என் வாழ்க்கை: உரையாடல் வழியேயான தன்வரலாறு

நூல் அறிமுகம்

“..... கியூபா வீழுமெனில் - நாம்
அனைவரும் வீழ்வோம்..
அவளைக் கரம்பிடித்துத் தூக்கிவிட
நாங்கள் வருவோம் - மேலும்
அவள் மலர்களாய்ப் பூத்துக்
குலுங்குவாளெனில்- நமது
வெற்றி மதுரத்தால் வளங்கொழிப்பாள்.
உமது கரங்களால் விடுவிக்கப்பெற்ற,
கியூபாவின் நெற்றியை - அவர்கள்
தொட்டுவிடத் துணிவார்களெனில்,
மக்கட்திரளின் முஷ்டிகளைக் காண்பர்.
புதைக்கப்பட்ட ஆயுதங்களை
நாம் வெளியிலெடுப்போம்..
நமது பேரன்பிற்குரிய க்யூபாவை
மீட்கவும் பாதுகாக்கவும்
குருதியும் பெருமிதமும்
முன்நிற்கும்.”

- பாப்லோ நெரூதா, ‘ஃபிடலுக்கு ஒரு கவிதை’ (எதிர்ப்பின் பாடல்)

கியூபப் புரட்சியின் அரை நூற்றாண்டு நிறைவுக்குப் பின்னர், அதன் மூலவரும், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாய் கியூப மக்களை வழிநடத்திய மாபெரும் தலைவருமாகிய ஃபிடல் காஸ்ட்ரோ சமீபத்தில் மறைந்தார். தான் வாழும் காலம் முழுவதிலும் கியூப மக்கள் அனைவரிடமும் செல்வாக்கு மிக்கவராகவும், ஏனைய இலத்தீன்-அமெரிக்க மக்களாலும் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமையாகவும் அவர் இருந்திருக்கிறார். தன்னுடைய எதிரிகளால் அழித்தொழிக்கப்பட, இவ்வுலகில் எந்தவொரு தலைவரை விடவும் அதிகமான முறை முயலப்பட்டு, இறுதிவரை நெருங்க முடியாத அரசுத் தலைவராகவும், திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறுகளையெல்லாம் மக்கள் துணையோடு முறியடித்த, அவர்களுக்கு நெருக்கமான புரட்சியாளராக இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர் புரட்சித் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. அவரை அறிந்துகொள்ள தமிழில் வெளிவந்துள்ளவற்றுள் மிக அற்புதமான நூல் 'என் வாழ்க்கை: உரையாடல் வழியேயான தன்வரலாறு'. இந்த நூல் ஸ்பானிய பத்திரிக்கையாளரான இக்னேஷியோ ரமோனெட் (Ignacio Ramonet) என்பவர் ஃபிடலுடன் நடத்திய 100 மணி நேர உரையாடலாகும் (நெடிய நேர்காணல்). இந்நூல் ஸ்பானிய மொழியில் கடந்த 2006-ஆம் ஆண்டும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான 'My Life: A Spoken Autobiography' கடந்த 2008-ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

fidel castro my lifeகாலனிய கியூபாவில் புகழ்மிக்க, ஒப்பீட்டளவில் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் ஒரு நிலப்பிரபுவின் மகனாகப் பிறந்த ஃபிடல் சில காரணங்களால் முறையான பள்ளிக்கல்வி பெறவில்லை. அவர் குறிப்பிடுவது போலவே தன் சொந்த முயற்சிகளாலேயே கியூபா மற்றும் ஏனைய இலத்தீன்-அமெரிக்க நாடுகளின் அரசியல், வரலாறு உள்ளிட்டவற்றை கற்றுள்ளார். அதுபோலவே கியூப உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கையையும், அந்நாட்டின் அரசியலில் ஏகாதிபத்திய, குற்றக் கும்பல்களின் (Mafia) தலையீடுகளையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார். ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் கீழ் வீழ்ந்து கிடந்த கியூபாவின் ஒட்டுமொத்த எதிர்காலம் குறித்து சிந்திக்க, அந்நிலையை மாற்ற வேண்டித் தனது எதிர்காலத்தைப் பணயம் வைக்க, ஒரு உயர் வர்க்கப் பின்னணி கொண்ட நபரான ஃபிடல் முன்வந்ததற்கான காரணம், அவர் கூறுவது போலவே 'அவர் ஒரு நிலப்பிரபுவின் மகனாகப் பிறந்தார், பேரனாக அல்ல'.

