சமையலறை வாசத்தில் உடல் தகித்தாலும், அங்கிருக்கும் சிறுசாளரம் வழியே காற்றுவெளி எங்கும் சுற்றித்திரிவது பெண்ணின் மனம். சாளரமே போதுமென்றால், சுவர்களை இடித்துவிட்டால், மகிழும், நர்த்தனமாடும், உடைந்தழும், சீறும், சிரிக்கும் பெண்ணின் கூத்தைக் காண கண்கோடி வேண்டும். கவிஞர் மஞ்சுளாதேவியின் ‘நிலாத் தெரியாத அடர்வனம்’ என்னும் தொகுப்பு அதைதான் செய்திருக்கிறது. சமையலறையையும் கானகத்தையும் கவிதைத் தளமாக்கி, ஆணின் இயல்போடு காதலில் இணைந்தும் ஆதிக்கத்தில் மறுத்தும் கவிதைகள் படைத்துள்ளார்.

கவிஞரின் இந்த கவிதை தொகுப்பு, மூன்றாய் பிரிகிறது, கிளிகளின் கூட்டில் இல்லாத சமையலறை, நிலாத் தெரியாத அடர்வனம், ராதையின் கண்ணன் என்று.

சமையலறைதான் முதலாய் சமைந்திருக்கிறது. அதில்,‘அக்கினி மூலை’ என்னும் கவிதையில், சமையலறை பெண்ணுக்காய் பசியோடு காத்திருப்பதாய் சொல்கிறார்..

“சீதை தின்று செரித்த
தீ நாக்கின் மிச்சங்கள்..
இன்றும்
வீட்டுச் சதுரத்தின்
ஒரு மூலையில்
பதுங்கிக் காத்திருக்கிறது
பசிநாக்கோடு..”

‘ஆண் நாவு’ என்னும் கவிதையில், உலக ஆண்களே ஒன்றுபடுங்கள் என்று அழைத்து, ஆண் நாவுகளின் அணிவகுப்பை, பெண் சமைத்த சமையலை ருசிபார்த்து சாப்பிட்டுவிட்டு, பாராட்டி பேசினால் பழக்கப்பட்டுவிடுவாள் என்று அவளை பாராட்டி பேசாமல், செய்திதாளுக்கும் தொலைக்காட்சிக்கும் திரும்பச்சொல்கிறார். சமைப்பதும் பரிமாறுவதும் பெண்ணின் தலையாய கடமை என்பதும் நாவுக்கு ருசியாய் சாப்பிட்டு சத்தமில்லாமல் செல்லுதல் ஆணின் பெருமை என்றும் இயங்கும் ஆணாதிக்க இயல்பை கவிதை சாட்டையடியாய் சொல்கிறது.

ஊருக்கே சமைக்கும் சமையல்காரரின் பேட்டி சொல்கிறதாம்,
“வீட்டிலே மனைவி செய்யும்
புளிரசமும் சுட்ட அப்பளமும்
அமிர்தமாம் – அருசுவையாம்
அவ்வளவு அன்பாம்
ஊருக்கே சமைத்தாலும்
மனைவிக்கு சமைக்காத
ஆண்புலிக்கு
ஜோராய் ஒருதடவை கைத்தட்டுங்கள்.. “

நித்தமும் சமைக்கும் பெண்ணுக்கும் யாராவது சமைத்து தனக்கு சாப்பாடு போடமாட்டர்களா என்னும் ஏக்கம் இருக்கத்தானே செய்யும் என்பதையும் இக்கவிதை சுட்ட தயங்கவில்லை.

மற்றுமொரு கவிதையில்,

“’சமைக்கும்போதே தோன்றும் கவிதையை
உடனே எழுதிவிடு’ என
புது டைரியைப் பேனாவோடு
சமையலறை மூலையில்
வைத்தால் மகள்
‘பேனாக்குழம்பு வைத்துவிடாதே’
கிண்டலடித்துச் சிரித்தான் மகன்
சாண் பிள்ளையாய் இருக்கும்போதே
ஆண்பிள்ளையாய்
அடையாளப்பட்டுப்
போகிறார்கள் மகன்கள் “ என்கிறார்.

