மராத்தியில் இந்த நூல் வெளிவந்த வேகத்தில் இரண்டு இலட்சம் படிகள் விற்றிருக்கிறது. குஜராத்தி, கன்னடம், உருது, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் அச்சாக்கப்பட்டது. சும்மாயிருப்பார்களா இந்துத்துவவாதிகள்? சும்மாயிருக்க விடுவார்களா அவர்களது எசமானர்கள்? "கோவிந்த் பன்சாரே! நீ நரேந்திர தபோல்கரைப் போல் கொல்லப்படுவாய்!" என அதன் ஆசிரியரை மிரட்டியவர்கள் கொல்லவும் செய்தார்கள்.

se natesan 400மராட்டிய மாநில அரசு, மூடநம்பிக்கைகள் மற்றும் போலி சாமியார்களுக்கெதிராக ஒரு சட்டத்தைக் கொண்டுவர காரணமாக இருந்த பகுத்தறிவாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டார்.

உலகமயமாக்கல் இந்தியாவில் பிள்ளையார் சிலைகளை பால் குடிக்க வைத்துக் கொண்டிருந்தபோது நரேந்திர தபோல்கர் "மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி" என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை நிறுவி நடத்தி வந்தார். பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தினார்.

நரேந்திர தபோல்கர் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் உற்ற நண்பராவார். மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மூட நம்பிக்கை எதிர்ப்பு மட்டுமின்றி நாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புகளையும், அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தவர்.

அவர் 2013 ஆகஸ்டில் புனே நகரத்திலுள்ள ஓம்கரேஸ்வரர் மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்டார். தலையின் பின்பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே தபோல்கர் மரணமடைந்தார்.

அதேபோலத்தான் கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரி 16-ஆம் நாள் காலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு தனது துணைவியாருடன் வீட்டுக்குள் நுழையும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்டார். அவரது துணைவியாரையும் சுட்டனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் பலனின்றி 5-ஆவது நாள் கோவிந்த் பன்சாரே மரணமடைந்தார்.

அம்பேத்கர் பிறந்த மண்

மராட்டியம் அம்பேத்கர் பிறந்த மண் என்று புகழ்ந்துவிட்டு நாம் சும்மாயிருக்கிறோம். ஆனால் அதை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் இந்துத்துவவாதிகள். சிவசேனையும், பி.ஜெ.பி-யும் செல்வாக்கு செலுத்துகின்ற மண் அது.

சிவசேனையை மராத்திய தேசிய இயக்கமென கொண்டாடுகிறார்கள் தமிழ் இனவாதிகள். அந்த தேசிய இயக்கம் செல்வாக்கு செலுத்துகிற மண்ணில்தான் அன்றாடம் விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். ஒருவேளை நமது இனவாதிகளும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் இங்கேயும் விவசாயிகள் சாவு மலிவாக இருக்குமோ என்னவோ!

1997 முதல் இன்றுவரை இரண்டரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது கணக்கில் வந்தது. வங்கிகள் விவசாயக் கடன்கள் வழங்குவதில்லை. வேறு வழியில்லாத விவசாயிகள் உள்ளூர் கந்து வட்டியாளர்களிடம் மாட்டுகிறார்கள். கட்ட முடியாத வட்டி விவசாயியின் நிலத்தை திருடிவிடுகிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி, மகாராஷ்டிராவின் ஊரகப் பகுதிகளில் மட்டும் சுமார் 16.46 லட்சம் குடும்பங்கள் ஆண் தலைவர்களை இழந்திருக்கிறது. ஆண் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்க அதிகரிக்க குடும்பங்களின் பொறுப்பு பெண்களிடம் வருகிறது. அவர்களும் தங்களுக்குத் தெரிந்த விவசாயத்திலேயே இறங்கி, கடன் சுமையேறி இறுதியில் தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள். 2013-ம் ஆண்டின் தேசிய குற்றப் பதிவு மையம் மகாராஷ்டிராவில் மொத்தம் 126 பெண் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக பதிவு செய்துள்ளது.

மராட்டியம் இப்போது இது யாருடைய மண்?

அது விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் பன்னாட்டு மான்ஸாண்டோ, உள்நாட்டு உர கம்பனிகள், உள்ளூர் வட்டி வங்கிகள், கந்துவட்டிக்காரர்கள் அவர்களின் பாதுகாவலர்களான அரசியல்வாதிகள் மற்றும் மாஃபியாக்களின் மண். இவர்கள் வாழ்வதற்கான மண். இவர்கள் வாழ்வதற்காக இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்யவேண்டிய மண். இந்துத்துவம், புனிதமெல்லாம் உயர்தட்டு வர்க்கம் பேசிக்கொண்டிருக்க சிவப்பு விளக்குப் பகுதியில் இலட்சக்கணக்கான ஏழைப்பெண்கள் பாலியல் தொழிலுக்குப் பலியாக வேண்டிய மண்.