பல்கலைக்கழக மாணவர் தலைவர், அரசியல் செயல்பாட்டாளர் என இயங்கிக்கொண்டிருந்த அவர் வாழ்வில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது 1953-ஆம் ஆண்டு அவரால் தலைமையேற்று நடத்தப்பெற்ற மான்காடா படை முகாம் தாக்குதலாகும். சில தற்செயலான நிகழ்வுகளால் அத்தாக்குதல் திட்டம் தோல்வியுற, ஃபிடல் உள்ளிட்ட முக்கிய முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையின் போது தான் அவரது புகழ்பெற்ற உரையான 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற உரை நிகழ்த்தப்பட்டது. நீதிமன்ற விசாரணையைத் தமது பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்ட ஃபிடல் அப்போது அதன் மூலமாகவே உலகெங்கும் அறியப்பெற்றார். பின்னர், கியூப மக்களின் பேரெழுச்சி மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, குறிப்பிட்ட தண்டனை காலத்துக்கு முன்னரே விடுக்கப்படுகிறார். இத்தாக்குதலின் மூலம் அறியப்பெற்று தான் சே குவேரா உள்ளிட்ட சர்வதேச புரட்சியாளர்களின் தொடர்பைப் பெறுகிறார். இது குறித்துப் பேசுகையில், அன்றைய நிலையில் மான்காடா முகாமைக் கைப்பற்றியிருந்தால், நிலவிய சர்வாதிகார ஆட்சியை அன்றே வீழ்த்தியிருக்க முடியும் என்றும், ஆனால் பின்னர் புரட்சி வெற்றிபெற்ற போது (1959) கிடைத்த சோசலிச அரசுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் அச்சூழலில் உலகெங்கிலுமிருந்து கிடைத்த தார்மீக ஆதரவு ஆகியன கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு என்றும் கணிக்கிறார். மறுபுறம் அதன் பலனாக புரட்சி இயக்கத்துக்கு நாடெங்கிலும் ஆதரவு பெருகியதையும், கியூப மக்கள் தமது விடுதலைக்கான சரியான, செயலுக்குகந்த போராட்ட வழிமுறையைப் பற்றி அறிந்துகொள்ள வழியேற்பட்டதையும் நினைவுபடுத்துகிறார். அதேவேளையில், 1953 மான்காடா தாக்குதல் தான் கியூபப் புரட்சியின் துவக்கமா எனும் கேள்விக்கு அதைத் திட்டவட்டமாக மறுக்கிறார் ஃபிடல். கார்லோஸ் மனுவெல் தலைமையிலான 1968-ஆம் ஆண்டின் முதல் சுதந்திரப் போர் தான் கியூபப் புரட்சியின் தொடக்கம் என்கிறார். ஸ்பானிய காலனிய ஆட்சியையும், உள்ளூர் அமெரிக்க பொம்மை அரசாங்கத்தையும் அவர் பிரித்துப் பார்த்ததில்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