சமையலறையில் இருக்கும் பேனா கொண்டு, பேனா குழம்பு வைக்காதே என சொல்லும் மகன்களைக் குறித்தும் கவிஞர் கவிதை இயற்றியிருப்பது பெண்களுக்கு பெரும் சமாதானம். ஆணின் வம்சாவளி உயிர் குறிப்புகள் தலைமுறைகள் பல கடந்தும் வர தயங்குவதில்லை. இன்றைய ஆணுலகம் பெண்ணின் எச்சரிக்கைகளுக்காக சற்று மாறியிருக்கலாம். ஆனால், மறைமுக ஆதிக்க சிந்தனைகள் உள்ளே ஊற்றெடுத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதும் அது அவ்வப்போது வெளிவராமல் இருக்காது என்பதும் கண்கூடு.

ஒரு தட்டில் இருவர் உண்ட காலம் என்னும் கவிதையில்,

“கழுத்தில் மஞ்சள் சரடு மினுமினுக்க
நகரத்தில் அலைந்தலைந்து
வீடு தேடிக் கண்டடைந்த பொழுதில்
காதல் கசிய கசிய
அவன் சொன்னான்
சமையலறைக்குள்
புத்தகங்களை வைத்துக்கொள்
கவிதை எழுத ஒரு பேனாவும்
சரி என்றாள்.
உட்கார ஒரு நாற்காலி
தலையாட்டி ஆமோதித்தாள்
முகம் திருத்த ஒரு கண்ணாடி
இலேசாய் சிரித்தாள்
அப்படியானால்
அது சமையலறை அல்ல
நம் வீடு !
அஃது
ஒரு தட்டில் இருவர் உண்ட காலம்
அவனறியாமல்
கடுகு டப்பாவில் அவள்
காசு சேர்க்காத காலம் “

கடுகு டப்பாவில் காசு கோர்க்காத காலம் என்பது கணவன் மனைவிக்கும் பிரிவினை அற்ற காலம். கனா காலம் அது. புரிதல் கொண்டதாய் எண்ணி காமம் அதிகம் பழகிய காலமது. அதுவும் தீர்ந்து இதுவும் தீர்ந்து, பசிக்காக அவ்வப்போது அடுக்களையை எட்டிப்பார்க்கும் ஆணுக்காய் சமைக்கவும் படுக்கவும் செய்யும் மனைவியான பெண்ணின் வலி தெரிகிறது இக்கவிதையில்.

புது வீட்டு வரைபடத்தில் முன்புறம் இருந்த சமையலறை, அம்பையின் கதையில் வரும் சமையலறையைப் போல, முக்கியத்துவம் பெற்ற மற்ற அறைகளுக்காய் வாஸ்துவுக்காய் சுருங்கி சுருங்கி வீட்டில் மூலையில் பத்திற்கு ஆறாய் சுருங்கிப்போனதை ஒரு கவிதை சொல்கிறது.

“புதுவீட்டு வரைப்படத்தில்
முன்புறம்தான் இருந்தது
முதலில் என் சமையலறை
வாஸ்து கொஞ்சம் நகர்த்தி நகர்த்தி
மூலைக்கு போய்விட்டது என் சமையலறை

தென்திசைக்கு ஆகாதென்று
ஜன்னல்களும் அற்றுப்போயின

பத்திற்கு இருபதே இருந்த
என் சமையலறையை
மெல்ல மெல்ல
வரவேற்பறையும் படுக்கையறையும்
பிடுங்கித் தின்றபின்
பத்திற்கு ஆறாய்
சுருங்கிப்போனது
என் சமையல் சிறை ! “

இக்கவிதை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சமையலறையை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்னும் ஆசையை உணர்த்தும். என்னுடைய அனுபவமும் ஒன்றுதான். எங்கள் வீடு கட்டும் சமயம், என் கோரிக்கையாய் முன் வைத்தது, சமையறையில் ஒரு காற்றாடி வேண்டும் என்பது.

வீட்டில் மின் வேலை செய்தவர் முதல் எல்லோரும் வேண்டாம் என்றார்கள். காற்றாடியும் போட்டுவிட்டேன். இன்னும் சமைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இனிமேலும் சமைக்கத்தான் செய்வேன். ஆனால் காற்றாடி சுற்றுவதே இல்லை. காற்றாடி சுற்றினால் சமையல் அடுப்பு எப்படி எரியும், சமையல் வேலை எப்படி சீக்கிரம் முடியும் என்னும் கேள்விகளுடன் காற்றாடி சுற்றாமல் நிற்கிறது. வியர்வை துடைக்க பெண்களுக்குத்தான் முந்தானை இருக்கிறது என்பதே பெரும்பாக்கியமாய்.