இதற்குதான் மதவாதம் வேலை செய்கிறதேயல்லாது மதவாதம் வெறும் மதவாதத்திற்கல்ல. அந்த மண் கொள்ளையிடப்படுவதற்கு, அந்த மக்கள் கொல்லப்படுவதற்கு, அதன் வலி சமூகத்தில் வெளிதெரியாமல் இருப்பதற்குதான் மதவாதத்தை அரசியலாக்குகிறது ஆளும்வர்க்கம்.

இதற்குதான் அவர்கள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், அதற்கான கைக்கூலி அறிவாளிகளை உருவாக்குகிறார்கள், வரலாற்று நாயகர்களுக்கெல்லாம் மதச்சாயம் பூசுகிறார்கள், கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி மக்களைக் கொன்று குவிக்கிறார்கள்.

இவற்றை தகுந்த ஆதாரங்களுடன் அம்பலமாக்கி மக்களை விழிப்படையச் செய்தால் விட்டுவிடுவார்களா? அதனால் ஏற்படும் நட்டம் சாமியார்களுக்கு மட்டுமா? அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? சாமியார்கள் எல்லோருக்கும் பொதுவான ஆன்மீகம் பேசிப் பிழைக்க முடியும். தேவைப்பட்டால் ஒரு 'தீன் இலாஹி' கூட உருவாக்க முடியும். அரசியல்வாதிகள் மதத்தை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் வரைக்குமாக ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு சம்பாதிக்க முடியும். ஆனால் இவர்களையெல்லாம் ஆட்டுவிக்கிற முதலாளிகளுக்கு இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

முதலாளிகள் மக்களின் வாழ்வாதாரங்களை உடனடியாக அபகரிக்க முடியாமல் தடையேற்படுகிறது; அடுத்து மக்களை மடையர்களாக்குவதற்கான அமைப்புகளை உருவாக்கவும், கண்டறியவும், எல்லா வகையிலும் தனக்கான லாபியை உருவாக்கவும் காலமும், பணமும் விரயமாகிறது; அதற்குள் போட்டி முதலாளிகள் உருவாகிவிட்டால் மொத்தமும் நாசமாகிறது. இத்தனை இழப்புகளை எதிர்கொள்ள வேண்டிய முதலாளிகள்தான் ஆத்திரமடைக்கிறார்கள்.

ஆத்திரமடைகிற முதலாளிகள் உடனடி பலனுக்காக தாமதமின்றி களமிறங்குகிறார்கள். தடையாக இருப்பவர்களை அழித்துவிட தனது அனைத்து சக்திகளையும் இறக்கி விடுகிறார்கள். கோவிந்த் பன்சாரேக்களும், நரேந்திர தபோல்க்கர்களும் கொல்லப்படுகிறார்கள்.

கோவிந்த் பன்சாரே ஏன் கொல்லப்பட்டார்?

'வீர சிவாஜி'யை நமக்கு ஆறாம் வகுப்பு பாடத்தின் மூலம் தெரியும். பழைய அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம்" மூலம் நன்றாகத் தெரியும். முன்பாதம் அழுந்த ஊன்றி காலை தூக்கி, அசைந்து நடந்தபடி "தாழ்ந்த ஜாதி, அரசியலை அறியாதவன். ம்ஹூம், யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு, தன்னலமற்ற மன்னர் சிவாஜி தாழ்ந்த ஜாதியா?.............. அரசியலை நான் அறியாதவனா? ஹ... அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ ஹ........அன்னை பவானி உன் கண்கள் சிவக்கட்டும், மின்னல் ஒளிரட்டும், இடி இடிக்கட்டும், சூறைக்காற்று மோதட்டும், வான்மழைப் பொழியட்டும், கொடியவர்கள் அழியட்டும், கொடியவர்கள் அழியட்டும்..." என்று வசனம் பேசி வி.சி.கணேசனாக இருந்தவரை சிவாஜி கணேசனாக பெரியார் பெயர் மாற்றிய காட்சியின் மூலம்தான் வீர சிவாஜியை நம் மனதில் பதிந்தார்.

அப்படி வாஞ்சையோடு நம் நெஞ்சில் பதிந்த அந்த வீர சிவாஜியை இப்போது இந்து முன்னணியின் பெயர்பலகைகளிலும், அறிவிப்பு பலகைகளிலும் பார்க்கும்போது பதட்டமாக இருக்கிறது.

