
செத்து தான் கொதிக்கிறது சட்டிகளில்"

என்ற "செத்துக் கொதிக்கும் ஜீவகாருண்யம்" என்ற ஒரு கவிதையில் குழம்பு கொதிக்கும் பேராய்வின் விளிம்பில் நான் நிற்பதை நானே தடுக்க முடியவில்லை. தினம் தினம் தன்னோடு புழங்கும் சிறு சிறு சாமானிய சம்பவங்களை சேர்த்து மகத்தான வாழ்வியல் பதிவுகளாக கவிதை சமைத்திருக்கிறார் கவிஞர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். வல்லவளுக்கு சொல்லும் ஆயுதம். காருண்யத்தின் நீட்சிகள் திங்கள் கிழமைகளில் இருந்தே தொடங்குகின்றன. இல்லையெனில் ஞாயிறுகளில் அதற்கு விடுமுறை என்று பகடி செய்யும் இக்கவிதையில் ஆடும் மீனும் கோழியும் பாடும் வானம் பாடியும்....... வாழ்வை சாடியும்.

சில கவிதைகளில் கருப்பொருள் பேரே இல்லாமல் கவிதை அட்டகாசமாய் ஆரம்பித்து முடிச்சிட்டு முடிகிறது. அது அத்தனை சுலபமல்ல. எதைப் பற்றி பேசுகிறோமோ அதைப் பற்றிய வார்த்தை இல்லாமல் அதை பற்றிய பிம்பத்தை படிப்பவர் மனதில் உருவாக்கும் கலை அத்தனை வாகாய் கை வரப்பட்டிருக்கிறது. 'அகதா'வின் உலகத்தில் தோசைகள் கருகுவதேயில்லை. கடுகு பொரியும் சப்தங்களில் உருவாகும் கவிதைகளை காதுள்ளோர் கேட்பார்கள். பேச்சுள்ளோர் பார்ப்பார்கள்.

இந்த நூல் அகம் சார்ந்த பெண்ணின் உலகத்துக்குள் செல்லவில்லை. மாறாக புறம் சார்ந்த பெண்ணின் மையத்தில் இருந்து விரியும் தோசையின் வட்டத்தை போல் கனக்கச்சிதமாக வட்டமடித்து சுழன்றடிக்கிறது. தன் வீட்டில்.......எதிர் வீட்டில்.......பக்கத்து வீட்டில்......வீதிக்குள்......வீதி தாண்டிய ஊரில் என்று திரும்ப திரும்ப பெண்களின் நிகழ்கால நிஜங்களை ஆசையோடு அசை போடுகிறது.

"அப்பாவுக்கும் சொல்லி கொடு" என்றொரு கவிதையில் ஏக்கமாய் மவுனமாய்... சொல்லற்று இப்படி வெளி வருகிறது மிஸர் குமாரின் சொற்கள். "ஹேப்பி ஹாலிடேஸ்" என்று எழுதிய மகனிடம் இதை பற்றி அப்பாவுக்கும் கொஞ்சம் சொல்லிகுடேன் எனும்போது........அந்த பாவனையில் குற்றம் சுமக்கவில்லை. அது ஆறுதல் தேடும் பெண்ணின் சுயத்தின் சாயல் வேண்டுகிறது. காதலின் நிமித்தம்....கணவனிடம் நெருங்குதல் குறித்து மறுபரிசீலனையைக் கோருகிறது.