சமையலறைக்குள் அடைபடும் பெண் என்னும் எண்ணம்தான் காற்றாடியைக் கேட்கவைக்கிறது. விசாலமான அறை கேட்கிறது. பெரும் சன்னல் கேட்கிறது. சமையலறை விடுத்து வெளியே வரவேண்டும் என்று மட்டும் பெண்ணின் மனம் கேட்பதில்லையே. அது ஏன் என்னும் கேள்வி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் அடிமனதில் புதைந்துப்போன ஆணாதிக்கச் சிந்தனையை கைகாட்டுகிறது. மறுப்பதற்கில்லை.

மஞ்சுளாவின் இந்த சமையலறை கவிதைகள் ‘கிளிகளின் கூட்டில் இல்லாத சமையலறை’ என்னும் கிளிகளுடனான கவிதையில் தொடங்கி, ‘என் சமையலறைக்கு வந்த கிளி’ என்னும் கிளிகளுடன் ஆன கவிதையில் முடிவடைகிறது. கிளிகள் பெண்ணின் மறுபடிமம். வண்ணத்துடன் வசீகரிக்கும்: சதா பேசிக்கொண்டேயிருக்கும்: கூட்டில் அடைப்பட்டு பொறுத்து வாழும்: கோபமான பொழுதில் கொத்தி, இரத்தம் அழகு பார்க்கும், என்றோ ஒருநாள் முளைக்கும் பெண்ணின் உக்கிரத்தைப் போல.

கவித்துவமான தலைப்பைவிட, பெண் சமைக்கும் பெண்ணின் கவிதைகள், சமையலறையின் அவலங்களை சத்தமாய் எடுத்தியம்பும் அவசியம் கொண்ட கட்டாயமான காலம் இது என்பதால், இந்த கவிதைத் தொகுப்புக்கு கிளிகளின் கூட்டில் இல்லாத சமையலறை’ என்று தலைப்பிட்டு இருக்கலாமோ என்னும் எண்ணம் தோன்றாமல் இல்லை என்னுள்.

இக்கவிதை தொகுப்பின், ‘நிலாத் தெரியாத அடர்வனம்’ பகுதியில் கவிஞர் சமூக வருத்தங்களைப் பதியவைக்கிறார்.
‘நெடுஞ்சாலையில் ஒர் பகல் பயணம்’ என்னும் கவிதையில்,

தேசிய நெடுஞ்சாலையில்
நாள் பூராவும்
பயணப்பட நேருகையில்தான் தெரிகிறது
பயிர்விளையும் காட்டை எல்லாம்
பாலிதீன் படபடக்கும் காடாக்கிய அவலம்

சுற்றிலுமே வீடாகிவிட,
மானம் காக்கும் பச்சைக் கோவணமாய்
நடுவில் ஒரே ஒரு வயல் செவ்வகமாய்
ரோசமுல்லா ஓர் உழவனின்
விடாபிடியான வீம்பு !
பாரதி எனக்கும் காணிநிலம் வேண்டும் !
வீடு கட்ட அல்ல
வீடு கட்டாமல் இருக்க “

என்னும் கவிதை பேசும் சாஸ்திரம் அதிகம். எட்டுவழி சாலை, பன்னிரண்டுவழி சாலைகள் உண்ணும் வயல்கள் ஏராளம்.

‘நகைகளுக்கு உயிர் இல்லை’ என்னும் கவிதையில், கவிதை தொகுப்பு அச்சிட மனைவியின் கைவளைகளை கழட்டிய கவிஞரின் நிலை, இரவல் வாங்கிய ஜிமிக்கியை சீரன்றே கழட்டிக்கொடுக்கும் பெண்ணின் அவலநிலை, அஞ்சு பவுனுக்காக மணமேடையில் மாப்பிள்ளை மாறிய பெண்ணின் நிலை, சகுந்தலையின் மோதிரம், கண்ணகியின் சிலம்பு என்று கவிதை பெண்கள் அணியும் நகைகள் குறித்தும் அவை நடத்தும் அரசியல் குறித்தும் பேசுகிறது.