நம்மை பதட்டத்திற்குள்ளாக்கும் வீர சிவாஜிதான் மராத்தியத்தையும் நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறார். வரலாற்றுத்திரிபுகளின் மூலம் அவர் இந்து அவதார புருஷனாக, சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாக மாற்றப்பட்டிருக்கிறார்.

சிவாஜி இந்து பெண்தெய்வமான பவானியின் அருள் பெற்றிருந்தார்; பவானி அவருக்கு மந்திரசக்தி கொண்ட ஒரு வாளைப் பரிசளித்தாள்; அந்த வாளின் துணையோடு அவர் இஸ்லாமிய மன்னர்களை அழித்தொழித்தார்; அவர் பறக்கும் சக்திப் பெற்றிருந்தார்; திடீரெனத் தோன்றி இஸ்லாமியர்களை கொன்றுவிட்டு, திடீரென மறைந்துவிடுவார். மானமுள்ள ஒவ்வொரு இந்துவும் சிவாஜியைப்போல் இருக்க வேண்டும்; இஸ்லாமியர்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்று போதிக்கப்படுகிறார்கள்.

மக்களை மதவெறிக்குள் மூழ்கடித்துவிட்டு மராத்திய நாடு கொள்ளையடிக்கப்படுகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து மடிக்கிறார்கள்.

இதை கோவிந்த் பன்சாரே முறியடிக்க முயற்சித்தார். அதில் முன்னேறவும் செய்தார். அதற்கு சிவாஜியின் உண்மையான வரலாறு துணையாக இருந்தது. சிவாஜி மத வெறியரல்ல; அவரது படையில் முக்கிய தளபதிகளாக இப்ராஹிம் கான், தௌலத் கான், மெஹ்டர், காசி ஹைதர், சித்தி ஹிலால், ஷாமா கான்.... போன்ற இஸ்லாமியர்கள் இருந்தனர். ஏராளமான இஸ்லாமியப் படைவீரர்களும் இருந்தனர் என்பதை ஆதாரங்களோடுப் பேசினார் பன்சாரே.

அதேபோல் இஸ்லாமிய மன்னர்களும் இந்துக்களை எதிரியாக கொள்ளவில்லை; அவர்களும் இந்து தளபதிகளைக் கொண்டிருந்தனர்; சிவாஜியின் சொந்த தந்தையான ஷாஹாஜி இஸ்லாமிய மன்னர் அடில் ஷாவின் சர்தாராக இருந்தார்; சிவாஜியின் தாத்தாவும் அம்மன்னரிடம் பணி செய்தவர்; அக்பரின் படையிலும், ஔரங்கசீப் படையிலும் நான்கில் ஒருபகுதியினர் இந்துக்களே; ஔரங்கசீப்பின் தக்காணத்தின் கவர்னர் ஜஸ்வந்த்சிங் ஒரு இந்து; அவரது முதலமைச்சர் ரகுநாத் தாஸ் ஒரு இந்து என்ற உண்மைகளை கோவிந்த் பன்சாரே மிக எளிதாக மக்களிடம் கொண்டு சென்றார். இதன் மூலம் மன்னர்கள் இந்து - முஸ்லீம் என்ற காரணத்திற்காக சண்டையிடவில்லை; அவர்கள் அதிகாரத்திற்காக, நிலத்திற்காக போரிட்டார்கள்; போரிடுகிறவர்கள் மதத்தின் பேரால் படை கட்டவில்லை; இந்துவோ, முஸ்லீமோ பலமானவர்களையும், நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு கட்டினார்கள் என்பது மக்களிடம் போய்சேரத் தொடங்கியது.

இது மதவெறியர்களை ஆத்திரமடையச் செய்தது.

அதேநேரத்தில் சிவாஜியின் நல்லப்பண்புகளையும் பன்சாரே தூக்கிப்பிடித்தார். சிவாஜியின் படை விவசாயிகளையும், சாதாரண குடிமக்களையும் கொண்டது; அவர்கள் போர் செய்தார்கள்; போரில்லாத காலங்களில் விவசாயம் செய்தார்கள்; உழைத்தார்கள்; இவ்வாறு படையை சமூகப் பொறுப்புமிக்கதாக வைத்திருந்ததால் அவர்கள் போரில் பெண்களை கண்ணியமாக நடத்துகிறவர்களாக இருந்தார்கள்; மீறியவர்கள் தளபதிகளாக இருந்தாலும் கைகளும்; கால்களும் துண்டித்து தண்டிக்கப்பட்டார்கள்; சிவாஜி ஆட்சியிலிருந்த பெர்சிய மொழியை தூக்கியெறிந்துவிட்டு மராத்தியை ஆட்சி மொழியாக்கினார்; அன்னியப் பொருட்கள்மீது கடுமையான வரி விதித்து தேசியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றினார்; எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளின் மொத்த உழைப்பையும் உறிஞ்சுகிற வரிவிதிப்பை ஒழித்து எவ்வளவு உற்பத்தி செய்ய முடிக்கிறதோ அதற்கான வரியை மட்டும் தானியமாகவேப் பெற்றுக்கொண்டார்; நிலங்களையெல்லாம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர விவசாயிகளுக்கு தாராளமாக நீண்டகால கடன் வழங்கினார்; ஜப்தியை அறவே ஒழித்தார் என்கிற உண்மைகளை தரவுகளுடன் வெளிப்படுத்தினார் கோவிந்த் பன்சாரே.