மிஸஸ் குமாரின்.....காதலை...... நியாயமான தூய அன்பை.....தேவையான எதிர்பார்ப்பை நிலவொளி படரும் மூக்குத்தி மின்னும் பேருருவாய் காண்கிறேன். இப்பெண்ணின் பெரும் துயரத்தை பத்திக்கு பத்தி புரிந்து கொள்ள முடிகிறது. மிஸ்டர் குமாரின் மீது இனம் புரியாத கோபம் வருவதை எப்படி மறைக்க முடியவில்லையோ அதே போல உள்ளுக்குள் மிஸஸ் குமார் மீது எழும் காதலையும் மறைக்க முடியவில்லை. காதலால் மறைபவள் அல்ல மிஸஸ் குமார். அவள் காதலால் நிறைபவள். ஆசை ஆசையாய் கட்டிக் கொண்ட கணவனின் அன்புக்கும்.. முத்தத்துக்கும் ஏங்கும் பெண்கள்தான் இங்கே அதிகம். நிறைய கணவன்களுக்கு முத்தமிடவே தெரியாது... என்பது எத்தனை சோகம். கட்டி அணைப்பு கூட இரவுக்கு மட்டுமே இறைத்த விழலாகி விடுகிறது. காதலால் கசிந்துருகும் பெண்களின் ஏக்கத்தின் மொத்த நிலைதான் இந்த மிஸஸ் குமார். அவள் வார்க்கும் தோசைக்குள் விழும் குழியெல்லாம் மனக் கொப்புளங்கள் என்றே புரிந்து கொள்கிறேன்.

சரவணன் அண்ணனும் செல்வி அக்காவும் ஊருக்கு ஊரு இருப்பார்கள். இவர் ஊரில்தான் இல்லாமலும் இருக்கிறார்கள் எனும் போது ஆசை தீர அழத் தோன்றியது. சரி, ஆசை எப்படி தீரும்.

அட்டைப்படத்தில் நெற்றி பொட்டுக்கும் இதழுக்கும் பறவை செய்த வடிவமைப்பாளர்... கண்ணுக்குள்ளும் பறவையே செய்திருக்கலாம்.

இந்த ரயில் பயண வழி எங்கும் கவிதை மரங்கள் அழகழகாய் பூத்து நிற்கின்றன. நீங்கள் எட்டி பிடிக்கலாம். இறங்கி கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு வரலாம். ஜன்னலோரம் தலை வைத்து கவிதை தலை தடவ விட்டு விடலாம். கை படும் தூரத்தில் பூத்திருக்கும் பூக்களை பறித்தும் கொள்ளலாம். உங்களை பறிக்கவும் விடலாம். அசோகவனம் செல்லும் வரை கவிதைக்கும் பஞ்சமில்லை. கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. பெண்ணின் புறக்கண்கள் மிகவும் கூர்மையானவை. அதில் எப்போதும் ஒற்றைக்காலிலேயே நிற்கிறது பெண்மையின் பேரன்பு. அணிந்துரை கூறிய "அய்யா புவியரசு அவர்க"ளின் சொற்கள் போல அவள் புறப்பட்டு விட்டாள். கடைசி பயணம். திரும்ப வராப் பயணம்.

அசோக வனம் செல்லும் கடைசி ரயில்
அக்கணம் தான் புறப்பட்டது
மீண்டும் வந்து விடக் கூடாதென்ற
தீர்க்கத்துடன் இருந்த சீதைக்கு
அழுகையே வரவில்லை அப்போது - இப்படி நூல் தலைப்பிட்ட கவிதையோடு இந்த புத்தகமும் முடிகிறது.

ரயில் போய்க் கொண்டே இருக்கிறது. காலத்தின் சுவடுகளை ரயில் வண்டியின் சப்தங்கள் விழுங்கிக் கொண்டே இருக்கின்றன. தூரங்களின் முடிச்சுகள் மெல்ல அவிழ்க்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. எல்லா பெட்டியிலும் மிஸஸ் குமார்... அமர்ந்திருக்கலாம்.பக்கத்தில் செல்வி அக்கா சாய்த்திருக்கலாம். அசோகவனம் வரை தொத்திக் கொண்டே செல்வது சுகமாய்த்தானிக்கிறது. இடம் கிடைத்தாலும்... ஜன்னல் கம்பி பற்றிக் கொண்டு காற்றோடு திரும்ப திரும்ப கவிதை படிப்பது ஆசுவாசம் தருகிறது.

அசோகவனத்தில் இனி கவிதை மரங்கள் முட்டி மோதி முளைக்கலாம். கோடு தாண்டா சீதைக்கு சரித்திரத்தில் இடம் ஏது...!

- கவிஜி

நூல் : அசோக வனம் செல்லும் கடைசி
ஆசிரியர் : அகதா
விலை : ரூ..80