che natesan book on cancerஇரத்தப் புற்றுநோய் ஒருவருக்கு உள்ளது என்று கண்டறிந்தவுடன், அவருக்கு வேதி சிகிச்சை தேவைப்படுகிறது. அவர் வயது, நோயின் வகை, அதன் வீரியம் ஆகியவற்றைப் பொறுத்தும், நோயைக் கண்டுபிடித்த சமயத்தில் அதனால் உறுப்புகளுக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் ஏதேனும் கிருமிவகைத் தொற்று இருப்பின் அதன் தீர்வு முதலியவற்றை ஆராய்ந்தும் வேதிசிகிச்சையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இந்த முடிவுகளை மருத்துவர் நோயாளியிடமும் மற்றும் குடும்பத்தாரிடமும் முழுமையாக விளக்க வேண்டியிருக்கிறது. அது சமயம், நோயைப்பற்றிக் கேள்வியுற்ற அதிர்ச்சி யிலிருந்து பெரும்பாலோர் மீண்டிருப்பதில்லை. இதனால் நோயாளியின் கல்வி மற்றும் அணுகுமுறை பொறுத்து விவாதித்த பல விஷயங்கள் அவர்கள் மனதில் பதியவில்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையும் மறுமுறையும் விவாதிக்க இருவருக்கும் போதிய காலமும் கிடைப்பதில்லை. 

வேதிசிகிச்சையால் நோயை முழுவதும் குணப்படுத்த முடியும் என்றாலும், வேதி சிகிச்சையின் தன்மை மற்றும் மருந்துகளால் ஏற்படும் தற்காலிக பாதிப்புகள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் முதலியவற்றைப் படித்து அறிந்திருந்தால் தாங்கிக்கொள்ளும் மன உறுதி வலுப்படும். இந்த இடைவெளியை தாய் மொழியாம் தமிழில் ஒரு நூலின் மூலம் ஈடு செய்வது என்பது பலரின் உள்ளக் கிடக்கையாக உணர்வுத்தேவையாக (felt need) இருக்கிறது. இச்சீரிய நோக்குடன் இந்த வேதிசிகிச்சைக்கான அறிமுக நூலைக் கையேடு போல வடிவமைத்திருக்கிறார் திரு. செ.நடேசன் அவர்கள்.  

ஆங்கிலத்தில் NHS UK கையேடுகளில் மற்றும் பல்வேறு மருத்துவமனைகளின் வலைத்தளங்களில் செய்திகளைப் பெற்றும், என்னுடனும், எங்கள் செவிலியரிடமும், பல்வேறு நோயாளிகளிடமும் பேசியறிந்தும், நம் நாட்டில் அவை செயல்படுத்தும் முறைகளை நுண்ணுணர்வுடன் ஆராய்ந்தும் எழுதியிருக்கிறார் (உ-.ம் : நிறைய நேரம் காத்திருக்க பத்திரிகைகள் வாசிக்க எடுத்து வரவும் போன்ற குறிப்புகள்!). பல சொற்களை மொழி மாற்றம் செய்யும்போது சொல் உருவாக்கமும் செய்திருக்கிறார். அவருடைய முனைப்பும், தமிழ் அறிவும், உழைப்பும், மனித உணர்வுகள் மேல் கொண்ட மதிப்பும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கன. இவையிருப்பினும் அனைவர்க்கும் புரியும் எளிய நடையிலே வடிவமைத்திருப்பது இந்நூலின் சிறப்பாகும். பல்லுயிர்க்கும் தென்தமிழுக்கும் சேவை செய்யும் நூல்கள் எல்லாமும் நல்லனவே! 

வெளியீடு: விஜய் ஆனந்த் பதிப்பகம்,

     பாரதி இல்லம்,

     திருப்பூர் ரோடு,ஊத்துக்குளி.ஆர்.எஸ்.638752

Dr.T.ராஜசேகர் MD. DM., (Haematology), (Consultanat, Haemotologist&Bonemarrow Transplant Physician-KMCH Coimbatore)