விடுதலைக்குப் பின்னர் மீண்டும் படை திரட்டும் பணியில் ஈடுபடும் ஃபிடல் அத்துடன் தனது தலைமறைவு வாழ்க்கையைத் துவங்குகிறார். இச்சந்தர்ப்பத்தில் தான் சே குவேராவை மெக்சிகோவில் சந்திக்கிறார். 'சே' அப்போது தான் இலத்தீன்-அமெரிக்க நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறார். இலத்தீன்-அமெரிக்க நாடுகளின் அன்றைய அவலநிலை, இருவருக்கும் தத்தமது தாய்நாட்டு விடுதலையின் மீதிருந்த தீராப் பற்று ஆகியன அவர்களை ஒன்றிணைக்கிறது. சே குவேரா! இப்பெயரை உச்சரிக்கும் போதே ஃபிடலின் கண்கள் ஒளிர்வதை நம்மால் உணர முடிகிறது. உண்மையிலேயே அவரைப்பற்றி ஃபிடல் பேசும் தொனி, அவர் வெளிப்படுத்தும் மரியாதை ஆகியனவற்றையெல்லாம் பார்க்கையிலே, ஃபிடல் 'சே'வின் மீது காதல்வயப்பட்டிருந்தவர் போலத் தோன்றுகிறார். ஆம், ஒரு புரட்சியாளனுக்கு சக புரட்சியாளன் மீது நிறைந்திருக்கக் கூடிய தூய காதல்.

இலத்தீன்-அமெரிக்கர்களுள் ஹோஸே மார்த்தி, சைமன் பொலிவார் ஆகியோருக்கு அடுத்தபடியாக 'சே' மீது ஃபிடல் அளப்பரிய மரியாதை வைத்திருந்தார். அச்சமயம் தான் ஒரு கற்பனாவாத கம்யூனிஸ்ட்டாக இருந்ததாகச் சொல்லும் ஃபிடல், தன் தோழனை மெய்யான மார்க்சிஸ்ட் என்கிறார். தமது அரசில், சிற்சில எதிர்ப்புகளையும் தாண்டி, அர்ஜென்டைனரான சே குவேராவை தொழிற்துறை விவகாரங்களுக்கான அமைச்சராகவும், பின்னர் இக்கட்டான பொருளாதார நெருக்கடியின் போது கியூப தேசிய வங்கியின் தலைவராகவும் நியமித்தார். காரணம் அவர் மிகச்சிறந்த அறிவாளி, தம்மைவிட சரியான பார்வையைக் கொண்டிருக்கக் கூடிய கம்யூனிஸ்ட் என்கிறார்.

"அவர் ஒரு உதாரண மனிதர். அவர் அழிக்க முடியாத தார்மீக சக்தி. உலகமயமாக்கலை எதிர்த்துப் போராடுகின்ற இந்த சகாப்தத்தில் அவருடைய கருத்துக்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கின்றன."

"அடக்கம், கண்ணியம், நேர்மையின் சொரூபம் அவர். உலகம் அதற்காகத்தான் இன்று அவரைப் போற்றுகிறது. அவர் அறிவாளி, எதிர்காலத்தைக் கட்புலனில் கண்டவர். இலத்தீன்-அமெரிக்காவின் சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் வாழ்ந்தார். அவர்களுக்காகப் போராடி மரணமடைந்தார். அவர் உலகத்தின் ஏழைகளுக்காக, அடக்கி வைக்கப்பட்டவர்களுக்காக போராடி மரணமடைந்தார். அவருடைய இலட்சியங்கள் வெற்றிபெறும். இன்று அவை வெற்றிபெற்றுக் கொண்டிருக்கின்றன."

"அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது எது? அவருடைய அறவுணர்வு; மனசாட்சி அணுகுமுறை என்று கூறுவேன். அவர் மிகச்சிறந்த மனிதநேயத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார். அவரைச் சுற்றி ஒளிவட்டம் இருந்தது. நான் அவரை அதிகமாகப் போற்றினேன், நேசித்தேன். நான் அவருக்கு மிகவும் நெருக்கமாக உணர்வதன் காரணத்தையும் அவரிடம் விளக்கினேன்.

