கள ஆய்வின் அடிப்படையில் தோழர் ச.சிவலிங்கம் அவர்கள் எழுதியிருக்கும் மேற்கண்ட நூல் இறையாண்மை குறித்த சில புரிதல்களை ஒடுக்கப்பட்டோர் பார்வையிலிருந்து முன்வைக்கிறது.

sivalingam 400தருமபுரி இளவரசன் - திவ்யா குறித்து எழுதாத ஊடகங்களே இல்லை. ஆனால் எந்த ஒரு நிகழ்வும் திடீரென நிகழ்ந்துவிடுவதில்லை. அச்சம்பவம் நிகழ்வதற்கான சூழல், தருணம், அரசியல் சாதிக் கட்சிகளின் நோக்கம் என்று பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் தோழர் சிவலிங்கம் அவர்கள் சில தெளிவான அடிப்படை கருத்துகளை முன்வைக்கிறார். சாதி அரசியல் எப்படி எல்லாம் அச்சம்பவத்தில் விளையாண்டது என்பதுடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசும் அரசு நிர்வாகமும் ஒடுக்கப்பட்டோரின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை விளக்குகிறார்.

வன்னிய சமூகத்தின் சாதி வெறியைத் தூண்டுவதில் வெற்றி பெற்றவர்கள் அதே வன்னிய சமுதாயத்தின் விவசாயிகளின் உழைப்பு வீணானதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தனர். அதனால் தான் அம்மக்கள் தங்கள் காடுகளில் விளைந்திருந்த கடலைக்காய் விளைச்சலை பறிக்கமுடியாமல் போனது என்ற இன்னொரு பக்கத்தையும் முன்வைக்கிறார்.

இந்தியாவில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் சாதி இருக்கிறது. சாதி உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது என்ற யதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஜனநாயக உணர்வும் இருக்கிறது. ஆனால் எப்போதும் சாதி உணர்வே ஆட்சி செய்கிறது. இச்சாதி உணர்வு என்னவோ கிராமப்புறங்களில் மட்டுமே இருப்பதாக கருதுவதும் தவறு. பெருநகரங்களில் வாழும் மெத்தப் படித்தவர்களிடமும் சாதி உணர்வு முன்னிலை வகிக்கிறது. தொலைக்காட்சி ஊடகத்தில் அனைவரும் அறிந்த ராஜ்தீப் சர்தேசாய் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தன் பக்கத்தில் எழுதியிருந்த ஒரு செய்தி என் நினைவுக்கு வருகிறது. அதில் (2014) அமைச்சரவையில் தன் சுயசாதியான சரஸ்வாட் பிராமின் சாதியைச் சார்ந்த இருவர் இடம்பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக எழுதி இருந்தார். ஆக்ஸ்போர்ட் படிப்போ அல்லது பெருநகர கூட்டு வாழ்க்கையோ அவருடைய சாதி உணர்வை மழுங்கடிக்கவில்லை என்பது புரிகிறது.

இந்த யதார்த்த நிலையை முன்வைக்கும் தோழர் சிவலிங்கம் இதே இந்த சுயசாதி அபிமானமும் பற்றுதலும் தான் சுயசாதியினர் ஜனநாயகத்திற்கு எதிரான சக்தியாக மாறி ஒடுக்கப்பட்ட சாதிகளின் இறையாண்மையை அழிக்கும் போது கள்ளமவுனத்தில் கடந்து செல்கிறார்கள், அல்லது வெறும் அறிக்கை வெளியிடுவதுடன் நின்று விடுகிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்ட தன் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை. இம்மனப்பான்மையே சாதி வெறிக்கு அவர்கள் கொடுக்கும் ஊக்கமாக அமைந்துவிடுகிறது.

ஒடுக்குண்ட சாதிகள் சமத்துவத்தைக் கோருகின்ற போது ஆதிக்கச் சாதிகள் தம்தம் சுயசாதிகளின் இனக்குழுப் பெருமைகளை அடையாளங்களாக முன்வைக்கின்றன. தமிழினத்திற்கு நெருக்கடி வருகிற போது - இந்தி திணிப்பு போராட்டம், ஈழத்தமிழர் போராட்டம் என்று வருகிறபோது சங்ககாலப் பெருமையை தம் அடையாளமாக முன் நிறுத்தும் தமிழ்ச் சமூகத்தையும் தமிழினக் காவலர்களையும் அடையாளப்படுத்துவதில் தோழரின் பார்வை தெளிவாக இருக்கிறது.