அங்கேதான் ஆபத்து முளைத்தது. பன்சாரேயின் "சிவாஜி கோன் ஹோட்டா?" என்ற நூல் விவசாயிகளிடமும், சராசரி மக்களிடம் ஒரு கேள்வியை எழுப்பியது. விவசாயிகளைப் பாதுகாத்த சிவாஜிக்கும், விவசாயிகளை தற்கொலையில் தள்ளுகிற அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? எல்லோரிடமும் அன்பு செலுத்திய சிவாஜிக்கும், மதவெறிக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கேள்வி யாரை அச்சுறுத்தியதோ அவர்கள் பன்சாரேயை எச்சரித்தார்கள். பன்சாரே அஞ்சவில்லை. அவர் மக்களின் உண்மையான நாயகர்களான சமூகப்போராளிகள் 150 பேரின் வரலாற்றை நூல்களாகக் கொண்டுவரச் செய்தவர். 'ஷ்ரமிக் பிரதிஸ்தான்" எனும் பன்முக கலாச்சார அமைப்பை நிறுவியவர். அதன் மூலம் மராட்டியத்தின் முற்போக்கு கலை, இலக்கிய வாதிகள்; ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர். இலக்கிய நிகழ்வுகளை பல மாநாடுகளாக நடத்தியவர். அனைத்து எழுத்தாளர்கள், கலைஞர்களைத் திரட்டி பேரணி, மாநாடு, பயிற்சிப்பட்டறையென செயல்பட்டவர். அதன் மூலம் மக்களிடம் எளிதாக நல்ல கருத்துகளைக் கொண்டு சேர்தவர்.

பொய்யான வரலாறுகளைப் புனைந்து, மக்களை ஏமாற்றி சுரண்ட நினைத்தவர்கள் விட்டுவிடுவார்களா? விவசாயிகள் சாவுக்கு காரணமானவர்கள் விட்டுவைப்பார்களா? கொன்றுப் போட்டனர்.

கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார்.

தமிழில் செ.நடேசன்

மொழிப்பெயர்ப்பு என்பது எழுத்துக்களையோ, சொற்களையோ, வாக்கியங்களையோ மொழிப்பெயர்ப்பதாக இருக்கக்கூடாது. அது சொல்லப்படும் பொருளை (அர்த்தத்தை) மொழிப்பெயர்ப்பதாக இருக்க வேண்டும். அப்படியான மொழிப்பெயர்ப்புகள்தான் மக்களை சென்று சேருமென்ற நம்பிக்கை நமக்குண்டு. அப்படியான மொழிப்பெயர்ப்பையே தோழர் செ.நடேசன் செய்திருக்கிறார். அவரின் அழகான உழைப்பில் சிவாஜி கோன் ஹோட்டா? என்பது "மாவீரன் சிவாஜி - காவித் தலைவனல்ல காவியத் தலைவன்" என்று அருமையாக தமிழில் வந்துள்ளது.

தோழர் த.மு.எ.க.ச-வின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவராக இருக்கிறார். ஊதியத்திற்கென இல்லாமல் இலட்சியத்திற்கென இயங்குகிறவர். அதனால் தொடர்ந்து இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான நல்ல கட்டுரைகளை மொழிப்பெயர்த்து வருகிறார். கூடவே மக்களுக்கான எல்லா தளங்களிலும் செயல்பட்டும் வருகிறார்.

அவரின் சமூகப்பணிக்குத் துணை நிற்க வேண்டியது நம் அடிப்படைக் கடமை.

நூலாசிரியர் - கோவிந்த் பன்சாரே

தமிழில் - செ.நடேசன்

பக்கங்கள் - 112

விலை - 100 ரூபாய்

தொடர்புக்கு - விஜய் ஆனந்த் பதிப்பகம்

 20 - பாரதி இல்லம்

 திருப்பூர் ரோடு

 ஊத்துக்குளி ஆர்.எஸ்

 திருப்பூர் மாவட்டம் 638752

பேச - 75982 63236