அவரைப்பற்றிய பல நினைவுகள் நிரந்தரமானவை. எனக்குத் தெரிந்தவர்களில் அவர் மிகவும் நேர்மையானவர், அசாதாரணமானவர், பற்றில்லாதவர். வெகுசனங்கள் மத்தியில் அவரைப் போன்றவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆற்றல் மூலமாகவே செயற்கரிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதனால் தான் கியூபப் புரட்சி கல்லாமையை ஒழிப்பதற்கு, கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறது. கியூபாவில் ஒவ்வொருவரும் சேகுவேராவாக வளரமுடியும்"

மேலே மேற்கோளிடப்பட்டிருப்பவை தன் மனதில் 'சே' குறித்து ஃபிடல் கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் ஒரு பகுதியே என்பதை எளிதில் உணரலாம். கெரில்லா வாழ்க்கை, பின்னர் அரசாங்கப் பொறுப்புகள் என எதிலும் சமநிலையைப் பேணிய மனிதர் என 'சே'வுக்கு புகழாரம் சூட்டும் ஃபிடல், அவர் ஒரு கறாரான விமர்சகராகவும், கூர்மையான மார்க்சிய-இலெனினியவாதியாகவும் திகழ்ந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். 'சே' ஒரு 'ட்ராட்ஸ்கியவாதி' என்பது போன்ற தப்பெண்ணங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறார். முன்னர் எவரோ குறிப்பிட்டது போல மெய்யாகவே அது 'காவிய நட்பு' தான்.

மான்காடா தாக்குதலிலிருந்து பெற்ற படிப்பினைகளின் துணைகொண்டு மிகக்குறைந்த காலத்தில் அமெரிக்க பொம்மை அரசாங்கத்தின் இராணுவத்தை வீழ்த்திய புரட்சியாளர்கள், அன்றிலிருந்தே புரட்சியைப் பாதுகாக்க மக்களைச் சார்ந்து நின்று இன்று வரை நீடித்திருக்கின்றனர். பன்றி வளைகுடா தாக்குதல் (1961), அமெரிக்காவின் பொருளாதார, வர்த்தக முற்றுகைகள் (1962), உள்நாட்டு எதிர்புரட்சி வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், குடிபெயர்வுச் சட்டங்களின் மூலம் குழப்பங்களை விளைவித்தல் (1965), உயிர்க்கொல்லி நோய்களைப் பரப்புதல், புரட்சியின் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிடுதல் என அனைத்து வகையான அழிவு நடவடிக்கைகளையும் மக்களின் மாபெரும் ஆதரவோடு எதிர்த்து நின்று முறியடித்ததை பெருமையோடு நினைவுகூறும் ஃபிடல், அமெரிக்க அரசாங்கங்கள் நேரிடையாக கியூப மக்களுடன் மோதவியலாது என்பதை அறிந்துகொண்டே இத்தகைய சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பது குறித்து தனது கசப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். மற்றபடி கியூப புரட்சி அரசாங்கத்திற்கு எதிராக கட்டமைக்கப்படும் பொய்கள், அவதூறுகள் குறித்து அவருக்கு தார்மீக ரீதியில் கோபம் இருந்தாலும் அதனை அவர் கசப்புணர்ச்சியாக வெளிப்படுத்துவதில்லை. அதை முறியடிக்கும் வல்லமை புரட்சிக்கு உண்டென்பதை நிச்சயமாக நம்புகிறார்.

இதுவரை கியூபாவில் ஒரு நபர் கூட - அவர் புரட்சியின் எதிரியோ, எதிர்புரட்சி துரோகியோ, கொடுங்குற்றவாளிகளோ - சித்திரவதைக்கு உட்படுத்தப்படவோ, சட்டத்துக்கு புறம்பான வகையில் 'காணாமல் போகச்' செய்யப்படவோ, கொலை செய்யப்படவோ இல்லை எனும் ஃபிடல், புரட்சிகரப் போர் துவங்கி இன்று வரையிலான இந்த ஆறு தசாப்தங்களில் கியூபாவில் அப்படி ஒருமுறையேனும் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் அரசுப் பொறுப்புகளில் இருந்து மொத்தமாக விலகிக் கொள்வதாக சவால் விடுகிறார். உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா எவ்வாறு சனநாயக விழுமியங்களுக்கு நேரெதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும், ஆனால் மனித உரிமை மீறல், சர்வாதிகாரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் கியூபா எவ்வாறு சனநாயகத் தன்மையோடு திகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டி, புரட்டுகளை எதிரி வெட்கித் தலைகுனியும் வகையில் அம்பலப்படுத்துகிறார். அறப்பண்புகள் வழிகாட்ட இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிறார். அரசு முன்னுதாரணமாகத் திகழும் காரணத்தால் கியூபக் குடிமக்களும் கூட பழிவாங்கும் உணர்ச்சி அற்றவர்களாக, அறவுணர்வு மிக்கவர்களாக இருக்கின்றனர். ஆனால் அதே சமயம், இப்புரட்சியை அழிக்க நினைத்துப் படையெடுத்து, இந்நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த நினைத்தால் கியூப இராணுவத்தை மட்டுமல்ல, ஆயுதந்தரித்த கியூபக் குடிமக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார். இத்தகைய விடுதலை உணர்வே புரட்சியின் மாபெரும் சாதனை என்கிறார்.