திமுக தலைவர் கலைஞர் மற்றும் வைகோ ஆகியோரின் அரசியல் நிலைப்பாடும் அவர்களின் பேச்சு எழுத்து ஆகியவும் சாதிக்கு எதிராக எந்தளவு செயலாற்றி இருக்கின்றன என்ற கேள்வியை முன்வைக்கும் தோழர், ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாக வளர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும் அரசியலில் நுழைந்த பின் ஓட்டு அரசியலுக்கு கொடுத்த விலையை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார். தலித் சமூக விடுதலை நிறைவு பெறாத நிலையில் தொல். திருமாவளவன் தமிழ் தேசியத்தைக் கையில் எடுத்ததன் விளைவுதான் விடுதலைச் சிறுத்தைகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதில் காட்டிய அக்கறையை தருமபுரி சம்பவத்தில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார். இடதுசாரிகள் எவ்வாறு நடைமுறையில் தோற்றுப் போகிறார்கள் என்பதையும் காரணங்களுடன் விளக்குகிறார்.

சாதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுத்த தோழர் தன் களப்பணியிலிருந்து தன் அனுபவங்கள் வழி சில தீர்வுகளை முன்வைக்கிறார். அத்தீர்வுகள்:

* பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டும் அல்ல, பாதிப்பை ஏற்படுத்திய மக்களிடமும் போய் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் மன நிலையில் மாற்றங்களை உருவாக்க முடியும்.

* காந்தியின் நவகாளி உண்ணாவிரதத்தைக் குறிப்பிட்டு காந்தி சமூகத்தின் மனசாட்சியைப் பேச வைத்தார் என்றும் சொல்கிறார்.

சாதிக்கொடுமையைப் பற்றியும் தீண்டாமை குறித்தும் ஒடுக்கப்பட்ட மக்களிடமே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. பாபாசாகிப் அம்பேத்கரும் தன் சாதி பற்றிய கட்டுரையை இந்துக்களின் மாநாட்டில் பேசுவதற்காகவே தயாரித்திருந்தார் என்பதையும் கவனத்தில் கொண்டால், பாதிப்பை ஏற்படுத்தும் ஆதிக்கச் சாதிகளிடம் சாதியம், சாதி வன்முறை, தீண்டாமை குறித்தெல்லாம் பேச வேண்டியதன் அவசியத்தை நாம் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அதற்கான சூழலும் காலமும் தருணமும் இருக்கிறதா? எந்த ஒரு செயலும் திடீரென ஏற்பட்டுவிடாது. அதற்கான முன்னெடுப்புகள் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை நிலைமைகள் மிகவும் மோசமாகவே இருக்கின்றன. அதுவும் தொலைக்காட்சி, திரைப்பட ஊடகங்களில் யதார்த்தம் என்ற பெயரில் ஒவ்வொரு சாதியும் தம்தம் இனக்குழுப் பெருமைகளை முன்வைக்கும் திரைப்படங்களைத் தொடர்ந்து வெளியிடுகின்றன. இவ்வாறு வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் ஆதிக்கச் சாதியின் இனக்குழு திரைப்படங்களாகவே இருக்கின்றன

என்பதையும் அவர்களின் ஆதிக்கமே ஊடகத்தில் இருப்பதையும் பார்க்கலாம். திரைப்படங்களில் வரும் காட்சிகள் மட்டுமின்றி அப்படங்களுக்காக எழுதப்படும் திரைபபாடல்கள் குறிப்பிட்ட அச்சாதியின் வீர தீர பெருமையைக் கொண்டாடுகின்றன. இப்பாடல்களின் தாக்கம் இன்றைய இளைஞர்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் சாதியப் பெருமிதம் தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயகத்தைக் குழித்தோண்டி புதைத்துவிட்டது. இத்தருணத்தில் தோழர் முன்வைக்கும் பேச்சுவார்த்தைக்கான காலம் கனிந்திருக்கிறதா?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் கிராமங்களில் தினமும் நடக்கும் சாதிய வன்கொடுமைகள்.. கணக்கில் அடங்காதவை. இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்படி? ஏதோ ஓரிடத்தில் ஒரு பகுதியில் மட்டும் நடந்தால் செயல்படுவது சாத்தியம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் செயல்படுத்தும் திட்டம்?

ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் அனுபவங்களையும் கணக்கில் கொண்டு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை எண்ணிப் பார்க்கலாம்.

இரண்டாவதாக தோழர், காந்தி சமூகத்தின் மனசாட்சியைப் பேச வைத்ததாகச் சொல்கிறார். காந்தி தன்னை மகாத்மாவாக நிலை நிறுத்திக் கொள்ள கொடுத்த விலை அதிகம் தான். ஆனால் அம்பேத்கர் அவர்கள் சொன்னது போல, "மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள்..:" என்று சொன்னதையே நினைவூட்ட விரும்புகிறேன்.

நூல்: ஒடுக்கப்பட்ட சாதிகள் : இறையாண்மை, அரசு, அமைப்புகள்.

ஆசிரியர் : ச. சிவலிங்கம்

வெளியீடு: புலம், சென்னை.

விலை : ரூ 180/

- புதிய மாதவி, மும்பை