‘ராதையின் கண்ணன்’ என்னும் அடுத்த பகுதியில், இயற்கையை காதலோடு பிணைத்து வரிகள் பின்னியிருக்கிறார். காட்டமான சமையலறை கவிதைகளுக்கும் சமூக சாடல்களுக்கும் பின், மென்தென்றலாய் இக்கவிதைகள். இக்கவிகளில் கண்ணனும் ராதையும் ஆடும், பாடும், குழலிசைக்கும், மௌனித்திருக்கும், மகிழ்ந்திருக்கும் கணங்கள் எல்லாமே காற்றையையும் கானகத்தையும் அளவில்லா அன்பையும் மோகம் தரித்த முத்தங்களையும் கண் கசக்கும் காதலையும் பெண்ணின் சந்தேக கேள்விகளையும் அதற்கு ஆணின் சமாளிக்கும் விடைகளையும் சுமந்து வருகிறது.

“என்னிடம்
இவ்வளவு அன்புள்ள நீ
ஏன் மற்ற பெண்களின்
உடைகளை எடுத்தாய்?
ஊடினாள் ராதை

அடி ராதை !
உனக்குப் பிடித்த
ஆடைநிறம் அறிய
உன்னிடம் காட்டிக்
கேட்கவே எடுத்தேன்
என்றானந்தக் கள்வன் ! “

கண்ணன் என்பதும் ராதை என்பதும் மௌனக் குறியீடுகளாய் பார்க்கிறேன். செல்மா பிரியதர்சனின் கவிவரிகள் நினைவுக்கு வருகின்றன. இதை மஞ்சுளாவின் கண்ணன் ராதையின் இணையும் அன்புக்கு எதிர்வினையாய் பார்க்கமுடிகிறது. ராதைக்கும் கண்ணன் போல் மாறவும் பேசவும் உரிமை உண்டு என்கிறது செல்மாவின் இக்கவிதை.

“கண்ணன் தன் தோழர்களுக்குச் சொல்கிறான்
ராதா இப்போது வந்துவிடுவாள்
கண்ணன் ஒன்றும் அவ்வளவு சுயநலக்காரனல்ல
தனது தோழர்களில் சிலரும்
ராதாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை
அறியாதவனும் அல்ல
......
ஒரே நேரத்தில்
உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் தனித்தனியே தோன்றி
காதலை வழங்குபவள்தான் ராதா
பார்வையாளராகிய நீங்களும் அறிந்தேயிருக்கிறீர்கள் “

கண்ணன் ராதையை மௌனக் குறியீடுகளாக பார்ப்பதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. ஆணும் பெண்ணும் காதலை காமத்திற்கு மேல் கொண்டு செல்லும் கணங்கள் இவை. வளரிளம் பருவத்தில்தான் காதல் மணம், வலுவாயிருக்கும். கண்ணனும் ராதையும் கூட அந்த பருவத்தில் காதலித்தவர்கள்தான். காதலின் மென் உணர்வுகள் உயிரின் அற்றம் வரை நம்முள் நிலைக்கொள்ள இதுவும் ஒரு காரணம்தான்.

கவிஞர் மஞ்சுளா தேவியின் கவிதைகளில் பெண்ணின் வலி, காதல், சுகம், பொது நினைப்பு, சமூக அக்கறை, பெண்ணின் முடக்கத்திற்கு எதிரான உக்கிரம் எல்லாமே காணமுடிகிறது. அனைத்தையும் இந்த ஒற்றை கவிதை தொகுப்பில் கொடுக்க முடிந்திருக்கிறது அவரால். பெண்ணைப் புரிந்துக்கொள்ள பெண்ணின் காதலும் கண்ணீரும் சமூக உணர்வும் தேவையென்பதை மூன்றும் உள்ளடக்கிய இத்தொகுப்பு உணர்த்துக்கிறது எனலாம்.

நிலாத் தெரியாத அடர்வனத்தின் ஆசிரியர், கவிஞர் மஞ்சுளாதேவிக்கு, இன்னும் அதிக எழுத்துக்களைப் படைக்க என் வாழ்த்துகள்.

- அகிலா