பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் இணைய சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்த புதிதில், சட்டம், வழக்குகள் பற்றி தமிழில் எதுவும் எழுதப்படுவதில்லை என்பதை உணர்ந்த நான், சில சட்டப்பிரச்னைகள் பற்றியும், வழக்குரைஞர் தொழில் அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். ஆனால், தற்பொழுது சட்டம் அறிந்த பலர், தமிழில் சமூக ஊடகங்களில் சட்டம் சார்ந்து எழுதுவது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றம் வரவேற்க்கப்பட வேண்டியது.

robert chandrasekar's bookஏனெனில், மற்ற துறைகளைப் போலல்லாமல் சட்டங்கள் குறித்தான அறிவு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது என்ற அடிப்படையிலேயே நமது நீதிபரிபாலனமுறை இயங்குகிறது. துரதிஷ்டவசமாக நமது பள்ளி, கலைக்கல்லூரி பாடத்திட்டங்களில் சட்டம் ஒருபாடமாக போதிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், சாமானியர்களுக்கும் சாதாரணர்களுக்கும் மற்றும் சட்டம் படிக்க வாய்ப்பு கிடைக்கப்பெறாத அனைவருக்கும் சட்டத்தினைப் பற்றிய அறிவினை கடத்துவது, சட்டத்தினை அறிந்தவர்களின் கடமையாக இருக்கிறது.

அந்த கடமையை ஒரு வழக்குரைஞருக்கு இயலக்கூடிய அளவிற்கும் அதிகமாக பல வருடங்களாக தொடர்ந்து ஆற்றிவருபவர் எனது இளநிலை வழக்குரைஞரும் இந்நூலாசிரியருமான இராபர்ட் சந்திரகுமார் என்பது நான் பெருமைப்படும் விடயம். இணையத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு அச்சு ஊடகங்களிலும் இராபர்ட் சட்டம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார்.

அவ்விதம் பல்வேறு ஊடகங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்து ‘சட்டமும் சாமானியனும்’ என்ற நூலாக கடந்த 2012ம்ஆண்டில் வெளியிட்டு, அச்சிட்ட ஆயிரம் பிரதிகளும் விற்றுத்தீர்ந்த நிலையில், இரண்டாவது பதிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார். எவ்வித படங்களும் இல்லாத, வெறுமே சட்டம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பிற்கு இவ்விதம் கிடைத்த வரவேற்ப்பு சாதாரணமான ஒன்றல்ல.

பொதுவாக சட்டம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகளில் காணப்படும் வறட்டுத்தன்மையும், தேவையற்ற சட்டப்பிரிவுகளும் சாமானிய வாசகர்களை அயற்சியுறச் செய்து ஒவ்வாமையை ஏற்ப்படுத்தக்கூடும். அவ்வாறு இல்லாமல் பல்வேறு சட்டம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி சுவராசியமான தகவல்களோடு எளிமையான நடையில் எழுதப்பட்டிருப்பதே இந்நூலின் பெரும் வரவேற்பிற்கு காரணம்.

சட்டம் சார்ந்த கட்டுரைகளை தமிழில் எழுத முன்வருபவர்கள், எழுத்து நடையை தங்கள் பாணியில் அமைத்துக் கொண்டாலும், வடிவத்திற்கு இந்நூலில் கண்ட கட்டுரைகளை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

சட்டம் சார்ந்து கட்டுரைகளை தமிழில் பலர் எழுதிவந்தாலும், இராபர்ட் தனது சமூக அக்கறையினால் அவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். இந்நூலின் தலைப்பில் காணும் ‘சாமானியன்’ என்பது, சட்டம் அறியாத சாதாரணர் (Layman) என்றில்லாமல் உண்மையிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட சாமானியனைக் குறிப்பதாகும் என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இக்கட்டுரைகள் ஒப்பந்தம், சொத்துரிமை மாற்று என்று வசதிவாய்ப்புள்ள மக்களுக்கான சட்டங்களைத் தவிர்த்து, சாமானிய, எளிய, ஏழை மற்றும் சமூக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்த சட்டத்தினைப் பற்றியவை. இந்நூலின் உள்ளடக்கம் சாமானிய மக்களுக்கானது என்பதை முதலிலேயே, இந்நூலில் காணப்படும் கட்டுரைகளையும், தகவல்களையும் வேறு எவ்வகையிலும், யாரும், பயன்படுத்திக்கொள்ள எவ்வித தடையுமில்லை என்று நூலாசிரியர் அறிவித்துள்ளதே சாட்சி.

இந்நூலின் கட்டுரைகள், தொழிலாளர், கல்வி, குழந்தைகள், பெண், திருநங்கைகள், பட்டியல் இனத்தவர், மற்றும் பழங்குடியினர், காவல்துறை அத்துமீறல்கள், மரணதண்டனை, சட்டம், தண்ணீர், இறுதியாக தமிழ் என்று தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தலைப்புகளே, நூலாசிரியரின் சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்குகின்றன.

தொகுக்கப்பட்ட தலைப்புகள் இவ்வாறு இருப்பினும், கட்டுரைகள் நமது ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘உள்ஒதுக்கீடு சட்டம் உரிய பலன் தருமா?’ என்ற பாணியில் உள்ளது. உள்ளடக்கமோ மேலும் சுவராசியமாக நாம் கடந்த பல ஆண்டுகளில் செய்தித்தாள்களில் படித்து, விவாதித்து கடந்து வந்த பல நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதால், சமூக நலனில் அக்கறை கொண்ட எவரையும் எளிதில் தனக்குள்ளே இழுக்கும் வகையில் உள்ளது. உதாரணமாக, தற்காப்புரிமை பற்றிய கட்டுரையானது, மதுரையில் பிரபலமாக பேசப்பட்ட உஷாராணி வழக்கைப் பற்றிக் கூறி அதனை பின்னணியாகக் கொண்டு விளக்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு கட்டுரையில் அளிக்கப்படும் தகவல்களுக்காக இராபர்ட் மிகவும் உழைத்திருக்க வேண்டும். அவரது வீட்டிற்குச் சென்ற பொழுது பெருமையுடன் அவர் எனக்கு அறிமுகப்படுத்தியது, அந்த வாடகை வீட்டிலேயே அவர் அமைத்திருந்த நூலகம்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மகனாகப் பிறந்த தனக்கு அளிக்கப்பட்ட சிறிய வாய்ப்புகளை முழுமையான அளவில் பயன்படுத்திக் கொண்டு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பலராலும் அறியப்பட்ட வழக்குரைஞராக உயர்ந்துள்ள இராபர்ட் இந்நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் இச்சமூகத்திற்கு தான் பட்ட கடனை தீர்த்துள்ளார்.

தொடர்ந்து சமூக அக்கறை மிக்க கட்டுரைகளை அவர் எழுதி வருகிறார். மேன்மேலும் இவ்விதமாக அறிவைப் பரவலாக்கும் முயற்சிகளை பல்வேறு தளங்களில் அவர் ஆற்ற வேண்டும். இவ்விதமான புத்தகங்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவு அவரைப் போன்ற இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

- கா.பிரபு ராஜதுரை, வழக்கறிஞர், மதுரை