புரட்சி கியூப மக்களின் பண்பாட்டை உயர்த்தியிருக்கிறது. அங்கு தனிநபர் வழிபாடு இல்லை. பெண்கள் நிலை மிதமிஞ்சிய ஏற்றம் கண்டிருக்கிறது. நாட்டு மக்களின் ஆயுட்காலம், சுகாதார நல்வாழ்வு, கல்வியறிவு ஆகியன கியூப வரலாற்றில், ஏனைய இலத்தீன்-அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்பன போன்றவற்றை சுட்டிக்காட்டும் ஃபிடல், சுகாதாரத் துறையில் உலகின் முதலிடம் வகிக்கும் கியூபா பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு சேவை அடிப்படையில் மருத்துவர்களை அனுப்பியுள்ளதையும், பிற நாட்டு மாணவர்கள் கியூபாவில் இலவசமாக மறுத்துவக் கல்வி கற்பதையும் பெருமிதத்தோடு நினைவு கூறுகிறார். புரட்சியின் சாதனைகள் என்றவுடன் உள்நாட்டு உற்பத்தி, தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என புள்ளிவிபரங்களுக்குள் புகுந்து கொள்ளாமல், மேற்சொன்ன விஷயங்களை முதன்மைப்படுத்துவது அவரை மிகச்சிறந்த மனிதநேயவாதியாகவும், ஒரு நுண்ணுணர்வுள்ள மக்கள் தலைவராகவும் நமக்கு அடையாளப்படுத்துகிறது.

கியூபா, ஒடுக்கப்பட்ட காலனிய நாடுகளின் விடுதலைக்கு உதவுவதைத் தனது கடமையாகக் கருதியது. அல்ஜீரியா, காங்கோ, அங்கோலா, கினியா-பிஸோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு உதவியதோடல்லாமல், சில சமயங்களில் வல்லரசுகளின் எதிர்ப்பையும் மீறி விடுதலைப் போர்களில் கியூப இராணுவத்தினரும், கியூப மக்கள் படையினரும் நேரடியாகப் பங்குபெற்றனர்; வழிகாட்டினர். பல்வேறு நாடுகளில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அந்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காகக் குரலெழுப்பினர். தானும் தான் சார்ந்துள்ள கட்சியின் புரட்சியாளர்களும், கியூப மக்களும் சர்வதேசியவாதிகள் எனும் பொருளில் மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தமது "சர்வதேசியக் கடமை" என்கிறார் ஃபிடல்.

எதிர்காலக் கியூபா அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக நம்பும் ஃபிடல், அவர்கள் முந்தைய தலைமுறையின் அர்ப்பணிப்புணர்வு மற்றும் தங்களது தொழில்நுட்ப, உலக அனுபவத்தையும் இணைத்துக் கொண்டு புதிய, இன்னும் வளமான, முன்னேறிய புரட்சிகர கியூபாவைக் கட்டியமைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஒரு போராளி, புரட்சியாளர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், அரசுத் தலைவர், படைத்தளபதி, கியூபப் புரட்சியின் தத்துவாசிரியர் எனப் பல்வேறு முகங்களை உடைய இந்நபரின் ஆழமான அறவுணர்வு, மனிதநேயம், பண்பாடு, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகிய, நாம் அருகில் இருந்து அவதானிக்க வாய்ப்பில்லாத பண்புகளை இந்நூலின் வழியே கண்டுகொள்ள முடியும். மான்காடா தாக்குதல் மற்றும் ஃபிடல் முன்னின்று வழிநடத்திய போர் அனுபவங்கள், அரசுக் கண்காணிப்பு மிகுந்திருக்கும் தலைநகர் ஹவானாவில் வேட்டையாடுவோர் சங்கம் (Rifle Club) போன்ற அமைப்புகளில் ஊடுருவி வெற்றிகரமாகத் தமது சகாக்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த சாகசங்கள் போன்றவற்றை ஃபிடலின் விவரணைகளிலிருந்தே அறிந்து கொள்வதற்காகவும் இந்நூலை வாசிக்கலாம்.

ஃபிடல் மிகச்சிறந்த பேச்சாளர். உரையாடல்களை இரசிப்பவர். அவரது நண்பர் கேபிரியேல் கார்ஸியா மார்க்கேஸ் குறிப்பிடுவது போல "பேச்சின் அலுப்பை பேசித் தீர்ப்பவர் ஃபிடல்". அதன்படி பார்த்தால், சுமார் 100 மணி நேரங்கள் தன்னைப் பற்றியும், தன் நாட்டு மக்கள் பற்றியும், தான் வழிநடத்திய புரட்சி பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டவை குறைவாகவே இருக்கக்கூடும். ஆனால் இவ்வுரையாடல்கள் நமக்குத் தெளிவை அளிக்கின்றன. ஃபிடல் எனும் தனித்த ஆளுமை குறித்த நமது விமர்சனப்பூர்வமான பார்வையை வளர்த்தெடுக்க இவ்வுரையாடல்கள் பயனளிக்கும். சே குவேராவோடு இணைத்துப் பார்க்கப்பட்டே அறிந்து கொள்ளப்பட்டிருப்பதனாலேயே, ஃபிடல் குறித்து நமக்கு இருக்கின்ற சில குறைபுரிதல்கள் இந்நூல் மூலம் சிறிது விலகும். கியூபாவின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்நெடிய வாழ்க்கையின் வழியே நாம் இலத்தீன்-அமெரிக்காவை இன்னும் நெருக்கமாக, உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்வோம். இந்நூலில் சர்வதேச விவகாரங்கள் குறித்த சில முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் எழுப்பப்படவில்லை. சோசலிச நாடுகள் சிலவற்றின் மீதும், ஸ்டாலின், மாவோ உள்ளிட்ட தலைவர்கள் மீதும் ஃபிடல் முன்வைக்கும் விமர்சனங்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆனால் இது ஃபிடல் மீதான விமர்சன நூல் அல்ல. அவரது இயல்பான ஆளுமையை, அரசியல் நிலைப்பாடுகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அவரது சொற்களிலிருந்தே அறிந்து கொண்டு எடைபோட நமக்குக் கிடைத்த ஒரு அற்புதமான உரையாடல் நல்வாய்ப்பு. இந்நூல் வாசிப்போ “நான் இறுதிவரை ஒரு மார்க்ஸிய-இலெனினியவாதியாகவே வாழ்வேன்” என்ற தனது வார்த்தைகளுக்கு நேர்மையாக வாழ்ந்து மறைந்த தலைவருக்கு நாம் செலுத்தும் செவ்வஞ்சலி!

Farewell. Rest in Power, Comrade.

(இந்நூலின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு விடியல் பதிப்பகத்தாரால் கடந்த 2011-ஆம் ஆண்டு 'என் வாழ்க்கை' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்ஸிய மூலநூல்கள் உள்ளிட்ட பல நூல்களை தமிழுக்கு அளித்த பேரா.நா.தர்மராஜன் இந்நூலை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்)

- இராகேஷ்